தொடர்கள்
நொறுக்ஸ்
மனிதாபிமான போலீஸ்!- மாலாஸ்ரீ

2020061719253819.png

கூடுவாஞ்சேரியை சேர்ந்த 5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு நந்தம்பாக்கம் போலீசார் உதவி செய்தனர். இதுகுறித்து சமூகவலை தளங்களில் செய்தி வெளியானதால் போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கார்த்திக். இவர், சென்னையில் ஒரு கடையில் வேலை செய்கிறார். இவரது 2-வது மகள் கவிஸ்கா (5). இவர்களின் வீட்டுக்கு அருகே நந்தம்பாக்கம் காவல் நிலைய ஏட்டு செந்தில்குமார் வசிக்கிறார். இவரது குடும்பத்தினருக்கு கவிஸ்கா மீது மிகுந்த அன்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கவிஸ்காவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மணப்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்தனர். முடிவில், அந்தச் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ₹5 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் கூறியிருக்கின்றனர்.

ஊரடங்கினால், கார்த்திக் பணத்தை புரட்ட முடியாமல் பெரிதும் அவதிப்பட்டார்.


இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸ் ஏட்டு செந்தில்குமார், தனது பங்காக ₹30 ஆயிரத்தை கார்த்திக்கிடம் கொடுத்தார். மேலும், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் பணம் திரட்டி, கார்த்திக்கிடம் ₹45 ஆயிரத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்தை இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தனக்கு தெரிந்த தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து நிதியாக பெற்றுக் கொடுத்தார். அப்பணத்தை, கவிஸ்காவின் மருத்துவ செலவுக்கு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கட்டினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கவிஸ்காவுக்கு அம்மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்று,.கடந்த சனிக்கிழமை வீடு திரும்பினார். இத்தகவல் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலும் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவிய நந்தம்பாக்கம் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாட்டுல நல்ல போலீஸும் உண்டுங்கோ!