தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்

20201125104603747.jpeg

சிறுவயதில் வைகுண்ட ஏகாதசிக்கு கண்முழித்து இருக்கிறீர்களா..?

ரேவதி நடராஜன், கிழக்கு முகப்பேர்.

20201125184819754.jpeg

எனக்கு ஒரு பத்து வயது வரை இதை பற்றி அவ்வளவாக தெரியாது. இரவெல்லாம் கண் விழித்து, பரமபதம், பல்லாங்குழி விளையாடுவோம். கோயிலில் கூட்டமாக இருக்கும் என்று என்னை வீட்டில் விட்டு விட்டு மற்றவர்கள் கோயில் சென்று வருவார்கள். மார்கழி மாதம் என்பதால் அம்மாவும், பாட்டியும் வாசலில் கோலம் போடுவார்கள். நானும் அம்மா கோலம் போடுவதை கவனிப்பேன். அதோடு கோவிலுக்கு செல்பவர்களையும் பார்ப்பேன். எனக்கு பத்து வயது இருக்கும் போது ஒரு முறை சொர்க்கவாசல் திறப்பதை காண ஆவல் எழுந்ததால், நானும் என் தோழிகளும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் செல்லலாம் என முடிவு செய்து, கோவிலில் திருப்பாவை ஸ்பீக்கரில் போடும் போது நாங்கள் நான்கு தோழிகளும் குளித்து விட்டு கிளம்பினோம். பெருமாள் கோவிலில் பார்த்தால் பெரும் கூட்டம். எங்களுடைய கற்பனை... சொர்க்கவாசல் என்பது சினிமாவில் வருவதுபோல தங்கத்தில் முழுவதும் கட்டி அமைக்கப்பட்டு, வைரம் வைடூரியம் என எல்லாம் ஜொலிஜொலித்து, ஆங்காங்கே தொங்கிக் கொண்டு இருக்கும் ஒரு உலகம் என்று நினைத்தோம். ஆனால், சுவாமி நந்தவன கதவை திறந்து கொண்டு வெளி வருவதுதான், சொர்க்கவாசல்திறப்பு என்று அப்போது எங்களுக்கு தெரியாது. சக்கையாக ஏமாந்தோம். சரி விடு. சாமியை பார்த்ததே போதும் என நினைத்து அவர் திருவடியை வணங்கி விட்டு, வீட்டுக்கு வந்தால் விடியற்காலையில் யாருக்கும் சொல்லாமல் எங்கே போனீர்கள் என விழுந்தது எனக்கு மட்டையடி..


ந. ஜெயானந்தன், ஆதம்பாக்கம்.

20201125184852154.jpeg

சிறுவயதில் பாதி ராத்திரி வரை கண் முழித்த அனுபவம் ஞாபகம் இருக்கிறது. தட்டை, முறுக்கு என சாப்பிட்டு கொண்டே தாயம், பரமபதம், சீட்டுக்கட்டு என சக நண்பர்களுடன் விளையாடுவோம். பின்பு, தூக்கம் வரும் நேரம் தூங்கி விடுவோம். வைகுண்ட ஏகாதசி என்பது பெண்களுக்கான பண்டிகை என்று என் அறியா வயதில் நம்பிக்கொண்டிருந்தேன். நாகப்பட்டினத்தில் வாழ்ந்ததால் சௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொர்க்கவாசல் திறக்கும் வைபவம் முடிந்த பின்னே, நாங்கள் சொர்க்கவாசல் வழியே போய் வருவோம். பின் ஆதம்பாக்கம் வந்த பின் என் தங்கையின் குடும்பத்துடன் ஜெயலட்சுமி தியேட்டரில் மாயா பஜார் இன்னும் ஒரு படம் பார்த்துவிட்டு 5:30 மணி விடியற்காலையில் வீடு திரும்பியது ஞாபகம் இருக்கிறது.

அதேபோல் ஒரு வருடம் திருப்பதியில் பெருமாள் சந்நிதியில் இரவு முழுவதும் கண் விழித்து சொர்க்கவாசலில் நுழைந்தது மறக்கவே முடியாத அளவிற்கு ஒரு பரவசமிகுந்த அனுபவம்.


அ. இளங்கோவன், சிதம்பரம்.

அந்த நாளில் எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை வைகுண்ட ஏகாதசி தான். அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

சிறுவயதில் இரவு கண்விழித்து விடிய விடிய விளையாட்டு. கோயிலில் காலை சென்று, அங்கேயும் பிரகாரங்களை சுற்றி சுற்றி நண்பர்களுடன் ஆட்டம். அங்கே தம்பரத்தாங்காய் மரம் இருக்கும். கோவைக்காய் சைசில் அதன் காய் இருக்கும். அதை மரம் ஏறி பறித்து கொஞ்சம் சாப்பிட்டு மீதியை ட்ரௌசர் பாக்கெட்டில் போட்டு கொள்வோம். மதியம் வீட்டிற்கு வந்து, ருசியான வகைவகையான தின்பண்டங்கள் சாப்பிட்டு விட்டு, பின் சவுக்கு தோப்பு சென்று கிட்டிபுள், கபடி, பம்பரம் விளையாடி விட்டு சாயாங்காலம் வீட்டுக்கு வந்து விடுவோம்.. ஏகாதசி அன்று இரவு சினிமா செல்வதற்காக இரண்டு வாரங்களாகவே வீட்டிலிருந்து 2 ரூபாய் தேத்தி வைத்திருப்போம். இரவு சாப்பிட்டு விட்டு சினிமா பார்க்க காட்டுமன்னார்குடியில் இருந்த வினாயகா டூரிங் டாக்கீஸ் (கீத்துக்கொட்டாய் தான்)க்கு சென்று விடுவோம். அங்கே தான் மணலை குவித்து இஷ்டத்துக்கு உட்காரலாம், படுத்துக் கொள்ளலாம். 30 பைசா ஒரு டிக்கெட் விலை. சம்பூர்ண இராமாயணம், குலேபகாவலி போன்ற பெரிய படங்கள் தான் திரையிடுவார்கள். விடியற்காலையில் 3:30-க்கு தான் முடியும். கண் அசதியோடு வீட்டிற்கு வந்து குளித்து விட்டு, கோயில் சென்று சொர்க்கவாசல் பார்த்து விட்டு, வடை பாயசம் , 21 காய்கறிகள் வைத்து சமையல் செய்து படைத்து விட்டு அம்மா தயாராக வைத்திருப்பதை சாப்பிடுவோம். சாப்பிட்டு விட்டு அப்படியே கண் அசந்தால் அதுவும் சொர்க்கமாகத் தான் இருந்தது.


உமாமகேஸ்வரி மகேந்திரன், குரோம்பேட்டை.

மாசம் மாசம் ஏகாதசி வரும். ஆனா மார்கழியில் வர இந்த ஏகாதசி ரொம்ப விசேஷம். சிறுவயதில் சீர்காழியில் இருந்த போது வைகுண்ட ஏகாதசி வரும் போதெல்லாம் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். அன்று இரவு முழுவதும் என் தோழிகள் கீதா, அமுதா, தேவி, லக்ஷ்மி எல்லோரும் சேர்ந்து தெருவில் ஓடிப் பிடிச்சு விளையாடுவோம். அப்புறம் பல்லாங்குழி, பரமபதம், தாயம் விளையாடுவோம். வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு பரமபதம் விளையாடுவது அவ்வளவு விஷேசம் என அம்மா சொல்வார்கள். விடிய கார்த்தால 3 மணி ஆனப்பின்ன, அவங்கவங்க வீட்டு வாசல்ல போட்டி போட்டுக்கிட்டு தெருவே அடைச்ச மாதிரி பெரிய கோலம் போடுவோம். அப்புறம் குளிச்சிட்டு, நேரா பெருமாள் கோயிலுக்கு போய் பெருமாளை தரிசனம் பண்ணி மனதார வேண்டிக்கிட்டு வீடு திரும்புவோம்.. வீட்டுல அன்னைக்கு முழுதும் தூங்க மாட்டோம். தாய விளையாட்டுகள் தொடரும். அவிச்ச பலகாரம் தான் அன்னைக்கு.. புட்டு, இடியாப்பம் அதுபோல அரிசி வெல்லம் வகைகள் தான் செய்வாங்க. மறுநாள் காலைல 21 காய்கறிகள் போட்டு சாம்பார் வைத்து, படைத்து சாப்பிடுவோம். சில சமயங்களில் அப்பா அம்மா சினிமாவுக்கு கூட்டி போவார்கள். சிறுவயது வைகுண்ட ஏகாதசிகள் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷ தருணங்கள்.


ஜி.சந்திரசேகர், மண்ணிவாக்கம்.

ஏகாதசி மகிமை
இன்றறிந்துபோல்
அன்றறிய வில்லை
கண் விழிப்பு கண்டது
நள்ளிரவு வரையும். அதுவும்
கடைசி ஆட்ட
சினிமா தந்த உபயமே.
மார்கழி குளிரில்
போர்வை தந்த
சூடதினிலே
சுகமாக உறக்கமே
சொர்க்கவாசல் அன்று.


வனஜா செல்வன், ஈரோடு.

சிறுவயதில் நாங்க லைன் வீடுகளில் குடி இருந்தோம். வரிசையாய் 7 வீடுகள் எல்லோருக்கும் பொதுவான ஒரே வாசல் நடை... அதில் ஒரு இஸ்லாமிய குடும்பமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி வந்து விட்டால் ஒரே கூத்து கும்மாளம் தான்.. அனைத்து பெண்களும், குழந்தைகளும் பொதுவான வாசல் நடையில் உட்கார்ந்து கொண்டு பரமபதம் தாயக்கட்டை போன்ற விளையாட்டுகள் விளையாடுவோம். அதில் இஸ்லாமிய குடும்பத்து பெண்களும் உற்சாகமாக கலந்து கொள்வார்கள்.. வயதான பாட்டிகள் இருவர் விஷ்ணு சஹஸ்ரநாமம், பஜகோவிந்தம் படிக்க... “பெரிய பாம்பு கடிச்சிருச்சு” “நான் வைகுண்டம் வந்துட்டேன்”, “மூவாறு, முத்தாயம், நாலு பன்னெண்டு” என ஓங்கி ஒலிக்கும் குரல்களோடு அந்த இரவு கழியும். விடியற்காலையில் அம்மாவோடு நாங்களும் குளித்து விட்டு அக்கம் பக்கத்து பெண்களோடு பெருமாள் கோயிலுக்கு சென்று வருவோம். உற்சாகமான தினங்கள் அவை.