தொடர்கள்
Daily Articles
உடல் தசைகளை பல மடையச் செய்யும் பசலைக்கீரை பற்றி தெரிந்துக் கொள்வோம்!! - மீனாசேகர்

பசலை.jpeg

தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கீரைகள் என்று எல்லாமே சரிவிகித அளவில் இருந்ததால் எந்த விதமான நோய்களும் நம்மை அண்டாது என்பதையும், ஒவ்வொரு கீரையிலும் வெவ்வேறு விதமான சத்துக்கள் உள்ளதை நம் முன்னோர்கள் சொன்னதைப் பற்றி இப்போதுதான் உணரத் தொடங்கியுள்ளோம்.

அந்த வகையில் பசலைக்கீரை மிகவும் குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு பச்சைப்பசேல் என்று மனம் கவரும் பசலைக்கீரை, வீட்டுக்கு அழகு தரும் கொடியாகவும், சுவையான உணவாகவும் பயன்படும். இந்த கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பசலை கீரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாகவும் இருக்கும் பசலைக்கீரை நமது தசைகளை பலமடையச் செய்யும். பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை.

பசலைக்கீரை சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுள் கிட்டும் என்பதை இன்று பல்வேறு விதமான ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்கள் என்று பலரும் கூறியுள்ளனர்.
கோடை காலத்தில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் கோளாறுகளை தீர்ப்பதில், கீரை வகைகளில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் பல வகை இனங்கள் உள்ளன. பசலைக்கீரையில் பல வகைகள் இருந்தாலும் இவைகளில் கொடிப்பசலை, தரைப்பசலை, சிறுபசலை, செடிப் பசலை ஆகிய நான்கு இனங்கள் மட்டுமே மருத்துவத்திற்காகவும், சமையலுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நான்கு இனங்களிலுமே சத்துக்கள் ஏறத்தாழ ஒரேமாதிரியாகவே உள்ளன.

பசலைக்கீரையை “வசலைக்கீரை” என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்தியில் இதனை பாலக் என்று அழைக்கின்றனர். ஆயுர்வேதத்தில் ‘உபோதிகா’, ‘போதகி’, ‘அமிர்த்த வல்லாரை’ என்ற பெயரில் குறிப்பிடுவார்கள்.

கொடிப்பசலை பற்றி அகத்தியர் பாடல்

‘போகம் மிகக் கொடுக்கும் போர்செய் கபம் பெருக்கும்
ஆகமதிற் றாகமன லைத்தணிக்கும் - மாகுடரின்
மன்னு மலமிளக்கும் மாறா வுரிசை தருந்
தின்னுங் கொடிவசலை செப்பு’.

போக இச்சையை அதிகப்படுத்தும். கபத்தையும் அதிகப்படுத்தக் கூடியது என்பதால் கபம் மிகுந்தவர்கள் தவிர்க்க வேண்டும். உடலை வருத்துகிற தாகத்தையும் உடல் வெப்பத்தையும் தணிக்கும். குடலில் சேர்ந்து ஊறு செய்யும் மலத்தை இளக்கி வெளித் தள்ளும். சுவையின்மையைப் போக்கி வாய்க்கு ருசியை உண்டாக்கும் என்பதே இந்த பாடலின் பொருள்.

குறிப்பு...

இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது என்பதாலும், கபத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு என்பதாலும் சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், இக்கீரையை அடிக்கடி தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும். சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் இக்கீரையை சாப்பிடக் கூடாது.

பசலைக்கீரையின் அற்புதங்கள்:

பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன. அதோடு பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து மற்றும் உப்பின் காரச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன.
பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகிறது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது.

பசலை கீரையில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதச் சத்து உள்ளது.
குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிப்பதற்கும், மூளை செல்கள் சிதைவு ஏற்படாமல் இருப்பதற்கும் டி எச் ஏ சத்து தேவையாக உள்ளது. எனவே வாரம் இரண்டு முறை பசலைக்கீரை உணவில் சேர்த்தால் இயற்கையான வழியில் போதுமான டி.எச்.ஏ சத்து குழந்தைகளுக்குச் சென்று அடையும்.

பசலைக்கீரையில் உள்ள சத்துக்கள்:

நீர் - 92%, மாவுப்பொருள் - 4%, புரதம் - 1.9%, கொழுப்பு - 0.9%, கால்சியம் - 0.06 யூனிட், தாது உப்புக்கள் - 1.4%, இரும்புத் தாது - 1.4%, பாஸ்பரஸ் - 0.01%, வைட்டமின் A - 3000 யூனிட், வைட்டமின் B - 48 யூனிட், வைட்டமின் C- 70 யூனிட்.

பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள்:

பசலைக்கீரை புற்று நோய் செல்கள் மீண்டும் வளராமல் தடுத்து, அந்நோயின் கடுமைத் தன்மையை குறைக்கின்றது.

பசலைக்கீரை மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.

பசலைக்கீரை சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை கொண்டது. மேலும் பசலைக்கீரை சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும், சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட வைக்கின்றது. இரத்தசோகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு இந்த பசலை கீரை அருமருந்தாகும்.

பசலைக்கீரை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு சரியான இடைவெளியில் மாதவிலக்கு சுழற்சி ஏற்படும்.

பசலைக்கீரை மாரடைப்பு, இரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருபவர்களுக்குச் சருமம் பளபளப்பு அடையும். உடல் பருமன் குறையும்.

பசலைக் கீரையானது வயிற்றைக் குளிர்ச்சி அடையச் செய்து உடல் சூட்டைத் தணிக்கும். மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும்.
பசலைக்கீரையானது மலச்சிக்கல், வயிற்றுவலி உட்பட பல்வேறு விதமான வயிற்றுக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும். குடலில் உள்ள கழிவுகளை அகற்றுகின்றது. இதைத்தவிர ஆசனவாயில் ஏற்படும் புண், கடுப்பு, எரிச்சல் போன்ற தொல்லைகளை குணப்படுத்தும்.

பசலைக்கீரை தாகத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. வேனல் கட்டிகள், வேர்க்குரு, அக்கி முதலிய வெப்பத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலைச்சாற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்த நல்ல பலன் கிட்டும்.

பசலைக்கீரை செடியை வீட்டிலும் வளர்க்கலாம்:

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க ஏற்ற கீரைகள் வரிசையில் முதலிடம் பிடிக்கும் கீரை பசலைக்கீரை. இதன் தண்டு, கொடியை வெட்டி வைத்தால் வளரும். விதை மூலமும் வளரும். விதைகள் 2 அல்லது 3 வாரங்களில் முளைக்க ஆரம்பித்துவிடும். விதைகளை நடுவதற்கு முன்னால் ஒரு இரவு முழுவதும் குளிர்ச்சி இல்லாத வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அதன்பின் எடுத்து நடவேண்டும். சூரிய வெளிச்சத்தில் இவைகள் செழித்து வளரும். அனைத்து வகையான மண்களிலும், சூழ்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. நாம் வீட்டில் வளர்ந்த கீரையை தேவையான பொழுது புதிதாக பறித்து சமைத்து சாப்பிடலாம்.

அடுத்தவாரம் உடல் வெப்பத்தை சீராக்கும் காசினிக் கீரை பற்றி தெரிந்துக் கொள்வோம்!