“சார், ‘அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்’. நான் ‘வெட்டி-பசங்க’ அப்படீங்கிற ஒரு ‘யூ-டியூப் சேனல்ல’ இருந்து ஃபோன் பேசறேன்”, என்று சொன்னவரிடம், “உங்களுக்கும் என் வாழ்த்துக்கள், சொல்லுங்க என்ன விஷயம்?” என்றேன்.
“அடுத்தவனை வம்புக்கிழுப்போம்” என்ற சித்தாந்தத்தை கையிலெடுத்து, அந்த ‘வெட்டியான குறிக்கோளுக்காக’ எங்க சேனலை நடத்தறோம்.
“எங்க சேனலில், “தொழிலதிபர்” என்கிற நிகழ்ச்சிக்காக, வரும் 2021, ஜனவரி மாதம், ஒன்றாம் தேதியன்னிக்கு, உங்களோட பேட்டியை ஒளிபரப்பலாம்னு இருக்கோம். காரணம், நீங்க இந்த சிட்டியிலே, மூன்று பெரிய பிஸினெஸை ஆரம்பித்து, பல வருடங்களாக, வெற்றிகரமா நடத்தறீங்க.
அதனால, நீங்க-தொழிலதிபர் ஆவதற்கு, எப்படி ‘மோட்டிவேட்’ ஆனீங்க, என்பதை விலாவாரியா சொல்லணும்.
உங்களோட அனுபவங்களை எங்க சேனல் வியூவர்ஸ்க்கு ஷேர் பண்ணினீங்கன்னா, அதைக் கேட்டு, எத்தனையோ தொழிலதிபர்கள் உருவாகலாமில்லையா…?” என்றார்.
“இன்னிக்கு நான் பிசியா இருக்கேன். பேட்டி எடுக்க, நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு, என் வீட்டுக்கு வாங்களேன்” என்றேன்.
“ரொம்பத் தாங்ஸ் சார்” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தார், அந்த நிருபர்.
“என்னது…!!! தொழிலதிபராவதற்கு நான் மோட்டிவேட் ஆனேனா…???” என்று அதிர்ச்சியடைந்தபடியே, கண்களை மூடி காலக்குதிரையை பின்னோக்கி ஓட்டினேன்.
“மைதானத்திலே போய் விளையாடிட்டு, சட்டையையும் டிராயரையும், அழுக்காக்கிண்டு வந்திருக்கியே? யார் தோச்சுப் போடுவான்னு நினைச்சே? அடுத்த மாசம் பொறந்தா, உனக்கு வயசு பத்து, ஆரம்பிக்கப் போறது. உன்னை விடவும் நண்டு-சிண்டெல்லாம், அதுகளோட துணியை அதுகளே தோய்ச்சுக்கிறது.”
“சாப்பிடும்போது பஹாசூரனையும், தூக்கத்திலே கும்பகர்ணனையும் தோக்கடிக்கிற மாதிரி, மத்ததிலேயும் சாமர்த்தியம் வேணும். அட, உன்னோட துணியையாவது உனக்குத் தோய்க்க தெரிய வேண்டாமா? துப்புகெட்டதே!!!” என்று மானாவாரியாக, என் அம்மா என்னை திட்டித்தீர்த்தாள்.
அம்மா போட்ட தண்டோரா, எங்கள் தெருவில், மூன்றாம் வீட்டில் ‘சும்மா’ இருந்த, ‘அவளின்’ காதில் விழுந்திருக்கும் போலும்.
என் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு சோகத்தைப் பிழிந்து, மூஞ்சியில் தடவி வைத்திருந்த என்னை, அவளருகே வரும்படி, ஜாடை செய்து கூப்பிட்டாள், ‘அற்புதம்’ என்ற பெயருடைய அந்த ‘அத்தை’.
அருகே போன என்னிடம், “அம்மா, மத்தியானமா தூங்குமில்லே. அப்போ நீ இங்கே வா. துணி தோய்க்கிறது எப்படின்னு, எங்க வீட்டுக் கொல்லைப்புறத்திலே, ‘அத்தை’ நான் சொல்லித்தரேன், நீ அழுவாதே…” என்று ஆறுதலோடு ஐடியாவும் கொடுத்தாள்.
நானும் அம்மா தூங்கியதும் அற்புதத்தின் வீட்டுக்கு போயிருந்தேன். அவளோ, தன் மூன்று பிள்ளைகளின், சட்டை-டிராயர்களை, தண்ணீரில் ஊற வைத்திருந்தாள். என் கையில் ஒரு சவுக்காரக் கட்டியைக் கொடுத்து, அந்த துணிகளுக்கு, முதலில் சோப்பு போடச் சொன்னாள்.
அங்கே போட்டிருந்த கருங்கல்லில், எப்படி அடித்து தோய்ப்பது என்பதை டெமான்ஸ்டிரேஷன் செய்து காட்டினாள். நானும் அவள் பிள்ளைகளின் துணிகளை அடித்து தோய்த்து, அலசி, கொடியில் காயப்போட்டுவிட்டு, அம்மா தூங்கி எழும் முன், என் வீட்டுக்குள் வந்துவிட்டேன்.
மாலையில், என் வயதையொத்த அற்புதத்தின் மகன், எங்கள் வீட்டுக்கு, ஈரத்தோடு இருந்த, அவனது சட்டையை கையில் பிடித்தபடியே, என் அம்மாவிடம் கம்ப்ளெயின்ட் பண்ணிக் கொண்டிருந்தான்.
“மாமி உங்க பையன் கண்ணன், என்னோட சட்டையை தோய்க்கிறேன்னு, கல்லிலே அடிச்சு கிழிச்சுட்டான்” என்றதும், அம்மா என்னை தோய்த்தெடுக்க ஆயத்தமானாள்.
‘பாதகி’ அற்புதமோ, “நான் சொல்லச்சொல்லக் கேட்காம, கண்ணனே, எங்க ஊட்டுக்குள்ளே வந்து, எனக்கு நல்லாத் துணி தோய்க்கத் தெரியும்னு சொல்லி, எம்புள்ளைங்களோட துணியெல்லாத்தையும், அடிச்சு தோய்ச்சு கிழிச்சுட்டான் மீனா” என்று சொல்லி, எரியும் என் அம்மாவின் கோபத்தீயில், தன் புளுகெண்ணையை ஊத்திவிட்டுப் போனாள்.
“கண்டவா வீட்டுக்கெல்லாம் ‘டோபி’ வேலை பார்க்கிறாயா நாயே!!!. நான் சொல்லறேன் எழுதி வைச்சுக்கோ. நீ பெரிசாகி வண்ணாங்-கடைதான், வைப்பே. இது என் சாபம்” என ‘அன்று’ அட்ஷதை போட்டாள் அம்மா.
அம்மாவின் சாபம் பலித்ததால், ‘இன்று’ சிட்டியிலே, பெரிய “டிரை கிளீனிங் சென்டர்” வைத்து ஜமாய்க்கிறேன்.
“நேத்து முடிஞ்ச, நூறு ரூபாய், ஏலச்சீட்டுல, கசிறுப் பணம், ஐந்து ரூபாய் போக, இந்த மாத சீட்டுப்பணத்தை வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன். அம்மா இல்லையாடா கண்ணு’ என்றாள், எங்கள் பக்கத்து தெருவில், ஏலச்சீட்டு நடத்தும் அம்மாவின் தோழி.
“அம்மா இப்போதான் ரோட்டிலே இருக்கும் மளிகைக் கடைக்கு போயிருக்கா. பத்து நிமிஷத்திலே வந்திடுவேன்னு சொன்னா” என்றேன்.
“உள்ளே, ஷெல்ஃபில, அம்மா ஈருளி-சீப்பு வைச்சிருக்கும். சித்த எடுத்தாக் கண்ணு. அத்தைக்கு தலையெல்லாம் அரிக்குது’ என்று கெஞ்சினாள்.
உள்ளே போய் தேடிப்பார்த்தேன், அந்த பேன்-வாரும் சீப்பு கிடைக்கவில்லை. “அத்தே, சீப்பை அம்மா எங்கே வைச்சான்னு தெரியலை. நான் அம்மாவுக்கு பார்க்கிற மாதிரி உங்களுக்கும் பேன் பார்க்கவா” என்று சொன்னதும் சரி என்று தன் கூந்தலை விரித்து, தலை குனிந்தபடியே வாசல் திண்ணையில் உட்கார்ந்தாள்.
நானும் அவளருகே நின்றபடியே, கிட்டத்தட்ட பத்து பேன்களுக்கு மேல் எடுத்து அவள் கையில் கொடுத்தேன். சின்ன சின்னதாய் இருந்த ஈர்களை, என் கட்டை விரல் நகத்தில் வைத்து, நசுக்கி, டிக்… டிக்.. என்று வரும் சத்தத்தை கேட்டபடியே ஆனந்தத்திலிருந்தேன்.
“ஏண்டி… உனக்கு ‘பேன்-பார்த்துவிட’ என் புள்ளைதான் கிடைச்சானா?” என்று அம்மா கத்திக்கொண்டே வரவும், நான் ஆடிப்போனேன்.
“இந்தாடி…! இதானே முதல் மாச சீட்டு. கசிறு வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். ஏலச்சீட்டிலே இருந்தே நான் விலகிக்கிறேன். உன் சங்காத்தமே வேண்டாம்” என்று உறுமிய அம்மா, என்னைப் பார்த்தாள்.
“உனக்கு அறிவு வேண்டாம். நாளைக்கு, அவ வீட்டுக்குப் போய், அவ தலைக்கு எண்ணை வைச்சு, சீயக்காய் போட்டு, தலை குளிச்சுவிட்டு, சாம்பிராணியும் போட்டுட்டு வா. என் வயிறெரிஞ்சு சாபம் விடறேன். பெரியவனானதும், இந்த பொம்பளைங்களுக்கு தலைமுடி வாரிவிட்டுத்தான், நீ சோறு திம்பே” என, ‘அன்று’ அட்ஷதையைப் போட்டாள் அம்மா.
அம்மாவின் சாபம் பலித்ததால், ‘இன்று’ சிட்டியிலே, பெரிய “பியூட்டி பார்லர்” வைத்து, எக்கச்சக்கமாய் பணம் கொழிக்கிறேன்.
“கண்ணா சாப்பிட்டயா?” என்று என் மீது இருந்த ஆதங்கத்தில், ஒருநாள் மாலையில் கேட்டாள், எங்கள் தெருவின் கடைசி வீட்டில் குடியிருந்த, ரெஜியா அக்கா.
“ஊகூம்…’ என்று தலையை ஆட்டிவிட்டு, “டவுனுக்கு போயிட்டு அம்மா எட்டு மணி பஸ்ஸுக்குத்தான் வரேன்னு சொன்னா” என்றேன்.
“நீ என் வீட்டுக்கு வா கண்ணா. அக்கா உனக்கு தோசை சுட்டுத் தரேன்” என்று சொல்லி, எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த என்னை, அவர்களின் வீட்டுக்கு கூட்டிப்போனாள் ரெஜியா அக்கா.
தோசைக்கல்லில் மாவை ஊத்திய பின்னர், இட்லிக் கொப்பரையின் மூடியை, தோசைக்கல்லின் மீது கவிழ்த்து, தோசையை மூடி, மறு பக்கத்தை திருப்பிப் போடாமல், அப்படியே எடுத்து எனக்கு தட்டில் போட்டாள்.
நானோ, ”அக்கா…! இப்படி தோசை பண்ணக் கூடாது”, என்று சொல்லியபடியே, ஒரு கரண்டி மாவை எடுத்து கல்லில் ஊத்தி, பரத்திவிட்டு, பிறகு தோசைத்திருப்பியால், லாவகமாக தோசையை திருப்பிப் போட்டு அடுத்த பக்கத்தையும் வேகவைத்தேன்.
“அம்மா இப்படித்தான் தோசை வார்ப்பா” என்று ரெஜியா அக்காவுக்கு டெமோ பண்ணிக் கொண்டிருந்தேன்.
அவர்கள் வீட்டின் வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த, ரெஜியாவின் கணவர் ரஹீம் அண்ணனோ, “மாமி, கண்ணனையா தேடறீங்க? இங்கே, அடுப்படியிலே ரெஜியாவுக்கு எப்படி தோசை சுடறதுன்னு கத்துக் கொடுத்துக்கிட்டிருக்கான்” என்றதும், என் ஸப்த நாடியும் ஒடுங்கியது.
ரெஜியா அக்காவோ, “மாமி, உங்க கண்ணன் எம்புட்டு அழகா முட்டை-தோசை சுட்டு காட்டினான் தெரியுமா?” என்று சொல்லி அம்மாவின் எண்ணத்தில், கோபத்தீயை மூட்டினாள்.
“வாடா குழந்தே, ஆத்துக்குப் போலாம்” என்று சொல்லி, புன்னகையை உதடுகளில் தவழ விட்டுக்கொண்டு, “ரெஜியா வரேம்மா, ரஹீம் வரேம்பா” என்று சொல்லிவிட்டு, என் கையை இறுகப் பிடித்தாள் அம்மா.
“நான் வார்த்தது முட்டை-தோசை இல்லேம்மா, வெறும் மாவு தோசைதான். நாளைக்கு நீ எப்பிடி அடை வார்த்து தருவேன்னு அக்காவுக்கு சொல்லித்தரப் போறேன்” என்று சொல்லி, வாயால் கெட்டத் தவளையானேன்.
வீட்டுக்கு போனதும், “ஏண்டா சனியனே… ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் தோசையும், அடையும் வார்த்துக் கொடுக்க, நீ என்ன பரிசாரகனா?” என்று, தோசைத் திருப்பியால் என் முதுகில் “அடி-தோசை” போட்டு, திருப்பி புரட்டி எடுத்தாள் அம்மா.
“பக்கி-நாயே, இப்படி எல்லார் வீட்டுக்கும் போய், தோசை வார்த்துண்டிருந்தே, பெரியவனானதும் இதுவே உன் தொழிலாயிடும்” என, ‘அன்று’ எனக்கு, அட்ஷதை போட்டாள் அம்மா.
அம்மாவின் சாபம் பலித்ததால், ‘இன்று’ சிட்டியிலே, பெரிய “தோசாக்-கார்னர்” என்ற கடையை, வைத்து செல்வத்தில் மிதக்கிறேன்.
“எனக்கேற்பட்ட, இந்த கண்றாவி “மோட்டிவேஷனை” ஏன் ஊர்பூரா தம்பட்டம் அடிக்கணும்” என்று எண்ணினேன்.
என் அலைபேசியை எடுத்து, “ஹலோ… ‘வெட்டி-பசங்க’ங்கிற, யூ-டியூப் சேனல்தானே? நான்தான், “தொழிலதிபர்-கண்ணன்” பேசறேன்” என்றேன்.
எதிர் முனையிலிருந்து, “சார் வணக்கம், நாளைக்குதானே பேட்டி தரேன்னு, சொன்னீங்க? இன்னிக்கே, வந்து ரெக்கார்டிங் பண்ணிக்கட்டுமா” என்று கேட்டார் அந்த நிருபர்.
“நிமிஷத்துக்கு, பத்து தோசை சுட்டுத் தரமாதிரி, ஒரு புது மெஷின் வாங்க, இன்னிக்கு ராத்திரியே, ஜெர்மெனிக்குப் போறேன். திரும்பி வர நாலு நாளாகும். அதனால, என் பேட்டியை இப்போ, கேன்ஸல் பண்ணிடுங்க. ஸாரி…” என்று புளுகினேன்.
“அப்படியே, உங்க சேனல் வியூவர்ஸ்கு, ‘அம்மா சாபம் அப்படியே பலிக்கும்’ என்ற செய்தியை, என்னோட புத்தாண்டு-மெஸேஜா சொல்லிடுங்க” என்றேன்.
“ஓக்கே சார், இன்னொரு நாள், உங்க பேட்டியை டீட்டெயிலா எடுத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அந்த நிருபர், அவரது அலைபேசியின் இணைப்பைத் துண்டிக்காமல், பேட்டி கேன்ஸல் ஆன எரிச்சலில், இவனெல்லாம் “தொழிலதிபர்”, தூஊஊ…. என்று காறித்துப்பியது, என் காதில் ‘விழுந்தது’.
Leave a comment
Upload