மீண்டும் குண்டுகள் தயாரிப்பா?

சர்வதேச அளவில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி, கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டின்மீது வல்லரசு நாடுகள் பொருளாதார தடை விதித்தன. அதன்பிறகு அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன.
அந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் நாட்டில் ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்து கொள்ளலாம், எந்தளவு செறிவூட்டலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபட்டதால், கடந்த 2018-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஈரான்மீது மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
இந்நிலையில், ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 90 கிமீ தொலைவில் போர்டோ மலைப்பகுதி, குவாம் நகரின் அருகே பூமிக்கு அடியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல், ரகசிய அணுஆயுத திட்டத்துக்கான கட்டிடங்களை ஈரான் நாடு கட்டி வருகிறது.
இதுவரை இப்படி பூமிக்கடியே 15-க்கும் மேற்பட்ட தூண்களுடன் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இவை போர் விமானங்கள் மூலம் நடத்தப்படும் வான்வழி தாக்குதல், நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில், மலைகளுக்கு இடையே மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை ‘மேக்சார் தொழில்நுட்ப மையம்’ என்ற நிறுவனம், கடந்த 11-ம் தேதி செயற்கைக்கோள் படங்களின் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.
செயற்கைகோள் புகைப்படங்களை ஆராய்ந்த அணுசக்தி நிபுணர்களும் இந்த செய்தியினை அங்கீகரித்துள்ளனர். இதனால் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a comment
Upload