தொடர்கள்
Daily Articles
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... - 19 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

வெண்ணெயுண்ட வாயன் அணியரங்கன்

20210001132727271.jpeg

மிகுந்த தாகமுள்ளவனாக இருக்கிறான் ஒருவன். அப்போதே தண்ணீர் குடித்தாலன்றி உயிர் தரிக்காது என்ற நிலையில் அவன் இருக்கிறான். உடனே அவனைப் பார்த்து ஒருவன் “அப்பா நீ நிற்கிற பூமிக்கு அடியிலேயே தண்ணீர் நிறைய உள்ளது. எடுத்துக் குடிப்பது தானே!” என்று சொன்னால், இது நடக்கிற காரியமோ? அவன் கடப்பாறையும் மண்வெட்டியும் கொண்டு தண்ணீரைத் தோண்டி எடுப்பதற்குள் அவன் ஆயுள் முடிந்துவிடும்.

சரி, நிலத்தடி நீர் வேண்டாம். அண்ட பேரண்டங்களுக்கு வெளியில் பல்கிப் பெருகிக் காணப்படும் ஆவரண ஜலமாவது அவனுக்குப் பயன்படுமா என்றால் அதுவும் இவன் தாகத்தைத் தீர்க்கப் பயன்படாது. ஏனெனில் அது அண்டத்திற்கு வெளியிலன்றோவுள்ளது!
அண்டத்திற்கு உட்பட்ட திருப்பாற்கடலோ நாம் இப்போதே சென்றடைய வேணுமென்று நினைத்தால் அடைய முடியாதபடி வெகு தூரத்திலிருக்கிறது. எனவே பாற்கடலும் தாகத்தை தணிக்காது.
என்றைக்கோ வெள்ளம் எடுத்துப் பாய்ந்த பேராறுகள் உள்ளனவே. அவை இப்பூமியில்தானே வெள்ளமாகப் புரண்டு ஓடின! அவற்றைக் கொண்டு தாகம் தணியலோமே என்றால், எப்போதோ வெள்ளம் எடுத்தோடிய ஆறுகள் இப்போது எப்படிப் பயன்படும்? வெள்ளக் காலத்தில் வேண்டுமானால், அப்போதிருந்தவர்களுக்கு அவ்வாறுகள் பயன்பட்டிருக்கும். இப்போது அவையும் பயனற்றவையே!
பின் எந்தத் தண்ணீர்தான் தாகத்தைத் தீர்க்கும் என்றால், என்றைக்கோ வெள்ளமெடுத்து ஆறுகள் பெருகி ஓடும்போது நம் முன்னோர்கள் அவ்வெள்ள நீரானது வீணாகிவிடாமல் இருப்பதற்காக ஏரிகளையும் குளங்களையும் வெட்டி வைத்திருப்பார்கள். அவைகளிலே வெள்ளமானது தேங்கி நின்று பிற்காலத்தவர்களுக்கும் பயன்படும்; அதுவே உடனடியாக தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்குப் பயன்படும்.
இதே போலத் தான் எம்பெருமானும், அவன் ஐந்து நிலைகளில் எழுந்தருளி யுள்ளான். அவன் பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை பரத்வம் எனப்படும். அவன் திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை வ்யூஹம் எனப்படும். அவன் ஒவ்வொரு பொருளிலும் மறைந்து உறையும் நிலை அந்த்ர்யாமித்வம் எனப்படும். அவன் திவ்யதேசங்களிலும், மடங்களிலும், திருமாளிகைகைளிலும், மற்றும் பற்பல இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலை அர்ச்சாவதாரம் எனப்படும்.

உடனே தண்ணீர் பருக நினைப்பவனுக்கு பூமிக்குள் தண்ணீர் இருந்தும் பயன்படாதது போல, உடனே அவனைக் கண்டு அனுபவிக்க வேணுமென்று விரும்புபவனுக்கு, உள்ளத்தின் உள்ளே எம்பெருமான் உறைந்திருக்கச் செய்தேயும், அவனை உடனே காண முடிவதில்லை. அஷ்டாங்க யோக முயற்சிகளாலே, தவ யோகங்களாலேயே காணும்படி நிற்கும் அந்தர்யாமித்வம், அவனை உடனடியாகக் காணவேண்டும் என்றிருப்பார்க்கும் பயனற்றதே.

பரமபதத்தில் எழுந்தருளியுள்ளவனை (அண்டத்திற்கு வெளியிலுள்ள தண்ணீர் போல) அங்குச் சென்றவர்கள் காணலாமே தவிர, இங்கிருப்பவர்கள் காணமுடியாது. பாற்கடலும் அப்படியே ஆகும்.
என்றைக்கோ வெள்ளமெடுத்துப் பாய்ந்த பேராறுகள் இன்று பயன்படாதது போல, எம்பெருமானுடைய விபவாவதாரங்களும் பயனற்றவையே. அவன் ராமனாகவும் கண்ணனாகவும் அவதாரங்கள் செய்து இந்நிலவுலகில் உலவியிருந்தாலும், அவன் அப்படி அவதரித்த காலங்களில் வாழ்ந்திருந்தவர்கள் வேண்டுமானால் அவனைக் கண்டு அனுபவித்திருக்கலாமே தவிர, இன்று அந்த விபவ அவதாரங்களை நாம் கிட்டி அனுபவிக்கமுடியாது.

ஆனால் ஏரிகளிலும் குளங்களிலும் மடுக்களிலும் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் எக்காலத்திலும் பயன்படுவது போல, அவ்விபவாவதாரங்களையெல்லாம் தேக்கி வைத்திருக்கின்ற அர்ச்சாவதாரம்தான் நமக்கெல்லாம் நன்கு பயன்படக் கூடியது. கோயில்களிலும், மடங்களிலும், திருமாளிகைகளிலும், குடில்களிலும், கண்ணாலே கண்டு வணங்கலாம்படியாக “பின்னானார் வணங்கும் சோதி” என்கிறபடியே எழுந்தருளியிருக்கிற அர்ச்சாவதாரம் என்கிற நிலையே நமக்கெல்லாம் தஞ்சம்.

என்றைக்கோ வெள்ளமாக ஓடிய நீரே ஆறுகளிலும் ஏரிகளிலும் தங்கி இன்றைக்கும் நமக்கு உதவுவது போலவே, என்றைக்கோ எம்பெருமான் கொண்ட விபவாவதாரங்களே இன்றைக்கும் அர்ச்சை வடிவில் நமக்கு உதவுகின்றன.

“பூகதஜலம் போலே அந்தர்யாமித்வம்; ஆவரண ஜலம் போலே பரத்வம்; பாற்கடல் போலே வ்யூஹம்; பெருக்காறு போலே விபவங்கள்; அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்” என்பது ஸ்ரீவசனபூஷணம் (39).

விபவாவதாரமான கிருஷ்ணாவதாரத்தில் அவன் வெண்ணெய்க்காடும் பிள்ளையாகச் செய்த கூத்துக்களை யெல்லாம் தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் மகிழ்கிற நாம், அவ்வெண்ணெய்க்காடும் பிள்ளையை வணங்கி வழிபட்டும் பூசித்தும் மகிழ வேண்டுமானால் அது முடியுமா என்ற கேள்வி எழலாம். என்றைக்கோ அவதரித்த கண்ணனை இன்றைக்கு எப்படி நாம் கண்டனுபவிப்பது? என்ற கேள்விக்கு ஆசார்யர்கள் மிக அழகாக விடை தருகிறார்கள். வெண்ணெய்க்காடும் பிள்ளையைக் கண்டனுபவிக்க நாம் ஸ்ரீரங்கத்திற்குச் சென்றால் போதும்! ஆம்; திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொண்டிருக்கும் பெரிய பெருமாளே கண்ணனாக அவதரித்து வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையாகச் சேஷ்டிதங்கள் செய்தவர் என்கிறார்கள் ஆசார்யர்கள்.
“(கண்ணனை) பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால், அவதாரத்தில் பிற்பாடர்க்கும் உதவுகைக்காகக் க்ருஷ்ணன் வந்து கண்வளர்ந் தருளுகிறான்” என்று ஸ்மரிக்கலாம்படியாய்த்து இருப்பது”
என்கிறார் (திருமாலை 18ம்பாசுர வ்யாக்யானத்தில்) பெரியவாச்சான்பிள்ளை. பெருக்காறு போன்ற க்ருஷ்ணாவதாரத்தை அனுபவிக்க முடியாதவர்களுக்காக, அதிலே தேங்கின மடுப்போலே திருவரங்கத்திலே பெரிய பெருமாளாகக் கண்வளர்ந்தருளுகிறாராம். இங்கு மேலே வ்யாக்யானத்திலுள்ளதும் காண்மின்.

“யசோதைப்பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கைவளரும்படி வளர்த்த மொசுமொசுப்பெல் லாம் தோற்றியிருக்கும் பெரியபெருமாளைக் கண்டால்” என்றும், “வஸிஷ்டாதிகளாலே ஸுசிக்ஷிதராய் வளர்ந்து படிந்த விநயமெல்லாம் தோற்றும்படியான சக்ரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம்படியிருக்கும் நம்பெருமாளைக் கண்டால்” என்றும் பட்டர் அருளிச் செய்வர்.

கண்ணபிரானுடைய மனத்திற்கு ஒரு வாட்டமும் வரக்கூடாது என்று யசோதைப் பிராட்டி, அவன் செய்யும் தீம்புகளையெல்லாம் தடை செய்யாமல் அவை மேலும் மேலும் வளரும்படி காணாக்கண் இட்டிருப்பாளாம். “அஞ்ச உரப்பாள்—அசோதை, ஆணாட விட்டிட்டிருக்கும்” (நாச்சியார் திருமொழி 3-9) என்று தாயாலே அனுமதிக்கப்பட்ட பின்பு கண்ணபிரான் வெண்ணெயை வாரி வாரி விழுங்குவானாம். ஆதனால் அவனுடைய திருமேனியே தளதளவென்று இருக்குமாம். அந்த மொசுமொசுப்பை இன்றும் நாம் பெரிய பெருமாள் திருமேனியிலே காணலாம் என்கிறார் பட்டர்.

பெரிய பெருமாளை க்ருஷ்ணாவதாரமாகவிறே நம் பூர்வாசார்யர்கள் அநுஸந்திப்பது. “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெயுண்ட வாயன் என்னுள்ளங் கவர்ந்தானை” என்றாரிறே திருப்பாணாழ்வார். திருப்பவளத்தை மோந்துபார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்குமாய்த்து.
என்று (பெரியாழ்வார் திருமொழி 4-9-10ம் பாசுர வ்யாக்யானத்தில்) மணவாள மாமுனிகளும் அருளிச் செய்துள்ளது மிகரஸமானது.

பெரியபெருமாள் திருப் பவளத்தில் இப்போதும் கூட வெண்ணெய் மணம் வீசுகிறது என்று மாமுனிகள் அருளிச் செய்தது மட்டுமல்ல. பெரிய பெருமாளது திருமேனியை ஒவ்வொரு அவயவமாக அனுபவித்து வரும் கிரமத்தில் பெரிய பெருமாளுடைய திருவுதரத்தை வர்ணிக்கும் பராசரபட்டர். “ப்ரணத வசதாம் ப்ருதே தாமோதாத்வகர கிண:” - பெரியபெருமாளுடைய திருவுதரத்திலிருக்கும் தழும்பானது அவன் அடியவர்க்கு ஆட்பட்டவன் என்பதைச் சொல்லுகிறது என்றருளிச் செய்கிறார். வெண்ணெயைக் களவு செய்த போது யசோதைப் பிராட்டி தாம்பினாலே கட்ட, அதனால் வயிற்றிலே தழும்பு ஏற்பட்டுவிட அத்தழும்பை இன்றும் நாம் பெரிய பெருமாள் திருமேனியில் ஸேவிக்கலாம் என்கிறார் பட்டர்.

‘சேஷியுடைய திருவிலச்சினை’ என்பர் பட்டர் என்றருளிச்செய்கிறார் ஆய் ஜநந்யாசார்யர் (திருப்பாவை 5ம் பாசுர நாலாயிரப்படி வியாக்யானத்தில்). அதாவது நாம் எம்பெருமானுக்கு ஆட்பட்டவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அவனுடைய சங்குசக்கர சின்னங்களை நம் தோள்களில் திருவிலச்சினைகளாக நாம் தரிப்பது போல, அவனும் தன் அடியவர்களுக்குத் தான் கட்டுப்பட்டவன் என்று காட்டிக் கொள்வதற்காகத் திருவிலச்சினையாக இத்தழும்பை தரித்துக் கொண்டிருக்கிறான் போலும்! என்பது பட்டர் கருத்து.

கண்ணபிரானுடைய வயிற்றிலுள்ள தழும்பு பெரிய பெருமாள் திருமேனியிலும் உள்ளது. கண்ணன் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவும் போது உடை சற்றே நழுவ, அத்தழும்பு வெளியில் தெரிந்ததாம். அப்போது அங்கிருந்த இடைச்சிகள் சிரித்தார்களாம். அதனால் கண்ணன் வெட்கமடைந்தானாம். அதனால்தான் இன்றும் பெரிய பெருமாள் திருமேனியிலுள்ள தழும்பு வெளியே தெரியாமல் இருக்கும் பொருட்டு உத்தரீயம் சாத்தப்படுகிறது என்று நஞ்சீயர் அருளிச் செய்வாராம்.

“பணைகளிலே தாவினவாறே உடைநழுவத் தழும்பைக் கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள். அத்தழும்பு தோன்றாமைக்கிறே நம் பெருமாள் கணையம் மேல் சாத்துச் சாத்துகிறது” என்று ஜீயர்.
என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (திருப்பாவை 5ம் பாசுர ஆறாயிரப்படி வியாக்யானத்தில்) அருளியுள்ளார்.

பெரியபெருமாளுடைய திருவடிகளை வர்ணிக்கும் பராசரபட்டர் “யத்ப்ருந்தாவன பண்டிதம் ததிரவைர் யத்தாண்டவம் சிக்ஷிதம்” (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 1-115) என்றருளிச் செய்கிறார். அதாவது பெரியபெருமாளது திருவடிகள் பாண்டித்யம் பெற்றவை. அதற்கு சிக்ஷை எங்கே என்றால், தயிர்கடையும் ஓசைக்கு ஏற்ப தாண்டவம் செய்து பயிற்சி பெறுவிக்கப் பட்டது என்கிறார். அதாவது ஆய்ச்சி தயிர் கடையும் போது அதன் ஓசைக்கிணங்க கண்ணன் நாட்டியம் ஆடுவதுவழக்கம். (“தத்நா நிமந்தமுகரணே நிபத்ததாளம் நாதஸ்ய நந்தபவநே நவநீத நாட்யம்” (கோபாலவிம்சதி-4) என்று வேதாந்த தேசிகன் அருளியுள்ளமை காணலாம்.) எனவே பெரிய பெருமாளுடைய திருவடிகள் தயிர்கடையும் ஓசையினால் சிக்ஷை செய்விக்கப்பட்ட தாண்டவத்தை உடையது என்கிறார் பட்டர்.

ஆகப் பெரியபெருமாள் திருமேனியில் வெண்ணெய் உண்ட மொசுமொசுப்பு; திருப்பவளத்திலே வெண்ணெய் மணம்; திருவுதரத்திலே கட்டுண்டிருந்த தழும்பு. திருவடிகளில் நவநீத நாட்யம். எனவே வெண்ணெய்க்காடும் பிள்ளையை நேரில் ஸேவித்து அனுபவிக்க விரும்புபவர்கள் பெரிய பெருமாளை ஸேவித்து மகிழலாம்.