
அச்சத்தின் இருளைக் கிழித்தெறிந்த
அறிவெனும் சூரியனின் செங்கதிரே!
அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிந்த
ஆவேசப் புயலின் பேரொலியே!
சாதியின் சுவர்களைச் சாய்த்திடவே
சமத்துவச் சங்கை முழங்கியவன்!
மானுடம் ஒன்றெனும் மகத்துவத்தை
மண்ணுலகெங்கும் விதைத்திட்டவன்!
பெண்ணினம் என்பதும் பேராற்றல் என்றாய்,
பேரொளி வீசும் புதுமைப்
பெண்ணைக் கண்டாய்!
அடுப்பறை பெண்களுக்குக்
கல்வி எதற்கெனக்
கேட்ட காலத்தின் செவிகளில்
இடி முழக்கமிட்டாய்!
மூடத்தின் முகத்திரை கிழித்தெறிந்து,
முற்போக்குச் சிந்தனை முரசறைந்தாய்!
பகுத்தறிவென்னும் பகலவனை ஏற்றி,
பாரினில் புதுயுகம் படைத்திட விழைந்தாய்!
உழைப்பவனின் வியர்வையில்
உலகைக் கண்டாய்,
உண்மையின் பாதையில்
உயர்வைக் கண்டாய்!
பசியற்ற உலகும் பாகுபாடற்ற வாழ்வும்
பிறந்திடும் நாளுக்குப்
பெருங்கனவு கொண்டாய்!
சாதனை வானில் சிறகுகள் விரித்து,
சரித்திரம் படைக்க
இளையோரை அழைத்தாய்!
சோர்வெனும் இருளில் சுடரொளி ஏற்றி,
சுகந்திரச் சிந்தனைத் தீபத்தைத் தந்தாய்!
காலத்தின் பக்கங்கள் புரண்டிடலாம்,
காட்சிகள் யாவும் மாறிடலாம்!
ஆனால் உன் சிந்தனைத் தீப்பொறிகள்
அணையாத அக்னியாய் ஒளிர்ந்திடுமே!
பாரதி! நீ கண்ட கனவுகள் யாவும்
பார்த்துப் போற்றும் ஓவியங்கள் அல்ல!
பாரினில் நாமும் படைத்திட வேண்டிய
புதியதோர் உலகிள் அடித்தளங்கள்!
உன் கவிதை எங்கள் குரலாகட்டும்!
உன் சிந்தனை எங்கள் செயலாகட்டும்!
உன் இலட்சியம் எங்கள் வழியாகட்டும்!
நீ கண்ட புதுயுகம் நனவாகட்டும்!
பாரதி ஓர் சகாப்தம் அல்ல
தலைமுறைகள் தோறும்
உயிர்க்கும் சிந்தனை!
பாரதி ஓர் பெயரல்ல
புரட்சியைப் பிரசவிக்கும் பேரொளி!

Leave a comment
Upload