தொடர்கள்
ஆன்மீகம்
திருவனந்தபுரத்தில் நாம வெடி : நேரடி ரிப்போர்ட் - பால்கி

20261006201425960.jpeg

இடம் : திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பகுதியில் பத்ம தீர்த்தத்திற்கு நேரெதிரில், கேரளா பேங்க் பில்டிங்கை ஒட்டிய அபேதாஸ்ரமம் மஹாமந்தராலயம் ஸ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயில்.

20261006201244567.jpeg

கோயிலுக்கு முன்பு இருக்கும் அறிவிப்பு பலகை பரஞ்சது இது தான், அதாவது, அறிவித்தது யாதெனில்,

"1955, 24 பிப்ரவரி சத்குருதேவ் ஸ்ரீஅபேதானந்தா சுவாமிகள் ஒரு பெரிய விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மகாமந்த்ரம் எனப்படும்

ஹரே ராம ஹரே ராமா!

ராம, ராம ஹரே ஹரே!

ஹரே, கிருஷ்ண ஹரே கிருஷ்ண!

கிருஷ்ண, கிருஷ்ணா ஹரே ஹரே!

16 சொற்கள் கொண்ட இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இதைத் தான் அகண்ட நாமம் என்பார்கள். ஒரு இடைவெளி கூட விடாமல் ஜபித்துக்கொண்டே இருப்பது இதன் பொருள். அன்றிலிருந்து, இன்றும் 24 மணி நேரமும் இடைவிடாது இந்த மஹா மந்திரம் அந்த விளக்கை சுற்றியவாறு ஜபிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இன்றுவரை 71 ஆண்டுகளாக.....

நான், அன்று (31.10.2026) காலை 6.30 மணி இந்த மேற்கண்ட அறிவிப்புப் பலகையை ஒட்டி உள்ள படிகளில் ஏறி முதல் மாடியில் எண்கோண வடிவில் இருக்கும் கண்ணாடி அறையை நெருங்கினேன்.

அங்கே, ஐந்தரையடி உயர பெரிய ஏழு திரியில் எறியும் விளக்கை (கெடா விளக்கு என்று மலையாளத்தில்) சுற்றியவாறு ஒரு தம்புராவை தோளில் தாங்கியவாறே ஒருவர்

20261006210732845.jpeg

அந்த மஹாமந்திரத்தை உரக்க உச்சரித்தவாறே நடந்து கொண்டிருந்தார்.

20261006215248376.jpeg

[அகண்ட நாம வெடி இடத்திற்கு முன்பாக இருக்கும் அபேதானந்தா சுவாமியின் திரு உருவச்சிலை]

வெளியில் நின்றிருந்த என்னை அந்த கண்ணாடி கதவருகே வந்து தனது கையில் இருக்கும் தம்புராவை எனதெதிரே காண்பித்தார். தொட்டு வணங்கினேன். அவர் தனது ஜபிப்பதை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். எனது நாவும் இயற்கையாகவே அந்த மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கியது.

சில நிமிடங்களில் அவரது குரல் எனது குரலுக்கும் இடமளிக்க நானும் உள்ளே அனுமதிக்கப்பட்டேன்.

அவர் அந்த மஹா மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன் நானும் அந்த மந்திரத்தை உச்சரித்தவாரே அவருடன் அவருக்கப் பின்னாலேயே அந்த விளக்கை வலம் வரத் தொடங்கினேன்.

இடையிடையே, பக்தியுடன் அந்த அகண்ட நாம வெடி வெடிக்கும் அறையை நெருங்கியவற்கு எனக்கு செய்தது போலவே அவர் அந்த தம்புராவைக் காண்பிக்க அவர்களும் அதைத் தொட்டு விட்டு பின்னர் தரையில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு சென்றனர். சிலர் எங்களுடனும் சுற்றி வந்தனர்.

சுமார் எட்டு மணியிருக்கும் காவியுடை அணிந்த ஒரு பெரியவர்

20261006210700239.jpeg

அந்த அறையை நெருங்கினார். முன்னவர் அவரிடம் அந்த தம்பூராவைக் காண்பிக்க அவரும் தொட்டு வணங்கிவிட்டு அந்த தம்புராவை வாங்கிக் கொண்டார். பின்னர், அந்த முன்னவரும் அந்த தம்புராவை தொட்டு வணங்கி நமஸ்கரித்து விட்டு அந்த இடத்தை விட்டு கீழே இருக்கும் கோயிலை நோக்கி சென்று விட்டார்.

இப்போது இரண்டாமவருடன் நானும் ஒரு சில சுற்றுகளை முடித்துவிட்டு அந்த தம்புராவைத் தொட்டு வணங்கி நமஸ்கரித்துவிட்டு கீழே அந்த கோயிலுள் புகுந்த முதலாமவரைத் தொடர ஓடினேன்.

அங்கிருந்த ஐயப்பன் சந்நிதியின் முன்பு அவரைக் கண்டு பேசத் தொடங்கினேன்.

20261006213656736.jpeg

அவர் அந்த அபேதானந்தா சுவாமியின் பேரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஸ்ரீகுமார் தனது பெயர் என்றார்.

சுவாமி தான் சந்நியாசியாச்சே என்றவுடன், அபேதானந்தாவின் பூர்வாசிரம வாழ்க்கையின் போது பிறந்த ஒரே குழந்தை - பெண் குழந்தை வழி பிள்ளையென்றார்.

2016 தனது பணி ஓய்வு பெற்ற பிறகு தினமும் காலை 6 லிருந்து 7 மணிவரை இந்த மஹாமந்திரம் ஜபிக்க வந்துவிடுகிறாராம்.

இங்கு யாரும் வந்து ஜபிக்கலாம். அங்குள்ள கோயில் அலுவலகத்தில் கிடைத்த காலி நேர அளவில் முன் பதிவு செய்துகொண்டுவிட வேண்டும் என்று கூறிவிட்டு நகன்றார்.

அபேதானந்தா ஜி பூர்வாசிரமத்தின் போது திருமணம் ஆகி ஆறு மாதத்திற்குள் சந்நியாசம் பூண்டாராம்.

1909ல் பிறந்த சுவாமிகளின் இயற்பெயர் வேலாயுதன். ஆன்மீகத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட இவருக்கு, கேரளாவின் புகழ்பெற்ற துறவியான ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் 14 வயதில் ஆசி வழங்கினார்.

பின்னர் திருவண்ணாமலைக்குச் சென்று பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்த பின் தனது 27 வது வயதில் துறவறம் பூண்டார்"சுவாமி அபேதானந்த பாரதி" என்ற பெயரைப் பெற்றார்.

இந்த ஆசிரம வளாகத்தில் பால கிருஷ்ண சுவாமி, ராதா தேவி (தென்னிந்தியாவில் உள்ள சில ராதா தேவி கோவில்களில் ஒன்று), விநாயகர் மற்றும் அனுமன் ஆகியோருக்குச் சன்னதிகள் உள்ளன.

சுவாமி அபேதானந்தா அவர்கள் அக்டோபர் 29, 1983 அன்று மகா சமாதி அடைந்தார். இவரது அறிவுறுத்தலின்படி இவரது உடல் புனித கங்கையில் விடப்பட்டது. இவர் பெயரில் ஹரித்வாரிலும் (கன்கால்) ஒரு ஆசிரமம் அமைக்கப்பட்டு அகண்ட நாம ஜெபம் நடந்து வருகிறது.

கோயிலின் மற்ற சந்நிதிகளை தரிசனம் செய்தவிட்டு ஒரு ஆன்மீக வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட தலத்தை விட்டு மஹா மந்திரத்தை உச்சரித்தவாரே.... ஹரே ராம ஹரே ராமா... நானும் அகன்றேன்.