கதை
சர்மாஜி வாக்கிங் போகிறார்... - கி.கல்யாணராமன்

20200401160354942.jpg


‘அன்பே வா’ சினிமாவில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டில் வருவது போல வான வீதியில், தன் மனைவி அபிதாவுடன் சர்மாஜி கையை கோர்த்துக் கொண்டு வாக்கிங் போகிறார். பின்புலத்தில் அந்தப் பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது.

“ஆகா.. அபி.. அங்கே பார்.. எவ்வளவு அழகு.. இதோ நாம் நிலவின் மிக அருகில் வந்துவிட்டோம்.. இங்கே எல்லாம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. ஒரு பெரிய யானை துதிக்கையில் தண்ணீரை எடுத்து தனது குட்டி யானைக்கு குளிப்பாட்டுகிறது!”


சர்மாஜி ஈசிச்சேரில் படுத்துக்கொண்டு வாயை திறந்து கொண்டு தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து பயந்த அவர் மனைவி அபிதா, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார்...


“ஆ.. என்ன இது? யானை என் மேல் தண்ணீர் தெளிக்கிறது..” என்று கேட்டுக்கொண்டே சர்மாஜி கனவில் இருந்து விழித்துக் கொண்டார்.


“என்ன பார்த்தா யானை மாதிரி தெரிகிறாதா? பகலிலே கனவா? அது என்ன யானை? ஆண் யானையா இல்லை பெண் யானையா?”


“எதோ ஓன்று. நான் உன் கையை பிடித்துக்கொண்டு சொர்கலோகத்தில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். நீ வந்து என்னை எழுப்பி விட்டாய்..”


“அங்கே போனாலும் என்னை விடமாட்டீர்களா?”


“இல்ல அபி.. வாட்சாப்பில் பார்த்தேன். வாக்கிங் போவது மிகவும் நல்லது என்று போட்டிருந்தது. அதை படித்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டேன்.”


“வாக்கிங் போவது நல்லது என்று வாட்சாப்பில் போட்டால்தான் உங்களுக்கு தெரியுமா?”


“நான் தினமும் இனிமேல் வாக்கிங் போகப்போறேன். நீ என்ன சொல்கிறாய்?”

“நீங்கள் வாக்கிங் போவது நல்லதுதான். உங்களுக்கு பிபி அதிகமா இருக்கு. அதனால நம்ம டாக்டர் கிட்ட போயி அதை பத்தி தெளிவா தெரிஞ்சுக்கிட்டு வந்துருங்க. அதான் நல்லது.. நீங்க பாட்டுக்கு வாக்கிங் போயிட்டு எங்கேயாவது போய் மயக்கம் போட்டு விழுந்து விட்டால், நான் என்ன செய்யறது? அதனால டாக்டர கேட்டுட்டு அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்வதுதான் நல்லது...”

“வாக்கிங் போனா இப்படியெல்லாம் கூட நடக்குமா? சரி நான் இப்பவே போய் டாக்டர் கிட்ட இத பத்தி பேசிட்டு வரேன்...”


“டாக்டர்கிட்ட போய் மசமசன்னு அவர் சொல்றத கேட்டுட்டு வராம, உங்க சந்தேகம் எல்லாம் நல்லா கேட்டு தெரிஞ்சுகிட்டு வாங்க...”


சர்மாஜி அவர் குடும்ப டாக்டர் குபேரனை நேர்ல போய் சந்தித்தார்...

அப்பொழுது காலை 11 மணி. டாக்டரைப் பார்க்க வெளியே 10 பேருக்கு மேல காத்துக்கிட்டு இருந்தாங்க. டாக்டர் ரொம்ப பிஸியாக இருந்தார். அந்த சமயத்துல சர்மாஜி நேரா டாக்டர் அறைக்குள்ள போயிட்டாரு. அவர் குடும்ப டாக்டர். அதனால நேரா போயி டாக்டர் எதிர்க்க உட்கார்ந்து விட்டார்.

டாக்டர், “என்ன சர்மாஜி உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?”


“அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் தினமும் வாக்கிங் போகலாம் என்று இருக்கிறேன். அதைப் பற்றி என்னுடைய சந்தேகங்களை உங்களிடம் கேட்கலாம் என்று வந்தேன்...”


டாக்டர் “சர்மா ஜி நீங்க இப்ப வீட்டுக்கு போயிட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துவிட்டு, சாயங்காலம் நாலு மணிக்கு வாங்க. அப்ப நான் ஃப்ரியா இருப்பேன். நல்லா பேசலாம். இப்ப நிறைய பேஷன்ட்ஸ் காத்துக்கிட்டு இருக்காங்க... அதனால போயிட்டு நாலு மணிக்கு வாங்க...”


சர்மாஜி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவர், டாக்டரிடம் உடனே தன்னுடைய சந்தேகங்களை கேட்க வேண்டும் என்று கூறினார்...

வாக்கிங் போவது பற்றி என்ன பெரிய சந்தேகம் இருக்கப் போகிறது... ஏதோ இரண்டு கேள்வி கேட்கப் போகிறான், கேட்டு விட்டு போகட்டும் என்று டாக்டர்... “சரி சரி உங்களுக்கு என்ன சந்தேகம் கேளுங்க” என்று சர்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானார்.

“நான் வந்து தினமும் வாக்கிங் போறது எப்ப போகணும்? காலைல போகணுமா? மதியம் போகணுமா? மாலையில போலாமா? இல்ல நைட்ல போகலாமா?”


“எப்பவுமே காலைல போவது நல்லது. மாலையிலும் போகலாம்.”

"டாக்டர், காலையில வாக்கிங் போறது நல்லதுன்னு சொன்னீங்க. காலையில பிரம்ம முகூர்த்தம் அப்படின்னு சொல்றாங்களே அப்ப எழுந்து போலாமா?”


“எனக்கு பிரம்ம முகூர்த்தம் எல்லாம் தெரியாது... காலைல எழுந்து வாக்கிங் போவது நல்லது...”


" சரி எனக்கு ஒரு சந்தேகம். சூரியன் உதயமாகும் முன்னாடி போகணுமா இல்ல சூரியன் உதயமான பின்னாடி போகணுமா? மாலையில் போவதானால் சூரியன் ஈவினிங் செட்டு ஆவதற்கு முன்னால போகனுமா?”

“நீங்க காலையில சூரியன் உதயமான பின்பே போலாமே...”

“அப்புறம் டாக்டர்... சில பேரு கையில மொபைல்ல கட்டிட்டு வாக்கிங் போறாங்களே அதுமாதிரி போலாமா?”

“அதெல்லாம் வேண்டாங்க எதுக்கு உங்களுக்கு மொபைல்? நீங்க அரை மணி நேரம் வாக்கிங் போனால் போதும் அதற்கு எதற்கு மொபைல் போன்?”


“அரை மணிக்கு மேல வாக்கிங் போனால் என்ன ஆகும் டாக்டர்?”

“அரைமணி நேரம் வாக்கிங் போனாலே உங்களுடைய வயதுக்கு போதும். அதற்கு மேல் போனால் உங்கள் உடம்புக்கு நல்லது அல்ல...”

“சரியா அரை மணி நேரம்தான் வாக்கிங் போகணும்னு நீங்க சொல்லிட்டீங்க. அரை மணி நேரம் ஆயிடுச்சா இல்லையான்னு எனக்கு எப்படி தெரியும்? அதுக்கு கையில மொபைல் இருக்கிறது தானே நல்லது...”


“சரி நீங்க மொபைல் எடுத்துக்கிட்டுப் போங்க...”


டாக்டர் குபேரனுக்கு கோபம் வந்தது. ஏதோ இரண்டு கேள்வி கேட்கப் போகிறான் என்று இவனிடம் பேச ஆரம்பித்தால், இப்படி கேட்டுக் கொண்டே இருக்கிறானே. வெளியில் வேறு 10 பேர் காத்திருக்கிறார்கள். இவனை எப்படி வெளியே அனுப்புவது? இருந்தாலும் பழகின காரணத்தினால் பொறுமையாக அவன் கேட்டதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.


சர்மாஜி தன் கேள்விகளை தொடர்ந்தார்...

“நான் வாக்கிங் போகும்போது என்னுடைய மனைவியும் கூட்டிக்கொண்டு போலாமா?”


“எதற்காக?”

“மனைவியும் கூட வருவது நல்லது இல்லையா? நான் நடக்கும்போது திடீரென்று எனக்கு ஏதாவது மயக்கம் வந்தால் என் மனைவி பக்கத்தில் இருப்பது நல்லது இல்லையா? அப்படி இருந்தால் அவள் என்னை உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் விடுவாள் இல்லையா?”


டாக்டர் குபேரனுக்கு கடுப்பாகி விட்டது...


“சரி நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூட்டிக்கொண்டு போங்கள். எனக்கென்ன வந்தது?”

“அதுக்கில்லே டாக்டர். எனக்கு இருப்பது ஒரு மனைவிதானே..அவளையும் விட்டு நான் யாரை கூட்டிப் போவது?”

“சர்மா ஜி மீதி கேள்வி எல்லாம் அப்புறமா கேட்கலாம், நீங்க கிளம்புங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு...”


“இன்னும் இரண்டே இரண்டு கேள்விதான் பாக்கி டாக்டர்...”

“இன்னும் என்ன சந்தேகம் உங்களுக்கு?”


“டாக்டர் வாக்கிங் எந்த இடத்தில் போவது நல்லது? சமதளத்தில் போலாமா இல்ல மேடு பள்ளமாக இருக்கும் இடத்தில் போவது நல்லதா? அப்புறமா டாக்டர் சில பேர் சொல்றாங்க.. சின்ன சின்ன கூழாங்கல் மாதிரி வெச்சு அது மேல நடக்கறது நல்லதுன்னு. அந்த மாதிரி இடம் இருந்தால் அந்த இடத்தில் நடந்த போவது நல்லதா இருந்தா அப்படியொரு இடம் உங்களுக்கு தெரியுமா?...”

டாக்டர் குபேரனுக்கு இப்பொழுது பொறுமை முற்றிலும் போய்விட்டது. கோபம் தலைக்கேறியது...


“யோவ் நீ எப்படியாவது போய்யா. எங்க எப்படி வாக்கிங் போனாலும் பரவாயில்லை: ஆள விடு...”

“கோபப்படாதீங்க டாக்டர். எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது இல்லையா? வாக்கிங் போவதற்கு ஏதாவது கணக்கு உண்டா? ஒரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் வாக்கிங் போகலாம்?”


இனிமேல் இவனிடம் பேசக்கூடாது என்று முடிவு செய்து டாக்டர் குபேரன் அவருடைய இருக்கையிலிருந்து எழுந்து விட்டார்.... “சர்மாஜி எனக்கு கொஞ்சம் அவசரமாக வேலை இருக்கிறது. நான் வெளியே போக வேண்டும். நீங்கள் அப்புறமாக வந்தால் மீதி கேள்விகளை கேட்கலாம்” என்று வெளியே போக முயற்சி செய்தார்.


சர்மாஜி விடுவதாக இல்லை...

“அப்புறம் டாக்டர் வாக்கிங் போகும்போது சில பேர் பின்பக்கமாக நடந்து போற மாதிரி போலாமா?”


டாக்டர் செம கடுப்பில் இருந்தார்.


“நீங்க நேரா நடங்க. இல்ல பின்பக்கமா நடங்க. இல்ல தலகீழா வேண்டுமானாலும் நடங்க. எப்படியோ வாக்கிங் போனா சரி...”

“டாக்டர் இப்ப வந்து எனக்கு இன்னொரு சந்தேகம்...”

“சொல்லித் தொலைங்க...”

“காலையில் எழுந்தவுடன் நான் காப்பி சாப்பிட்டு விடுவேன். அதனால காபி சாப்பிட்டபின் வாக்கிங் போகலாமா அல்லது வாக்கிங் போயிட்டு வந்து காபி சாப்பிடலாமா? எது நல்லது டாக்டர்...”

டாக்டர் பதில் சொல்லவில்லை அமைதியாக இருந்தார்.


ஆனால், சர்மா ஜி கேள்விகளை தொடர்ந்து கொண்டிருந்தார்...

“சரி.. நான் காப்பி சாப்பிட்ட பின்பே வாக்கிங் போகிறேன். இன்னொரு சந்தேகம் இந்த வாக்கிங் போகும்போது ஜாக்கிங் என்று சொல்வார்களே அந்த மாதிரி பண்ணலாமா? அல்லது வேகமா ஓடுற மாதிரி வாக்கிங் போகலாமா?”


இப்பொழுது டாக்டருக்கு பிபி அதிகமாகிவிட்டது. அவர் தண்ணீரை எடுத்து ஒரு மாத்திரையை வாயில் போட்டு விழுங்கினார்...


“என்ன டாக்டர். பிபி அதிகமாகிவிட்டதா? எனக்கு கூட பிபி இருக்கு. நான் பிபி மாத்திரை சாப்பிட்ட பின் வாக்கிங் போகலாமா அல்லது வாக்கிங் போய் வந்த பின்பு சாபிடலாமா? பிபி இருப்பதால வாக்கிங் போனால் ஏதாவது ஆபத்தா? என் மனைவி கேட்கச் சொன்னாள்...”


டாக்டருக்கு இப்பொழுது தலை சுற்ற ஆரம்பித்தது....

“டாக்டர் இந்த வாக்கிங் போகும்போது கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துட்டு போறது அவசியமா? தண்ணி பாட்டிலை எடுத்துட்டு போயி தண்ணி குடிச்சா என்ன ஆகும்? வாக்கிங் போகும்போதும் தண்ணி குடிக்கலாமா குடிக்க கூடாதா?”


“தண்ணி பாட்டிலை எடுத்துட்டு போ எடுத்துக்காம போ என்னவோ பண்ணு. பிபி மாத்திரை சாப்பிடு இல்ல சாப்பிடாம வாக்கிங் போ. இனிமே நீ கேக்குற எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன். நீ வாக்கிங் போனாலும் சரி போகாவிட்டாலும் சரி. நான் இப்போ ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில போகிறேன். என்னை விட்டுவிடு...”னு டாக்டர் ஓடியே போயிட்டார்.


“சரிதான். டாக்டருக்கு முக்கிய வெளி வேலை இன்னிக்கு. வாக்கிங் போவது பற்றி டாக்டரிடம் இன்னொரு நாள் தெளிவாக கேட்டுக்கொள்ளலாம்” என்று தன் வீட்டுக்கு நடந்தே போனார் சர்மாஜி.

“போகும் போது ஸ்கூட்டர்ல போயிட்டு இப்ப நடந்தே வர்றீங்களே..இதான் நீங்க வாக்கிங் பத்தி டாக்டர் கிட்ட பேசப்போன லட்சணமா?” என மிஸஸ் சர்மாஜி உச்சஸ்தாயியில் அலற..அடுத்த முறை டாக்டரிடம் தன் ஞாபக மறதி பற்றி பேச முடிவெடுத்தார் சர்மாஜி!