
சர்மாஜி ஒருநாள் தன் மனைவியுடன் தொலைக்கட்சியில் முதல்வன் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.
படம் முடிந்தபின் மனைவியிடம், “ஆகா... ஒரு நாள் முதல்வர் போல நான் ஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தால் எப்படி இருக்கும்?”
“கண்றாவியா இருக்கும். இது என்ன உங்களோட கொரோனா வைத்திய சாலை ஆராய்ச்சியா? அதெல்லாம் வீட்டோட முடிஞ்சு போச்சு. நீங்க வீட்ட விட்டு வெளியே போய், போலீஸ் வேலையில் அது போல ஏதாவது எக்கு தப்பா ஆராய்ச்சி, அது இது என்று ஏதாவது செய்தால் என்ன ஆவது? உங்களுக்கு என்ன இப்பதான் இருபது வயது என்று நினைப்போ? உங்களுக்கு அறுபது வயது ஆகிறது. இன்ஸ்பெக்டர் ஆக நீங்க இருந்தா திருடர்கள் பாடு கொண்ட்டாம் தான்!”
“என்ன அபிதா அப்படி சொல்லிட்டே.. நான் திருடர்களை ஓடிப்போய் பிடிக்க வேண்டாம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே பிடித்து விடுவேன் தெரியுமா?”
“அது என்ன களிமண்ணை வைத்து பிள்ளையார் பிடிப்பதா... உட்கார்ந்த இடத்திலே இருந்து பிடிப்பதற்கு? நீங்கள் எழுந்து நடந்து போவதற்குள் திருடன் ஒடி விடுவான். அப்புறம் எங்கே திருடனை பிடிப்பது?”
“என்ன அபிதா? திருடனை பிடிப்பது மட்டும்தான் போலீஸ் வேலையா. இன்னும் எவ்வளோவோ இருக்கே..”
“உங்களுக்கு உண்மையாக அப்படி ஒரு ஆசை இருந்தால் சொல்லுங்கள். என்னுடைய ஓன்று விட்ட அண்ணனுடைய பையன் போலீசில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறான். அவனிடம் சொல்லி உங்களுக்கு ஒருநாள் போலீஸ் வேலை வாங்கி தருகிறேன்!”
“உண்மையாகவா அபிதா..என் ஸ்வீட் அபிதா.. எப்படியாவது எனக்கு போலிஸ் வேலை ஒருநாள் மட்டும் வாங்கி கொடேன்.”
“சரி. அப்படி ஒருநாள் இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தால், நீங்க என்ன செய்வீங்க?”
“அதெல்லாம் சஸ்பென்ஸ்.. இன்ஸ்பெக்டர் ஆனதும் ஐயாவோட வேலையை பார்..”
“அது என்ன சஸ்பென்சோ! ஏதாவது செய்து உங்களை போலீஸ் பிடிக்காமல் இருந்தால் சரி..”
“அது எப்படி போலீஸ் என்னை பிடிக்கும். நான்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயிற்றே!”
“எதற்கும் எச்சரிக்கையாக இருங்க...”
அபிதா தன்னுடைய உறவினர் மூலம் சர்மாஜியின் ஒரு நாள் இன்ஸ்பெக்டர் வேலைக்கு எப்படியோ ஏற்பாடு செய்துவிட்டாள்.
சர்மாஜி மிகவும் உற்சாகமாக வேலைக்கு கிளம்பி விட்டார். உடனே சலூனுக்கு சென்று தனது தலை முடியை போலிஸ் தலை முடி போல வெட்டிக்கொண்டார். தலைமுடிக்கும் மீசைக்கும் கருப்பு சாயம் ஏற்றிக்கொண்டார்.
போலிஸ் ஸ்டேஷனில் அவருக்கு தொள தொள என்று ஒரு இன்ஸ்பெக்டர் உடை வழங்கப்பட்டது. அவருடன் அவருக்கு துணையாகவும் வழி காட்டவும் ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் அவருடன் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இருக்கவேண்டும் என்று ஏற்பாடு ஆகி இருந்தது. மாலை ஆறு மணியுடன் சர்மாஜி இன்ஸ்பெக்டர் வேலை முடிவு பெறும் என்று சொல்லி விட்டார்கள்.
சர்மாஜிக்கு கிரைம் நாவல்கள் படிப்பது மிகவும் பிடிக்கும். அவர் தினமும் கடைக்குச் சென்று ஒரு கிரைம் நாவலாவது வாங்கி வந்து படித்துவிடுவார். ராஜேஷ்குமார் நாவல்கள் ஓன்று விடாமல் அத்தனையும் படித்திருக்கிறார்.
அவருக்கு கதையில் வரும் துப்பறியும் நிபுணர் போல தாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று ஆசை. அப்படி ஆசைப்பட்டுதான் அவர் முன்பு ஆவிகளை வைத்து துப்பறியும் வேலையினை ஆரம்பித்தார். அதில் ஒன்றும் தேறவில்லை பாவம்!. சரி! தற்காலிக போலிஸ் வேலைக்கு வரும்வோம்....
காலை பத்து மணிக்கு தனக்கு கொடுக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் உடை அணிந்து, உடனே ஒரு செல்பி எடுத்து அதை அவர் மனைவிக்கு அனுப்பி விட்டார். அன்று முழுவதும் அவர் செய்யும் வேலைகளை ஒவ்வொரு முறையும் படம் பிடித்து அவர் மனைவிக்கு அனுப்பவேண்டும் என்று அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒப்பந்தம் ஆகி இருந்தது.
அரை மணி நேரம் போலிஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் பந்தாவுடன் அமர்ந்தது இருந்தார். அவருக்கு உதவிக்கு இருந்த போலிஸ் கான்ஸ்டபிள் கோபால் , “என்ன சர்மாஜி..நீங்க இன்ஸ்பெக்டர். இப்படி இங்கே உட்கார்ந்து இருந்தால் எப்படி ஊரில் நடக்கும் கிரைம் எல்லாம் கண்டுபிடிப்பது? வாங்க ஒரு ரவுண்டு வெளியே போகலாம்..” என்று அழைத்தவுடன் அதற்காகவே காத்து இருந்தது போல உடனே தனது துப்பாக்கி சகிதம் கிளம்பிவிட்டார். அவருக்கு கொடுத்திருந்தது ஒரு பொம்மை துப்பாக்கி.
சர்மாஜியும் கோபாலும் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய பூங்காவுக்கு சென்றனர். கோபாலுக்கு போலி இன்ஸ்பெக்டருக்கு உதவி செய்யும் வேலை பிடிக்கவில்லை. அவருக்கு வீட்டில் நிறைய வேலை இருந்தது. அதனால் அவர் சர்மஜியிடம், “நீங்க இந்த பூங்காவில் இருங்க. வேற எங்கேயும் போக வேண்டாம். இங்க ஏதாவது கிரைம் நடந்தால் உடனே எனக்கு போன் செய்யணும். நான் வீடு வரை போய் விட்டு வருகிறேன். மாலை ஆறுமணி வரை நீங்க இங்கேயேதான் இருக்கணும்” என்று சொல்லிவிட்டு, தனது போன் நம்பர் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
சர்மாஜிக்கும் தனது இன்ஸ்பெக்டர் வேலைக்கு தடையாக ஒருவர் இருப்பது பிடிக்கவில்லை. கோபால் அங்கிருந்து போனதும் தனது இன்ஸ்பெக்டர் வேலையை ஆரம்பித்தார். பூங்காவை சுற்றி வந்தார். ஒரு இடத்தில் நான்கு பேர் மரத்தடியில் அமர்ந்து பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருன்தனர். அதைப் பார்த்ததும் சர்மாஜிக்கு தான் ஒரு இன்ஸ்பெக்டர் என்பது மறந்துவிட்டது. அவருக்கு சீட்டு விளையாடுவது மிகவும் பிடிக்கும். அவர்களிடம் சென்று, “ என்ன நானும் வரட்டுமா? எனக்கும் ஒரு கை போடுங்க” என்று அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் அவர்களுடன் சீட்டு விளையாட அமர்ந்துவிட்டார்.
சீட்டு விளயாடியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. தங்களை போலீஸ் பிடிக்கமால், தங்களுடன் விளையாடுவதா? இதில் எதோ சூது இருக்கிறது என்று பயந்தார்கள். ஆனால் சர்மாஜியின் உருவத்தையும், அவரது தொள தொள உடையும் பார்த்து, இது எதோ நாடகத்துக்கு வேஷம் போடும் ஆள் என்று நினைத்து அவரையும் சீட்டு ஆட்டத்துக்கு சேர்த்துக் கொண்டனர். சர்மாஜி உடனே அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அதை தனது மனைவிக்கு அனுப்பிவிட்டார்.
மதியம் மணி இரண்டு ஆகிவிட்டது. சர்மாஜிக்கு பசிக்க ஆரம்பித்தது. “எங்கு போவது? எப்படி சாப்பிடுவது. கையில் பணம் எதுவும் இல்லை.. கோபால் எங்கும் போகக்கூடாது என்று கூறிவிட்டான். அதனால் என்ன.? நாம் போய் சாப்பிட்டுவிட்டு திரும்ப இங்கு வந்துவிடவேண்டியதுதான்.” என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
சீட்டு விளயாட்டை முடித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பொழுது அவருடன் சீட்டு விளையாடிக்கொண்டிருந்த கபாலி , “என்ன சார். என்ன தேடுறீங்க?” என்று கேட்டான்.
“எனக்கு பசி. நல்ல ஓட்டலுக்கு போகணும்.. அதுதான் யோசிக்கிறேன்”
கபாலிக்கு குஷி ஆகிவிட்டது. “இந்த ஆள் போலீஸ் உடையில் இன்ஸ்பெக்டர் போல இருக்கிறான். இவனைக் கூட்டிக்கிட்டு ஒரு பெரிய ஓட்டலுக்கு போனா ஓசி சாப்பாடு கிடைக்கும்” என்று முடிவு செய்து, “அதுக்கு என்னா சார் யோசனை. வா சார் போகலாம். நான் சூப்பர் ஓட்டலுக்கு கூட்டிபோறேன்” என்று சொல்லி சர்மாஜியை ஒரு பெரிய ஓட்டலுக்கு கூட்டி சென்றான்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவதைப் பார்த்ததும், ஓட்டல் நிர்வாகிக்கு ஒன்றும் புரியவில்லை. “இது என்ன ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் அவருடன் ஒரு குற்றவாளியும்.. ஒருவேளை இந்த குற்றவாளிக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க இங்கு வருகிறார்களோ?” என்று யோசித்தார். எப்படி இருந்தால் என்ன என்று, ஓட்டல் நிர்வாகி அவரையும், அவருடன் கூட வந்த கபாலியையும் முதல் மாடியில் இருந்த ஒரு விஐபி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களுக்கு சிறப்பான உணவு அளிக்கப்பட்டது. உணவு உண்டு முடியும் போது இரண்டு அழகிய பெண்கள் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் கபாலிக்கு புரிந்தது. ஆனால் சர்மாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அவர்களுடன் பேசிக்கொண்டும் செல்பி எடுத்துக்கொண்டும் சந்தோஷமாக இருந்தார். நேரமானதால், சர்மாஜி உடனே மீண்டும் பார்க்குக்கு போகவேண்டும் என்று கூறினார்.
மாலை மணி ஆறு ஆனதும், சர்மாஜியை பூங்காவிலிருந்து கான்ஸ்டபிள் கோபால் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அத்துடன் சர்மாஜியின் ஒரு நாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலை முடிந்தது. சர்மாஜி தனது பழைய உடைகளை அணிந்து வீட்டுக்கு கிளம்பும் முன்பாக, தான் எடுத்த செல்பி போட்டோக்களை அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் காட்டினார்.
இன்ஸ்பெக்டருக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம்... சர்மாஜிக்கு இரண்டு நாட்கள் சென்றபின் தெரிந்தது. ஆம். சர்மாஜியின் உதவியால் வெகுநாட்களாக தேடப்பட்டு வந்த அந்த ஏரியா ரவுடி கபாலியை போலிஸார் கைது செய்தனர். அது மட்டும் இல்லாமல்... அவர் மதியம் உணவு உண்ட ஓட்டல், விபச்சாரம் மற்றும் போதை மருந்து காரணங்களுக்காக ஏற்கனவே மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தவை. அது மீண்டும் செயல்பாட்டில் இருப்பதையும் சர்மாஜியே தன் புக்டைப்படங்களால் கண்டு பிடித்துக் கொடுத்துள்ளார் .
சர்மாஜிக்கு பாராட்டும், பரிசும் முதல் முறையாக கிடைத்தது. அவர் மனைவி அபிதா முதல் முறையாக அவரை பாராட்டினார்.

Leave a comment
Upload