

காவிரி மைந்தன்

இரவும் பகலும் எனக்கு எதிரிகளாகின்றன!
அன்பே!
பகலிரவு விரட்டுவது என் வேலையானது!
பின் என்ன என் தோழி மாலையில் மட்டுமே வந்து தரிசனம் தருகிறாய்!
மற்ற நேரங்களெல்லாம் நான் ஊமையாய் மாறுகிறேன்!
என் கருவிழிப்படலத்தில் கன்னியுன் முகம் மட்டும்தான் கண்ணாடியில் தெரிகிறது!
எனக்கே என்னைத் தெரியவில்லை!
யார் என்று சொன்னாலும் புரிவதில்லை!
உனக்கே உனக்காக.. நான் என்பதை மட்டும் ஓதிக்கொண்டே செல்கிறேன்! வருகைப்பதிவுகள் வசப்படவில்லையென்றால் இரவும் பகலும் எனக்கு எதிரிகளாகின்றன!
மாலையில் உன்னை நான் காணாவிட்டால் மரணவாசலை மனம் நாடுகிறது!
ஒரு நாள் அல்ல.. மறுநாள் அல்ல.. இதுதான் நாளும் நடக்கிற நாடகம்!
நாடகம் என்றே நினைத்தாலும் அதில் நான் என்னவோ உயிரோடுதான் .. உன்னோடுதான்.. உலா வருகிறேன்!
படபடப்பாய்.. துடிதுடிப்பாய் இதயம் இயங்குவதை உன்னைக் காதலித்த பிறகுதான் உணர்கிறேன்!
நேற்று என்பது நினைவைச் சுமப்பதற்கும் இன்று என்பது உன்னுடன் இருப்பதற்கும் நாளை என்பது நமக்காக மலர்வதற்கும் சேதி சொல்லடி!
பெளர்ணமி நிலவில்.. உன் குளிர்முகம் கண்டு.. என்னுயிர் வரை பாய்ந்த மின்சாரத்தில்.. தளிர்க்கொடி உன்னை தாலாட்ட வந்தேன்.. தயக்கமென்னடி.. தழுவிக் கொள்ளத்தான்! தனிமை போதுமே.. இனிமை சேரத்தான்!
என்னை உன்னில்தான் எழுதிச் செல்லத்தான் என்னைத் தருகிறேன் என்ற உன்னைத்தான் இமைகள் படபடக்க.. இளமை வரவேற்க.. அன்பில் தினம் வளரும் ஆனந்த உறவு என்று இருமன இணைப்பு.. இணைந்தபின் தவிப்பு.. உன் கண்ணில் விழுகின்ற தூசி கூட கடும் சொல்லாய் என் காதில் விழும் என்று நீ அறிவாயோ!
மற்று உனைத் தொடும் விரல்கூட நகமின்றி பட்டு மெத்தைபோல் பாங்காய் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை எனக்குள் நான் செய்கின்றேன்!
தங்கத்துகள்களே உன் மேனி முழுவதும் தடவி வைத்ததுபோல் அங்கம் முழுவதுமே பளபளக்கும் அதிசயம் என்ன? சங்கமக் கோலம் காணும் பள்ளியறை நுழையும்போது பரவசங்கள் நெஞ்சில் பாயும் மாயமென்ன?
தேன்விழும் மடியில் என நான் நினையா நேரமதில் நீ வந்து மடி சாய்ந்தாய்!
கனிவிருந்து தருவதற்கு கன்னி நீயும் தயார் என்று என் காதில் ஏதோ ஒரு அசரீரீ சொல்லியது! இதழ் மருந்து தடவி முதல் இன்ப ஆற்றில் கடத்து!
முதல் விருந்தில் கணக்கெதற்கு இச்சைப்படி நடத்து! மல்லிகைச்சரம் தொடுத்து மன்னவன் மனம் தொடுகின்ற உன்னை நான் மறக்கத்தான் முடியுமோ?
மஞ்சள்நதி முகத்தில் காட்டி.. மார்பழகில் மயக்கம்கூட்டி.. மெளனம் ஒன்றே போதும் என்று எனை அணைக்கும் கண்மணியே!
முத்தமிடும் நேரம் எங்கே என்று முழுமனதில் ஆசைபாய.. முன்னுரிமை உனக்காக எனக்கா என்று மனதிற்குள் லாவணி நடக்க.. கட்டுக்கடங்கா அலைகள் அன்றோ ஆசையில் துள்ளி வருகின்றன!
இந்திரலோக சுந்தரியிவளோ என்று பெண்கள் கூட உன்னை நினைக்க.. மண்ணில் தவழும் எந்தன் நிலவே! இன்னொரு பார்வை பாரடி என்றேன்!
ஒற்றைப் பார்வை போதை தரும்!
மற்றொரு பார்வை தடுமாறிட வைக்கும்! எப்படியிருப்பினும் எல்லாம் பார்வையாலேதான் நடக்கும்! சித்திர விழி போல் மெல்லத்திறந்து செவ்விதழ்கள் இரண்டும்தான் சிவந்து.. என்னுளம் முழுதும் நீயே நிறைந்து.. காதல் தத்துவம் சொன்னாய் பூங்கொடியே!
முன்னுரை என்பதில் மோகம் வரும்! மோகம் உடனே தாகம் வரும்!
யோகம் இருந்தால் நேரம் வரும்! நேரம் வந்தால் நெஞ்சம் தொடும்! அன்பு மழையில் நாம் நனைய இன்பம் எதுவரை காண்போமா? நாளை இதைவிட நடக்கும் என்றே தற்காலிகமாகப் பிரிவோமா?
அடியே சகியே.. பிரிவோம் என்றொரு வார்த்தை சொல்லாதே!
உள்ளம் பிரியா உணர்வுகளினாலே உன்னை எண்ணும் என்னை நீயும் ஒருநாள் கூட பிரியாதே!
பிரிந்தால் என்னுயிர் தாங்காதே!

Leave a comment
Upload