தொடர்கள்
பொது
இறுதியில் நியாயமே வென்றது! - மரியா சிவானந்தம்

20201125121506179.jpg

“நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்.
என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்
(திருப்பாடல்கள் "9-4)

“தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி (Justice delayed is justice denied) என்றொரு தொடரை நாம் அனைவரும் அறிவோம். நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் பல வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு, காலம் செல்லச் செல்ல வழக்கு திசைமாறி, உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்வதை நாம் கண்கூடாகவும் பார்க்கிறோம். காலப்போக்கில் அந்த வழக்கின் உண்மைத்தன்மை மறைவதும், நியாயம் நீர்த்துப் போவதும், தவறான தீர்ப்புகளால் சிலரின் தலையெழுத்தே மாறுவதும் கூட இங்கு சர்வ சாதாரணமாக நடப்பதை காண்கிறோம்.

ஆனால் இந்த மாதம் 22 ஆம் தேதியன்று ஒரு மறுக்கப்பட்ட நீதி காலம் தாழ்த்தியாவது வழங்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்குப்பின் நீதி தேவதையின் நியாயத்தராசு ஒரு அபலைக்காக அசைந்துள்ளது. ஏறத்தாழ இறந்துபோன ஒரு கேரள வழக்கை சிபிஐ உயிர்ப்பித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்துள்ளது. 1992 ஆம் ஆண்டு கேரளாவின், கோட்டயத்தில் ஒரு மடத்தின் விடுதியில் எழுந்த ஒரு அபலை கன்னியாஸ்திரியின் அபயக் குரலுக்கு, இப்போதுதான் பதில் கிடைத்துள்ளது.

சிஸ்டர் அபயா என்னும் கன்னியாஸ்திரி, மார்ச் 27 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டு செயின்ட் பயஸ் என்னும் அம்மடத்தில் காணாமல் போய் விட்டார். ஆனால், அதே நாள் மாலை விடுதி வளாகத்தில் உள்ள கிணற்றில் அபயாவின் உயிரற்ற உடல் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரித்தது. அபயா தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் வழக்கு முதலில் முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், மனித உரிமைப் போராளியாகிய, ஜோமோன் புத்தன் புரைக்கல், இது ஒரு படுகொலை என்று வாதிட்டு தொடர்ந்து கடுமையாக போராடி வந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின், அபயாவின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கி இப்போது தீர்ப்பு வந்துள்ளது .

பல கட்ட விசாரணைகள் இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்டன. ஜோமோன் புத்தன் புரைக்கல் அவர்களின் தொடர் போராட்டத்தால் 1993 ஆம் ஆண்டு, இந்த வழக்கு குற்ற புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ-யின் முதற் குழு இந்த மரணத்தை தற்கொலை என்று கோணத்தை விட்டு விட்டு, கொலை என்ற கோணத்தில் ஆராய ஆரம்பித்தது. ஆனால் மரணத்துக்கான காரணம் என்னவென்று அதனால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

சிறப்பு நீதிமன்றம், இரண்டாவது குழுவை அமைக்க சொல்லி வலியுறுத்த, அவ்வாறே இரண்டாவது குழுவும் ஏற்படுத்தப்பட்டது. அந்த குழு, இது கொலைதான் என்ற முடிவுக்கு வந்தது. ஆயினும் கொலைக்கான சாட்சியங்களையோ, குற்றவாளிகளையோ அது அடையாளம் காட்ட இயலாமல் போனது.

சிபிஐயின் மூன்றாவது குழு ஏற்படுத்தப்பட்ட பின், 2008 ஆம் ஆண்டு, இரண்டு பாதிரிமார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரியையும் குற்றவாளிகளாக அடையாளம் காட்டி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. பாதிரியார் தாமஸ் கோட்டூர், பாதிரியார் ஜோஸ் புத்திரிக்கையில், கன்னியாஸ்திரி செஃபி ஆகிய மூவரும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஐயம் எழுந்தது.

நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர் கொலை நடந்த விதம் வெளிச்சத்துக்கு வந்தது. சம்பவம் நடந்த அன்று அதிகாலையில் சமையலறைக்கு தண்ணீர் அருந்த சென்ற சிஸ்டர் அபயா ஒரு காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரை, முறைகேடான விரசமான நிலையில் அவர் தம் கன்னியாஸ்திரி மடத்தில் காண நேர்ந்தது. எங்கே அவர் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லி விடுவாரோ என்று பயந்தவர்கள், அவரைக் கோடரியால் தாக்கி, கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். 21 வயதே ஆன இளம் கன்னிகை அநியாயமாக இறந்து போனார்.

இந்த நெடுங்கால விசாரணையில், மனித உரிமைப் போராளி ஜோமோன் தன் சொத்துக்களை இழந்தார். ஆனாலும் தொடர்ந்து நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருந்தார். சிஸ்டர் அபயாவின் பெற்றோர் இறந்து போயினர். சாட்சியங்கள் மறைக்கப்பட்டன, மாற்றப்பட்டன. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து crime file என்ற மலையாள திரைப்படம் எடுக்கப்பட்டது. கிறிஸ்துவ கன்னியாஸ்திரி மடத்தின் மூடிய கதவுகளுக்குப் பின் நடந்த அக்கிரமத்துக்கு, தக்க ஆதாரம் இல்லை என்று சிபிஐ குழம்பிக் கொண்டே இருந்தது. இடையில் பாதிரியார் ஜோஸ் மாத்திரம் இந்த கொலையில் சம்பந்தப்பட்டதுக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லி வழக்கிலிருந்தே விடுவிக்கப்பட்டார்.

சென்ற ஆண்டு ஆகஸ்டு 26ஆம் தேதி சிபிஐ இந்த வழக்கில் முழு மூச்சுடன் செயற்பட்டது. வலுவான ஆதாரங்களை சேர்க்க நிறையவே தடுமாறினாலும் இறுதியில் வெற்றி கண்டு விட்டது. ஆம்! சம்பவம் நடந்த இரவில் அந்த மடத்துக்கு திருட வந்து ஒளிந்திருந்த அடைக்கலராஜா என்பவரின் சாட்சியம் ஒரு திருப்புமுனையினை இவ்வழக்கில் கொண்டு வந்தது. இரண்டு பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகள் மடத்துக்குள் இரவு நுழைந்ததை தான் பார்த்ததாக துணிவுடன் சாட்சி சொன்னார் அடைக்கலராஜா.

இறுதியில், நீதிபதி பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையோடு, தடயங்களை அழித்ததற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 6.5 லட்சம் ரூபாய் அபராதமும், கன்னியாஸ்திரீ செஃபிக்கு ஆயுள் தண்டனை, தனியாக ஏழு ஆண்டுகள் தண்டனை, கூடவே 6,5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது CBI சிறப்பு நீதிமன்றம். மூன்று குற்றவாளிகளில் ஒருவரான, பாதிரியார் ஜோஸ் நடுவே வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டிருந்தார்... ஆனால் மீண்டும் இவரும், இவருக்காக மாற்றி சாட்சி கூறிய 8 பேரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

“இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்: ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்: என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். (திருப்பாடல்கள் 17:6) என்று வான் நோக்கி எழுந்த ஒரு எளிய மகளின் கூக்குரலுக்கு பதில் கிடைத்துள்ளது. அன்பு வழியை கற்பிக்க பிறந்த இறைமகன் இயேசு, நீதியை நிலை நாட்டவே இப்பூமிக்கு வந்தேன் என்றார். அந்த வகையில் ஒரு ஏழைக்கு தாமதமாகவேனும் நீதி கிடைத்ததால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஒரு அர்த்தமுள்ள விழாவாக திகழ்கிறது!

கிறிஸ்துவ சபைகளிலேயே, கத்தோலிக்க திருச்சபை ஏனைய பிரிவினரை விட மிக மிக கட்டுக்கோப்பான ஒரு சமூக அமைப்பு. ரோமையின் சட்ட திட்டங்கள், கடைக்கோடி கிறிஸ்தவனையும் கட்டுப்படுத்தும். அதில் துறவற சபையினருக்கான ஒழுங்கு முறைகளும் அடங்கும். பாதிரிமார்களும், துறவறம் மேற்கொள்ளும் கன்னியர்களும், ‘கற்பு, எளிமை, கீழ்ப்படிதல் என்னும் மூன்று வார்த்தைப்பாடுகளை தாம் சாகும் வரை கடைப்பிடிப்பதாக’ வாக்கு கொடுக்கின்றனர். பாதிரி குருவாக ஒருவர் திருநிலைப் படுத்தப்படுகையில் அவரது கரங்கள் தூய எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து ஆசிர்வதிக்கப் படுகிறது. கன்னியாஸ்திரியாக ஆவதும் சுலபமான காரியம் இல்லை. கடும் பயிற்சிக்குப் பின்னர் வார்த்தைப்பாடு என்னும் வாக்குத்தத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். இடையில் இவர்கள் இந்த திருநிலைக்கு தகுதி இல்லை என்றாலோ, விருப்பம் இல்லை என்றாலோ எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். ஆனால் ‘நித்திய வார்த்தைப்பாடு’ தந்த பின் வெளியில் செல்வது கடினம், ஆனால் முடியாத விஷயம் இல்லை.

எப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாத சராசரி மனிதராக துறவறம் பெற்றவர்கள் மாறுகிறார்களோ, அப்போதே அவர்கள் மடத்தை விட்டு வெளியேறி, சாதாரண மனிதரைப் போல வாழ முடிவெடுக்க வேண்டும். அதில் எந்தக் குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை. திருச்சபையும், சமூகமும் அவர்களை தாழ்வாக நினைக்காமல், அவர்களின் நேர்மையை பாராட்ட வேண்டும்.

சிஸ்டர் அபயாவின் மரணத்தில் உள்ள முடிச்சு அவிழ்க்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளது மக்களிடையே நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. “நான் உம்மை நோக்கி கூக்குரல் எழுப்பினேன், நீர் என் மன்றாட்டை கேட்டருளினீர்” என்று அபயாவின் ஆன்மா இப்போது பாட க்கூடும். “கடவுளின் கண்களில் இருந்து எதையும் மறைக்க முடியாது” என்பதை மெத்தப் படித்த பாதிரிமார்களும், சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கன்னியரும் மறந்ததும், செய்த கொலையை மறைக்க பேரங்களில் ஈடுபட்டதும் ஏற்றுக் கொள்ள முடியாத கொடுமை!

“நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் நீதி வழங்குகின்றீர், மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவரைத் துன்புறுத்த மாட்டார் (திருப்பாடல்கள்; 10-18).

அபயாவின் ஆன்மா சாந்தி பெற செய்து, இறைவனே நீதி வழங்கியதால், இந்த கிறிஸ்துமஸ் பொருள் பொதிந்த கிறிஸ்துமஸ்..