
இதைப் படிக்கும்போது விக்ரம் – வேதா படத்தின் விஜய் சேதுபதி கண்முன் வந்து போகலாம். ம்…, அந்தப் படம் முழுவதுமே அவர் கதை சொல்வதில்தான் நகரும். இந்தக் கட்டுரையும் கதை சொல்வது பற்றித்தான்.
“ஒரு ஊர்ல… ஒரு ராஜா இருந்தாராம்….” என்றோ அல்லது..
“ஒரு ஊர்ல ஒரு குள்ளநரி இருந்துச்சாம்….” என்றோ...
“ஓரு ஊர்ல ஒரு மந்திரவாதி இருந்தானாம்…” என்றோ ஆரம்பித்து சொல்லப்படும் விதம் விதமான கதைகள்.
கதைகளில் கடவுள், மனிதர்கள், மலைகள், காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள், பூக்கள், செடிகள், மரங்கள், பூச்சிகள், வேற்றுக்கிரகவாசிகள் என்று எல்லாவகையான பாத்திரங்களும் இருக்கும்.
அப்போதெல்லாம், கதை கேட்பதற்காகவே குழந்தைகள் கூட்டம் காத்திருக்கும். பள்ளி நாட்களில், நீதிக்கதைகள் சொல்வதற்காகவே ஒரு பாடவேளை இருக்கும். அந்த நேரத்தில், ஆசிரியர்கள் கதை சொல்லி முடித்த பின், குழந்தைகளுக்கும் கதைசொல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வமாக கதைகளைக் கேட்பதற்கும், சொல்வதற்கும் காத்திருப்பார்கள்.
சிலர், தான் கற்றுக்கொண்ட கதைகளை வகுப்பில் திறம்படச் சொல்ல, இன்னும் சிலர்… “அப்றம் என்ன ஆச்சு தெரியுமா….?” என்று சொல்லிவிட்டு.. மறந்த பகுதியை கொஞ்சம் யோசிக்க ஆரம்பிக்க, இன்னும் சிலருக்கு பாதிக்கதை சொன்ன பிறகு, மீதிக்கதை மொத்தமாகவே மறந்து போகும்… உடனே, “ஏய்.. நான் அடுத்த க்ளாஸ்ல கரெக்டா சொல்றேம்பா….” என்று சொல்வதும் சுவாரசியமாக இருக்கும்.
வீட்டிலிருக்கும் தாத்தா, பாட்டிகள் மட்டுமில்லாமல் அம்மா அப்பாக்களும் கதை சொல்வதில் தேர்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் மூலமாகவே ராமாயணமும் மகாபாரதமும், கிருஷ்ணன் கதைகளும், பைபிள் கதைகளும், இசுலாமிய சமூகக்கதைகளும் அடுத்த தலைமுறைக்கு அறிமுகமாயின.
இவை மட்டுமில்லாமல், பரமார்த்த குரு கதைகள், தெனாலி ராமன் கதைகள், முல்லா கதைகள், பீர்பால் கதைகள் என சிந்தனையைத் தூண்டி சிரிக்க வைக்கும் கதைகளும், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதை ராமன் கதை, விக்ரமாத்திதன் கதை போல யோசிக்க வைக்கும் கதைகளும், அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் உள்ளிட்ட அரேபிய இரவுகள் புத்தகத்தில் உள்ள கதைகளும் குழந்தைகளைக் கட்டிப்போட்டன.
கதை சொல்லும் விதத்தில் ஒவ்வொன்றையும் அவர்கள் கற்பனை செய்து பார்க்கமுடிந்தது. பறக்கும் கம்பளத்திலும், பறக்கும் செருப்பிலும் தங்களுடைய கற்பனையில் அவர்களே பறந்தார்கள்.
“காக்கா மூக்குல ஒரு வடைய தூக்கிட்டுப் போய் மரத்து மேல உக்காந்துச்சாம்…..” என்றபோது சூடான வடையை காக்கா மூக்கில் தூக்கிக்கொண்டு பறந்தததையும்,
“காக்கா தாகத்தால தண்ணியத் தேடித் தேடி அலஞ்சிச்சாம்…. அதுக்கு எங்கயுமே தண்ணி கிடைக்கலையாம்…” என்று சொன்னபோது… “சே.. பாவம் காக்கா…” என்றும் மனக்கண்ணால் பார்க்க முடிந்தது.
கிருஷ்ணன் காளிங்கன் மேல் நடனமாடியதை நினைத்துப் பார்க்க முடிந்தது…. அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்ததை கேட்டபோது, நமக்கே பலம் கூடியது போல உணர முடிந்தது.
கலிவர் – லில்லிபுட் கதைகளைப் படிக்கும்போது பெரிய உருவத்தையும் சிறிய உருவத்தையும் கற்பனையில் கண்டு மகிழ முடிந்தது…
இவை மட்டுமில்லாமல், படக்கதைகளும் வலுவான ஒரு இடத்திலிருந்தன. குழந்தைகளுக்கான பத்திரிக்கைகளில் தொடர்ந்து படிக்கும்போது, அந்தக் கதைகளின் பாத்திரங்கள் குழந்தைகளின் விளையாட்டுத்தோழர்களாகவே மாறிப்போயிருந்தார்கள். அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர் இவைகளெல்லாம் பல பாத்திரங்களைத் தந்து மகிழவைத்தன.
வானொலியில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் அருமையான கதைகள்சொல்லப்பட்டன. இது மட்டுமல்லாமல், ஸ்ரீ ராம நவமி, வினாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளின் போது, பந்தல்கள் போடப்பட்டு, பத்து நாட்களுக்கு புராணத் தொடர் சொற்பொழிவுகள் நடக்கும். ஹரிகதை எனப்படும் கதாகாலட்சேபங்கள், வில்லுப்பட்டு மூலமாகக் கதை சொல்வது என பல்வேறு விதங்களில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
சரி…. ஏன் கதை சொல்வதற்கு இவ்வளவு பெரிய நீண்ட அறிமுகம்…? காரணமில்லாமல் இல்லை. ரயில்வே ஸ்டேஷனைப் பற்றிய கதையினை என்னுடைய அப்பா சொல்லும்போது…. நிஜமாகவே ஒரு ரயில்வே ஸ்டேஷனில், ரயிலில் நான் உட்கார்ந்திருப்பது போலவே தோன்றும். அவ்வளவு அற்புதமாக வர்ணிப்பார்.
கதை சொல்வது என்பது ஒரு கலை. மிகுந்த உற்சாகத்துடன்… சொல்ல வருவதை கொஞ்சமும் தொய்வில்லாமல் குரல் ஏற்ற இறக்கங்களுடன், கண்கள் விரிய , ஆக்ஷன் ஹீரோ அல்லது ஹீரோயின் போல கதை சொல்பவர் சொல்ல…. அவருக்கு ரசிகர் கூட்டமாக ஒரு பெரிய மழலைப் பட்டாளம்… “ஆ” வென வாயைப் பிளந்துகொண்டு, கைதட்டியும்… தலையாட்டியும்.. தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டும் கேட்பது….. கண் கொள்ளாக்காட்சி.
இப்போது ஏராளமான கதைகள் அனிமேஷன் மூலம் அழகாக விளக்கப்படுகின்றன. எல்லா மொழிகளிலும், குழந்தைகளுக்கான பல கதைகள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு வேறுபாடு, காட்சிகளை கற்பனை செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் போனதுதான். காதால் கேட்கப்படும்போது, காட்சிகளை அவரவர் விருப்பத்துக்கேற்ப கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
“ஒரு பயங்கரமான காட்டுப்பாதைல…. ஒரு குதிரை வேகமா ஓடிக்கிட்டு இருந்துச்சாம்….” என்று கதையில் சொல்லப்பட்டால், அதைக் கேட்கும் ஒரு குழந்தையின் கற்பனையில் வெள்ளை நிற குதிரையும், இன்னொரு குழந்தையின் கற்பனையில் கருப்பு நிறக்குதிரையோ அல்லது பழுப்பு நிறக் குதிரையோ வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்.
தாகத்தோடு தண்ணீருக்காக அலையும் காக்கா அனிமேஷனில் அலைகிறது… ஜாடியில் கல்லை எடுத்துப் போட்டு , தண்ணீர் மேலே வந்ததும், குடித்துவிட்டுப் பறக்கிறது. எல்லாமே காட்சிப் படுத்தப்படுவதால், நினைத்துப் பார்க்கவேண்டிய அவசியம் இருப்பதில்லை. இதில் கதையின் கருத்து நன்றாகப் புரிகிறது என்றாலும், அதை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.
இப்போது ஜூம் மற்றும் கூகிள் மீட் மூலம் நிறைய கதை சொல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன. அவரவர் வீட்டுக் குழந்தைகள் சொல்லும் கதைகள் யூ டியூபில் காணொலிகளாக வலம் வந்து, உலகத்தின் எல்லா மூலையிலும் உள்ள உறவினர்களையும் நண்பர்களையும் இந்தக் கதைகள் இணையம் மூலம் சென்று அடைகின்றன. இது மிகப்பெரிய வரம்.
புதுமையான, தேவையான அனைத்துக் கருத்துக்களும் கதை வடிவில் சொல்லப்படுகின்றன. இதில் தொடுதல் என்பது எப்படி வேறுபடுகிறது.. “குட் டச் – பேட் டச்” உட்பட, அனைத்தும் கதை மூலம் எளிமையாக விளக்கப்படுகிறது.
முன்பெல்லாம் வீட்டிலேயே சித்தப்பாக்களோ மாமாக்களோ சிறந்த கதை சொல்பவர்களாக இருந்தனர். நாள் கிழமைகளில் இவர்களின் கதைக் கச்சேரி அமர்க்களமாகக் களைகட்டும். பெரிய ரசிகர் குழாம் இருக்கும். இப்போது தேர்ந்த தொழில்முறை கதை சொல்லிகள் இதற்கெனவே இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய விரல்களில் சில பொம்மைகளை மாட்டிக்கொண்டும் அல்லது இன்னும் தேவையான பொருள்களுடனும் கதைக்களத்தில் இறங்கி சுவாரசியமாகக் கதை சொல்லி கலக்குகிறார்கள். இதைப் போலவே குழந்தைகளிலும் தேர்ந்த கதைசொல்லிகள் இருக்கிறார்கள்.
மொத்தத்தில், எல்லா காலத்திலும் கதை சொல்வதும், கதை கேட்பதும் அலுத்துப்போவதே இல்லை.
வீட்டிலிருப்பவர்களும் கதை சொல்வதை குழந்தைகளிடம் ஊக்குவிக்கும்போது, தங்கள் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு, குழந்தைகள் அற்புதமான கதைகளைச் சொல்வார்கள்.
எத்தனை வேலைகள் இருந்தாலும், குழந்தைகளின் கதைகளைக் கேட்பதும், அவர்களுக்குப் புதுப் புது கதைகள் சொல்வதும், பல மாற்றங்களைக் கொடுக்கும். அனிமேஷன் கதைகள் ஒரு புறம் இருக்கட்டும்…. புத்தகக் கதைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம்…கற்பனைவளத்தை வளர்ப்போம்….!!!
சரி, இந்தக் கதை எப்படி இருக்கு…?
ஒரு கதை சொல்லட்டா சார்……..!!!

Leave a comment
Upload