
அயர்லாந்து நாட்டில் ₹47 கோடியில் ஒரு தனித் தீவை ஐரோப்பிய பணக்காரர் வாங்கியுள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் கொரோனா நோய்தொற்று பரவல், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்தொற்றிலிருந்து தப்பிக்க, பல்வேறு நாடுகளை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரர்கள், கடலுக்கு நடுவே உள்ள தனித்தீவுகளை நாடி சென்றுள்ளனர். இந்நிலையில், ஒரு ஐரோப்பிய பணக்காரர் நோய்தொற்றில் தப்பிக்க என்ன செய்யலாம் என யோசித்தார்.
இதன் விளைவாக, அவர் கடந்த வாரம் அயர்லாந்து நாட்டு கடற்கரையில், ஐரிஷ் நிலப்பரப்பின் தென்மேற்கே 157 ஏக்கரில் அமைந்துள்ள ஹார்ஸ் தீவை இந்திய மதிப்பில் ₹47 கோடிக்கு வாங்கியுள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலை சுற்றியுள்ள பல்வேறு தீவுகளில், இந்த ஹார்ஸ் தீவு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ளது. இங்கு பசுமையான புல்வெளிகள் மற்றும் மரங்களுக்கு இடையே ஒரு பழங்கால பிரமாண்ட பங்களா உள்ளது. இதை சுற்றிலும் ஒரு ஹெலிபேட், படகு சவாரி வசதி, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம் உள்பட விருந்தினர்கள் தங்குவதற்கான கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. மேலும், இந்த பங்களா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
மொத்தம் 4,500 சதுர அடி தரை பரப்பளவில் பிரதான பங்களா அமைந்துள்ளது. இப்பங்களாவில் மொத்தம் 6 படுக்கையறைகள், பிரமாண்ட ஹால் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவை அடங்கியுள்ளன.
இதுகுறித்து மாஸ்டேக் ரியல் எஸ்டேட் நிறுவனர் தாமஸ் பாலாஷேவ் கூறுகையில்,
“பல்வேறு உல்லாச தீவுகளில் சுற்றுலா பயண திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், இதுபோன்ற தனி தீவுகளுக்கான தேவையும் கிராக்கியும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தீவுகளின் விலையும் கூடிக்கொண்டே வருவதால், எங்களது தொழில் சிறப்பாக அமைந்துள்ளது” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

Leave a comment
Upload