தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான எல்லா ஆயத்த வேலைகளையும் அதாவது உள்ளடி வேலை உட்பட எல்லாவற்றையும் எல்லா கட்சிகளும் துவங்கிவிட்டது.
எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர். ஆனால், அவர் தேர்தல் பிரச்சாரத்தை தனது தொகுதியில் துவக்கிய போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை. அன்றைய தினம் தனது நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு தேனியிலிருந்து அவசர அவசரமாக சென்னை வந்து முதல்வர் தன்னை எப்படியும் அழைப்பார் என்று காத்திருந்தார் ஓபிஎஸ். ஆனால் அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதற்கு காரணம், பன்னீர்செல்வம் ரஜினி பக்கம் சாயலாம் என்று எடப்பாடியாருக்கு வந்த தகவல்தான்.
ரஜினியை, பன்னீர்செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் சந்தித்துப் பேசி இருப்பதாக ஒரு தகவல் வேறு எடப்பாடிக்கு கிடைத்தது. இந்த திடீர் திருப்பத்திற்கு காரணமாக பாரதிய ஜனதாவை கை காட்டுகிறார்கள், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
தொகுதிப் பங்கீடு பற்றி இதுவரை பாரதிய ஜனதா பிடி கொடுத்து பேசவில்லை. தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன், ‘முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாரதிய ஜனதா தான் தீர்மானிக்கும், எங்கள் தலைமையில் தான் கூட்டணி’ என்கிறார். பிறகு ‘நான் அப்படி பேசவில்லை’ என்கிறார். அதே கருத்தை, பிறகு வேறு ஒரு இடத்தில் பேசுகிறார். இது போதாதென்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாரதிய ஜனதாவின் துணைத் தலைவருமான அண்ணாமலை, அரசு தரும் பொங்கல் பரிசு பணத்தை ‘கொள்ளையடித்த பணம்’ என்று சொல்கிறார். அரசாங்கம் தரும் பணம் எப்படி கொள்ளையடித்த பணம் ஆகும்? இந்த அடிப்படை தகவல் கூட அவருக்கு எப்படி தெரியாமல் போனது? இந்த விஷயம் பெரிதானதும், ‘வேண்டுமென்றே கூட்டணியில் குழப்பம் செய்வதற்காக நான் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிடுகிறது’ என்று அண்ணாமலை ஊடகங்கள் மீது பழி சுமத்துகிறார்.
முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்று அறிவித்தது முதல் வெளியே சிரித்தபடி இருந்தாலும், உள்ளுக்குள் எடப்பாடி புழுங்கித் தான் போயிருக்கிறார். ‘அமித்ஷா என்ன சொல்வார்.. மோடி என்ன சொல்வார்.. அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் நட்டா என்ன சொல்லப் போகிறார்?’ என்ற உதறல் அவருக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதானே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பிரகாஷ் ஜவடேஹர் பதிலளிக்க மறுத்து விட்டது எடப்பாடியருக்கான மைகப் பெரிய சறுக்கல் மற்றும் பதைபதைப்பு!
இது தவிர தினகரன், தனது கட்சிக்காரர்களுக்கு ‘எடப்பாடியையும் அதிமுக அமைச்சர்களையும் யாரும் விமர்சித்துப் பேச வேண்டாம் நமது இலக்கு திமுக தான்’ என்று சொல்லியிருக்கிறார். இது எதற்கு என்றும் புரியாமல் திகைத்து முழிக்கிறார் எடப்பாடி.
இதன் நடுவே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ் ‘பாட்டாளி மக்கள் கட்சிக்கு, துணை முதல்வர் பதவி தரவேண்டும்.. 50 தொகுதிகள் வேண்டும்.. இது தவிர, கணிசமான கோடிகள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு உடனே அமுல் என்ற ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என்றெல்லாம் போகாத ஊருக்கு வழி கேட்டு நிர்பந்தித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அமைச்சர்கள் இருவரும் எதுவும் பேசாமல் வந்துவிட்டார்கள்.
அதன் பிறகு துரைமுருகனை ராமதாஸ் தொடர்பு கொண்டு, திமுகவுடனான கூட்டணி பற்றி பேசியிருக்கிறார். அப்போது துரைமுருகன் ‘நான் எதுவும் பண்ண முடியாது’ என்று கையை விரித்து விட்டார். இதற்குக் காரணம், தர்மபுரியில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் நத்தம் மேட்டில் 1989இல் வன்னியர் இட ஒதுக்கீடு நடந்த போராட்டத்தில் உயிரிழந்த சுப்பிரமணியம் என்பவரின் நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்த தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் சென்றபோது அவரை நெருங்க விடாமல் பாமக இளைஞரணி விரட்டி அடித்தது. இது போதாதென்று சுப்பிரமணியம் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கச் சென்ற போது, அங்கும் அவர் விரட்டி அடிக்கப்பட்டார்.
இது தவிர, இரு தினங்களுக்கு முன்பு சேலத்துக்கு பிரச்சாரத்திற்கு வந்த தயாநிதி மாறனிடம் “திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா?” என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு... தயாநிதி மாறன், “அதுபற்றி எனக்கு தெரியாதுங்க.. அவங்க யார் கிட்ட பேரம் பேசுறாங்கன்னு தெரியல... யார் அதிகம் காசு தராங்களோ, அவங்களோட தான் அவங்க போவாங்க... போனமுறை, 400 கோடி வாங்கினதா சொல்றாங்க... இந்த முறை ஆயிரம் கோடி கேட்கிறதா சொல்றாங்க.. எங்ககிட்ட அவ்வளவு காசு இல்ல” என்று பதில் சொல்ல... இதைக் கேள்விப்பட்ட சேலம் பாமகவினர், தயாநிதி மாறனை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டினார்கள். அவர் பயணம் செய்த கார் மீதும் கல்வீச்சு நடந்தது. திமுக தொண்டர்கள் தான் அவரை பத்திரமாக ரயில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
தயாநிதி மாறனின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கச் சொல்லி பாமக அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதற்கிடையே ரஜினியுடன் பாமக கூட்டணிக்கு முயற்சி செய்வதாகவும், அவர்கள் ‘சீட் வேண்டுமானால் தருகிறோம் பணமெல்லாம் தரமாட்டோம்’ என்று சொல்லி விட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது
.கடந்த 20ஆம் தேதி பாமக நிர்வாகிகளுடன் ஜூம் மீட்டிங் மூலம் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது “திமுக, அதிமுக இரண்டுமே வன்னியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. நாம் கோட்டையில் உட்கார்ந்தால் தான் வன்னியர்களுக்கு ஏதாவது செய்ய முடியும். பாமக நிர்வாகிகள் பாமகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள்... ஆனால், அவர்களது குடும்பத்தினர் மற்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். அதனால்தான் அன்புமணி ராமதாஸ் கூட தோற்றுப் போனார். நீங்கள் மாற்றுக் கட்சி வன்னியர்களிடம் பேசி அவர்களை நம் கட்சிக்கு அழைத்து வர வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
தனித்துப் போட்டி என்று முதலில் சொல்லிவிட்டு... இவரே திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டு... இப்போது அவர்கள் மீது பழி போடுவதை அவரது கட்சி நிர்வாகிகளே ரசிக்கவில்லை. அப்புறம் ஏன் அதிமுக தயவில் அன்புமணி ராஜ்யசபா உறுப்பினர் ஆனார் என்று கேட்கிறார்கள். இப்போது தொண்டர்கள் செல்வாக்கு இழந்த கட்சியாக பாமக தள்ளப்பட்டுவிட்டது. எனவே இரண்டு திராவிட கட்சிகளும், “நாங்கள் தருவதற்கு உடன்பட்டு வந்தால் வா... இல்லாவிட்டால் போ. அதனால் எங்களுக்கொன்றும் நஷ்டம் இல்லை” என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதிமுக அமைச்சர் சிவி சண்முகம், ‘பாமக இல்லாவிட்டாலும் வன்னியர் ஓட்டுகள் நமக்கு கிடைக்கும்’ என்று முதல்வரிடம் உறுதியாக சொல்லி வருகிறார்.
இதன் நடுவே எடப்பாடி ஓபிஎஸ் உட்பட எட்டு அமைச்சர்கள் மீது 98 பக்க ஊழல் புகாரை ஆளுநரிடம் ஸ்டாலின் தந்திருக்கிறார். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வைப்போம் என்றும் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா மீது கூட கவர்னரிடம் திமுக புகார் தந்தது. அதன் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டு, ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அதனால் தான் கருணாநிதி தொடர்ந்த பொய் வழக்கு என்று ஜெயலலிதா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இப்படி எடப்பாடியார் ‘சிக்கல் மேலும் சிக்கல்’ என்று தவித்து வருகிறார்.
பாரதிய ஜனதாவை பொருத்தவரை ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி என்று முரண்டு பிடிக்கிறது என்பதாக ஒரு தகவல் வெளி வருகிறது. இதற்கு சம்மதிக்காவிட்டால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, இரட்டை இலை சின்னம் முடக்கம், ஆட்சிக்கவிழ்ப்பு போன்ற வேலைகளில் அமித்ஷா ஈடுபடுவார் என்றும் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் டெல்லி தலைமை, “தமிழகத்தில் யார் ஆட்சி செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எடப்பாடி, ஸ்டாலின், ரஜனி என்று யார் வந்தாலும், அவர்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தே தீருவார்கள். எங்கள் கவனமெல்லாம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை பதவியிலிருந்து இறக்கி, ஆட்சி பிடிப்பதில் தான் இருக்கிறது” என்று சொல்கிறார்கள். எது உண்மை என்பது அமித்ஷாவுக்கு மட்டுமே தெரிந்த ராஜ ரகசியம்.
இது தவிர நடிகர் கமலஹாசன், ‘எம்ஜிஆர் வாரிசு நான்தான்’ என்று தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து பேசி வருகிறார். இப்போதைய அதிமுக எப்போதும் ஜெயலலிதா புகழ் மட்டுமே பாடுவார்கள்.. அம்மா ஆட்சி என்று தான் தங்களை அவர்கள் அடையாளம் சொல்வார்கள்... எம்ஜிஆர் ஆட்சி என்று பேசமாட்டார்கள். இப்போது கமல், ரஜினி, பாரதிய ஜனதா என எல்லோரும் திடீரென எம்ஜிஆர் ஆட்சி பற்றி பேசுவதால், என்ன செய்வது என்று பேய் முழி முழிக்கிறது அதிமுக!
இது தவிர சசிகலா விடுதலைக்குப் பிறகு அரசியல் மாற்றங்கள் நிறைய நிகழும். எனவே அதற்கு ஏற்ப சட்டமன்ற தேர்தல் கூட தமிழகத்தில் ஆறு மாதம் தள்ளிப்போகும் என்றும் ஒரு வதந்தி உலா வருகிறது.
திமுகவிலும் குழப்பத்திற்கு பஞ்சமில்லை. சமீபத்தில் மாவட்ட திமுக செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் கூட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஸ்டாலின் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் சில விஷயங்களை அவர் மனம் திறந்து சொன்னார்.
“234 தொகுதிகளில் இருந்து இன்று இங்கே வந்திருக்கிறீர்கள், அடுத்து நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். ஆனால், நம்மை எளிதில் வெற்றியடைய செய்ய விடமாட்டார்கள். நமக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை ஒதுக்கி, யார் வேட்பாளர் என்றெல்லாம் பார்க்காமல்... உதயசூரியன் தான் வேட்பாளர்... கலைஞர்தான் வேட்பாளர் என்று யோசியுங்கள். கழக ஆட்சி அமைய வேண்டும் என்று யோசியுங்கள். நமக்கு எதிராக சிலரை கட்டாயப்படுத்தி, தனிக்கட்சி தொடங்கச் சொல்லியிருக்கிறார்கள். மிஷன் 200 என்ற இலக்கை நாம் அடைய வேண்டும். நம்மை எதிர்த்து நிறைய பேர் சதி செய்கிறார்கள். அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். பணம் விளையாடும், ஜாக்கிரதை” என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின். அவருக்கு முன்பாக தேசிய பொதுச்செயலாளர் துரைமுருகன் ‘சில வன் நெஞ்சம் படைத்தவர்கள் வருமான வரித் துறையிடம் நம்மை காட்டிக் கொடுக்கிறார்கள்... அது கூடாது’ என்று தனது பாராளுமன்ற தேர்தல் அனுபவத்தை நினைவுபடுத்தி சுட்டிக்காட்டினார்..
திமுக 200 தொகுதிகளில் கட்டாயம் போட்டியிடும் என்று சற்று வெளிப்படையாகவே தனது கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் பேசியிருக்கிறார். சிறு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து, அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது இந்த 200-ல் அடக்கம்.
இதன் நடுவே பாண்டிச்சேரி திமுகவினர், ‘பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலால் அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை. நீண்ட காலமாக... கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பாண்டிச்சேரியில் திமுக ஆட்சியில் இல்லை. எனவே இந்த முறை நாம் தனியாக போட்டியிட்டு, ஆட்சி அமைப்போம்’ என்று அவரை உசுப்பி விட்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஸ்டாலினை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். கலைஞர் பெயரில் சில திட்டங்கள் கூட செயல்படுத்தி, தனது விசுவாசத்தை காட்டியிருக்கிறார். காங்கிரஸ் தேவையில்லை எனில் கழட்டி விடுங்கள் என்பதுதான் பிரசாந்த் கிஷோரின் யோசனையும் கூட. பாண்டிச்சேரியில் திமுக இப்படி ஒரு முடிவு எடுத்தால், தமிழ்நாட்டில் தானாக காங்கிரஸ் கழன்று கொள்ளும் என்றும் ஸ்டாலினுக்கு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது.
ரஜினியை பொறுத்தவரை கட்சி துவங்கவில்லை... கட்சி பெயர் என்ன என்று தெரியாது... ஆனால், ரஜனி அவர் வீட்டு வாசலில் கைதூக்கி காட்டினாலே, அதுவே முதன்மை செய்தி ஆகிவிடுகிறது. ரஜினியின் ராசி அப்படி. ‘அண்ணாத்தே படப்பிடிப்பு எல்லாவற்றையும், ஜனவரி பத்தாம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுங்கள்’ என்று ரஜினி சன் பிக்சர் நிர்வாகிகளிடம் சொல்லியிருந்தார். அவர்களும் அதற்கேற்றாற் போல் ஏற்பாடு செய்திருந்தார்கள். தற்போது படப்பிடிப்புக் குழுவினர் ஆறு பேருக்கு கொரோனா வந்ததால், படப்பிடிப்பு ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது ரஜினி தன்னை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி திடீரென ரத்த அழுத்தக் கோளாறு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஹைதராபாத் அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருக்கிறார் ரஜினி. இதனால் அவரது கட்சி அறிவிப்பு தள்ளிப் போகலாம் அல்லது தன் உடல்நிலையும் மீறி கட்சியினை அறிவித்தார் என அவர் புகழ்பெறலாம். ஆக..அவர் விஷயத்தில் எதுவும் நடக்கலாம்!
ரஜினியைப் பொறுத்தவரை “ நாம் எந்த கட்சிக்காரர்களையும் விமர்சனம் செய்யக்கூடாது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மட்டும் பேசுவோம்” என்று சொன்னவர்... தன் உடல்நிலையை காரணம் காட்டி, “இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விட்டர் போன்றவை மூலம், நான் பிரச்சாரம் செய்கிறேன்... பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை... கணிசமான அளவு பெண்கள் வேட்பாளராக இருப்பார்கள், கட்சி நிர்வாகிகளிலும் பெண்களின் பங்கு கணிசமாக இருக்கும்” என்றெல்லாம் யோசித்து வைத்திருக்கிறாராம்.
அதேசமயம், கட்சிப் பெயர் குழப்பம் இன்னும் தீரவில்லை. தனது படப்பிடிப்பு சம்மந்தப்பட்ட வேலைகள் அனைத்தையும் ஜனவரி மாதத்திற்குள் முடித்துவிடவேண்டும் என்று நினைத்தார். தர்போதைய சூழ்நிலையில் அது முடியுமா என்பதே குழப்பம்தான்!
இதன் நடுவே ரஜினியை சந்தித்த சில பத்திரிகை ஆசிரியர்கள், ‘முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான் என்று அறிவியுங்கள்’ என்று அவருக்கு தொடர்ந்து நெருக்கடி தருகிறார்களாம். இந்தத் தேர்தலுடன் தன் வேலை முடிந்தது என்று இருந்த ரஜினி, இப்போது என்ன செய்வது என்று யோசிக்கிறார். ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என்றால், தமிழக அரசியல் சூழ்நிலையே தலைகீழாக மாறும். அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவரே அறிவிப்பு வெளியிட அவருக்கு நெருக்கடிகள் இன்று வரை தொடர்கிறது. ஹைதராபாத் படப்பிடிப்பு நிலையத்தில் கூட அவரை சந்தித்து இது பற்றிப் பேசியிருக்கிறார்கள்.
மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரம் எல்லோரையும் தற்போது மெல்ல ஈர்க்கத் துவங்கியிருக்கிறது. எம்ஜிஆர் வாரிசு, அதிமுக ஊழல் கட்சி என்றெல்லாம் பேசுகிறவர்... நடைமுறையில் சாத்தியமில்லாத, பெண்களுக்கு ஊதியம் என்று சொல்லியிருப்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இதுபற்றி விரிவாக கமல் ஏதும் சொல்லவில்லை.
இத்தனை அமளிகளுக்கும் நடுவே 2021 சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் 4ஆம் வாரத்தில் நடத்தி முடிக்கலாம் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வலியுறுத்தி வருகிறது. எது எப்படியோ... 2021 தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில், 360 டிகிரி பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆண்டாகத்தான் இருக்கும்!
Leave a comment
Upload