தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 32 - ஜி ஏ பிரபா

20261028072844470.jpeg

உ

மந்த்ர ரூபிணீ

ஹர்ஷப்ப்ரதா ஹவிர் போக்த்ரீ ஹார்த ஸந்தம ஸாபஹா I ஹல்லீஸ லாஸ்ய ஸந்துஷ்டா ஹம்ச மந்த்ரார்த்த ரூபிணீ II

ஆனந்தத்தை அளிப்பவர்.

ஆனந்தமாய், என் அறிவாய் நிறைந்த அமுதமாய் என்கிறார் அபிராமிட்டர். ஆனந்தத்தை அளிக்கக்கூடியவள் அம்பிகை. அவளை வணங்கினாலே தன்னுடைய பக்தர்களுக்கும் அந்த அமுத மழையைப் பொழிபவள். அரிய சாகசம் செய்பவள். பண்டாசுரனை அழித்தவள், மகிஷாசூரனை வதம் செய்தவள். அரிய காரியங்களை பக்தர்கள் செய்வதற்கு அவளே உறுதுணையாக இருக்கிறாள்.

நம்மிடையே இருக்கக்கூடிய கொடிய விஷம் பயம். அந்தப் பயமே நமது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாமல் ஒரு தடுமாற்றத்தை உண்டுபண்ணுகிறது. அதைப் போக்குபவள் அம்பிகை.

சிவனிடம் இருந்து பெற்ற முதல் 41 பாடல்கள் சாக்த தத்துவங்களைக் கொண்டவை.அதனை ஆனந்த லஹரி என்பர். ஆனந்தத்தை அலை அலையாகத் தருவதால் அதற்கு ஆனந்த லஹரி என்று பெயர். தேவியை உபாசிப்பவர்களுக்கு அலை அலையாக ஆனந்தத்தை அளிப்பவள். இவளைப் பூஜிக்கின்றவர்களின் இதயத்தில் உள்ள இருளைப் போக்குபவள். நல்லோர்களின் இதயத்தில் அவள் சிரத்தையாக இருக்கிறாள். நேர்மை, நியாயம், பக்தி என அனைத்தும் உடையவர்களாய் அவர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் நாடும் சித்தியை வழங்க அவள் காத்திருக்கிறாள்.

64 வகை தந்திர சாஸ்திரங்களால் எல்லா உலகத்தையும் நிரப்பிவிட்டு ஈஸ்வரன் சும்மா இருக்கும் நேரத்தில், அம்பிகையின் கட்டாயத்தின் பேரில் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும், அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நால்வகைப் பொருளையும் ஒருங்கே தரக்கூடியதான ஸ்ரீவித்தையை இப்பூவுலகில் அவதரிக்கச் செய்தார்.

அம்பிகையின் நாமத்தில் உருகி, அவளுடைய பாதத்திலேயே நம் மனத்தைப் பற்றி, அவளுக்கே நம்மை அடிமையாக்கிக் கொண்டவர்கள் யாரிடமும் போய் நின்று கையேந்த மாட்டார்கள், யாருக்கும் அடிமையாக மாட்டார்கள்.

இதையே அபிராமிட்டர், "பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உண்ட இதத்தே ஒழுக அடிமை கொண்டாய்" என்கிறார். அனைத்து மந்திரங்களின் உட்பொருள் வடிவினள்.

பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் அவயங்களாக இருக்கின்றவள் அம்பிகை. ஆதி, அந்தம் அற்ற பரம்பொருளாம் தேவியின் மேனியிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள், நமக்கு வெளிச்சம் தருகிறது. தேவதைகளால் சூழப்பட்டுச் சேவிக்கத் தக்கவள் என்கிறார் ஆதிசங்கரர்:

ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணிபி ரணிமாத்யாபி ரபிதோ

நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:

என்கிறார்.

இந்த வடிவம் என்பது இல்லாதவள். கெட்டவர்களை அழிக்கும் வீரியத்தையோ, அவளின் அற்புத செயல்களையோ நம்மால் வர்ணிக்க முடியாது. பக்தியுடன் அவளைப் பூஜிப்பவர்கள், தாங்க முடியாத கஷ்டங்களை உடையவர்கள், அவள் நாமத்தைச் சொன்னவுடன் அதிலிருந்து விடுபடுவார்கள் என்கிறது ஸ்ரீதேவி மகாத்மியம்.

அவளை எண்ணியவர்களுக்கு அவளே வாழ்வின் அர்த்தமாக விளங்குகிறாள். க்லீம், ஹ்ரீம், ஸ்ரீம் என்ற மூன்று பீஜங்களைச் சேர்த்து இடைவிடாமல் ஜெபிப்பவர்களுக்கு ஆனந்தச்சுவையை அளிக்கிறாள். நூற்றுக்கணக்கான யாகங்களைச் செய்யும் பலன் அம்பிகையைப் பூஜிப்பதால் கிடைக்கும். எல்லா யாகங்களின் இறுதிப் பயணமும் அவளையே அடைகிறது.

ரகசியத்துள் ரகசியமானவள். அவளுடைய அருளால்தான் நமக்கு முக்தி. நம்மை ஆளுமை செய்வதற்கு அவளுடைய அடிதாமரைகளே கதி எனப் பற்றிக் கொள்ள வேண்டும். அம்பிகையின் கடைக்கண்களே அந்தகன் வரும்போது நம்மை காப்பாற்றுவாள். சந்திரன், சூரியன் இவற்றை இரு கண்களாகக் கொண்டவள். சிவனுக்கு உடலாக இருக்கிறாள்.

காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன் என்னும் ஒன்பது உருவமானவரான சிவன், இவை அனைத்தும் சேர்ந்து உன்னுடைய உடலாக இருக்கிறார்.எனவே, இதுவே ஆனந்த பைரவர், ஆனந்த பைரவி என்ற நிலையைத் தந்துள்ளது.

உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்து இங்கு எம்மையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார். இனி எந்த ஒரு சமயங்களும் தேவையில்லை; என்னை ஈன்றெடுக்கும் ஒரு தாயும் இல்லை; உன் மேல் வைத்த பக்தியே எனக்கு அனைத்தையும் தருகிறது என்கிறார் அபிராமி பட்டர்.

முக்திக்கு வித்துமானவள். பரம சௌக்கியங்களை அளிக்கும் வித்தையும் அவளே. அம்பிகையை நினைத்து அவளையே போற்றினால் நமக்கு அற்ப ஆயுள் இல்லை. நீண்ட வாழ்விற்குப் பின் அமர பதவியும் கிட்டும்.