தொடர்கள்
பொது
ச்சும்மா அதிருதுல்ல.. - தில்லைக்கரசி சம்பத்
20201125104512624.jpeg

ஃப்னிக்ஸ் மால்...

“ஏய் ஸ்ருதி.. எவ்வளவு நேரம் நாங்க வெயிட் பண்றோம் தெரியுமா? 3 தடவ இந்த மால்ல சுத்தியாச்சு...” என ஸ்ருதியை கண்டதும் கை காமித்தபடி எஸ்தர் கத்தினாள்.

ஸ்ருதி: பாட்டிக்கு முதுகு வலி.. டாக்டர்கிட்ட காமிச்சிட்டு திரும்ப வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு வர லேட் ஆயிடுச்சு.. சாரி guys..

ரம்யா: சரி, வா.. டயர்டா இருக்க.. food courtல ஏதாவது சாப்பிடலாம்..

எஸ்தர்: ஏய் ஸ்ருதி.. என்ன இன்னும் உம்முனு இருக்க?

ஸ்ருதி: ப்ச்... வயசாக ஆக எல்லாருக்கும் முதுகு வலி வந்துடுது... முக்கியமா இந்த மூட்டு வலி.. எங்கம்மா கூட மூட்டு வலின்னே சொல்லிக்கிட்டு இருக்காங்க... இதென்ன வயசானாலே எல்லார்க்கும் வர வியாதியா?

ரம்யா: இது வயசானா வர்ற கோளாறுன்னு சொல்லலாம்.. ஆனா இயற்கையிலேயே நம்ம உடல் பாகங்களில் சிலது சரியான முறையில அமையல.. அதாவது நாம பரிணாம வளர்ச்சி அடைஞ்சு, கொஞ்ச கொஞ்சமா முழு மனிதர்களா மாறிக்கிட்டு வரப்ப... இந்த பாகங்கள் கோளாறாகவே அமைஞ்சு போச்சு.. அதுதான் இந்த முதுகுவலி, மூட்டு வலி வர்றதுக்கும் காரணம்...

ஹாசினி: அட.. சுவாரசியமா இருக்கே.. மேல சொல்லு..

ரம்யா: An unsound spine. அதாவது தெளிவற்ற முறையில் இருக்கும் முதுகெலும்பு.. இதன் முழு வடிவே கொஞ்சம் குழப்பமா கட்டமைக்கப்பட்டதுன்னே சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு முதுகெலும்பை வச்சிக்கிட்டு மனுஷனுங்க எப்படி நடக்கிறாங்க என்பதே ஒரு ஆச்சரியம் தான்ன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

நம்ம மூதாதையர்கள் நாலு கால்ல... அதான் ரெண்டு கை, ரெண்டு காலால நடந்தாங்க.. அப்ப.. முதுகெலும்பு ஒரு ஆர்ச் அல்லது ஒரு வில்லு போல வளைந்து இருந்தது, நம்ம உறுப்புகளோட எடையை தாங்கிற மாதிரி அமைந்திருந்தது. ஆனா, நாம நிமிர்ந்து இரண்டு காலால் நடக்க ஆரம்பிச்ச பின்னே, நம்ம சிஸ்டம் முழுக்க நேரா 90 டிகிரில நிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதனாலே வேறுவழியில்லாம நம்ம முதுகெலும்பும் ஒரு தூண் போல இப்ப நிக்குது.

நாய்க்கு எல்லாம் பாத்தீனா வில் மாதிரி அழகா வளைஞ்சு இருக்கும். நமக்கு அப்படியில்லே. நாம (இருமுனை செயல்படுவது - bipedalism) அதாவது இரண்டு காலால் நடப்பது போன்ற முறைகளாலே முதுகெலும்பின் கீழ்பகுதி முன்னோக்கி வளைந்து இருக்கும். இப்ப தலையை பாலன்ஸ் பண்ணி நிறுத்துவதற்காக, முதுகெலும்பின் மேல் பகுதி நேர்எதிரா வளைஞ்சு இருக்கு. இதனால கீழ்பகுதி முதுகெலும்புக்கு எக்கச்சக்க அழுத்தம் உண்டாகுறதால, 80% பேர் கீழ்முதுகெலும்பு (back pain) வலியோட திரியுறாங்க.

ஸ்ருதி: இத சரி பண்ண முடியுமா?

ஹாசினி: ஒன்னியும் பண்ண முடியாது.. வேணா பழைய மாதிரி நாலுகாலால நடந்தா வேணா வலி இல்லாம இருக்கும்.

ரம்யா: அடுத்து inflexible knee நம்ம கால் மூட்டு. ஆனா சுலபமா மடக்கி நீட்டிக் கொள்ள நடக்க வழியில்லாத ரொம்ப சுமாரா வடிவமைக்கப்பட்ட ஒரு பாகம்.. சொல்லப்போனா ரொம்ப சிக்கலான ஜாயிண்ட் இது. முழங்காலுக்கும், கணுக் காலுக்கும் இடையில் உள்ள நீண்ட எலும்பு ஒரு பக்கம்... இன்னொரு பக்கம் தொடை எலும்பு.. இந்த ரெண்டுக்கும் நடுவுல மாட்டிக்கிட்ட ரெண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி நம்ம கால் மூட்டு படாத பாடு படும். இதுல துயரம் என்னன்னா... நம்ம மூட்டு முன்னாடி பின்னாடின்னு ரெண்டு திசையில தான் சுழன்று வேலை செய்யும். அதனால் தான் Rugby கால்பந்தாட்டம் தவிர மற்ற எல்லா விளையாட்டிலும் முட்டியை பக்கவாட்டுல இடிச்சு உதைக்கிறது, விதிமீறல்ன்னு உருவாக்கி வச்சிருக்காங்க.

ஹாசினி: அதுக்கு பரிகாரம்..?

எஸ்தர்: இரு... பக்கத்துல யாராவது ஜோசியக்காரர்கிட்ட போய் கேட்போம்..!

ஹாசினி: ஹீஹீ..

ரம்யா: பரிகாரமாவது ஒன்னாவது..!!?

மூட்டு கீலுக்கு பதிலா தோள்கள் இடுப்பில் இருக்கிற மாதிரி பந்து குவி போன்று கால் மூட்டுகள் இருந்திருந்தா இந்த பிரச்சினையே இருந்திருக்காது ..

ஹாசினி: அப்ப எதிர்காலத்தில் ஃபுட்பால் விளையாடுவாங்கன்னு யாருக்கும் தெரியாதுல்ல..

அதுவும் ரைட்டு தான்.. சரி அடுத்தது..!?

ரம்யா: பெண்களுக்கு ரொம்ப குறுகலாக படைக்கப்பட்ட இடுப்பெலும்பு (pelvis bone).. லூசுத்தனமா ரொம்ப குறுகலா இருக்கிற இடுப்பெலும்பால ஒவ்வொரு முறை பிரசவத்தின் போதும், அந்த எலும்பை நகர்த்திக் கொண்டு குழந்தை வெளியே வருவதால், பெண்கள் வலியால செத்து பிழைக்கிறாங்க... இப்ப இருக்கிறதை விட பெல்விக் எலும்பு கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம்.

ஹாசினி: பரிணாம வளர்ச்சியில் வருங்காலத்தில் பெண்களுக்கு இடுப்பெலும்பு பெரிதாக உருவாக வாய்ப்பு இருக்கா?

ரம்யா: அதுக்கு வாய்ப்பே இல்ல ராசா வாய்ப்பே இல்ல.. கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளா இது இந்த சைசில் தான் இருக்கு.. ஆனா இன்னும் சில நூறு ஆண்டுகளில் இந்த வலியிலிருந்து தப்பிக்கிற மாதிரி ஒரு தீர்வு வந்துடும்..

எஸ்தர்: எப்படிடீ ?

ரம்யா: அது ஒன்னுமில்ல...

ஹோட்டல்ல ஆர்டர் கொடுக்குற மாதிரி ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டை இரண்டையும் நாம க்ளினிக்கில் கொடுத்துட்டு வந்தா போதும்... 9 மாசம் கழிச்சு சுட சுட ஒரு அழகான கொழுக்மொழுக் குழந்தையை வீட்டுக்கு தூக்கிட்டு வந்துடலாம்.

எஸ்தர்: அடிப்பாவி..!

ரம்யா: ஹீஹீஹீ.. சரி.. அடுத்ததை பார்ப்போம்.

இந்த கடவாய் பல்.. (molar teeth) உண்மையில் நமக்கு வாயின் பின்பக்கத்தில் மேல் கீழ் தாடைகளில் மூன்று கடைவாய் பற்கள் இருந்திருக்க வேண்டும். ஆனா பரிணாம வளர்ச்சியில் நம் மூளை பெரிதாக விரிவடைந்து வந்ததால, நம் தாடை எலும்பு அகலமாகவும் அதே சமயம் நீளம் குறைந்து போனதால், மூன்றாவது கடவாய் பல் முளைக்க முடியாதபடி ஆகி போச்சு. இந்த பற்கள், மனித இனம் இறைச்சி மற்றும் உணவு வகைகளை பச்சையா நல்லா மென்று சாப்பிட முதலில் உபயோகப்பட்டிருக்கு.. பிற்பாடு சமைக்கும் வழக்கம் வந்ததால், இந்த பற்களின் தேவையும் வேண்டாம் என்று மாறி இருக்கிறது.

ஹாசினி: அதான் முளைக்க இடமே இல்லாததால் கடைவாய் பல் முளைக்கிறப்ப நமக்கு செமயா வலிக்குது போல..

எஸ்தர்: அதுக்கு தான் இப்ப ரொம்ப வலிச்சா கடைவாய் பல்லை பிடுங்கிடுறாங்களே..!

மூளை பெருசா வளர்ந்ததால பல் முளைக்க இடமில்லை.. அந்த பல்லை பிடுங்கினா வலி போய்டும்ன்னு கண்டுப்பிடிக்கிற அளவுக்கு மனுஷனுக்கு மூளை பெரிசா வளர்ந்திருக்கு சரிதானே.. (சிரிப்பு)

ரம்யா: அடுத்தது நம்ம விழித்திரை (A backward retina). அதன் ஒளிப்பெறுதி செல்கள் (photoreceptor cells in the retina) பின்புறமாக திரும்பி இருக்கிறது. இதனால் வெளியிலிருந்து வரும் ஒளி, செல்லின் முழு நீளம் வரை ஊடுறுவி அதன் பின்பக்கத்தில் இருக்கும் ஒளிவாங்கி வரை வர வேண்டியிருக்கு. இந்த அமைப்பால் விழித்திரை அதோட பக்க திசுக்களை விட்டு விலக வாய்ப்பிருப்பதால், மனிதர்கள் சிலருக்கு கண்பார்வை இல்லாமல் இருப்பதற்கு காரணமாக மாறுகிறது. விழித்திரை மட்டும் கவிழ்ந்து அல்லது பிரட்டிய நிலையில் இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது.

எஸ்தர் பேசிக்கொண்டே உணவை சாப்பிட அவளுக்கு புரையேறுகிறது..

ரம்யா: மெதுவா சாப்பிடேண்டி..! இது போல் சாப்பிடறப்ப புரை ஏறுவது கூட தவறான இடத்தில் அமைந்த குரல்பெட்டி (voice box) காரணம். குரல்வளையும் உணவுக்குழாயும் ஒரே இடத்தில் திறக்கும் அமைப்பை கொண்டிருக்கு. இரண்டையும் மாத்தி மாத்தி மூடும் வேலையை இலைவடிவில் இருக்கிற குரல்வளை மூடி (epiglottis) அனிச்சையாக செய்கிறது. ஆனா சில சமயங்களில் நாம வேகமா சாப்பிட்டுக்கிட்டே பேசினோம்ன்னா நம்ம வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம போச்சுன்னா நமக்கு புரையேறுது...

ஹாசினி: அதாவது நம்ம எஸ்தர் மாதிரி லொட லொடன்னு பேசினா புரை கண்டிப்பா ஏறும் தானே..!

எஸ்தர்: உதை வாங்கப் போற ஹாசினி .. சரி இதுக்கு என்ன தீர்வு இருக்கு ரம்யா?

ரம்யா: திமிங்கிலம் மாதிரி குரல்வளையை கொஞ்சம் முன்னாடி கொண்டு வந்து நேரா மூக்குத் துளையோட பொறுத்திட்டா... நமக்கு சாப்பிட, மூச்சு விடன்னு தனி தனி வழி ஆகிடும் .

எஸ்தர்: நல்ல வழிதான்..

ரம்யா: நல்லவழின்னு சொல்ல முடியாது எஸ்தர்.. அது போல் அமைந்தால் அப்புறம் மனிதனுக்கு பேசுகிற தன்மையே இல்லாமல் போய்விடும்..

ஹாசினி: அடியாத்தி.. அப்புறம் பேசாம இருந்தா எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் எப்புடி தொடர்பு கொள்ள முடியும்?

ரம்யா: அதான் சொன்னேனே திமிங்கிலம்ன்னு.. அது கடல்ல பாடி அதோட சொந்தக்காரங்களை கூப்பிடற மாதிரி நாமளும் விசிலடிக்கிற மாதிரி குரல் எழுப்பிக்கிட்டு அலைய வேண்டியது தான்.

எஸ்தர்: ம்ம் .. அப்ப நமக்கு உள்ளதே போதும் சாமி! என்ன அப்பப்ப புரை ஏறும்.. அத வேணா சமாளிச்சிக்கலாம். ஆனா பேசாம இருக்கிற மெளன விரதமெல்லாம் நமக்கு ஆகாது!

ரம்யா: கடைசியா A klugey brain. அதாவது கடந்த லட்சக்கணக்கான ஆண்டுகளாக நமது மூளை அவ்வப்போது, மாறும் சூழ்நிலைக்கேற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து வந்ததின் விளைவு... ஏடாகூடமாக, அலட்சியமாக தொகுக்கப்பட்ட பகுதியாக தான் மூளை அமைப்பை ஆய்வாளர்கள் பார்க்கிறாங்க.

குழப்பமான ஒரு அலுவலகத்தில் சேர்ந்த புது பணியாளர்கள் போன்றது தான் முன்மூளைப்பகுதி.. அங்கே தான் “மொழி கற்றல்” போன்ற புதிய சிக்கலான தொழில்நுட்பங்கள் கையாளுவது போன்ற வேலைகளை செய்கிறது.

மற்றபடி இந்த மொழியின் மூலம் நாம் உரையாடும் உரையாடல்களை ஞாபகம் வைத்து, பதிந்து கொள்வதை நடுமூளைப் பகுதி பின்மூளைப் பகுதிகள் கவனித்துக் கொள்கின்றன. இவற்றை பழைய பணியாட்களுக்கு உதாரணமாக கூறலாம். இந்த குழப்பமாக ஒன்றிணைக்கப்பட்ட மூளை பாகங்களின் விளைவாகதான் மனிதர்களுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, மனச்சிதைவு, நம்பமுடியாத நினைவுகள் உறுதிப்படுத்தல் (unreliable memories), முன் கருத்து கொள்ளல் (confirmation bias.) போன்றவை வருகின்றன.

ஸ்ருதி: ஓ.. கொடுமை..! இதுக்கு எதுவும் பண்ண முடியுமா?

ரம்யா: “No way. we're screwed..!” என்று கையை விரித்துச் சொல்ல அனைவரும் மெலிதாக சிரிக்கின்றனர்.