சீக்காளி நகரமாகும் சிங்காரச் சென்னை..!
பயமாக இருக்கிறது. ‘சிங்காரச் சென்னை, சீக்காளிச் சென்னை’யாக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. டி-20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றால் நாம் பெருமை கொள்ளலாம். ஆனால் இப்போது சென்னை நகரத்தில் தொற்று நோய் ஸ்கோர் வேகமாக ஏறிக்கொண்டே போகிறது.
ஏப்ரல் 30 ந்தேதி புள்ளிவிவரத்தின்படி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 2,323 பேர். அதில் சென்னை நகரில் மட்டும் 800-க்கும் மேல். சென்னையின் இந்த அவலப் பெருமையை வேறு எந்த மாவட்டமும் எட்டவில்லை.
குடிசைவாசிகளிலிருந்து, கோடிஸ்வர கோமான்கள் வரை கலந்திருக்கும் நகரம்
சென்னை. படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். சென்னை
நகர மக்களுக்கு ஏன் இந்த அலட்சியம்?
ஊரடங்கு போட்டாகிவிட்டது. சமூக இடைவெளி கட்டாயம் தேவை என்று அரசாங்கம் எல்லா ஊடகங்கள் மூலமாகவும் மக்களிடம் நிமிடத்துக்கு நிமிடம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டேயிருக்கிறது.
‘இந்த தொற்று நோய் கிராமப்பகுதிகளில் வெகுவாக குறைந்து கொண்டேயிருக்கிறது’ என்கிறது சுகாதாரத்துறை. கிராமங்களில் இருக்கும் விழிப்புணர்வு ஏன் சென்னை நகர மக்களுக்கு இல்லை.
‘இல்லையா? இந்த அரசாங்கம் என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?’ என்று சார்பு அரசியல் கொடுத்த அலட்சியமா?
ஆழ்ந்து பார்த்தால் இந்த சென்னை நகர மக்களை கொரானாவை விட, அவர்கள் சிந்தனையில் வேறொரு ஒரு நச்சுக் கிருமி வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தக் கிருமி தொலைக்காட்சி விவாதங்கள், கைப்பேசி தகவல்கள், சமூக வலைதளங்கள். அவர்கள் சார்ந்த கட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பும் விஷமக் கருத்துக்கள், இந்த கிருமிகள் அவர்களை வேகமாக தாக்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு பொறுப்புள்ள தொலைக்காட்சி, அன்றைக்கு ஒரு விவாதம் நடத்துகிறது. அந்த விவாதத்தில் ஒரு பெண் நெறியாளர். மூன்று மருத்துவர்கள், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்கள்.
‘கொரானாவை கட்டுப்படுத்த ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லையா? இந்த
தலைப்பே வேதனையைத் தந்தது.
‘இந்த நேரத்தில் தனித்திருப்பதைத்தவிர இந்த நோய் பரவலைத் தடுக்க வேறு வழியேயில்லை’ என்று உலக சுகாதார நிறுவனம் மிக தெளிவாக, உறுதியாகச் சொல்கிறது. சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்கள், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மூவருமே ஊரடங்கின் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள சாதகங்களை விளக்க முன் வந்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர். ஆனால் கலந்து கொண்ட யாருடைய கருத்துக்களையும் கேட்க அந்த நெறியாளர் தயாராக இல்லை.
‘ஊரடங்கினால் மத்திய மாநில அரசுகள் மக்களை வாட்டி வதைக்கிறது’ என்பதை வலியுறுத்துவதே அந்த நெறியாளரின் நோக்கமாக இருந்தது.
இது போன்ற தவறான விவாதங்களினால் மக்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். இந்த ஊரடங்கு உத்தரவை மீறினால் என்ன ஆகும்? அந்த அகம்பாவத்தின், அலட்சியத்தின் விலையத்தான் சென்னை நகரம் இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நகர மக்களின் அறியாமையை மட்டும் குறை சொல்ல முடியாது. எதிர்க்கட்சிகளுக்கும் இதிலே பொறுப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் மத்திய மாநில அரசுகளின் முக்கியமான உத்தரவுகள் அனைத்திற்கும் உடனே நாடு தழுவிய கண்டனம். ‘மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு அகவிலைப்படி கிடையாது’ உடனே ஒரு கண்டனம். ‘தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறுவதை ஒராண்டுக்கு நிறுத்தி வைத்தது.’ உடனே அதற்கும் எதிர்ப்பு!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் டாக்டர் சைமன் உடல் அடக்கத்தின்போது நடந்த மிகக் கேவலான சம்பவத்தை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை? காரணம் அப்போது நடந்த சண்டை, எதிர்க்கட்சிகளுக்கான வாக்கு வங்கிகளுக்கு மத்தியில் நடந்த உள் குடும்ப கலவரம். கட்சிகள் மெளனமாகிவிட்டன.
அரசியல் செய்ய இதுவா நேரம்? கொரானா என்கிற அரக்கனை வீறுகொண்டு எதிர்த்து நிற்கும் உலக மாவீரன் இந்தியாதான். ஏப்ரல், 30 ந்தேதி வரை பாதிக்கப்பட்டவர்கள் 33,610. பலியானவர்கள் 1.075, குணமடைந்தவர்கள் 8,373.
உலக விஞ்ஞானிகள் இந்தியாவின் ஊரடங்கைப் பாராட்டுகிறார்கள். இந்த முடிவை இந்தியா எடுக்காமல் போயிருந்தால், சீனாவுக்கு அடுத்து பெரிய ஜனத்தொகை கொண்ட இந்த தேசம், அதுவும் நெரிசலான வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட இந்த தேசம் லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்திருக்கும் என்கிறார்கள்.
ஊரடங்கு என்பது மோடி, எடப்பாடி என்கிற இரண்டு சர்வாதிகாரிகளின் அடக்குமுறை அல்ல!
நடப்பது ஒரு போர். மேலே விமானத்திலிருந்து குண்டு மழை பொழிந்தால் வீட்டை விட்டு வெளியே வருவோமா? மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் கிடந்தாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போமா?
கண்ணுக்கு புலப்படாத ஒரு மாயாவி, இந்த உலகை...உலக மக்களை சுற்றி வந்து தாக்குகிறான். ஒரே நேரத்தில் உலகளாவிய தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறான். இந்த போரை ஏன் உணர மறுக்கிறோம்? நமக்கு எதிராக நரேந்திர மோடி இல்லை. ஒரு பிரும்ம ராட்சஸன் இருக்கிறான்.
இந்த நேரத்தில் ஊரடங்கை எதிர்த்து பிரசாரம் செய்பவர்கள் தேசத்திற்கு மட்டுமல்ல மனித இனத்திற்கே எதிரான உயிக்கொல்லிகள்.
ஊரடங்கு எதிர்ப்பாளர்கள் தங்கள் கொலைவெறியை தணித்து மக்களுக்கு நம்பிக்கை
ஊட்டட்டும்...
Leave a comment
Upload