தனது ‘அறியப்படாத தமிழகம்’ என்று நூலால் அறியப்பட்ட முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் மிக அற்புதமான தொல்லியல் ஆய்வாளர். ஆய்வு செய்து கண்டுபிடித்ததை அதை விட அற்புதமான முறையில் உலகிற்கு தெரிவிக்கும் ஒரு சிறந்த எழுத்தாளர். முற்போக்கு சிந்தனையாளர், விரிவுரையாளர், ஆய்வாளர்களின் வழிகாட்டி என இவருடைய பன்முகத் தன்மையை சொல்லிக் கொண்டே போகலாம்.
அறியப்படாத தமிழகத்தில், அதனுடைய முன்னுரையை இன்று படிக்கும் போது மனம் கலங்குகிறது. அப்போதே, இந்த நூல் வந்த ஆண்டான 1997-ஆம் ஆண்டு அவர் சொன்ன விஷயங்கள் கிட்டத்தட்ட 25 வருடம் கழித்து அப்படியே பொருந்திப் போகின்றன. மேலும், நாம் இழந்தவைகளை நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை ஏக்கத்துக்கும் உள்ளாக்குகின்றன.
“தனது விஞ்ஞான கண்ணால் திரைப்படத்துறை, கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலை பொருளாக்கிறது. மறுபுறமாக, நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வை, தகவல் தொடர்பு சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில், எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவன் அல்லன். அவன் கற்கவும் கற்பிக்கவும் பிறந்தவன்.” - இது அவரது கூற்றுக்களில் ஒன்று. எவ்வளவு உண்மையானது!!
அவருடைய, அழகர்கோயில் என்ற ஆய்வு நூல் மதுரை அழகர் கோயிலை பற்றி வித்தியாசமான முறையில் விளக்க முற்படுகிறது. வழக்கமான விளக்க நூல்கள் அந்தக் கோவிலின் விசேஷங்கள், ஐதீகங்கள் மற்றும் கட்டட அமைப்புகளை மட்டுமே விளக்கும். ஆனால் அழகர்கோயில் நூல் தலைப்புக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல், இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் இன்னும் நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வு செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சமூக பண்பாட்டு நிறுவனம் ஆகிய கோவிலுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை வெவ்வேறு கோணத்தில் ஆராய்ந்து சொல்கின்றது. நூல் முழுதும் இறைந்து கிடக்கும் நுட்பங்களும் அவரின் தனித்துவமான இடைவெட்டுகளும் நூலுக்குப் புதிய அழகு சேர்க்கின்றன.
அறியப்படாத தமிழகம் நூலின் முதல் கட்டுரையாக “தமிழ்” இருப்பது நமக்கு வியப்பைத் தரவில்லை. தமிழைப் பற்றி சொல்லிக்கொண்டே வருபவர் தமிழும் தண்ணீரும் ஒன்று என ஒப்பிடுகிறார். ‘இரண்டுக்கும் இனிமை மற்றும் எளிதில் புழங்கும் தன்மை இருப்பதால்’ என்று அவர் விளக்கிச் சொல்லும்போது நம்மால் அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.
நீரை குறித்த அவரது விரிவான விளக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் இவ்வளவு விஷயங்கள் தமிழில் இருப்பது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா? சென்ற தலைமுறைகள் கூட இதை அறியாமல் போனதே என்று வருத்தப்படுகிறார். அதற்கெனவே இந்த முயற்சியை செய்து இதனை வெளியிட்டார். எனினும் நிலைமை மாறாதது இன்னும் வருத்தம் அளிக்கிறது.
தொ.ப-வின் எழுத்தாளுமை என்பது எந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களில் அணுகுவதாகும். இந்த நீர் குறித்து அவர் சொல்வதை எடுத்துக்கொண்டால்... சங்க இலக்கியங்கள், திருக்குறள், கல்வெட்டுகளிலிருந்து தரவுகள், நாட்டார் வழக்குகள், பழமொழிகள் என்று பலவிதமான உதாரணங்களோடு, தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை நிறுவ முற்படுவது படிப்பவருக்கு சுவையாகவும், தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வளர்க்கும் விதமாகவும் இருக்கிறது.
தமிழர் உணவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கருப்பு மிளகு “கருங்கறி”
என்றழைக்கப்பட்டது. இறைச்சி உணவிற்கு அதிகமாக கறியினை பயன்படுத்தியதால், இறைச்சியே கறி எனப் பின்னர் வழங்கப்பட்டது.
இந்தப் பெயர் மாற்றத்தை எண்ணி ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. அதேசமயம் இன்றைய தலைமுறைக்கு இது தெரியாமல் போகிறதே என்ற வருத்தமும் மனதுள் எட்டிப் பார்க்கிறது” என்கிறார்.
உணவுப் பழக்கத்தை சொல்லிக்கொண்டே வருபவர் “மாறிவரும் உணவுப் பொருட்களில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழர்கள் அவித்தும், வேகவைத்தும் எண்ணெயைச் சேர்க்காமலும் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள், வேகமாக மறைந்து வருகின்றன. பொருளாதாரச் சந்தையில் எண்ணெய் வணிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. தமிழர்கள் உணவு பழக்கத்தில் உடல் நலத்தைக் கருதாது, நாவின் சுவையையே சார்ந்து இருப்பது வீழ்ச்சிக்கு உரிய வழிகளில் ஒன்று” என்று அவர் குறிப்பிடுகிறார். இது இன்றைய உண்மையான நிலையும் கூட!
தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கு பிறகு அவர்களுடைய நிலப்பிரிவு, தொழில்கள், உடை, அதன் பெயர்கள் வந்த விதம், உறவுமுறைகளை பற்றி மிக விரிவாக எடுத்துச் சொன்ன விதம், அம்மா, அப்பா என்ற சொற்களின் அடிப்படை எங்கிருந்து வந்தது என்றெல்லாம் தொ.ப விளக்கும்போது நமக்குள் வியப்பே மேலிடுகிறது.
பௌர்ணமியை அவர் குறிக்கும் தமிழ்ச்சொல் அழகான ஒன்று “நிறைமதி”, அதனை ஒட்டி வரும் தைப்பூசத் திருநாளை பற்றி மிக விரிவாக சொல்லி இருக்கிறார்.
துலுக்க நாச்சியார் என்ற தலைப்பில் இவர் கூறும் ஒரு விஷயம் மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். அது தற்போது நடைமுறையில் இருக்கிறதா என்பதை சோதித்து அறியவேண்டும். ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் நெடுங்காலமாக இஸ்லாமியர்கள் வழிபட அனுமதிக்கப் படுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார். அதேபோல அந்தக் கோயிலில் பெருமாள் கடலாட செல்லும்போது, கிள்ளை என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தர்காவுக்கு கோயில் மரியாதையாக மாலை தருகிறார்கள் என்று சொல்லிவிட்டு, ‘மத அடிப்படைவாதம், வன்மத்தோடு வளர்க்கப்பட்டு வரும் இந்நாளில் இத்தகைய கதைகளையும் நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு காட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு’ என்று முடிக்கிறார். அங்கே தொ.ப. நிற்கிறார்.
இவர் விளக்கிடும் பல்லாங்குழி ஆட்டம், கிட்டத்தட்ட தமிழகத்தில் மறையும் நிலைக்கு வந்து விட்டது. கிராமங்களில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடைமுறையில் இருக்கிறது. அந்த இடத்தை கைபேசி பிடித்துக்கொண்டு வெகு நாட்கள் ஆயிற்று.
பண்பாட்டு அசைவுகள் என்ற கட்டுரையில் ஒரு வீட்டின் துக்க நிகழ்வில் நடைபெறும் ஒரு அழகான செய்தி சொல்லும் நிகழ்வு பற்றி விளக்கி, அதற்கு சங்க இலக்கியத்திலிருந்து தொடர்பும் காண்பிக்கிறார். இறந்து போனவனுடைய மனைவி கர்ப்பிணியாக இருப்பதும், அப்போது அவளுக்கு மூன்று மாதம் என்பதும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு தந்தை இவன் தான் என்பதையும் வயதில் மூத்த பெண்மணி சிறு செய்கை மூலம் ஊருக்கு விளக்குவதை சொல்லும்போது, தமிழர்களின் நுட்பமான பண்பாடு நம் கண் முன்னே விரிகிறது. நம் மனதும் பெருமையால் நிறைகிறது.
சொன்ன சொல் தவறாமை பற்றி விளக்கும்போது அவர் பஞ்சமாபாதகங்கள் பற்றி சொல்கிறார். தமிழர்கள் எழுத்து மூலம் எதையும் நம்பாமல், வாய்மொழி சொல்லும் சத்தியத்தையே பெரிதென மதித்தார்கள் என்று இன்றும் வழக்கத்தில் இருக்கும் பதினெட்டாம்படி கருப்பு முன் சத்தியம் செய்தல், போன்ற விஷயங்களை எடுத்துக்காட்டுகிறார். தமிழர்களின் நாணயம் அங்கே தலை நிமிர்ந்து நிற்பதை காண்கிறோம். அதற்கான சமய இலக்கண நாட்டார் குறிப்புகளிலிருந்து விளக்கும்போது, நம் கண் முன்னே சொன்ன சொல் தவறாத ராமனும் வந்து போகிறான்.
எல்லோரும் கொண்டாடுவோம் “பாவ மன்னிப்பு திரைப்படத்தில் நடிகர் திலகம் பாடும் பாடல், உடனே நமக்கு நினைவுக்கு வருவது அவரது தோற்றமும் அந்த “டேப்பும்” தான். இசுலாமிய பாணர்களான “பக்கிரிசா”க்கள் பற்றி அவர்கள் உருவாகும் “முரீ அத்” சடங்கு பற்றி விரிவான கள ஆய்வு, இவரின் அர்ப்பணிப்பான பணிக்கு சிறு உதாரணம். அந்த தாளம் தட்டும் இசைக்கருவியான டேப்பின் பெயர் “தாயிரா” என்பது அதற்கு ஒரு உதாரணம்.
எத்தனையோ பாண்டியர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். படங்களிலும் கண்டிருக்கிறோம். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நிஜமான ஹீரோ “பீட்டர் பாண்டியன்” என்கிற ஒரு ஆங்கிலேய கலெக்டரை பற்றி விவரமாய் இவர் சொல்லும் போது, நமக்கும் வியப்பு மேலிடுகிறது. அன்றைய ராபின் ஹுட் இவர் தானோ? (தமிழ் சினிமா இயக்குனர்கள் கவனிக்க!) என்று எண்ணத் தோன்றுகிறது. இது நிச்சயமாக அறியப்ப(படவேண்டிய)டாத தமிழகத்தின் வரலாறு தான்.
தொ.ப-வின் எழுத்துக்கள் காலத்தை மீறி, எல்லைகளைத் தாண்டி வலம் வருபவை. பெரியாரின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டிய இவர், தமிழர்களின் வளமான வரலாற்றை உலகறியச் செய்ய பெரும் முனைப்பு எடுத்துக்கொண்டார். ஏராளமான ஆராய்ச்சியாளர்களை வழி நடத்திச் சென்றவர். தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழர் பெருமை அறியா சென்ற நூற்றாண்டு மனிதர்களை மிகவும் வருத்தத்தோடு பார்த்தவர். அவர்களுக்கு இழந்த பெருமையை மீட்டுத் தரவேண்டும் என்ற ஒரே நோக்கோடு பல ஆய்வுகளை மேற்கொண்டு ஆதாரத்தோடு தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர். இதற்காக இவர் பல ஆயிரம் மைல்கள் நடந்தே சென்று கள ஆய்வு மேற்கொண்டவர்.
பாளையங்கோட்டையை தன் வசிப்பிடமாக கொண்ட இவர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அழகர் கோயிலும், அறியப்படாத தமிழகம் நூலும் என்றும் பரமசிவன் பெயர் சொல்லும். கல்லிலே கலைவண்ணம் கண்ட இவர், சொல்லிலே அதை வைத்துச் சென்றார்.
தொ.ப. புகழ் கற்பாறையில் எழுத்து போல காலம் கடந்தும் நிற்கும் என்பது உறுதி.
Leave a comment
Upload