மும்பையிலிருந்து எழுதும் நாட்களில் கண்டு பேசிய பிரபலங்களைப் பற்றி தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.
பாலா சாஹே தாக்கரே என்ற சக்தி 1960களில் தொடங்கி 1990களில் உக்கிரமாக மஹாராஷ்ட்டிரா நிலவளவில் கோலோச்சிக்கொண்டிருந்த சமயம். அவர் சிந்தித்தாலே சிதறும் அரசியல் நிகழ்வுகள் நித்தம் அரங்கேறும். வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு. மத்தியிலும் இவரை ஒதுக்காது இவரது துணை கொண்டு ஆட்சியும் நடந்திருக்கிறது.
1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போதுமுதல் கட்ட தேர்தல் முடிந்து அடுத்த கட்ட தேர்தல் நடக்கும் இடைப்பட்ட நாட்களில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் கூட்டத்தில் பேசுகையில் அன்றை பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த நேரத்தில் இந கொலை நடந்து இரு வாரங்கள் கூட ஆகியிருக்காது, அவரை பேட்டி காண அவரது பாந்திரா பகுதியில் இருக்கும் இல்லமான மாதோஷ்ரியில் ஆஜரானேன்.இரண்டு நாட்கள் AK 47 வைத்திருக்கும் போலீஸின் பரிசோதனைகள் (ராஜீவை தமிழன் தானே கொன்றான், இவனை தனியாக விடாதே, கூடவே செல்லணும் என்ற மராட்டிய சங்கேத மொழியசைவுகள் போன்ற அலைக்கழிப்புக்குப்பிறகு, இந்த தேர்தலில் சிவ சேனையின் சான்ஸ் எப்படி? கேள்வி ஒன்று தான் என்றபடியே உள்ளே புகுந்தேன் சேனைத் தலைவரின் கூடாரத்திற்குள். இரண்டு மணி நேரம் கழிந்தது.
"யூ ப்ளடி ஜர்னலிஸ்ட் ஃப்ரம் மெட்ராஸ், அஞ்சு நிமிடம் என்றாய். இரண்டு மணிநேரம் பேசி விட்டாய்" என தன்னை ஏமாற்றி எடுத்துக்கொண்ட திறமையை வர்து பாணியில் செல்லமாக சாடினார்.
ஜெய் தமில்னாடூ என்று பிரியாவிடை கொடுத்தனுப்பினார்.
அப்போது எடுத்த அவரது போட்டோ இதோ

-----------------

1987ல் தூர்தர்ஷனில் அட்டகாசமாக ஓடிய ராமாயண் டீ வீ தொடரின் இசை அமைப்பாளர் ரவீந்த்ர ஜெயின். 
அவரது இல்லத்தில் இவரை பேட்டி கண்டபோது….எடுத்த படம்.
---------
ஹம்லோக் என்னும் இந்தியாவின் முதல் முதலாக எடுக்கப்பட்ட டீ வீ தொடரின் நாயகன் ராஜேஷ் பூரி எனும் இயற்பெயர் கொண்ட லல்லு என்பவர் இவர் தான். இவரது நடிப்பு யதார்த்தம். பக்கத்து வீட்டு மனிதர் என்ற சர்வ சாதாரணமாயிருப்பவர். ஆமாங்க, இவர் எனது தெருக்கோடி (அந்தேரி கிழக்கு ஷேர் ஏ பஞ்சாப் காலனி)வீட்டில் தான் இருந்தார். சேகர் சுமன், நீனா குப்தா போன்ற பிரபல குணச்சித்திர டீ வீ நடிகர்களும் இவர் இருந்த பில்டிங்கில் தான் இருந்தனர்.
இவரை நான் எடுத்த பேட்டி 1985ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.


------------------------------
1985ல் பாம்பேயில் (இன்றைய மும்பை அன்று இந்த நாமதேயத்துடன் தான் இருந்தது) நடந்த இண்டியன் நேஷனல் காங்கிரஸ் என்ற அமைப்பின் நூறாவது ஆண்டு அமைப்பு தினமாக இந்திரா காங்கிரஸ் கட்சி (அன்று இண்டியன் நேஷனல் காங்கிரஸ் பல உடைப்புகளுக்கு உள்ளாகி அதில் ஒரு பிரிவான இந்திரா காங்கிரஸ் எனும் கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தமையால்) கொண்டாடியது. அப்போது அந்த நிகழ்வில் இவர்களை எனது காமிராவில் க்ளிக்கியுள்ளேன்.
அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி (கீழே)


அங்கு எந்த ஒரு ஒரு தடையுமின்றி சிற்றுண்டி தேனீர் பெறப்படும் இடங்களில் ராஜீவ் காந்தி சோனிய காந்தி என அனைவருடன் சர்வ சாதாரணமாக உணவருந்துவதோ பேசிக்கொண்டிருப்பதோ படம் பிடிப்பதோ செய்திருக்கிறேன்.
அன்று நிதித் துறை அமைச்சராய் இருந்த வி. பி.சிங்க் (படம் கீழே). அவரே 1989ல் பிரதமராகவும் ஆனார்.
இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னின்று நடத்தியவர் நமது கருப்பையா மூப்பனார்.

காங்கிரசில் அவரது செல்வாக்கு பலமாக கருதப்பட்ட காலமது.
--------
கீழேயுள்ள படத்தில் பிற்காலத்தில்(1992) ஜனாதிபதியான சங்கர் தயாள் ஷர்மா தனது மனைவியுடன் இடது கோடியில் அமர்ந்திருக்கிறார். வலது கோடியில் அமர்ந்திருப்பவர் 1974ல் உப ஜனாதிபதியாக இருந்த பி.டி. ஜத்தி.
இடையில் பா ராமச்சந்திரனும் இருக்கிறார்.
-----------
1991 பாராளுமன்ற தேர்தலின் போது மும்பை வடக்கு பகுதியில் வேட்பாளராக நின்றிருந்த பாலிவுட் நடிகர் சுனில் தத்த அவருடனேயே அவரது காரில் பிரயாணித்தபடியே பேட்டி எடுத்தபடியே சென்றேன். ஆங்காங்கே கூட்டப்பட்டிருக்கும் தேர்தல் கூட்டங்களில் அரை மணிநேரம் மைக்கைப் பிடித்து தன்னுரையை முடித்துவிட்டு உடனே தனது காரில் ஏறி அடுத்த கூட்டத்துக்கு விரைவார். நீங்களும் எனது காரிலேயே வந்துவிடுங்கள் பிரயாணிக்கும்போது நாம் பேசலாம் என்றார்.



Leave a comment
Upload