தொடர்கள்
கல்வி
"இந்திய பார்மசி கல்வியின் கதநாயகன்..” - ஸ்வேதா அப்புதாஸ்.

பார்மசி கல்வி என்பது இந்தியாவில் ஒரு முக்கிய படிப்பாக உயர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், ஜெ.எஸ்.எஸ். நிறுவனம் என்பது மறுக்க முடியாத உண்மை.

கிரேக்க நாட்டினர் தான் முதலில் பார்மசியை உருவாகினார்கள் என்கிறது வரலாறு... ஒன்பதாவது நூற்றாண்டில் இந்த பார்மசி உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

20201124205106305.jpg

ஆசியாவின் முதல் பார்மசி கல்லூரி 1842 ஆம் வருடம், கோவாவில் போர்ச்சுகீசியரால் துவக்கப்பட்டது.

இந்திய பார்மசி கல்வியின் வளர்ச்சியில் பெரும் பங்கிட்ட ஜெ.எஸ்.எஸ். நிறுவனம், தன் சிறந்த பணியை அர்பணித்தது. பார்மசி எனும் ஒரு வித்தியாசமான கல்வியை நோக்கி மாணவர்களை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மாமனிதர் தான் சுரேஷ்.

2020112420520303.jpg

ஜெ.எஸ்.எஸ். பல்கலை கழகத்தின் ‘ப்ரோ சான்சலர்’ சுரேஷ் அவர்களை சந்தித்து பேசினோம்... கம்பீரமாக இருக்கும் சுரேஷ், வெரி ஸ்மார்ட் ஜென்டில் மென்...

* “இந்திய பார்மஸி கல்வி என்பதே இன்று உங்கள் கையில் தான் இருக்கிறதா.. அதன் வளர்ச்சிக்கு நீங்கள் தான் காரணமா?” என்று பேச்சை ஆரம்பித்தோம்...

தன் அழகான சிரிப்பை உதிர்த்து விட்டு.... “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை... பார்மசி கல்வி மற்றும் அந்த துறை கடந்த இருபது வருடமாக பிரமாண்டமாக வளர்ந்து இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்... ஒன்று, பார்மசி இண்டஸ்ட்ரியின் அபார வளர்ச்சி.. இரண்டாவது - இந்த இண்டஸ்ட்ரிக்கு வேண்டிய தரமான கல்வி... மூன்றாவது - அரசின் ஒத்துழைப்பு மற்றும் இந்திய பார்மசி கவுன்சிலின் சப்போர்ட். இவையே இந்த துறை வளர மிக உதவியாக இருந்து வருகிறது.

* மேலை நாடுகளில் பார்மசியின் முக்கியத்துவம் எப்படி? ஒரு மருத்துவரின் அருகில் இருந்து மருந்துகளை ஒரு நோயளிக்கு பரிந்துரை செய்பவர்தான் பார்மசிஸ்ட்டா?

அப்படியெல்லாம் ஒன்று இல்லை, அது தவறான தகவல்... ஒரு நோயளிக்கு அவரின் நோயின் தன்மையை பொறுத்து மருந்தினை பரிந்துரை செய்வது மருத்துவர் மட்டுமே... அந்த மருந்து சரியானது என்று சரி பார்த்து, நோயளிக்கு கொடுப்பது பார்மசிஸ்ட் வேலை. சில பார்மசிஸ்ட்களுக்கு, நோய் தடுப்பு மருந்துகளை வழங்கலாம் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி பணிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, மற்றபடி மருத்துவருடன் இருந்து மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும் என்பது அவரது வேலை இல்லை.

20201124205320815.jpg

* ஜெ.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரியின் ஆரம்ப காலமே உங்களிடம்தான் இருந்தது.. அதை வளர்த்தவர் நீங்கள்... அதன் வளர்ச்சியை பற்றி கூறுங்கள்...?

மைசூர் ஜெ.எஸ்.எஸ். குழுமம், ஆரம்பத்தில் தமிழகத்தில் ஒரு பள்ளி ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது, கர்நாடகா மருந்து கட்டுப்பாடு துறை ஏன் ஒரு பார்மசி டிப்ளோமா கல்வியை நீங்கள் ஆர்மபிக்கக் கூடாது என்று கூற..அதன்படி ஊட்டியில் 1980 ஆம் வருடம் ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 1982 ஆம் வருடம் நான் விரிவுரையாளராக இந்த கல்லுரியில் சேர்ந்தேன். ஒரு ஆய்வின் சமயம், பிரின்சிபால் ஊரில் இல்லை. அதனால் என்னை பார்த்துக் கொள்ள சொன்னார்கள்.. நல்ல விதமாக எல்லாம் முடிந்தவுடன் என்னையே பிரின்ஸிபாலாக பதவி உயர்த்தினார்கள். முதலில் நான் முடியாது என்று கூறினேன்.. பின்னர் ஏற்றுக்கொண்டு, கல்லூரியை முன்னேற்றப் பாதையில் நடத்திச் சென்றேன்.. 60 இடமே இருந்த டிப்ளமோவில் அதற்கு அடுத்த வருடமே 120 சீட்டுக்கு உயர்ந்தது... பின் பி பார்ம் 48 மாணவர்களை கொண்டு ஆரம்பித்தோம்.. இரண்டு வருடம் கழித்து, அதுவே 60 மாணவர்களாக உயர்த்தப்பட்டது. அடுத்து மாஸ்டர் டிகிரி ஆரம்பித்தோம்... இரண்டே இரண்டு ஸீட்டில் துவக்கப்பட்டு, அதுவும் 60 ஸீட்டாக உயர்ந்தது.. பின்னர் ஆராய்ச்சி படிப்பை துவக்கி, மூலிகை மருந்துகள் கண்டுபிடிப்பு, நீலகிரி மூலிகை மருந்துகள் விவசாயம் என்ற ஒரு அமைப்பை துவங்கி.. மூலிகை மருந்து செடிகளை வளர்க்க ஆரம்பித்தோம். சிறு சிறு விவசாயிகளை ஊக்குவிக்க சொசைட்டி துவங்கினோம். நிறைய விழ்ப்புணரவை ஏற்படுத்தியதின் விளைவு, எங்க கல்லூரிக்கு நல்ல பெயர் வந்தது... தோடர்களின் மூலிகை விவசாயத்தை முன்னேற்ற எங்களின் உதவியுடன் ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கினோம். விழ்ப்புணர்வு ஏற்படுத்தி, ஆராய்ச்சியை மேற்கொண்டதால் பல மருந்து நிறுவனங்கள் முன் வந்தன.

* எந்த வயதில் உங்களின் இந்த பணி துவங்கியது. ஊட்டியில் இருந்து எப்பொழுது மைசூருக்கு சென்றீர்கள்?

என் இருபத்தி நாலு வயதில் என் பணி ஆரம்பித்தது... இருபத்தி ஐந்து வருடம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லுரியில் பணிபுரிந்தேன்... 1982-ல் என் பணி துவங்கி, 2008-ல் மைசூருக்கு அழைப்பு வந்தது... அப்பொழுது தான் ஜெ.எஸ்.எஸ். கல்லூரி மைசூரில் பல்கலைக்கழகமாக உருமாறி, அதன் துணை வேந்தர் பொறுப்பை எனக்கு வழங்கினார்கள்.

20201124205446744.jpg

* இருபத்தி ஐந்து வருடமாக ஒரு கல்லுரியை வளர்த்து, சிறந்த முதல்வராக பணிபுரிந்து... உயர்ந்த பதவியான துணைவேந்தர் பதவியை எட்டியது பற்றி எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு சிறிய கல்லுரியை பெரிய அளவில் வளர்த்த ஒரு அனுபவம் பல விஷயங்களையும் எனக்கு கற்றுக் கொடுத்தது. ஜெ.எஸ்.எஸ். குழுமத்தின் மெடிக்கல் காலேஜ், டென்டல் காலேஜ், பார்மசி காலேஜ், ஊட்டி காலேஜ் என சகலமும் யூனிவர்சிட்டி நிர்வாகத்தின் கீழ் வந்தது... அனைத்து கல்லூரிகளும் அபாரமாக வளர்ந்து வந்தது... இதனையெல்லாம் ஒரு சிறப்பான வளர்ச்சிக்கு கொண்டுவர, ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லூரி தான் எனக்கு ஒரு டிரைனிங் கிரௌண்ட் என்று சொன்னால் மிகையாகாது. இந்த வளர்ச்சியின் மற்ற ஒரு பரிமாணம் தான் லைப் ஸ்டைல் சயின்சஸ். 1500 மாணவர்கள் உடன் லைப் ஸ்டைல் சயின்ஸ் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த லைப் ஸ்டைல் சயின்ஸ் ஊட்டியில் துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊட்டியில் துவங்கின இயற்கை மருத்துவம் படிப்பை, கோவைக்கு மாற்றிவிட்டோம். காரணம் குளிர் பிரதேசத்தில் இந்த ட்ரீட்மெண்ட் சரியாக கொடுக்க முடியாது என்பதால். தற்போது இது கோவைக்கு மாற்றி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

* ஜெ.எஸ்.எஸ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து, தற்போது ப்ரோ சான்சலராக உயர்ந்ததை பற்றிக் கூறுங்கள்?

துணை வேந்தர் பொறுப்பு என்பதனை 2008 ஆம் ஆண்டு முதல் 2013 வரை நிர்வகித்தேன். பின்னர் இரண்டாவது முறையாக 2013 முதல் 2018 வரை தொடர்ந்தேன். இந்தப் பதவியினை இரண்டு முறைக்கு மேல் வகிக்க கூடாது என்பது சட்டம். அதனால் சார்பு அதிபர் எனும் ப்ரோ சான்சலர் பதவியை எனக்கு கொடுத்துள்ளனர்... இந்த பணி தொடரும்....

20201124205602865.jpg

* ஜெ.எஸ்.எஸ். பார்மசி பல்கலைக்கழகத்தை இந்திய அரசு பெரிய அளவில் அங்கீகரித்துள்ளதை பற்றி கூறுங்கள்..?

இந்திய அரசு மட்டும் அல்லாமல் முழு பார்மசி துறையே எங்க நிறுவனத்தை பாராட்டுகிறது. அங்கீகரிக்கிறது... சிறப்பு பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதால், நிறைய தொழிற்சாலைகள் எங்கள் மாணவர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசும் நம் முன்னேற்றத்தை பார்த்து, இந்த துறையை எப்படியெல்லாம் முன்னேற்றலாம் என்பதை எங்களுடன் கலந்தாய்வு செய்து வருகிறார்கள்.

* பார்மசி இண்டஸ்ட்ரிகள் ஜெ.எஸ்.எஸ்-வுடன் எப்படி உறவை மேம்படுத்துகிறார்கள்?

இண்டஸ்ட்ரிகள் எங்களுடன் நல்ல உறவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... காரணம், மிகச் சிறந்த மாணவர்களை எங்கள் கல்லுரிகள் ஊருவாக்குகிறது. அதிலும் மருந்து ஆராய்ச்சியில், எங்க நிறுவனம் தான் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதனால் பிளேஸ்மென்ட்டில் எங்கள் மாணவர்களுக்கு தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. அதே சமயம் மருந்து தயாரிப்பு பற்றிய புதிய எந்த ஒரு ஆலோசனைகளையும் அரசும் சரி, மருந்து நிறுவனங்களும் எங்களிடம் தான் கேட்டு பெற்று கொள்வதில் ஜெ.எஸ்.எஸ். குழுமத்திற்கு மிகவும் பெருமை...

* பார்மசி மேல் ஒரு தனி மரியாதையை உருவாக்கியது ஜெ.எஸ்.எஸ். தானோ?

அப்படி ஒன்றும் சொல்ல முடியாது. நாங்களும் ஒரு காரணம் என்று கூறலாம்... உலக அரங்கில் இன்னும் நிறைய மருந்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

* சுரேஷ் அவர்களே... எத்தனை நாடுகளுக்கு விசிட் செய்துள்ளீர்கள்... அங்கு பார்மசி துறை எப்படி உள்ளது?

நான் நிறைய நாடுகளுக்கு சென்றிருக்கிறேன்... அதில் யுஎஸ் மாற்றும் ஐரோப்பிய நாடுகளில் பார்மசி துறை அதி நவீன வளர்ச்சியை அடைந்துள்ளது. கிளினிக்கல் பார்மசி.. ஆராய்ச்சி மேற்கொள்வது ஆஸ்திரேலியா, யு.எஸ்.ஏ. மற்றும் யு.கே. இந்த நாடுகளில் பார்மசி ப்ராக்டிஸ் சிறப்பாக நடப்பதை நான் நேரில் பார்க்கிறேன்.

20201124205734573.jpg

* பார்மசி கல்வி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எப்படி நடந்து வருகிறது?

இந்தியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றபடி சிஸ்டம் மாறுபடுகிறது. நகரங்களில் ஒருவித சிஸ்டம், கிராமங்களில் வேறு விதமாக உள்ளது... இடத்திற்கு ஏற்றபடி மருந்தாளர்கள் செயல் படுகிறார்கள்... அந்தந்த இடத்திற்கு ஏற்றபடி மருந்தாளர்கள் பணி செய்வது சிறப்பு... அதே சமயம் வெளிநாடுகளில் கிராமத்திலும் சரி, நகரங்களிலும் சரி.. ஒரே விதமான சிஸ்டம் தான் நடைமுறை படுத்தப்படுகிறது.

* உங்களுக்கு பிடித்த தலைவர் அப்துல் காலம், அவருடன் உள்ள உங்களின் தொடர்பு பற்றி கூறுங்கள்?

எல்லோரையும், என்னையும் சேர்த்து ஈர்த்தவர் டாக்டர். அப்துல் கலாம். பல வித ஆராய்ச்சிகளை செய்யத் தூண்டியவர் அந்த மாமனிதர்.

1996 ஆம் ஆண்டு, அவர் சயின்டிபிக் அட்வைஸராக இருக்கும் போது ஒரு கூட்டத்தில், பார்மசியை உயர்த்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவர் நாட்டின் ஜனாதிபதியானது ஒரு வரலாறு... நான் அவரை பலமுறை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளேன். நிறைய உந்துதல்களை ஏற்படுத்தியுள்ளார். ஜனாதிபதியாக ஜெ.எஸ்.எஸ். கல்லுரிக்கு வந்துள்ளார். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, இன்னும் அந்த இடம் காலியாக தான் உள்ளது...

* கோவிட் தொற்றிற்கு ஜெ.எஸ்.எஸ். குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பில் பங்கு உண்டா..?

கோவிட் தடுப்பு மருந்து தயாரிப்பில், எங்களின் பங்கு கட்டாயம் உள்ளது. வெளி நாடுகளில் இதன் பயன்பாடு மாறுபடுகிறது. நம் நாட்டில் மிகப் பெரிய அளவில் தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. இந்திய அளவில் மருந்துகள் தயாரித்து கொடுக்க அதிக செலவு பிடித்தாலும், மக்களுக்கு குறைவான விலைக்கு தான் வழங்கப்படும். தடுப்பு மருந்துகள், உலக அளவில் இந்தியாவில் தான் தயாரித்து கொடுக்கப்படுகிறது என்பதும் உலக அரங்கம் அறிந்த ஒன்று.

இந்தியாவில் கோவிட் தடுப்பு மருந்துகள் ரெடியாகிக் கொண்டிருக்கிறது... ஜெ.எஸ்.எஸ். கிளினிக்கல் டெஸ்டும் செய்து வருகின்றன. சிரம் இன்ஸ்டிடியூட் தயாரிப்பை டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறோம்.

முதல் தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டு முதல் பாதியில் வெளிவரும். அதுவரை முக கவசம், சமூக இடைவெளி.. பாதுகாப்பை கடைபிடித்தே ஆக வேண்டும். மூன்றாம் உலகை சந்தித்து கொண்டிருக்கிறோம்... அதில் இருந்து இந்த தடுப்பு மருந்துகள் நம்மை காப்பாற்றும்.

* இருபத்தி நாலு வயதில் துடிப்புடன் இருக்கும் ஒரு இளைஞர் சுரேஷ் எப்படி நிர்வாக பொறுப்பை கவனித்தார்?

என்னுடைய அந்த வயது இளமைத்துடிப்பை, முழுக்க முழுக்க கல்லூரி முன்னேற்ற வளர்ச்சியின் பாதையில் மாத்திரம் தான் எடுத்துச் சென்றேன். தினமும் ஒரு புது அனுபவத்தை கற்றுக் கொண்டு, கடமையில் சிறப்பாக என்னை ஈடுபடுத்திச் சென்றேன். எனக்கு வேறு எதிலும் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. அந்த காலம் வேறு... தற்போதுள்ள சூழ்நிலை வேறு.

*தங்களுடைய பொறுப்பான பணியில், பொழுது போக்கு அம்சங்களுக்கு இடம் உண்டா..?

என்னுடைய பொழுது போக்கு அம்சமே, புத்தகங்களை படிப்பது தான்... விளையாட்டு என்பது நண்பர்களுடன் ஷட்டில் விளையாடுவது மட்டுமே.

* இந்த பெரிய வேலையில் அமர்ந்துள்ள நீங்கள், எப்படி குடும்பத்துடன் நேர்த்தை செலவழிக்கிறீர்கள்..?

என்னுடைய நேரத்தை குடும்பத்துடன் செலவழிக்க சில நேரங்கள் ஒதுக்கிக் கொள்வது உண்டு... அது ஜாலியாகவும் இனிமையாகவும் இருப்பதை விரும்புவேன்.

20201124205901652.jpg

* உங்களுடன் பணிபுரியும் ஊழியர்களிடம் நெருக்கமாக பழகுகிறீர்களே... அது எப்படி..?

ஒரு விஷயம் பணிபுரியும் எல்லோரும் என் உடன் பணியாளர்கள். அதே சமயம், மேலிடம் எடுக்கும் முடிவுகளை சரிவர செய்ய அவர்களை பணிய வைப்பதும் என் கடமை. இது ஒரு டீம் ஒர்க். ஆனால், அதில் ஒருவர் லீடராக இருந்தால் தான், வேலைகள் சரியாக நடக்கும். அதை தான் நான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன்.

* ஒரு ப்ரோ சான்சலராக இருக்கும் உங்களுக்கு, ஓய்வு நாள் எப்பொழுது?

எனக்கு தினமும் ஓய்வு நாள் தான்.. என்னை யாரும் வேலை செய் என்று கூறுவது இல்லை. நானே என் வேலையை செய்கிறேன்... தினமும் படு பிசி தான். இத்தனை நிறுவனங்களை கவனிக்க வேண்டும்.... அதை ஈஸியாகவும் பிஸியாகவும் செய்து கொண்டிருக்கிறேன்.

* உங்களின் பிசி வேலைக்கு எப்படி உங்களின் உடல் ஒத்துழைக்கிறது?

பழகிவிட்டது... சரியான உடற் பயிற்ச்சி எடுக்காததால் கொஞ்சம் பருமனாகி ஆகிவிட்டது... மற்றபடி எனக்கு அது ஒன்றும் கஷ்டமாக இல்லை.. டேக் இட் ஈஸி பாலிசி தான்.

*இந்தியாவில் எத்தனை பார்மசி கல்லூரிகள் உள்ளன..?

இந்தியாவில் 3000 பார்மசி கல்லூரிகள் உள்ளன. 50 சதவிகிதம் கல்லூரிகள் கடந்த பத்து வருடத்தில் உருவாகியது. இந்த பத்து வருடத்தில் தான் பார்மசி வளர்ந்தது... பொறியியல் கல்லூரிகள் நலிவடைந்தவுடன் எழுந்து நின்றது தான் பார்மசி கல்வி. அவற்றை உயர்ந்து நிறுத்தவே நான் பல புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றேன். அதனால் தான் ஜெ.எஸ்.எஸ். தரம் மற்றும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

20201124210055147.jpg

* ஜெ.எஸ்.எஸ்-ன் அடுத்த கட்ட முன்னேற்றம் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்ட முயற்ச்சி உலக அளவில் தரமான, ஒரு சிறப்பான மருந்தை கண்டு பிடிப்பது தான்... அதை பற்றி தான் எங்களின் ஆராய்ச்சி பேராசிரியர்களிடம் கலந்தாலோசித்தேன். கட்டாயம் அடுத்த கட்ட பணிகள் துவங்கும்.

* பார்மசி படிப்பை தாங்கள் தேர்ந்தெடுக்க காரணம்?

அந்த காலத்தில் மெடிக்கல் படிக்க வேண்டும் என்று என் பெற்றோருக்கு ஆசை. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி நேரம். அப்பொழுது மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. பிடிஎஸ் கிடைத்தது. அதை விட சிறப்பானது பார்மசி என்று இதில் சேர்ந்தேன். மெட்ராஸ் மெடிக்கல் காலெஜ்ல இடம் கிடைத்து படித்தேன். ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லுரியில் சேர்ந்தவுடன் தான், குன்னூர் பஸ்சேர் இன்ஸ்ட்டிடில் முனைவர் பட்டம் பெற்றேன்” என்று கூறினார்.

மேலும் ‘பார்மசி கல்வியினை இந்தியாவில் மென்மேலும் உயர்த்திச் செல்வதே என் குறிக்கோள்’ என்று முடித்தார்.