உதயநிதி ஸ்டாலினை மிஸ்டர் ரீல் சந்திக்கப் போனபோது, அவர் கையில் ‘நமது அம்மா’ நாளேடு இருந்தது. “முரசொலி இருக்கவேண்டிய கையில் அதிமுகவின் நமது அம்மாவா?” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு உதயநிதி “நம்பள அவங்க எப்படி எல்லாம் கலாய்ச்சு இருக்காங்கனு பார்த்து, பதிலுக்கு கலாய்க்க வேண்டாமா.. அதுக்குதான்” என்றார்.
“நீங்கதான் ரொம்ப பேசறீங்க என்று டிஜிபி கிட்ட புகார் எல்லாம் அதிமுக தந்திருக்கே” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு கூலாக... “அரசியலில் இதெல்லாம் சகஜம்பா. அதுக்குத்தான் டி.ஆர். பாலு அண்ணன், ‘உதயநிதி ஸ்டாலின் மீது எடப்பாடி தாக்குதல்’ என்று பத்லுக்கு பதிலாக சேலத்தில் புகார் தந்துவிட்டார். புகாருக்கு புகார் சரி போயிந்தி, அவ்வளவுதான்” என்று கெத்தாக பதிலளித்தார்.
“ஆமா...ஆட்சி அமைத்ததும், உங்களுக்கு என்ன இலாகா..? பேசாம எடுத்த எடுப்பிலயே உள்ளாட்சித் துறை அமைச்சர் இலாகா கேட்டு வாங்குங்கள், அப்பத்தான் சுலபமா துணை முதல்வர் ஆகலாம்”
“நல்ல யோசனை தான் சொல்றே மி.ரீல்!. ஆனால், ‘முதல்வர் நாற்காலியில் நீ நேரடியாகவே உட்காருவதை யாராலும் தடுக்க முடியாது, உன் ராசின் அப்படி’ என்று அடிக்கடி என் மம்மி சொல்றாங்க. அவங்களுக்கு ஆன்மீக அரசியல் அத்துப்படி. வீட்டில் கூட என்னுடைய படுக்கை அறையில் பெரியார் படம் இருக்கு, ஆனா எங்க வீட்டம்மா பாருங்க கணபதி ரசிகர்!”
“கணபதி, என்ன சினிமா நடிகரா... ரசிகர் என்கிறீர்கள்”
உடனே பக்தியுடன் “நல்லவேளையா சொன்னீங்க மி.ரீல்! இல்லேன்னா இதுக்கு ஒரு மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள். என் மனைவி கணபதி பக்தை, அதனால் கணபதி படம் எதிரே இருக்கும், பெரியார் படம் அதுக்கு பின்னாடி இருக்கும்” என பொறுப்பாக உதயநிதி விளக்கம் கொடுத்தார்.
“அப்போ ஸ்டாலின் முதல்வர் கிடையாதா?”
“அது வேற ஒன்னுமில்ல. அப்பா பிரதமர் பதவி தான் வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக பிரசாந்த் கிஷோர் 10,000 கோடி திட்டம் ஒன்று தந்திருக்கிறார். அதற்கு மிஷன் டெல்லி என்று பெயர் கூட வைத்தாகிவிட்டது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு, அந்த திட்டம் தான். இதுக்காக ஜம்மு - காஷ்மீர் முதல் ஜலந்தர் வரை திமுக கிளைகள் துவக்க போகிறோம் மி.ரீல்!”
“என்னது இது ஏதோ மத்த மொழி மாநிலங்கள்ல சேனல் துவக்குற மாதிரி சொல்றீங்க... ஜம்மு - காஷ்மீர் என்றால் அங்கு பரூக் அப்துல்லா, மெகபூபா போன்ற தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஜலந்தர் என்றால் அகாலி தளம் சிரோன்மணி கட்சி, கோதுமை கட்சி என்று நிறைய இருக்கு. அங்கெல்லாம் போய் பிரசாந்த் கிஷோர் ஒன்னும் பண்ண முடியாது” என்று மிஸ்டர் ரீல் சொல்ல....
அதற்கு, உதயநிதி ஸ்டாலின் “உங்களுக்கு பிரசாந்த் கிஷோர் பிடிக்காது என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழர், அவர் வட இந்தியர். அந்த ஈகோ உங்களை இப்படி எல்லாம் பேச வைக்கிறது. எங்களுக்கு வடக்கு - வடகிழக்கு, தெற்கு - தென்மேற்கு எல்லோருமே திராவிடர்கள் தான். மொழியால் பிரிந்து இருக்கிறார்கள். எங்கள் கொள்கை... இது பெரியார் கொள்கை.. அண்ணா கொள்கை... ஆற்காடு வீராசாமி கொள்கை” என்று உதயநிதி சொல்ல...
உடனே மிஸ்டர் ரீல், அப்ப... “ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா" என்று கேட்க..? அதற்கு உதயநிதி.. “அவரை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கிவிட்டோம்” என்று சொல்ல... ஆச்சரியப்பட்ட மிஸ்டர் ரீல்.. “என்னது ராகுல்காந்தி, ஜனாதிபதி வேட்பாளரா” என்று கேட்க... அதற்கு உதயநிதி ஸ்டாலின்.. “பார்த்தீர்களா... உங்களுக்கே எப்படி ஷாக் நியூஸா இருக்கு? அதனாலதான் அவர் கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இது தெரியாம ராகுல் காந்தியை தலைவர் பதவி ஏற்க சொல்லி, கட்சியில் தொந்தரவு செய்கிறார்கள்” என்று காங்கிரஸ் உள்கட்சி விஷயங்களையெல்லாம் உதயநிதி ஸ்டாலின் விவரித்தார். அப்போதும் சமாதானமடையாத மிஸ்டர் ரீல் விடாமல், “பாரதிய ஜனதா ஆட்சி முடியவே இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறதே... அதுவரை ஸ்டாலின் டைம் பாஸ் செய்ய என்ன செய்யப்போகிறார்” என்று கேட்டார்
உடனே உதயநிதி ஸ்டாலின்.. “அதெல்லாம் ஒரு பிரச்சனையா.. குறிஞ்சி மலர் எனும் சீரியலில் அப்பா முன்பு நடித்தார் இல்லையா? அதன் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம், 2000 எபிசோட். அவருக்கு ஜோடியா நடிக்க கீர்த்தி சுரேஷ் கிட்ட கூட பேசியாச்சு. எனவே தலைவருக்கு டைம் பாஸ் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை, நான் புறப்படுகிறேன்... சபாநாயகர் தொகுதிக்கு பிரச்சாரம் செய்யப் போகணும்” என்று உதயநிதி ஸ்டாலின் எழுந்துகொள்ள...
“சபாநாயகர் தொகுதியா... யார் சபாநாயகர்..” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு உதயநிதி, “இதுகூட தெரியாதா நம்ம பொதுச்செயலாளர் துரைமுருகன் தான், வருங்கால சபாநாயகர். அவரு...இந்த எடப்பாடி, ஓபிஎஸ், ஜெயக்குமார் இவர்களெல்லாம் சட்ட சபையில் பேசும்போது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு கட்சி அவருக்கு ஓகே சொல்லிவிட்டது. எனவே அண்ணன்தான் வருங்கால சபாநாயகர்” என்று உதயநிதி ஸ்டாலின் விடை பெற்று சென்றார்.
ஹி..ஹி...முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் துரைமுருகன் என்று சட்டசபையை கற்பனை பண்ணிப் பார்த்த போது... கொஞ்சம் சிரிப்பாய் தான் இருந்தது மி.ரீலுக்கு!
அடுத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பார்க்கப் போனார் மி.ரீல்! அவர் முன் அமித்ஷா படம் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த மிஸ்டர் ரீல்... “மம்தா ஜி, இவர்தான் உங்களுடைய ஒரிஜினல் வில்லன்னு எல்லாருக்குமே த்ரியும். அப்புறமெப்படி இவர் படத்தை பெருசா மாட்டி இருக்கீங்க!” என்று கேட்டார்.
“எல்லாம் ஒரு காரணமாதான். அவரைப் பார்க்கப் பார்க்கத்தான் எனக்கு அதிக கோபம் வரும், ஆவேசம் வரும். அப்போதுதான் நான் ஜெயிப்பேன்” என்று மம்தா சொல்ல... உடனே மிஸ்டர் ரீல்... “ஆனால், உங்களைப் பற்றி அமித்ஷா வேறு மாதிரி அல்லவா சொல்கிறார்... நீங்க ராஜீவ் காந்திக்கு தராத டார்ச்சாரா... உங்களுக்கு வந்தா ரத்தம்... மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா” என்று கேட்கிறாரே..? என்று மிஸ்டர் ரீல் சொல்ல... அதற்கு மம்தா ஆவேசமாக பதிலுரைத்தார்.
“சட்டசபைத் தேர்தலில் பார்த்து விடுகிறேன் ஒரு கை!. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்களையே நான் ஓட விட்டவள். இவர்களெல்லாம் எனக்கு எம்மாத்திரம்” என்று சொல்ல... உடனே மிஸ்டர் ரீல் “பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் நட்டா காரை அப்பளம் மாதிரி நொறுக்கியது உங்க ஏற்பாடுதான் என்று ஆளுநர் கடிதம் எழுதி இருக்கிறாரே” என்று கேட்ட போது... மம்தா பானர்ஜி, “அத்தனையும் பொய். சின்ன பசங்க ரோடு ஓரமா கிரிக்கெட் ஆடிக்கிட்டு இருந்தாங்க... அப்போ பந்து பட்டு கார் டேமேஜ் ஆயிடுச்சு, இதுதான் உண்மை” என்று சொல்ல... உடனே மிஸ்டர் ரீல்... “மேடம், அந்தக் கார் டேமேஜ் போட்டோவை பேப்பரில் நான் பார்த்தேன். அது கிரிக்கெட் பந்து அடித்து டேமேஜ் ஆனது போல் தெரியவில்லையே” என்று கேட்க... மம்தா, “எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. அங்க கிரிக்கெட் ஆடியது யார் என்று விசாரித்தேன்... பௌலிங் போட்டது சவுரவ் கங்குலியின் சித்தி பையன், ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது சவுரவ் கங்குலியின் சித்தப்பா பையன். பால் பட்டு இப்படி கார் டேமேஜ் ஆகுமா என்று அவர்களிடமே கேட்டேன்... அதற்கு அவர்கள் ‘ தீதி நீங்க உங்க காரை அந்தப் பக்கம் ஓட்டி வாங்க.. அடிச்சிக் காண்பிக்கிறோம்’ என்றார்கள். அப்போ நான் என்னதான் செய்வேன் சொல்லுங்க” என்றார் அப்பாவியாக.
மிஸ்டர் ரீல்... “சரி. அதை விடுவோம். நீங்க குடும்ப அரசியல் நடத்துறீங்க என்று பாரதிய ஜனதா சொல்கிறதே” என்று கேட்க... அதற்கு மம்தா பானர்ஜி, “இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வரும்னு தான், நான் குடும்ப அட்டை கூட வைத்துக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி குடும்ப அரசியல் செய்ய முடியும்? என்னைப் பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ் தான் குடும்பம். தொண்டர்கள் எல்லாம் சித்தப்பா, பெரியப்பா, அம்மா, அம்மம்மா, அப்பப்பா ஆகிவிடுகிறார்கள்” என்று மம்தா உணர்ச்சிவசப்பட்டார்
மிஸ்டர் ரீல் உடனே... "ஆனா, உங்க கட்சியின் முக்கிய தலைவர்களை எல்லாம் அமித்ஷா பிடித்துக் கொண்டு போய் விடுகிறாரே” என்று கேட்க... அதற்கு மம்தா “அவருக்கு, பெரிய பிள்ளை பிடிக்கிறவன்னு நினைப்பு... அதுக்குத்தான் அவர் கட்சியோட எம்பி மனைவிய நான் தூக்கிட்டேன். அந்த மேடம் டைவர்ஸ் வரை போய்விட்டார்கள். இது தவிர, இன்னொரு மாஸ்டர் பிளானும் இருக்கு. அது நாளைக்கு பேப்பர்ல வரும். அதைப் பார்த்தா அமித்ஷா ரெஸ்ட் ரூம்க்கு ஓடிப் போயிடுவாரு” என்று சிரித்தபடியே மேற்குவங்க முதல்வர் சொல்ல...
“ரெஸ்ட் ரூம் போற அளவுக்கு என்ன செய்யப் போறீங்க... அமித்ஷா சாப்பிடுறதிலே ஏதாவது கலந்துட்டிங்களா?”
“சீச்சீ.. அதெல்லாம் இல்ல.. வேளாண் மசோதா எதிர்ப்பு விவசாயிகள், இப்போது நாலாவதா ஒரு நிபந்தனையை பேச்சுவார்த்தைக்கு சேர்த்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில், வார்டு மெம்பர் தேர்தலில் கூட பாரதிய ஜனதா கட்சி நிற்கக்கூடாது. மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவர்கள், கட்சியை கலைத்துவிட்டு, தேர்தலில் வார்டு மெம்பரா கூட நிற்பதற்கு ஆசைப்படக்கூடாது என்ற நிபந்தனையை சேர்த்திருக்கிறார்கள்”
மிஸ்டர் ரீல் ஆச்சரியத்துடன்.. “பஞ்சாப் விவசாயிகள் எப்படி உங்கள் ஆதரவாளராக மாறினார்கள்..?”
மம்தா பானர்ஜி சிரித்தபடியே... “எங்கள் கட்சிக்காரர்களை அமித்ஷா பிடித்துப் போய்விடப் போறார் என அறிந்த நான் விவசாயிகள் போராட்டத்தில் என் ஆட்களை சிங் வேஷத்தில் கலந்து கொள்ளச் சொன்னேன். இது தவிர ஆறு டன் ஸ்பெஷல் ரசகுல்லா வேறு அனுப்பினேன், அதுதான் இப்போது வேலை செய்கிறது. இப்போ நீ வருவதற்கு இரண்டு நிமிடம் முன்பு அமித்ஷாவை மோடி அழைத்து, டோஸ் மேல் டோஸ் விட்டாராம். ‘முதல்ல இந்தப் பிள்ளை பிடிக்கிற வேலையை நிறுத்துங்க. உங்களுக்கு ரசகுல்லா வேணும்னா நான் ஏற்பாடு செய்கிறேன், இனிமே கல்கத்தா பக்கம் போற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க’ என்று தீர்மானமாகவே சொல்லிவிட்டாராம். தேசிய தலைவர் நட்டா, அவருடைய காரை காண்பித்து ‘அமித்ஷா மேல் எவ்வளவு கோபம் இருந்தால் என் கார் இந்த அளவுக்கு அடி வாங்கி இருக்கும்?’ என்றெல்லாம் பேசினாராம். அமித் ஷாவும் நான் சென்னைக்கு போகிறேன் என்று கிளம்பி விட்டாராம்” என்று மேடம் விழி விரித்து அடுக்கிக் கொண்டே போக...
‘அரசியலில் பெரிய ஜகஜ்ஜால கில்லாடிகள், லேடிஸ் தான் போல இருக்கு’ என்று யோசித்தபடியே எழுந்தார் மிஸ்டர் ரீல்.
Leave a comment
Upload