பொது
தேவன் 105! அது ஒரு தேவ மருத்துவம்!- வேங்கடகிருஷ்ணன்

2019080421262695.jpg

எழுத்தாளர் தேவன் அவர்களின் 105-வது பிறந்த நாள் 08/09/2019 அன்று கொண்டாடப்படுகிறது. தான் எழுதிய எழுத்துக்கள் தன் காலம் தாண்டியும், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாசிக்கப்படும் பாக்கியம் எல்லா எழுத்தாளருக்கும் கிடைப்பதில்லை, தேவன் பாக்கியசாலி.

கும்பகோணத்தில் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, அவர் எழுத ஆரம்பித்து விட்டார். மாஸ்டர். ராஜாமணி அவருடைய முதல் சிறுகதை. அதை எழுதும்போது அவருக்கு 20 வயதுதான். நகைச்சுவை கதைகள் எழுத விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டி...

தேவன் ஒரு முறை குறிப்பிட்டது போல், “மாஸ்டர். ராஜாமணிதான் எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். ஆசிரியர் கல்கியிடமும் பெரியவர் வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான். ஆசிரியர் கல்கி என்னைப் பார்த்தவுடன் மாஸ்டர். ராஜாமணி என்னுடைய சொந்த சரக்கு தானா என்று தெரிந்து கொள்ள, அதை தொடர்ந்து ஒரு கட்டுரையை அவர் அருகிலேயே உட்கார்ந்து எழுதும்படி சொன்னார். எழுதினேன்... அதன் பிறகே என்னை உதவி ஆசிரியனாக அமர்த்தினார்” என்றார்.

“தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்று பைபிளில் ஒரு வசனம் வரும். அது நம் “தேவனுக்கும்” பொருந்தும். சிறுகதை, கட்டுரை, நாவல், தொடர், பயணக்கட்டுரை, சமையல் குறிப்பு, வாரப் பத்திரிகை என அவர் தொடாத எல்லைகளே இல்லை.


ஆனந்த விகடனில் 1933-ல் உதவி ஆசிரியராக சேர்ந்த அவர், ஆசிரியர் கல்கி, விகடனை விட்டு விலகி கல்கி ஆரம்பித்தபோது, விகடனின் மேனேஜிங் எடிட்டராக 1942 முதல் 1957-ல் காலமாகும் வரை பணியாற்றினார்.


கதை சொல்லிகளில் தேவன் தனி ரகம். வாத்தியார் சுஜாதா கூட ஒரு முறை, “கல்லூரி நாட்களில் என்னுடைய மதிப்பிற்குரிய எழுத்தாளர் தேவன் தான். இளம் எழுத்தாளர்களுக்கு நான் தேவனின் படைப்புகளில் இவற்றை பரிந்துரை செய்வேன். எழுத துவங்குமுன் இதை படியுங்கள்... “மிஸ்டர். வேதாந்தம்”, “ஸ்ரீமான். சுதர்சனம்”, “ஜஸ்டிஸ் ஜகந்நாதன்”, “சின்னக்கண்ணன் கதைகள்”, “ராஜத்தின் மனோரதம்”, “துப்பறியும் சாம்பு” மற்றும் “கோமதியின் காதலன்” ஆகியவை. ஆனந்த விகடன் தீபாவளி மலரில், அவருடைய மல்லாரி ராவ் கதைகளை மறக்கமுடியுமா.? தன்னுடைய எழுத்து நடைக்காக அதிகம் நேசிக்கப்பட்ட வாத்தியாரே அப்படி சொன்னால், வேற என்ன சுவாமி நான் சொல்ல?” என்றார். அது பரிபூரண உண்மை!

20190804212720721.jpg

இப்போது கூட அவரது மகத்தான படைப்புகளில் ஒன்றான மிஸ்டர். வேதாந்தம் நாவலை கையில் எடுத்தால் கீழே வைக்கவே மனம் வராது. தெளிவான நடையும், பாத்திரப் படைப்பும், சூழல் வர்ணனையும், உங்களை நன்னிலத்திற்கும், கும்பகோணத்திற்கும் அழைத்து போய்விடும்.


கல்கி, பொன்னியின் செல்வனின் துவக்கத்தில் சொல்வது போல்... 'ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்' தேவன் எதுவும் தன் கதைகளில் முன்னுரை சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு நாவலிலும் அது தானாகவே நிகழ்கிறது. சாம்புவோடு சுற்றி நாமும் துப்பு துலக்குவோம், செல்லம் வேதாந்தம் காதல் பேச்சுக்களை அருகிருந்து கேட்போம். சுதர்சனம், கோமளம் ஜோடியின் ஒண்டு குடித்தனத்தை எட்டிப் பாப்போம்....

திருச்செந்தூர் முருகன் பேரில் அவருக்கு அபார பக்தி உண்டு. எல்லா கதைகளிலும் எப்படியாவது முருகனை கொண்டு வந்து விடுவார். லட்சுமி கடாட்சம் நாவலில் கதாநாயகி காந்தாமணி, தீயவனான வேணுகோபாலனிடம் சிக்கி விடுவாள். அப்போது அவனிடமிருந்து தப்பிக்க அவள் உபயோகிக்கும் ஆயுதம் கந்த சஷ்டி கவசமே. அவள் அதை சொல்ல சொல்ல வேணுகோபாலனது நண்பர் சிங்காரம், அவனது குறுக்கே நின்று அவளை காப்பாற்றுகிறார் என்று கதையை கொண்டு செல்லும் விதமே அவரது முருக பக்தியை நமக்கு ஆதாரத்தோடு விளக்கி விடும்.

தேவனின் கதை மாந்தர்கள் எல்லாருமே நாம் அடிக்கடி பார்ப்பவர்கள் தான். தினசரி நம்மோடு பழகுபவர்கள் தான். தான் சென்ற இடங்கள், கும்பகோணம் காவேரி என அவர் சுற்றிய இடங்களே கதை நடக்கும் இடங்கள். அதனால் தானோ என்னமோ அன்றிலிருந்து இன்றுவரை அவரை வாசிப்பவர்கள் குறையாமல் இருக்கிறார்கள். கல்கியிடம் கற்றுக்கொண்டாலும் பதினாறு அடி பாயும் குட்டியாகவே தேவன் இருந்தார். அவர் வார்த்தெடுத்த ஆளுமைகள் நிறைய பேர், அவரின் புகழை பரப்பினார்கள். ஓவியர் மாலியும், கோபுலுவும் அதில் முதன்மையானவர்கள்.கோபுலு தான் தேவனின் கதை மாந்தர்களுக்கு உயிர் கொடுத்தவர். குறிப்பாக “துப்பறியும் சாம்பு”. கோபுலுவின் ஓவியமே சாம்புவுக்கு உயிர் தந்தது. அட்டையில் சாம்புவைப் பார்த்ததுமே நாம் சிரிக்கத் துவங்கிவிடுவோம்.

20190804212817666.jpg

எல்லோரையும் சிரிக்க வைத்த அந்த சிறந்த எழுத்தாளருக்கு ஒரு குறையை வைத்தான் செந்திலாண்டவன். பிள்ளை இல்லா குறை கடைசிவரை அவரை வாட்டி வதைத்தது. அவரே ஒருமுறை தன் மனைவி ராஜி ஒரு பிள்ளையை பெற்று தன்னிடம் கொடுத்தால், அவன் எப்படி இருப்பான்.. அவனை நான் எப்படி கொஞ்சியிருப்பேன்.. என்ற கற்பனை தான் “ராஜியின் பிள்ளை” என்று சக எழுத்தாளரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய எழுத்துக்களில் அவருக்கே மிகவும் பிடித்தது, 'அதிசயத் தம்பதிகள்' தான். அதனை எழுத அவருக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய அன்பு மனைவி ராஜி தான். அவருடைய வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது அந்தக் கதை.


ராஜி அகால மரணம் அடைந்துவிட அந்த துக்கத்திலேயே பத்துவருடங்கள் உருகி நின்றார் தேவன். பின்னர் பிள்ளை வரம் வேண்டி, மீண்டும் ஒரு திருமணம் செய்தும் பிறக்காத பிள்ளைக்கு ஏங்கியே 1957 மே 5 ம் தேதி மறைந்தார்..... அல்ல அல்ல எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.... தனக்கு முன்னாலே வானுலகு சென்றுவிட்ட ஆசிரியரிடம் தானும் சென்று இணைந்து விட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஒவ்வொரு முறை ஒரு வாசகர் அவர் எழுத்தை படிக்கும்போதும் அங்கே தேவன் அமர்ந்து கதை சொல்கிறார், வாசகர் சிரிக்க... சிரிக்க...... வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் தானே?