
ஸ்டீபன் ரும்பால்ட் லூஷிங்டன் (Stephen Rumbold Lushington) 1792-ல் கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராகத் தனது பணியைத் தொடங்கி, 1801 முதல் 1803 வரை திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் கலெக்டராகப் (Collector) பணியாற்றினார்.
புகழ்பெற்ற கவர்னர் சர் தாமஸ் முன்ரோவின் மறைவுக்குப் பிறகு, 1827 அக்டோபர் 18 முதல் 1832 அக்டோபர் 25 வரை சென்னை மாகாணத்தின் கவர்னராக பதவி வகித்தார்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக ஸ்டீபன் ரும்பால்ட் லூஷிங்டன் இருந்தபோது, ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆரம்பக்கால கொள்கைப்படி, உள்ளூர் மக்களின் மத உணர்வுகளில் தலையிடாமல் இருக்கவும், அதே சமயம் கோயில்களின் வருமானத்தைச் சரிபார்க்கவும் லூஷிங்டன் முயன்றார். ஆரம்பத்தில் கோயில்களின் மீதும், இந்து சமய சடங்குகளின் மீதும் அவநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், திருச்செந்தூர் நிகழ்வுக்குப் பிறகு கோயில்களின் நிர்வாக நடைமுறைகளுக்கும், அர்ச்சகர்களின் வழிபாட்டுச் சுதந்திரத்திற்கும் மதிப்பு கொடுத்தார்.
திருச்செந்தூர் முருகனின் அற்புதம் காரணமாகத் தனது மனநிலையை மாற்றி, இந்து வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டு, கோயில்களுக்குக் காணிக்கை வழங்கி பெருமை சேர்த்த பிரிட்டிஷ் அதிகாரியாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளார்.
ஸ்டீபன் ரும்பால்ட் லூஷிங்டனின் ஏளனம்:
1803-ஆம் ஆண்டில், அப்போதைய திருநெல்வேலி மாவட்ட கலெக்டரான ஸ்டீபன் ரும்பால்ட் லூஷிங்டன் கோயிலின் பொக்கிஷங்களையும் கணக்குகளையும் சரிபார்க்கத் திருச்செந்தூர் வந்திருந்தார். அப்போது வசந்த மண்டபத்தில் சடங்குப்பூர்வமாக வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு நடைபெறும் 'ஷோடச உபசார' வழிபாடுகளைக் கண்டார். கோயில் அர்ச்சகர் ஒருவர் முருகப் பெருமானுக்குச் சாமரம்(விசிறி) வீசிக் கொண்டிருந்தார். இந்து மத நம்பிக்கையற்ற லூஷிங்டன், "ஓடினால் மனிதனுக்கு வியர்க்கும், உங்கள் உலோகச் சிலைக்குமா வியர்க்கிறது?" என்று ஏளனமாகக் கேட்டார்.

திருச்செந்தூர் முருகனின் அற்புதம்:
மாவட்ட கலெக்டர் லூஷிங்டனின் ஏளனப் பேச்சைக் கேட்ட கோயில் அர்ச்சகர்கள், சிறிதும் பதற்றமடையாமல், முருகப் பெருமானுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடைகளை அகற்றிவிட்டு, மெல்லிய பருத்தி ஆடையை மட்டும் போர்த்தி, சாமரம் வீசுவதையும் நிறுத்தினார். சிறிது நேரத்தில் சிலையிலிருந்து வியர்வை சொட்டத் தொடங்கியது. இதைக் கண்டு திகைப்படைந்த லூஷிங்டன், முருகனின் இறைசக்தியை உணர்ந்து உடனடியாகத் தரையில் விழுந்து முருகப் பெருமானை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து மன்னிப்புக் கேட்டார். பின்னர், இதற்குப் பிராயச்சித்தமாகக் கோவிலுக்கு அவர் பல வெள்ளிப் பாத்திரங்களை உபயமாக அளித்தார்.
லூஷிங்டன் உபயம் செய்த வெள்ளிப் பாத்திரங்கள்:
தீவிர முருக பக்தராக மாறிய லூஷிங்டன், முருகப்பெருமானுக்குப் பரிகாரமாகவும் தனது பக்தியின் வெளிப்பாடாகவும் பல முக்கிய வெள்ளிப் பாத்திரங்களையும், பூஜை பொருட்களையும், அவரது பெயர் பொறிக்கப்பட்ட ஒரு வெள்ளி குடத்தைக் கோயிலுக்கு உபயமாக வழங்கினார். அந்த வெள்ளி குடத்தில் "S. R. LUSHINGTON, Collector, Tinnevelly, 1803" என்ற ஆங்கில எழுத்துக்களே கல்வெட்டு போன்ற அழியாத வரலாற்றுப் பதிவாக இன்றும் திகழ்கிறது.
லூஷிங்டன் வழங்கிய இந்த வெள்ளி குடமும், பூஜை பாத்திரங்களும் இன்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வழிபாட்டுப் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லூஷிங்டன் வழங்கிய பிற கோயில் கொடைகள்:

திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பொறுப்பேற்ற லூஷிங்டன், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கும், ரங்கமன்னார் பெருமாளுக்கும் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்களை உபயமாக வழங்கிச் சிறப்பித்தார். இந்த நகைகள் இன்றும் கோயில் உற்சவங்களின் போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் புகழ்பெற்ற பெரிய தேர் சேதமடைந்திருப்பதை அறிந்து கம்பெனி நிர்வாகத்தின் மூலம் நிதி மற்றும் மரங்களை ஒதுக்கி, இந்த பிரம்மாண்டமான தேரை மீண்டும் புதுப்பிக்க (மறுசீரமைப்பு செய்ய) பெரும் உதவி புரிந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூரின் மிக முக்கியத் திருவிழாவான ஆடிப்பூரத் தேரோட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமுகமாக நடைபெற ராணுவ மற்றும் நிர்வாகப் பாதுகாப்பை லூஷிங்டன் பலப்படுத்தினார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலின் தினசரி பூஜைகள், ஆடிப்பூரம் உள்ளிட்ட பெருந்திருவிழாக்கள் தடையின்றி நடைபெறக் கோயில் நிலங்களின் வருவாயை முறைப்படுத்தி, கிழக்கிந்திய கம்பெனி மூலம் நிதியுதவிகளையும் மானியங்களையும் உறுதி செய்தார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய குளத்தை (Srivilliputhur Tank) செப்பனிட்டு, நீர் வழித்தடங்களைச் சீரமைக்க அவர் முக்கிய பங்காற்றினார். இது மறைமுகமாகக் கோயில் குளங்களின் நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும் உதவியது.

கிழக்கிந்திய கம்பெனியின் உயர் அதிகாரியாக இருந்தபோதிலும், உள்ளூர் மக்களின் வழிபாட்டு உரிமைகளிலும், ஆண்டாள் கோயில் மரபுகளிலும் தலையிடாமல் அவற்றுக்கு உரிய மரியாதையை அளித்துப் பாதுகாத்தார்.
சென்னை மாகாண கவர்னராக (1827-1832) லூஷிங்டனின் நிர்வாகப் பணிகள்:
ஊட்டி பகுதியை முக்கிய ராணுவ முகாமாக அறிவித்தார். கோத்தகிரி மலைப்பாதை (Nellithorai) மற்றும் சிஸ்பாரா (Sispara ghat) கணவாய் சாலைகளை அமைப்பதில் பெரும் பங்கினை வகித்தார்.
இங்கிலாந்தில் இருந்து விதைகளையும் மரங்களையும் இறக்குமதி செய்து, கேத்தியில் (Keti) ஒரு சோதனைப் பண்ணையை நிறுவினார்.
1830-ல் சென்னை மாகாணத்தில் ஆங்கிலக் கல்வியின் தரத்தை மேம்படுத்த கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் குழுவிற்குச் சென்னை மாகாணத்தில் ஆங்கிலக் கல்வியின் தரத்தை மேம்படுத்துமாறு அதிகாரிகளை வற்புறுத்தினார்.
இவரது ஆட்சிக்காலத்தில்தான் 1832-ல் புகழ்பெற்ற சென்னை கிளப் (Madras Club) தொடங்கப்பட்டது

இவர் சென்னையில் கவர்னராக இருந்தபோது, சைதாப்பேட்டையில் கட்டப்பட்ட இவரது மாளிகை 'லூஷிங்டன் கார்டன்ஸ்' (Lushington Gardens) என அழைக்கப்பட்டது.
(தற்போதைய சென்னையின் YMCA உடற்கல்வியியல் கல்லூரிக்கு (YMCA College of Physical Education) எதிரே உள்ள நந்தனம் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகள் தான் அன்று லூஷிங்டன் கார்டன்ஸ் ஆக இருந்தன)
ஆளுநர் லூஷிங்டன் தனது பதவிக்காலம் முடிந்ததும் இங்கிலாந்து திரும்பி, 1868 ஆகஸ்ட் 5 அன்று தனது 92-வது வயதில் காலமானார்.
கவர்னர் ஸ்டீபன் ரும்பால்ட் லூஷிங்டன் சிறப்பான நிர்வாகத் திறனும், ஆன்மீக ஈடுபாடும் இன்றும் மக்களால் நன்றியோடு நினைவு கூறப்படுகிறது.

Leave a comment
Upload