பாபர்
புதியதொரு சாம்ராஜ்யம்!
காபூல் நகரை சேர்ந்தவர், புகழ்பெற்ற ஜோதிடர் மகமுது ஷெரீஃப். டெல்லிக்கு வந்து பாபருடன் தங்கியிருந்த அவர், சற்றே தர்மசங்கடத்துடன் தன் வெண்மையான தாடியை நீவிவிட்டு கொண்டதை கவனித்த பாபர், ‘‘என்ன விஷயம்? வெளிப்படையாக சொல்லுங்கள்!’’ என்றார்.
தொண்டையை கனைத்து கொண்ட அந்த முதிய ஜோதிடர், ‘‘பாதுஷா! சகுனம் சரியில்லை… வானில் நாள்தோறும் மேற்கே செவ்வாய் தெரிகிறது. ஆகவே, அந்தத் திசையில் மன்னர் பயணம் மேற்கொள்வதோ, போருக்கு செல்வதோ உசிதமல்ல என்பது என் கருத்து…’’ என்று தயக்கத்துடன் கூற,
‘‘அப்படியா? சரி, நீங்கள் போகலாம்…’’ என்று உடனேயே இருக்கையை விட்டு எழுந்த பாபரின் முகத்தில் ஏக எரிச்சல் தெரிந்தது. இதற்குள் அமைச்சர்கள் நெருங்கி, ‘‘வெளியே நம் படைவீரர்கள் தங்களுக்காக காத்து நிற்கிறார்கள் அரசே! தவிர…’’ என்று இழுக்க… கேள்விக்குறியுடன் நிமிர்ந்து பார்த்தார் பாபர்.
பிரதம சேனாதிபதி தலைகுனிந்தவாறு தொடர்ந்தார்: ‘‘பாதுஷா! நம் வீரர்கள் உடனே காபூல் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். டெல்லியின் பருவநிலை அவர்கள் உடம்புக்கு சற்றும் ஒத்துக்கொள்ளவில்லை. வெயிலில் உடலெல்லாம் எரிகிறதாம்… இந்த சமயத்தில் இன்னொரு யுத்தம் என்ற நினைப்பே அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. தவிர, நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் ராஜபுத்திரர்கள் மாவீரர்கள். உயிரை துச்சமாக கருதுபவர்கள். யார் இப்போது போய் அவர்களிடம் மோதிக் கொண்டிருப்பது என்றெல்லாம் நம் வீரர்களிடையே புலம்பல்கள்..!’’
பிரதம சேனாதிபதியை கையமர்த்திய பாபர், நேராகத் தன் படைவீரர்களை நோக்கி நடந்தார். பாபரை கண்டவுடன் எழும்பிய ஆரவாரத்தில் அவ்வளவு உற்சாகம் இல்லை..!
அதை சட்டை செய்யாத பாபரின் கம்பீரமான குரல், அணிவகுத்து நின்ற போர்வீரர்களிடையே ஒலிக்க ஆரம்பித்தது. ‘‘அருமை சகோதரர்களே! ஒரு காலத்தில் சாமர்கண்ட் நகரை கைப்பற்ற விரும்பினேன் நான். பிறகு சீனாவை வெற்றி கொள்ளும் எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. ஆனால், ஆண்டவன் சித்தம் வேறுவிதமாக இருந்தது. அதன்படி, எத்தனையோ சிரமங்களை கடந்து, அல்லாஹ் கருணையால் எதிரிகளை வென்று, இன்று இந்திய நாட்டில் காலூன்றியிருக்கிறோம் நாம்.
அப்படியிருக்க, எந்தவொரு பெரிய காரணமும் இல்லாமல், நம் கடமையைக் கைவிட்டு திரும்பிப் போவது நியாயமா? ஆண்டவன் கட்டளையை மீறுவதற்கு நாம் யார்? டெல்லி சுல்தானின் பெரும் படையையே வெற்றி கண்டவர்கள் நீங்கள். வெறும் ஆவேசத்துடன் வந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு ராஜபுத்திர படையை கண்டு அஞ்சுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டாமா? அப்படியே நாம் பயந்துகொண்டு திரும்பி ஓட்டமெடுத்தால், உலகின் பல பகுதிகளை ஆண்டுவரும் மற்ற மன்னர்கள், நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? பிறக்கும்போதே நிச்சயமாகும் ஒரு விஷயம் மரணம் மட்டும்தான். வாழ்க்கை என்னும் விருந்தில் அமர்கிறவன் கடைசியாக மரணம் என்னும் பானத்தை அருந்தியே தீரவேண்டும். ஆனால், அந்த மரணம் மேன்மையாக, கௌரவமாக அல்லவா நிகழவேண்டும்! இறந்த பிறகு ‘இவனல்லவா வீரன்’ என்றல்லவா ஊர் உலகம் நம்மை புகழவேண்டும்?! வாழும்வரை நம் கடமையை செய்வோம். அதுதான் ஆண்டவன், நமக்கு இட்ட ஆணை! கடமையை செய்யும்போது, வெற்றி அல்லது வீரமரணம் அடைந்தால், அதை ஏற்றுக் கொள்வோம். ஆண்டவன் ஒருவனே நிரந்தரம்! யார் வேண்டுமானாலும் காபூல் திரும்புங்கள்… நான் ஒருவனாக இங்கேயிருந்து வாளேந்தி போர்புரிவேன்!
அதுமட்டுமல்ல… மது அருந்துவதில் எனக்கு எவ்வளவு ஈடுபாடு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதோ, இறைவனின் கட்டளையை முழுமையாக நிறைவேற்றும் வரை, மதுவை நான் தொடமாட்டேன். இது சத்தியம்!’’ என்று உணர்ச்சி பொங்க முழங்கிய பாபர், தன் மதுக்கோப்பைகளையும் ஜாடிகளையும் தருவிக்க செய்து, அவற்றை அங்கேயே - அணிவகுத்து நின்ற படைக்கு எதிரே போட்டு தூள்தூளாக உடைத்தெறிந்தார் பாபர். ஜாடி ஜாடியாக மது ஆறாகக் கீழே மண்ணில் கொட்டப்பட்டது.
பிரமித்து நின்ற படைவீரர்களின் ரத்த நாளங்களை பாபரின் உரை முறுக்கேற்றியது. அவர்கள் உணர்ச்சியமாக எழுப்பிய “அல்லாஹு அக்பர்!” என்ற முழக்கம் மைதானத்தில் எதிரொலித்தது.
‘‘புனித குர்ஆன் மீது ஆணை! கிளம்பட்டும் நம் படை! எதிரிகளை புறங்காட்டுவோம்!’’ என்று கர்ஜித்தார் பாபர்.
ஏக காலத்தில் ஆரவாரத்தோடு உயர்த்தப்பட்ட வாட்களும் வேல்களும் வெயிலில் தகதகக்க, கோட்டை கதவுகள் திறக்க… பாபர் மற்றும் இளவரசர் ஹுமாயூன் தலைமையில் எதிரிகளை சந்திக்க புறப்பட்டது மொகலாய படை!
உடலெங்கும் எண்பது விழுப்புண்கள், ஒரு கண்ணில் பார்வையின்மை, இடது கையில் சுவாதீனம் குறைவு, சற்று விந்திய நடை… இதெல்லாமே பல போர்களில் பெற்ற வீரப் பரிசுகள்… ஆனால், குதிரையில் வாளேந்தி அமர்ந்தாலோ, ஒரு பறக்கும் எரிமலை! - இதுதான் சித்தூர் அரசர் மாவீரர் ராணா சங்கா! அவர் தலைமையில் (இன்றைய போபால் அருகே உள்ள) சந்தேரி நாட்டு மன்னர் மெதினிராய், பானிபட் போரில் மறைந்த இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி மற்றும் சில இந்து, முஸ்லிம் குறுநில மன்னர்கள் அணிவகுக்க, அவர்கள் பின்னால் நூற்று இருபது தளபதிகள், 80,000 குதிரை வீரர்கள், 500 யானைப் படை வீரர்கள் - பாபரை எதிர்த்து மொத்தமாக களத்தில் நின்றனர்.
கி.பி.1527-ம் ஆண்டு, மார்ச் 16-ம் தேதி, ஆக்ராவுக்கு மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள கன்வா என்னும் கிராமத்தில் பானிபட் யுத்தத்தை அடுத்து, இப்போது இன்னொரு மாபெரும் போர் துவங்கியது.
இந்த முறை தன் பீரங்கிகளுக்கு லாகவமாகச் சுழலும் சக்கரங்களை பொருத்தியிருந்தார் பாபர். அங்குமிங்கும் இடம் மாறி மாறி அணிவகுத்த பீரங்கிகளில் இருந்து கிளம்பிய குண்டுகள், எதிரிகளிடையே பெருத்த சேதத்தை விளைவித்தது.
முதலில் ஹுமாயூனையும் மஹூதி க்வாஜாவையும் (பாபரின் மைத்துனர்) முன்னணியில் தலைமை தாங்கிப் போரை நடத்த அனுப்பிய பாபர், போர் உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் பார்த்து, ஒரு அதிரடிப் படையுடன் ‘குகையிலிருந்து புறப்பட்ட சிங்கத்தை போல’ எதிரிகளிடையே பாய்ந்தார். இது கண்டு மேலும் உற்சாகத்துடன் போரிட்ட பாபரின் வீரர்கள், விரைவில் வெற்றிக்கோப்பையை பாபருக்கு அளித்தனர்! பானிபட் யுத்தத்தைவிட சற்று ஆவேசமாக நடந்த இந்த யுத்தம் முடிய மொத்தம் பத்து மணி நேரம் ஆனது.
வட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ராஜபுத்திர குடும்பமும் ஒரு ஆண்மகனையாவது கன்வா கிராமத்தில் நடந்த இந்த யுத்தத்தில் இழந்ததாக, வரலாற்றில் கூறப்படுகிறது. ரத்தக் காயங்களோடு யுத்தகளத்திலிருந்து தப்பித்த ராணா சங்கா மனமுடைந்து, ஓராண்டுக்கு பிறகு எங்கோ அனாதை போல இறந்ததாகத் தகவல்…
‘புனிதப் போரில் வென்ற வீரர்’ (‘காஜி’) என்று பாபர் அழைக்கப்பட்டது, இந்த போருக்கு பிறகுதான்.
யுத்த களத்தில் பாபரின் படைவீரர்கள் ஒரு மேடை அமைத்து, அதன்மீது கற்களையும் ராஜபுத்திர வீரர்களின் தலைகளையும் கொண்டு, பெரியதொரு ‘பிரமிட்’ அமைத்து, தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள். தலைநகர் திரும்பிய பாபர், முதல் வேலையாக செவ்வாய் கிரகத்தை காட்டி பயமுறுத்திய அந்த ஜோதிடரை நாடு கடத்தினார். (அப்போதும் பெருந்தன்மையோடு கிராஜுடி மாதிரி, அவருக்கு பாபர் ஒரு லட்ச ரூபாய் தந்தது வேறு விஷயம்!).
போரில் வெற்றிக்கொடி நாட்டி டெல்லிக்கு பாபர் திரும்பிய பிறகு, இளவரசர் ஹுமாயூன் காபூலுக்கு வடமேற்கே உள்ள பதாக்ஷான் பிரதேசத்தை நிர்வகிக்க அனுப்பப்பட்டார். மகன்கள் காம்ரான் - காந்தாரத்தையும், அஸ்காரி – முல்தானையும், கடைசி மகன் ஹிண்டால் - காபூலையும் நிர்வகிக்க படைகளுடன் அனுப்பப்பட்டார்கள்.
கன்வா யுத்தம் முடிந்து ஒன்பது மாதங்கள் கழிந்தன. மறுபடி போர் முரசுகளின் ஒலி எழும்பியது. ராணா சங்காவின் விசுவாசமான நண்பரான சந்தேரி மன்னர் மெதினிராய் சுதாரித்துக்கொண்டு, பாபரை எதிர்த்து ஆவேசத்துடன் போர் முழக்கம் செய்தார். உடனே கிளம்பி சென்ற பாபரின் படை, கன்வா போரில் தப்பி சென்ற மெதினிராயின் சந்தேரி கோட்டையை முற்றுகையிட… நடந்தது, இன்னொரு முனைப்பான யுத்தம். இந்திய போர்முறைகளை பற்றி புரிந்து கொண்டுவிட்ட பாபரின் படையை, ராஜபுத்திர படையால் வெகுநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கடைசியில் கோட்டைக்குள் பின்வாங்கிய ராஜபுத்திர படைகள் வெகுநேரம் வெளியே வராததால், புருவங்களை உயர்த்திய பாபர் ‘‘உள்ளே நுழைந்து கோட்டையை கைப்பற்றுங்கள்!’’ என்று கர்ஜித்தபோது… பாபரை பிரமிப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்திய அந்த நிகழ்ச்சி நடந்தது..!
திடீரென்று கோட்டைக்கு உள்ளிருந்து நெற்றியில் சிவந்த திலகங்களுடன், பிறந்த மேனியுடன், கைகளில் வாட்கள் பளீரிட ராஜபுத்திர வீரர்கள் சாரி சாரியாக வெளியே பெருங்கோஷத்துடன் ஆவேசமாகப் பாய்ந்து வந்தனர்!
‘என்ன இது?’ என்று குழம்பிய பாபரிடம், ராஜபுத்திரரர்களைப் பற்றி ஓரளவு தெரிந்த தளபதி ஒருவர் பணிவோடு கீழ்க்கண்டவாறு விளக்கினார்:
‘‘போரில் இனி தோல்வி உறுதி என்கிற நிலை ஏற்படும் மாத்திரத்தில், இந்த ராஜபுத்திரர்கள் தங்கள் குடும்பங்களின் மானத்தைக் காக்கவேண்டி தாய், மனைவி, குழந்தைகளை வாளை பாய்ச்சி கொன்றுவிட்டு, தங்கள் போர் உடைகளை களைந்து விடுவார்கள். அந்த கணமே உயிர் தியாகத்துக்கும் வீர சொர்க்கத்துக்கும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். ராஜபுத்திர இனத்தின் சம்பிரதாயம் அது. இனி, இவர்களுடைய உயிரற்ற உடல்களை மிதித்துக் கொண்டுதான் நாம் கோட்டைக்குள் நுழைய முடியும்…’’
‘‘இதுவல்லவா வீரம்!’’ என்று பிரமித்துப் போனார் பாபர். அதைத் தொடர்ந்து ‘ஹோ’வென்று குரலெழுப்பியவாறு வாளை சுழற்றிக்கொண்டு வந்த ராஜபுத்திர வீரர்கள், வரிசையாக பாபரின் படைவீரர்களின் வாட்களுக்கும் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் இரையாகி, வீர சொர்க்கம் புகுந்தார்கள்.
ஆரவாரத்துடன் சந்தேரி கோட்டையைக் கைப்பற்றி வெற்றிக்கொடி ஏற்றியது பாபர் படை!
அகமது ஷா என்பவரை சந்தேரிக்கு கவர்னராக்கிவிட்டு, அங்கே நகரில் மாட்டுத் தொழுவங்களாக மாற்றப்பட்டிருந்த பல மசூதிகளைப் புதுப்பித்து தந்த பிறகு ஊர் திரும்பிய பாபர், ஒரு மாதம்தான் ஓய்வெடுக்க முடிந்தது. பீஹாரிலிருந்து கிளம்பிய, முந்தைய லோடி வம்சத்தை சேர்ந்த ஆப்கானிய குறுநில மன்னர்கள் ஒருங்கிணைந்து ஒரு படையுடன் பாபரை எதிர்த்து நின்றனர்.
கங்கையின் குறுக்கே தற்காலிகமாக பாலம் கட்டி, நதியைக் கடந்த பாபரின் படை, அயோத்தி வரை ஆப்கானிய எதிரிகளைத் துரத்தி சென்று முறியடித்தது (அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது, இந்த போருக்குப் பிறகுதான்!). பிறகு வங்காளமும் பாபரின் வாள்முனையில் பணிந்தது...
இதற்கு பிறகு வட இந்தியா முழுவதிலும் ஒரு விஸ்தாரமான மொகலாய சாம்ராஜ்யம் உருப்பெற்றது!
போரில் மிகுந்த ஆவேசம் காட்டினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் மென்மையான, நல்லொழுக்கம் மிகுந்த சிறந்த மன்னராகத் திகழ்ந்தார் பாபர். ஒவ்வொரு நாளும் நடந்த எல்லா சம்பவங்களையும் ‘டைரி’யில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது அவர் வழக்கம். இந்திய நாட்டின் பருவநிலை மாற்றங்கள், புவியியல், தாவரங்கள், பூக்கள், மக்களின் மத மற்றும் ஜாதிப் பிரிவுகள், இந்தியர்களின் கணிதத் திறமை, கலைத்திறன், மக்களின் நடை, உடை, பாவனைகள் (‘பழகுவதில் நாகரிகம் போதாது… அழுக்கு உடை அணிவது அதிகம்…’) என்று ஒன்றைக்கூட ‘டைரி’யில் குறிப்பிட மறக்கவில்லை பாபர். இதைத் தவிர, டெல்லியிலும் ஆக்ராவிலும் ஏராளமான பூங்காக்களை உருவாக்கினார் அவர். இந்தியப் பறவைகள் பற்றியும் தாவர வகைகள் பற்றியும் விலாவாரியாக குறிப்பிடுகிறார் பாபர். வாழைத் தோட்டம் எப்படி போடுவது, அதை கண்காணிப்பது எப்படி என்று, ஐந்து விதமான இந்திய கிளிகள் பற்றியும் துல்லியமான விவரிப்புகளையும் அவருடைய சுயசரிதையில் நாம் காணலாம். காண்டா மிருகங்கள் வளர்ப்பது பற்றியும் (ஓவியரை விட்டுப் படம் வரையச் சொல்லி) விளக்கியிருக்கிறார் பாபர்!
இதோ, காபூலிலிருந்து ஹுமாயூன் எழுதிய கடிதத்துக்குப் பதில் போடுகிறார் பாபர். அதில்தான் எத்தனை நுணுக்கமான அலசல்!
‘நீ எழுதிய கடிதம் படித்தேன். சுவையான விஷயங்களையே எழுதுகிறாய். அதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், கடிதம் எழுதிய பிறகு, அதை ஒருமுறை நீ படித்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அதில் நாம் செய்த தவறுகள் புலப்படும். தெளிவாக, புரியும்படி வாக்கியங்களை நீ எழுத கற்றுக்கொள்ள வேண்டும். வாக்கியங்கள் விடுகதை போல அமைந்துவிடக்கூடாது. எழுத்துப் பிழைகளும் ஆங்காங்கே கண்ணில் பட்டன. இதெல்லாம் உன்னிடம் மற்றவர்களுக்கு இருக்கும் மரியாதையை குறைக்கும். இனியாவது சுற்றி வளைத்து எதையும் எழுதாமல் இருப்பாயாக. அப்போதுதான் கடிதம் எழுதிய உனக்கும் நல்லது. படிப்பவர்களுக்கும் தலைவலி வராது…’ - இப்படி செல்கிறது பாபரின் கடிதம்!
பாபர் எங்கு பயணித்தாலும், அவரைத் தொடர்ந்து ‘சர்வேயர்கள்’ சென்று, பாதையை அளவிட்டவாறு (மைல்) கற்களை பொருத்திக்கொண்டே போவது வழக்கம். இதனால் டெல்லியிலிருந்து ஒவ்வொரு ஊரும் எவ்வளவு தொலைவு என்பதை பிற்பாடு தெரிந்து கொள்ளலாம் அல்லவா!
பாபர் காலத்தில் கட்டடக்கலை பெரும் முன்னேற்றம் ஏதும் அடையவில்லை. இளம் வயதில் கஜினி நகரில் ஒரு இஸ்லாமிய மகானின் கல்லறைக்கு அழகிய கூரை அமைத்து தந்தார் பாபர். பிறகு காபூலில் ஆட்சி புரிந்தபோது, ஒரு மசூதி கட்டினார். இந்தியாவுக்கு வந்த பிறகு குவாலியர் அரண்மனையையும் சந்தேரி அரண்மனையையும் பார்த்து வியந்த பாபர், துருக்கிய கட்டடக்கலை நிபுணர்களை வரவழைத்து, ஆக்ராவில் சில மாளிகைகளையும் மசூதிகளையும் இந்திய கட்டடக் கலையை பின்பற்றி உருவாக்கினார். அவை எதுவும் தற்போது இல்லை. மிஞ்சியிருப்பது, பானிபட் கிராமத்தில் (போரில் வெற்றி பெற்ற பிறகு) கட்டிய ஒரு மசூதி மற்றும் அயோத்தியில் அவர் ஆணையின்கீழ் மீர்பாக்கி என்ற தளபதி கட்டிய ஒரு மசூதி (இதுவும் தற்போது இந்து மதத் தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டுவிட்டது). கட்டடக் கலையை பொறுத்தமட்டில், இவை இரண்டுமே பிரமாதமான மசூதிகள் அல்ல. இவை பற்றி நுணுக்கமான குறிப்புகளை பாபரே விஸ்தாரமாக குறிப்பிடவில்லை.
இளம் வயதிலிருந்து கரடுமுரடான வாழ்க்கை, தொடர்ந்து யுத்தங்கள்… சாம்ராஜ்யம் நிறுவிய பிறகு, மறுபடி ஆரம்பிக்கப்பட்ட மதுப்பழக்கம் எல்லாம் சேர்ந்து, கடைசி காலத்தில் பாபரை படுக்கையில் வீழ்த்தியது.
மது!...
சுயசரிதையில், மது அருந்துவது பற்றி பக்கம் பக்கமாக அனுபவித்து விவரித்து இருக்கிறார் பாபர்!
‘பரவசம் தரும் ஒயின் வேண்டும்…
பூரித்த இளமையோடு
பெண்களே வருக!
இவற்றுக்கு இணை வேறு
எது உண்டு?
பாபர்! ஆசைதீர அனுபவி!
இளமை போனால் திரும்பி வராது!’
- வாலிபப் பருவத்தில் பாபர் எழுதிய கவிதை இது!
உலகப் புகழ்பெற்ற மது வகைகளிலிருந்து, இந்திய சாராயம் வரை ஒன்றைக்கூட விட்டுவைக்கவில்லை அவர். அதே சமயம், எத்தனை ‘லார்ஜ்’கள்(!) அடித்தாலும், பாபர் நிதானம் தவறியதே கிடையாது என்கிறது வரலாறு!
பாபர் நோய்வாய்ப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு டெல்லிக்கு விரைந்து வந்த ஹுமாயூனை, ‘‘பொறுப்பில்லாமல் ஊரை விட்டு வந்தது தவறு!’’ என்று கடிந்து கொண்டார் பாபர். பிறகு தந்தையின் உடல்நலம் தேறியவுடன் ஹுமாயூன், இந்தியாவின் வடக்கே ஸம்பல் பகுதிக்குத் திரும்பி சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, திடீரென்று காய்ச்சலில் வீழ்ந்தார். அசுரக் காய்ச்சல். எந்த மருந்தும் பயன் தருவதாகத் தெரியவில்லை. கூட இருந்தவர்கள் பயந்து போனார்கள். பிறகு, யமுனை நதியில் படகில் படுக்க வைத்து, சர்வ ஜாக்கிரதையாக ஹுமாயூனை ஆக்ராவுக்கு அழைத்து வந்தார்கள். இடமாறுதலும் பலனளிக்கவில்லை. ஆக்ராவில் உள்ள கைதேர்ந்த வைத்தியர்கள் போராடியும் ஜுரம் குறையாததால், தந்தை பாபர் கலங்கிப் போனார்.
‘என் அருமை மகனை காப்பாற்றியாக வேண்டும்’ என்று மனம் உடைந்து, கண்ணீர் வடித்த பாபரிடம் ஒரு முஸ்லிம் துறவி, ‘‘அரசே! தங்களிடம் உள்ள பொருட்களில் மிகவும் விலைமதிப்பு உயர்ந்த ஒன்றை விட்டுக்கொடுத்தால், தங்கள் மகன் பிழைக்கலாம்!’’ என்று சொல்ல, வெகுநேரம் சிந்தனையில் இருந்த பாபரின் முகத்தில் தெளிவு பிறந்தது. மற்ற ஆலோசகர்கள் மனதில் ஓடியது என்னவோ, கோஹினூர் வைரம்! மரியாதையுடன் அதைப் பற்றி அவர்கள் குறிப்பிடவும் செய்தார்கள் (பாபர் அந்த வைரத்தை, தனக்காக வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. மகனுக்கே திருப்பி தந்துவிட்டார் என்ற செய்தி இவர்களுக்குத் தெரியாது!).
எழுந்து சென்ற பாபர், ஹுமாயூனின் படுக்கை அருகில் அமர்ந்து, வெகுநேரம் தியானத்தில் இருந்தார். இறைவனின் பெருமையை அவர் உதடுகள் முணுமுணுத்தவாறு இருந்தன.
பிறகு எழுந்து மூன்று முறை மகனை வலம் வந்த பாபர் இரு கைகளையும் உயர்த்தி, ‘‘எல்லாம் வல்ல இறைவனே! கருணை கடலே! என்னிடம் உள்ள விலைமதிப்பு மிக்க பொருள் என் உயிர்தான். இதோ, ஒரு தந்தை உன்முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன்! என் மகன் உயிர் பிழைக்க வேண்டும். அதற்குப் பதில், என் உயிரை எடுத்துக் கொள்ள வேண்டி இறைஞ்சுகிறேன்!’’ என்று உணர்ச்சிகரமாக முழங்கினார்.
உடனே, அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது..!
பாபர் மெள்ள திரும்பிச் செல்ல முனைந்தபோதே, அவர் கால்கள் தள்ளாடின. லேசாக காய்ச்சலும் ஆரம்பிக்க… அதே சமயம், ஹுமாயூனின் ஜுரம் குறைய… பாபர் கன்னங்களில் ஆனந்த கண்ணீர்! ‘‘மகனிடமிருந்து நோயை நான் எடுத்துக் கொண்டுவிட்டேன்!’’ என்றார் லேசான குரலில்!
இது எதேச்சையான ஒரு சம்பவம் என்றும், இந்த ‘உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ்’ சற்று மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்றும் பிற்பாடு சில ஆங்கிலேய மற்றும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டாலும், ஹுமாயூன் நோயும் பாபர் பிரார்த்தனையும் ஹுமாயூன் குணமானதையும் பிறகு பாபர் நோய்வாய்ப்பட்டு இறந்ததையும் வரலாறு ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறது!
இறப்பதற்கு முன் ஹுமாயூனை அழைத்து, ‘என் வாரிசு!’ என்று எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார் பாபர். பிறகு மகனை நோக்கி, ‘‘உன் சகோதரர்களை அன்புடன் நடத்து, மகுடம் தலைக்கு ஏறியவுடன் மமதை வந்துவிடக்கூடாது. அது, உன்னை தவறான பாதையில் கொண்டு செல்லும். ஏராளமான மதங்களையும் ஜாதிகளையும் கொண்ட நாடாக இருக்கிறது இந்தியா. நீ எல்லோருக்கும் அரசன், ஆகவே, மதவெறி உனக்கு வேண்டாம். குறிப்பாக, இந்துக்களின் நம்பிக்கையை பெற, அவர்கள் வணங்கும் பசுவை எந்த சூழ்நிலையிலும் கொல்லாதே. எந்த மதத்தின் ஆலயங்களையும் நாசப்படுத்தாமல் ஆட்சி செய். இஸ்லாமிய மதத்தை கொடுங்கோல் ஆட்சியின் மூலம், வாள்முனையில் நிலை நிறுத்த முடியாது. அன்புவழி ஒன்றினால்தான் முடியும்!’’ என்று மெல்லிய குரலில் அறிவுரை கூறினார்.
பிறகு பாபருக்கு மூச்சுவாங்க ஆரம்பித்தது. நினைவும் மெள்ள அகல ஆரம்பித்தது.
டிசம்பர் 26, கி.பி.1530… அதிகாலை லேசாக கண்களைத் திறந்த பாபர், ‘‘இறைவா! இதோ, நான் தயார்…’’ என்று முணுமுணுத்தார்.
சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்தது.
பாபரின் மகளும் ஹுமாயூனின் வாழ்க்கை வரலாற்றை பிற்பாடு எழுதியவருமான குல்பதன் பேகம், ‘அன்றிரவு முழுவதும் ஒரு மூலையில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த நானும் மற்றவர்களும் அப்பா இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் ‘ஓ’வென்று கதறி அழுதோம். எங்களை பொறுத்தமட்டில், அன்று காலை… இருட்டாகவே விடிந்தது…’ என்று விவரிக்கிறார். அநேகமாக யுத்த களத்திலேயே வாழ்க்கை என்பதால் சற்று முதுமையாகத் தோற்றமளித்தாலும், இறந்தபோது பாபரின் வயது 48தான்! டெல்லி அரியணையில் அமர்ந்து, அவர் ஆட்சி செய்தது நாலாண்டுகள்!
முதலில் பாபரின் உடல் ஆக்ராவில் - தாஜ்மஹால் பிற்பாடு கட்டப்பட்ட இடத்துக்கு அருகே - யமுனை நதிக்கரையில் புதைக்கப்பட்டது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகுதான், பாபரின் உயில்படி, அவரது உயிரையே வைத்திருந்த காபூலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கே அவர் முன்னொரு சமயம் அமைத்திருந்த அழகான பெரும் தோட்டத்தில் மறுபடியும் புதைக்கப்பட்டது.
பாபர் என்னும் புலி எட்டடி பாய்ந்தால், ஹுமாயூன் என்னும் குட்டி பதினாறு அடி பாயவேண்டும் என்பதுதான் பாபர் உட்பட, எல்லோருடைய விருப்பமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு அடி தாண்டுவதற்குள்ளேயே, இந்த மொகலாய குட்டி தடுக்கி விழுந்தது வேறு விஷயம்..!
Leave a comment
Upload