தொடர்கள்
பொது
உரம் கொண்ட பெண்கள் - நால்வர்... - மரியா சிவானந்தம்

20201027155740125.jpg

பெண்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டு அவர்கள் பொதுவெளியில் சாதனைகளை நிகழ்த்தும் காலங்களில் இருக்கிறோம். குடும்பம் என்னும் உள்வட்டத்தில் இருந்து வெளியில் வரவும், கல்வி பெறவும், ஆண்களுக்கு சமமான பணிகளில் அனாயசமாக அமரவும் பல நூறாண்டுகளாக காத்திருந்த, பெண்குலத்தின் வானம் இப்போதுதான் விடிந்துள்ளது.

இப்போது உலக அரங்கில், துணை ஜனாதிபதியாக, அதிபராக, அரசியல் விற்பன்னராக, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராளிகளாக புதிய முகங்களை பெண்கள் காட்டுகிறார்கள். மருத்துவரோ, ஆசிரியரோ, விளையாட்டு வீரரோ, நடிகரோ, பாடகியோ என்று எந்த துறையாக இருந்தாலும் பெண்கள் கூடுதல் அர்ப்பணிப்புடன் பணியைச் செய்து சுயநிறைவுடன், சமூக அங்கீகாரமும் பெறும் காலம் இது.

இந்த சமூக அங்கீகாரத்தின் அடையாளமாக பி.பி.சி நிறுவனம், வலிமை மிக்க பெண்கள் டாப் 100 -2020 என்ற ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சமூகத்தில் நம்பிக்கையை விதைத்து, சக மனிதருக்கு ஊக்கமும், உத்வேகமும் தரும் நெஞ்சில் உரம் கொண்ட பெண்களின் பட்டியல் இது. இப்பட்டியலைக் காணும் போது, உள்ளம் நிறைந்து கண்களில் ஆனந்தக்கண்ணீர் துளிர்க்கிறது. இது பெண்களுக்கான நூற்றாண்டு என்று மனம் நிறைகிறது.

இந்தப் பட்டியலில் உள்ள முக்கிய பெண் பிரமுகர்களில் முக்கியமானவர்கள், முழுவதும் பெண்களைக் கொண்ட அமைச்சரவையை உருவாக்கி நடத்தும் பின்லாந்தின் அதிபர் சன்னா மரின், அவதார் படத்தின் மிஷேல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கோவிட் ஆராய்ச்சி குழுவை முன் நின்று நடத்தும் சாரா கில்பர்ட், ஐக்கிய அரபு நாடுகளின் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் சாரா அல் அமின், பிரிட்டனின் செவிலியர் எலிசபெத் அனியன்யு, ஆஸ்திரிலேய விஞ்ஞானி மெக்கின்லே பட்சன் என்று உலகளாவிய விதத்தில் கவனம் பெறும் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த சாதனைப் பெண்களுடன் நம் நாட்டைச் சார்ந்த நான்கு பெண்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அமைதியான குரல் கொடுக்கும் பில்கிஸ் பானு, மாற்றுத்திறனாளி பேட்மிண்டனில் உலக சாம்பியன் மானசி ஜோஷி, சுற்றுச்சூழல் போராளி ரித்திமா பாண்டே, தமிழகத்தின் கானா பாடகி இசைவாணி என்ற நால்வரும் இந்த பெருமைக்குரிய பட்டியலில் இடம் பிடித்த பெண் ஆளுமைகள்.

இவர்களுள் முதலானவர் பில்கிஸ் பானு எனும் 82 வயது நிரம்பிய பெண்மணி. வயோதிகத்தின் கட்டுகளை அறுத்தெறியும் வலிமை கொண்ட மனஉறுதி நிரம்பியவர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த டில்லி ஷாகின் பாக் போராட்டங்களில், பெண்கள் ஏராளமாக கலந்துக் கொண்டனர். அவர்களுள் அதிக கவனம் ஈர்த்தவர் பில்கிஸ் பானு. ஒருநாள் கூட தவறாமல் இவர் தினமும் போராட்டக்களத்தில் இருந்ததை ஊடகங்கள் சுட்டிக் காட்டின. ‘ஒடுக்கப்பட்டவர்களின் குரல்’ என்று இவர் வர்ணிக்கப்பட்டவர். “பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறி குரல் எழுப்புவதில், குறிப்பாக அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவதில் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராவிட்டால், தங்கள் பலத்தை எப்படி காட்ட முடியும்?” என்கிறார் பில்கிஸ் பானு.

இரண்டாமவர் ரிதிமா பாண்டே, ஒரு மாணவி. பருவநிலை மாற்றங்கள், வெப்பமயமாதல் போன்ற சுற்றுசூழல் குறித்து அக்கறை கொண்ட இளம் பெண். உத்தர்காண்டை பூர்விகமாக கொண்டவர் ரிதிமா, அங்கு பருவநிலை மாற்றங்களால், அதன் தாக்கத்தால் ஓராண்டில் ஆயிரம் பேர் இறந்து போக... தன் ஒன்பதாவது வயதில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். கார்பன் வெளியிடு குறித்து, அரசின் கடமைகளை வலியுறுத்தினார். தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு (National Green Tribunal NGT) இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. தன்னுடைய நன்பர்களுடன் சேர்ந்து ஐ.நாவில் இதே கருத்தை முன்வைத்து புகார் அளித்துள்ளார்.

மானசி கிரிஸ்சந்தர் ஜோஷி ஒரு பேட்மின்டன் வீராங்கனை. இவர் தந்தை பாபா அணுவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி. ஆறு வயதில் இருந்தே இந்த விளையாட்டில் சிறந்து விளங்கிய மானசி, பொறியியல் பட்டம் பெற்று பணியில் அமர்ந்தார். 2011இல் நடந்த சாலை விபத்தில், இவரது கால் துண்டிக்கப்பட்டது. அதன் பின் பேட்மிண்டன் இவரது ‘வாழ்க்கை’ என்று முடிவு செய்தார். கடும் பயிற்சிக்குப் பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா - பேட்மிண்டன் விளையாட்டில் சாதிக்கத் துவங்கினார். 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச விருதுகள் இவரை தேடி வரத் தொடங்கின. சென்ற ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் நடந்த ஒற்றையர் ஆட்டத்தில், இவர் தங்கம் வென்றார். டைம் இதழின் அட்டைப்படத்தை இவர் அலங்கரித்தார். SL 3 ஒற்றையர் பிரிவில், இவர் உலக சாம்பியன் ஆனார். தனது ஊனத்தை, வெற்றிக்கு வழிகோலாக மாற்றிக் கொண்ட நெஞ்சுரம் படைத்த இந்த தங்க மங்கை பிபிசி-யின் பட்டியலில் இடம் பெற்றதில் வியப்பேதும் இல்லை.

இசைவாணி சென்னை நகரத்து கானா பாடகி. வடசென்னையின் 'The Casteless collective ' என்னும் இசைக்குழுவில் உள்ள பெண். எளிய மக்களின் வலிகளை, வாழ்க்கையை பதிவு செய்யும் கானா பாடல்களை ஆண்களே பாடி வந்த போது, அந்த உலகத்தின் கதவினை உடைத்து நுழைந்துள்ளார் இசைவாணி. ஒரு நடிகைக்குரிய தோற்றமும், தேர்ந்த பாடகிக்கு உள்ள குரல் வளமும் இவரது பலங்கள். பெண்கள் இன்னும் நுழையாத கானா பாடல் துறையில், இவர் துணிந்து இறங்கி பாடுவது இவரது சிறப்பம்சம்.

“2020-ல் உலகம் மாறிவிட்டது. ஆனால் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும், உலகம் மாறிக் கொண்டிருக்கிறது... பெண்கள் செயல்பாடுகளின் போக்கை மாற்றியுள்ளனர், பணி நிலைகளை மாற்றியுள்ளனர். வரக்கூடிய தலைமுறைகளுக்கு இந்த நடைமுறை நிலையாக இருக்கும்’ என்கிறார் இசை வாணி.

இந்த நான்கு பெண் ஆளுமைகளும் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த டாப் 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சாதனை செய்ய வயது, உடல் ஊனம், சூழல் எதுவுமே தடையாக இருக்க முடியாது என்று இவர்கள் நிரூபிக்கிறார்கள். இவர்களைப் பற்றி அறிவதே மனதுக்கு புதிய உத்வேகத்தைத் தருகிறது.

பிபிசி யின் வலிமை மிக்க டாப் 100 -2020 எனப்படும் இப்பட்டியலில் நூறாவது இடம் காலியாக விடப்பட்டு உள்ளது. இன்னும் உலகின் கவனமோ, அங்கீகாரமோ அடையாத ‘உரம் கொண்ட நெஞ்சுடன் வாழும் ஒரு பெண்ணின் பெயரை நீங்களே அதில் நிரப்பிக் கொள்ளலாம்’ என்கிறது பிபிசி .

சிந்தித்துப் பாருங்கள், உங்களுடன் வாழும் ஒரு ‘வலிமை மிக்க பெண்ணை’ நீங்கள் அந்த பட்டியலின் நூறாவது பெண்ணாக நிறுத்தலாம்.

அவள் உங்கள் தாயாகவோ, மனைவியாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ, தோழியாகவோ இருக்கட்டுமே.