தொடர்கள்
ஆன்மீகம்
நான்கு யுகங்களும் திருவண்ணாமலையும்... - ஆரூர் சுந்தரசேகர்.

20201025115339222.jpeg


“நினைத்தாலே முக்தி தரும்” ஸ்தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களுக்குள் இது அக்னிக்குரிய ஸ்தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது. திருவண்ணாமலையானது நான்கு யுகங்களிலும் அழியாமல் இருப்பதாக ஐதீகம். அதாவது

கிருத யுகத்தில் அக்னி மலையாகவும்,

திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,

துவாபரயுகத்தில் தங்க மலையாகவும்,

கலியுகத்தில் கல்மலையாகவும் உருவெடுத்துள்ளது.

திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். பால் பிரண்டன் என்கிற ஆய்வாளார் ‘மெசேஜ் பிரம் அருணாச்சலா’ என்ற நூலில் “லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை” என்று கூறியிருக்கிறார். சுமார் 50 வருடங்களுக்கு முன் அண்ணாமலையார் கோயிலில் இரவு முழுக்க தியானித்திருந்த சுஜாதா சென் என்ற ஆங்கிலேய பெண், மலைக்குள்ளிருக்கும் பெரிய உலகத்தை கண்டதாக சொன்னார். ஆனால், அன்று அவரின் பேச்சை யாரும் நம்பவில்லை. மீண்டும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவரும், தானும் இங்கு உலகத்தையும் கடவுளையும் கண்டதாக கூறியதோடு... தான் பார்த்த உலகமும், சுஜாதா சென் பார்த்ததாக சொல்லப்பட்டதும் ஒத்துப்போனதை வியந்து குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலை கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரம்மலோகம் உள்ளதென்பது ஐதீகம்.

திருவண்ணாமலை, இயற்கையாவே அமைந்த மேரு வடிவிலான மலை. அடுக்கடுக்காக அமைந்து கூம்பு வடிவம் மாதிரியான மலை இது. இந்தியாவிலேயே திருவண்ணாமலை மட்டுமே, இதுமாதிரியான உருவ அமைப்போடு இருக்கின்றது. அதனால்தான் திருவண்ணாமலைக்கு ஸ்ரீசக்கரகிரி என்ற பெயரும் உண்டு. இதை தவிர இந்த மலை அருணகிரி, அண்ணாமலை, அருணாச்சலம், அருணை, சோனகிரி மற்றும் சோனாச்சலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.

அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலையார் கோயில், சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு... தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசள அரசர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இக்கோயில் இருபத்து நான்கு ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் இருநூற்று பதினேழு அடி உயரம் ஆகும், இது தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், பல நூறு கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. கற்சிலைகள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய பிரகாரங்கள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், இக்கோயிலின் சிறப்புகள் ஆகும்.

நான்முகனுக்கு பாடம் புகட்டிய அண்ணாமலையார்:

படைக்கும் கடவுளாகிய நான்முகனுக்கும் (பிரம்மா), காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும் இருவருமே பெரியவர்கள் என்று அவர்களுக்குள் சர்ச்சை ஏற்பட்டு... தங்கள் ஐயத்தை தீர்த்துக்கொள்ள, ஈசனிடம் சென்று கூறினர். என் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் தரிசிக்கின்றாரோ அவரே பெரியவர் என ஈசன் கூறி வானுக்கும், மண்ணுக்குமாய் தீப்பிழம்பாய் நின்றார். திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்து அடியைக் காண பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். யுகங்கள் பல கடந்தும் இருவராலும் அடி, முடியை காண முடியவில்லை. தனது தோல்வியை உணர்ந்து ஈசனை நாடி விஷ்ணு திரும்பி வந்தார்.

ஆனால், பிரம்மா முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவனின் திருமுடியிலிருந்து தவறி விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவைக் கண்டார். அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ “நான் சிவனின் திருமுடியிலிருந்து இருந்து நழுவி பல யுகமாக பயணித்தும் இன்னும் பூமியை வந்து சேரவில்லை.” அதனால் நீங்களும் சிவனின் முடிக்காண இன்னும் பல யுகம் ஆகும் என உரைத்தது.

பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் தனக்கு உதவுமாறு கேட்டு, இருவரும் ஈசனிடம் வந்து தான் முடியை கண்டதாகவும், அதற்கு சாட்சி இந்த தாழம்பூவே என வாதிட்டார் பிரம்மன்.. உண்மையை உணர்ந்த ஈசன் கோபமடைந்து, இனி தனிக்கோவில் பிரம்மனுக்கு இருக்காது எனவும், தனது பூஜையில் இனி தாழம்பூவுக்கு இடமில்லை எனவும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் ‘தான்’ என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதிப் பிழம்பாக நின்ற இடம் தான் திருவண்ணாமலை. இந்த நாளே மஹாசிவராத்திரி நாளாகும்.

பார்பதற்கு லிங்கம் போல் காட்சிதரும் இம்மலையானது, இம்மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தரும். திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

சமயக்குரவர் நால்வர்:

உலகமெல்லாம் போற்றப்படும் சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. இத்தலத்தினை சமயக்குரவர் நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலியோர் தரிசித்து தேவார பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் பல காலம் தங்கியிருந்து, திருவெம்பாவை இருபது பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்ற இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயிலே உள்ளது.

நான்கு பிரம்மோற்சவம்:

கோயில்களில் வருடம் ஒரு தடவைதான் பிரம்மோற்சவம் நடத்துவார்கள். சில கோயில்களில் இரு பிரம்மோற்சவமும் நடத்தப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத ஒரு அதிசயம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வருடத்திற்கு நான்கு தடவை பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது. அவை

ஆனி மாதம் தட்சிணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம்

ஆடி மாதம் பூர பிரம்மோற்சவம்

கார்த்திகை மாதம் தீப பிரம்மோற்சவம்

தை மாதம் உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவம்

ஆகிய நான்கு தடவை பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இதற்காக மூன்று தடவை அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள தங்கச் கொடி மரத்திலும், ஒரு தடவை அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்திலும் கொடி ஏற்றப்படும். ஒவ்வொரு பிரம்மோற்சவமும் 10 நாட்கள் நடைபெறும். சோழ மன்னர்கள் இந்த பிரம்மோற்சவங்களை மிக பிரமாண்டமாக நடத்தியதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தின் நான்கு பிரம்மோற்சவங்களில் கார்த்திகை மாதம் நடக்கும் தீப பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று காலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். தீப தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த தீபமானது தொடர்ந்து பதினோறு நாட்கள் எரியும்.

திருவண்ணமலை சித்தர்களின் புண்ணிய பூமி:

திருவண்ணமலையில் பல சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இந்த ஸ்தலத்தில் வாழ்ந்து ஜீவ சமாதியடைந்தார். அருணகிரிநாதர், சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, ஈசான்ய ஞானதேசிகர், கண்ணாடி சாமியார், குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், அப்பைய தீட்சிதர், அம்மணி அம்மாள், அண்ணாமலை சுவாமிகள், சிவ பிரகாச சுவாமிகள், இசக்கி சாமியார், காவ்யகண்ட கணபதி சாஸ்த்திரி, அழகானந்த அடிகள், ஞான தேசிகர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், சடைச் சுவாமிகள், சற்குரு சுவாமிகள், குருசாமி பண்டாரம், சடைச்சி அம்மாள், இறை சுவாமிகள், சைவ எல்லாப்ப நாவலர், சோணாசலத் தேவர், தம்பிரான் சுவாமிகள், தெய்வசிகாமணி சித்தர், பத்ராச்சல சுவாமிகள், பழனி சுவாமிகள், பாணி பத்தர், மங்கையர்கரசியார், ராதாபாய் அம்மை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், விசிறி சாமியார், விருபாட்சி முனிவர், வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள், மூக்குப்பொடிச் சித்தர் இன்னும் பல சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள். இவர்களில் பலர் அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையில் உள்ளது.

இப்போதும் பல சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

கிரிவலத்தின் சிறப்பு:

எல்லா திருத்தலங்களிலும் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழக்கம் இங்குள்ளது. இம்மலையின் உயரம் 2688 அடி. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அண்ணாமலையார் சந்நிதி துவக்கத்திலிருந்து மலையை சுற்றி வரும் கிரிவலப்பாதை முழுவதும் பல கோயில்கள் அமைந்திருந்தாலும், சிறப்பு வாய்ந்த அஷ்ட லிங்க கோயில்களின் தரிசனம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்த அஷ்ட லிங்க தரிசனம் கிரிவலத்தின் முழுப் பயனையும் பக்தர்களுக்கு அளிக்கிறது. மற்றும் நோய்களையும் தீர்க்கும், குழந்தை பேறு கிடைக்கும், மனம் நிம்மதி பெறும். ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.

இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்வதாக ஐதீகம். எனவே கிரிவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும். ஏனென்றால் பௌர்ணமி நாளில் எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதாலும், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று கிரிவலம் வந்து அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்து நல்ல பலன்களையும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாகக் காணும் என்பது உண்மை.

“ஆதியே! அமரர் கோவே! அணி அணா மலையுளானே” என்றார் அப்பர்.

“அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே” என்றார் திருஞான சம்பந்தர்.

“அண்ணா மலையானைப் பாடு துங்காண் அம்மானாய்!” என்றார் மணிவாசகர்.

“ஞானத் தபோதனரை வாஎன்று அழைக்குமலை அண்ணா மலை” என்றார் குரு நமச்சிவாயர் .

“அண்ணா மலைமேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம் கண்ணார் அமுதை” என்றார் சேக்கிழார்.

“கற்றார் தொழும் அருணாசலம்” என்றார் வில்லிபுத்தூராழ்வார்.

தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

என்று உலகம் உய்ய அவர் மலர் பாதம் பணிந்து வணங்கிடுவோம்!!

அண்ணாமலையாருக்கு அரோகரா, அரோகரா..”