தொடர்கள்
கதை
அதிகாரி... - ஆர்னிகா நாசர்

20201126005603604.jpg2020112600563448.jpg

மேலதிகாரி ஆனந்தரங்கன் அலுவலகத்துக்குள் பிரவேசித்தார். தலை கேசத்துக்கு ‘டை’ அடித்திருந்தார். டை அடித்திருந்த கேசத்தை முன்னுக்கு தள்ளி வாரி முன் வழுக்கையை மறைத்தார். வெயிலில் குளிர்கண்ணாடியாகவும் நிழலில் பவர் கண்ணாடியாகவும் விளங்கும் மூக்கு கண்ணாடி அணிந்திருந்தார். நாசித்துவாரங்களில் இரால் மீன் மீசைகளை போல ரோமங்கள் எட்டிப் பார்த்தன. மீசையை சம்மர்கிராப் அடித்து டை ஈஷியிருந்தார். நிகோட்டின் உதடுகள். வரிசை தவறிய கீழ்வரிசை பற்கள். முழுக்கை சட்டை. பேன்ட் ஷு நடந்து வரும்போது இருவரிசை ஊழியர்கள் அனைவரும் எழுந்து ‘வணக்கம்’ ‘குட்மார்னிங் கூறினர். கூறும் வணக்கங்களை ஒப்புக்கு கூறுகிறார்களா, முழுமரியாதையாக கூறுகிறார்களா என நடக்கும்போதே முகங்களை ஆழம் பார்த்தார் ரங்கன்.

இரு இருக்கைகள் காலியாக இருந்தன, பெண் ஊழியர்களைத் தாண்டும்போது உடலை அஷ்டகோணலாய் வளைத்து வழிந்தார். அவர்கள் சொல்லும் முன்னே, இவரே ‘வணக்கம் வணக்கம் குட்மார்னிங் குட்மார்னிங்’ எனக் குழறினார்.

தனது இருக்கைக்கு வந்தமர்ந்தார். அக்குள்களில் டியோடரன்ட் பீய்ச்சிக் கொண்டார். வாய்க்குள் மவுத் ப்ரஷ்னர் ஸ்ப்ரே செய்து கொண்டார்.
உள்இணைப்பு தொலைபேசியில் பேசி அப்துல் சுப்ஹானை வரச் சொன்னார். சீனியாரிட்டி படியும் கல்வித் தகுதிகளின் படியும் பார்த்தால் இவரது இடத்தில் சுப்ஹான்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். ஆறு இலட்ச ரூபாய் பணம், ரங்கனை அதிகாரியாகவும் சுப்ஹானை கீழ் பணிபுரிபவனாகவும் மாற்றி விட்டது.

“குட்மார்னிங் சார்!” என்றான் அப்துல் சுப்ஹான்.

“என்ன அழுத மாதிரி இருக்கு உன் முகம்?”

“இல்லையே...”

“ம்ஹூம்... பொய் சொல்ற... நாம உக்கார வேண்டிய இடத்ல ஒரு சொட்டைத் தலை உக்காந்துக்கிட்டு மொட்டை அதிகாரம் பண்ணுதேன்ற வேதனை உனக்கு... என்னை பாக்கும் போதெல்லாம் அது பல மடங்காகிறது. என்ன செய்து இவனை இப்பதவியிலிருந்து அகற்றலாமென ஒவ்வொரு நொடியும் திட்டம் தீட்டுகிறாய் இல்லையா?”

“உங்களை எதிர்த்து பேசுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்வதை போல நான் நினைக்கவில்லை. பணிக்கு வந்தால் பணிகளை பற்றி மட்டுமே சிந்திப்பேன்!”

“அட்டென்டென்ஸ் ரிஜிஸ்டரை எடுத்திட்டு வா!”

எடுத்து வந்தான் சுப்ஹான்.

“இன்னும் வெங்கியும் குமரனும் வரல போல...”

“ஆமா!”

“லீவ் லெட்டர் குடுத்தாங்களா?”

“இல்ல... ”

“ஓரலாவது லீவ் தெரிவிச்சாங்களா?”

“இல்ல...”

“நாளைக்கு வந்ததும் ரெண்டு பேருக்கும் மெமோ அடிச்சிட்டு வா. கையெழுத்து போடுறேன். இஸ்யூ பண்ணு!”

அவர்கள் இல்லாத போது இப்படி பேசுவார் ரங்கன். மறுநாள் அவர்கள் வந்து இவரை முகஸ்துதி பண்ணுவர். அப்போது இவர் ‘லீவு லெட்டரோ ஓரல் பெர்மிஷனோ உங்களுக்கு எதுக்குய்யா? ஒரு வருஷம் கூட நீங்க லீவு போடுங்கய்யா நா பாத்துக்கிரேன்’- என்பார்.

“சரி சார்!”

“நேத்தைக்கி நான் டிக்டேட் பண்ணின நோட்ல ஒரு ஆங்கில வார்த்தை இருந்துச்சு நான் ஒரு இஸட் போட்டா நீ திருத்தி ரெண்டு இஸட் போட்டிருக்க...”

“டிக்சனரி பாத்து சரி பண்ணினேன் சார்!”

“அப்டின்னா இங்கிலீஷ்ல நான் ரொம்ப புவர்ன்ற...”

“நான் அப்படி சொல்லல...”

“ஈ ஒன் வசுமதி என்னை பாத்து ஓவரா சிரிக்கிறாளே... என்னய்யா அர்த்தம்? 54 வயசிலயும் நான் அஜீத் விஜய் மாதிரி ஸ்மார்ட்டா இருக்றதுனால அப்டி பிஹேவ் பண்றாளா?”

“எனக்கு தெரியாது சார்!”

“மரமண்டையா இருக்கியே? மேலதிகாரிக்கு ஒரு பெண் ஊழியரை பிடிச்சு போச்சுன்னா சப்-ஆர்டினேட் என்ன பண்ணனும் தெரியுமா? மேலதிகாரிக்கும் அந்த பெண் ஊழியருக்கும் இடையே தூது போகனும். புறாவிடு தூது மாதிரி இது சப்-ஆர்டினேட் விடு தூது!”

“நான் அந்த மாதிரி காரியங்கள்ல ஈடுபட மாட்டேன் சார்!”

“டூர் போகாமலே டூர் போனதா பில் போட்டேனே பாஸ் பண்ணிட்டியா?...”

“பில்லை பி ஒன் கிட்ட குடுத்திட்டேன்!”

“பொதுவா முஸ்லிம்கள் முரட்டு முஸ்லிம்களா இருப்பாங்க. நீ சாத்வீக முஸ்லிமா இருக்க. எது சொன்னாலும் கோபப்பட மாட்டேங்ற. தவறான வழிகளில் போய் முன்னேற ஆசைப்பட மாட்டேங்ற. என் மீது புகார்கள் சுமத்தி மேலிடத்துக்கு நிறைய மொட்டைக் கடிதங்கள் போயிருக்கு. அவங்க உன்னை தனியா கூப்பிட்டு மொட்டைக் கடித விஷயங்கள் உண்மையான்னு கேட்டிருக்காங்க. மொட்டைக் கடிதங்களை எந்த நிலையிலும் உதாசீனப்படுத்த வேண்டும் என கூறியிருக்க...”

முறுவலித்தான் அப்துல் சுப்ஹான்.

“என்னய்யா பதில் பேசாம சிரிக்ற பாய்?”

“நான் இஸ்லாம் சொன்னபடி நடக்கிறேன் சார்!”

“ஆபிஸ் விஷயத்ல எப்டி நடக்கனும்னு கூடவா உங்க இஸ்லாம் சொல்லுது?”

“இஸ்லாம் சொல்லாத விஷயங்கள் உலகில் எதுவும் இல்லை. நீங்க தப்பா நினைக்கலேன்னா நபிமொழி ஒண்ணை சொல்றேன்!”

“சொல்லு!”

“தலை கிஷ்மிஷாக இருக்கும் அபிசினிய அடிமை உங்கள் மீது வேலைக்கு அமர்த்தப்பட்ட போதிலும் (அவன் கட்டளையை) நீங்கள் செவியுற்று கீழ்ப்படியுங்கள்-னு நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார் சார்!”

“கிஷ்மிஷ்னா?”

“உலர்ந்த திராட்டை போன்ற தலையை உடைய அடிமை உங்களுக்கு தலைவனாக இருந்தாலும் என்கிறார் நபிகள் நாயகம்!”

“அந்த காலத்ல ஆபிஸ் எது? அமீர் சுல்தான்களுக்கு கீழ்ப் படிந்தது நடக்க அப்படி சொல்லியிருப்பார். உங்க நபி?!”

“இல்லை இல்லை. இந்த நபிமொழி எல்லா காலங்களுக்கும் பொருந்தும்!”

“அந்த அபிசினிய அடிமை நான் என்கிறாய்!”

“அப்படியில்லை சார். தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் அவர்கள் இடும் கட்டளைகளை எதிர்வார்த்தை பேசாது நிறைவேற்ற வேண்டும். மேலதிகாரியுடன் கலகம் பண்ணி ஒரு அலுவலகத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ நிலைகுலையச் செய்து விடக்கூடாது. வாழ்க்கையை தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பதவிக்கு ஆசைப்படாதே என்கிறார் நபிநாயகம். அதிகாரத்தை அடைவதால் பொருள், கௌரவம், இன்பசுகங்கள், அன்பளிப்பு முதலியன கிடைக்கின்றன. அதிகாரத்துக்கு வந்தவன் மேல் மக்களுக்கு மனகசப்பு பெருகி நாளடைவில் எதிர்ப்பு, புரட்சி என்றெல்லாம் தொல்லைகள் உருவாகின்றன. இறுதியில் பதவி நீக்கம், வழக்கு, கொலை என்று போய் முடிகின்றன. இவ்வுலகம் சம்பந்தபட்டவரை அதிகாரம் நல்லது மறுமை சம்பந்தபட்ட வரையில் அவ்ளவு நல்லதல்ல சார்!”

“சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்கிறாய்... இல்லையா பாய்?”

“நான் உதட்டிலிருந்து பேசவில்லை...இதயத்திலிருந்து பேசுகிறேன்!”

“அதிகாரத்துக்கு ஆசைப்படாதே என்கிறார் உங்க நபி-சரி அதிகாரத்துக்கு வந்தவங்க எப்படி நடந்துக்கனும்னு எதாவது சொல்லியிருக்கிறாரா?”

“ஓ சொல்லியிருக்கிறாரே... ஓர் அடியானுக்கு இறைவன் பிரஜைகளைக் கொடுத்து பராமரிக்கச் செய்து அந்தப் பிரஜையை அந்தரங்க சுத்தியாக அவன் பாதுகாக்கவில்லையாயின் சொர்க்கத்தின் வாசனையை அவன் ஒருக்காலும் நுகர மாட்டான் என்கிறார் நபிகள் நாயகம். அதிகாரியாக இருப்போர் நீதியுடன் நடக்கவேண்டும். தனக்கு கீழ் பணிபுரிபவரின் உழைப்பினை பெற்று அவர்கள் நலனுக்காக மனப்பூர்வமாக உழைக்க வேண்டும். பெண்கள் விஷயத்தில் கண்ணியமாய் நடத்தல் வேண்டும்!”

“நீ பார்க்காத சொர்க்கத்தை நம்பி பதவி சுகங்களை இழக்கிறாய் பாய்!”

“மத நம்பிக்கையை விடுங்கள். அவரவர் மனசாட்சி கூறுவதை கேளுங்க. அதுவும் கூட பதவி ஆசை தப்பு, பெண்களிடம் ஒழுக்கமாக நடந்து கொள் என்று தான் கூறும். மறுமை நாள்-இறுதி தீர்ப்பு-சொர்க்கம்-நரகம் இதெல்லாம் இருக்கோ இல்லையோ-எனக்கு கவலையில்லை-நல்லவனாக இருக்க தொடர்ந்து நான் நன்மையை நாடுகிறேன்!”

“நீ பேசுவதை கேட்க நன்றாக இருக்கிறது. ஆனா பதவி ஆசை குடிபோதை பழக்கம் மாதிரி. என்னை பிடிச்சு ஆட்டுதே. என்ன செய்ய பாய்? இன்னும் பத்து பதவி உயர்வு அடைந்தாலும் நான் திருப்தியடைய மாட்டேன்...”

மௌனித்தான் அப்துல் சுப்ஹான்.

“இவ்ளவு ஆன்மிகம் பேசுற உன்னை என் பக்கத்துல வச்சா என்னால அதிகாரத்தை முழுமையா அனுபவிக்க முடியாம போய்டும். கன்றுக்குட்டியின் வாழ்க்கையை ஒரு குள்ளநரி வாழ முடியாது. இன்னும் ஒரு வாரத்தில் ட்ரான்ஸ்பர் செய்து உன்னை கன்னியாகுமரி அனுப்பப் போகிறேன்... என்னை மன்னித்து விடு பாய்!”

“என்னை ட்ரான்ஸ்பர் செய்வதற்கு நன்றி சார்!” என்றான் அப்துல் சுப்ஹான் ஆத்மார்த்தமாக.

-இரவு. உணவை முடித்துவிட்டு படுக்கையை தட்டிப் போட்டான் சுப்ஹான். தொலைபேசி சிணுங்கியது. ஒலிவாங்கியை எடுத்தான். எதிர்முனையில் அலுவலகத்தில் பணிபுரியும் சகஊழியன். “பாய்! நம் மேலதிகாரி ஆனந்தரங்கன் மாஸிவ் ஹார்ட் அட்டாக் வந்து அரைமணி நேரத்துக்கு முன்னாடி இறந்து போய்ட்டாராம்!”

“நாம் இறைவனுக்கே உரியவர்கள். அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்!...” என முணுமுணுத்தான் அப்துல் சுப்ஹான்.