இந்த வருட கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை எதிர்பார்த்து, உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருந்த இங்கிலாந்து மக்களிடம்... திடீரென “மக்களே..! மரபணுவை மாற்றி புது கோலத்தில் கொரோனா வைரஸ் உருமாறி இருக்கிறது.. நிலைமை கை மீறி போய்விட்டது. எனவே உங்கள் கொண்டாட்டங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, வீட்டுக்குள்ளேயே அடக்கமாக இருங்கள்... வெளியே வந்தீர்கள் என்றால் பிறர் உங்களை அடக்கம் செய்யவேண்டிய நிலைமை வந்துவிடும் என்பதை கனத்த மனதோடும், துக்கத்தோடும் தெரிவித்து கொள்கிறோம்” என பிரிட்டிஷ் பிரதமர் கலைந்த தலைமுடியோடு உரையாற்ற... இங்கிலாந்து மக்கள் மறுபடியும் முதலிலிருந்தா, என சோர்ந்து போய் இருக்கிறார்கள்.
கடந்த 10 மாதங்களாக இந்த கொரோனாவால் படாத பாடு பட்டதால், அவர்கள் தடுப்பூசி கண்டுப்பிடித்த உற்சாகத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாடவும் அத்துடன் 2021-ன் வரவையும் ஆவலோடு எதிர்பாத்திருந்திருந்தார்கள். தற்போது, அவர்களின் தலையில் இடி விழுந்தது போல் அவர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து, புதிய வகை கொரானா பல்லிளித்துக்கொண்டு அங்கே குதித்து இருக்கிறது.
இதையடுத்து இந்தியா, ஹாங்காங் உட்பட 40 நாடுகள் பிரிட்டனுடன் போக்குவரத்தை துண்டித்து உள்ளது.
ஏற்கனவே அங்கே 1,37,000 எண்ணிக்கைக்கு மேல் மக்கள் இந்த ஃபைசர்/பயோன்டெக் தடுப்பூசி போட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 1 , 2020 வரை இங்கிலாந்தில் மொத்தம் 75,000 கோவிட் இறப்புகள் என தரவுகள் கூறுகின்றன .
அப்படி என்ன இந்த புது கொரோனா உருமாறி, கருமாறி இருக்கிறது என்று பார்த்தால்... ரொம்ப அதிகளவில் எல்லாம் மாறாமல், முக்கியமான எதை மாற்றினால் மனித இனத்திற்கு ஆப்பு வைக்க முடியும் என்பதை படு வில்லத்தனமாக யோசித்து, நாம் உள்ளே நுழையும் போது மனிதனின் நோயெதிர்ப்பு சக்தி நம்மை அழிக்க பார்க்கிறது... எனவே நம்மை அடையாளம் காண முடியாதபடி, இரண்டு விஷயத்தை அழித்திடுவோம் என்று தன் வெளிப்புறத்தில் உள்ள ஸ்பைக் புரதத்தின் (Spike protein) 69 -70 இடத்தில் (position of 69–70 deltaHV is deleted) இருக்கிற 2 அமீனோ ஆசிட்டை (histidine and valine) அழித்து இருக்கிறது. அதன் மூலம் நம் எதிர்ப்பு சக்தி வேற எவனோ ஒரு வைரஸ் வரான் என்று நினைத்து பாதுகாப்பை கோட்டை விடும் அளவிற்கு தன்னை அடையாளம் கண்டுப்பிடிக்காத வகையில மிக மிக புத்திசாலித்தனமாக சுலபமாக உள்ளே நுழையும் விதத்தில் இந்த புது கொரோனா மாறி இருக்கிறது.
70% அதிக வீரியத்துடன் பரவும் தன்மை கொண்டது என்று கூறுகிறார்கள்.
மனித உடலில் கைகால் எப்படியோ, அதே போல் கொரானாவிற்கு ஸ்பைக்ஸ். இந்த ஸ்பைக்ஸ் தான் மனித உடலில் உள்ள செல்லில் ஒட்டிக்கொண்டு, கொரோனா உள்ளே புக உதவுகிறது. உள்ளே நுழையும் கொரோனா வைரஸ், நம் உடலின் ACE2 என்ற நொதியுடன் (Enzyme) தன்னை பிணைத்துக் கொண்டு நம் உள்ளே வருகிறது. இந்த நொதியுடன் வசதியாக தன்னை பிணைத்துக் கொள்வதற்காக சில மாற்றங்களையும் இந்த புது கொரோனா செய்திருக்கிறது...
இந்த ACE2 என்றால் என்ன என்று பார்ப்போம்..
மனித உடலில் சுரக்கும் ACE2 என்கிற நொதி (Enzyme) ரத்த அழுத்தம், ரத்த ஓட்டம் போன்ற பலவற்றை கட்டுப்படுத்துகிறது.
இந்த ACE2 Enzyme நம் மனிதர்கள் எல்லாரிடமும் உள்ளது. இது குறிப்பாக மூச்சுக்குழாய் பகுதியில் நிறைய இருக்கும். இந்த ACE2 Enzyme ரத்த குழாயில் உள்ள அடைப்புகள் உள்ள வயதானவர்களுக்கு அதிகமாகச் சுரக்கும். எனவே ACE2 அதிக எண்ணிக்கையில் இருப்பதால் வெகு சுலபமாக கொரோனா இதனை இறுக்க பற்றிக்கொண்டு வயதானவர்கள் உடலில் நுரையீரல் போன்ற பாகங்களில் தங்கி பெரும் சேதங்களை விளைவிக்கிறது.
COVID-19 என்பதே ஒரு “விலங்கு வழித்தொற்றுநோய்” (zoonosis). இது முதலில் ஒரு மிருகத்தை பாதித்து, அந்த மிருகம் மூலம் மனிதனை பாதித்து அவன் மூலம் மற்ற மனிதர்களுக்கு பரவுவது.
போன நவம்பரில் டென்மார்க்கில் சுமார் (1,70,00000) ஒரு கோடியே 70 லட்சம் மிங்க்குகளை அழித்தது செய்திகளில் வந்தது நினைவிருக்கலாம்.
இந்த மிங்க்குகள் என்பது புசுபுசுன்னு மெல்லிய முடி இருக்கிற கிட்டத்தட்ட நம் ஊர் கீரிப்பிள்ளை மாதிரி தோற்றத்தில் உள்ள பாலூட்டி இன விலங்கு தான் இது. ஐரோப்பிய நாடுகளில் இதன் முடி, தோல்கள் ஏற்றுமதி என்பது பல பில்லியன் யூரோக்கள் புழங்கும் தொழில் ஆகும். இந்த மிங்க்குகளை பாதித்தது இந்த புது வகை கொரோனா தான் என்றும் அதனால் தான் அதை அழித்தார்கள்.
‘இந்தியாவில் இது பரவாது எனவே பயம் வேண்டாம்’ என மத்திய அரசும் வைராலஜி நிபுணர்களும் கூறியுள்ளார்கள். மாஸ்க், தனி நபர் இடைவெளி, கை கழுவுவது என்ற கட்டுப்பாடுகளே போதும் என்கிறார்கள்.
இதற்கிடையே இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்திறங்கியவர்களில் 6 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அவர்கள் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்களா என்பது பரிசோதனைக்குப் பின்புதான் தெரியவரும்.
பிரிட்டனில் பரவி வரும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அச்சத்தால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்தியாவும் இன்று இரவு முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து மருத்துவர்கள் இந்த வைரஸ் அங்கே மிக வேகமாக பரவி தொற்று பரவுகிறது என கூறினாலும், அதற்கு சரியான தரவுகள் இல்லை என இந்திய வைராலஜி மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆறுதலாக...
புதிய வகை வைரஸால் உயிரிழக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும், இப்போது கண்டுப்பிடித்து இருக்கிற தடுப்பூசியே இதுக்கும் போதும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீரியமிக்க புதிய கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை, ஆறு வாரங்களில் உற்பத்தி செய்ய தயார் என ஃபைசர்/பயோன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ள அதே வேளையில் தற்போது உள்ள தடுப்பூசி வீரியமிக்க வைரசுக்கு எதிரான பாதுகாப்பையும் அளிக்க வல்லது என பயோன்டெக் நிறுவனம் தெரிவித்தது, சிறிது குழப்பமாக இருக்கிறது.
தங்களது தடுப்பூசியில் 1000 அமினோ ஆசிட்டுகள் இருப்பதாகவும், அதில் 9 மட்டுமே மாறி உள்ளதால், தடுப்பூசி 99 சதவிகிதம் பலனளிக்கும் என்றும் பயோன்டெக் தெரிவித்து இருக்கிறது. இந்த 9ஐயும் மாற்றி புதிதாக உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுப்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை தான் இப்போது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் போடப்பட்டு வருகிறது.
இந்த உருமாறிய கொரோனாவால், தொற்று எண்ணிக்கை அதிகமாகுமே தவிர மருத்துவமனையில் சேருகின்ற தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பவர்கள் விகிதம் பெரிதாக மாறப்போவதில்லை என்பதே இப்போதைக்கு ஒரே ஆறுதலான செய்தி.
இது என்னய்யா இந்த வைரஸு.. நினைத்தால் பெண்கள் புடவை மாற்றுவது போல் தன் மரபணுவை நினைத்த போதெல்லாம் மாற்றிக்கொண்டே வருகிறதே, 2021-னும் விளங்காமல் போய்விடுமா என்று மக்கள் திகிலடைந்தாலும், ஏதாவது நல்லது நடக்காமலா போய்விடும் என்றே நாம் நம்புவோம்.
Leave a comment
Upload