தொடர்கள்
Daily Articles
ராக தேவதைகள்... - 19 - மாயவரத்தான் சந்திரசேகரன்

அடாணா

மஞ்சு பார்கவி


சில விஷயங்களை வாழ்வில் நம்மால் மறக்க முடியாது. முதல் காதல், முதல் சம்பளம், முதல் விமானப் பயணம்... என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சி பட்டியல் இருக்கும். ‘சலங்கை ஒலி’யில் மஞ்சு பார்கவி மேடையில் சுழன்று ஆட, அதை பார்த்துப் பரவசப்பட்டுப் போகும் கமல், உள்ளே சமையல்கட்டில் அதே பாடலுக்கு ஆடுவார்!

சுற்றிலும் கோட்டையடுப்புகளில் மும்முரமாக இருக்கும் சமையற் கலைஞர்கள், மற்றும் கமலின் அம்மா வேலைகளை விட்டுவிட்டு பிரமிப்புடன் கவனிப்பார்கள். தியாகராஜரின் ‘பாலகனகமய’வை ஒரு தேர்ந்த கர்நாடக இசைப் பாடகி போல பாடியிருப்பார் எஸ். ஜானகி. கமல் பிரமாதப்படுத்துவதை மறைந்திருந்து படமெடுப்பார் அவரை நேசிக்கும் ஜெயப்ரதா. மஞ்சு பார்கவி, கமல் இருவருமே முறையாக பரதம் கற்றவர்கள் என்பதால் இருவரிடமுமே அந்த நேர்த்தி தெரியும். பரதத்தில் அடவு சுத்தம், அங்க சுத்தம், அரை மண்டி சுத்தம் என்று மூன்று சொல்வார்கள். அந்த மூன்றையும் அவர்களிடம் பரிபூரணமாக காண முடியும்! குறிப்பாக ‘ரா ரா தேவாதி தேவா, ரா ரா மகானு பாவா’ என்று ஜானகி ராகத்தை இழைக்கும்போது, கமல் கரண்டி காம்பை தட்டுவாரே.. அது நயமான இடம்.. இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா கீர்த்தனையின் அழகு துளியும் குறைந்துவிடாமல் ஜனரஞ்சகப் படுத்தியிருப்பார். மறக்க முடியாத பாடல். மனதை விட்டு அகலாத கவித்துவமான காட்சி. அன்றிலிருந்தே நான் அடாணாவிற்கு அடிமையாகிவிட்டேன். முப்பத்தேழு வருடங்கள் ஓடி விட்டன..!

கமல்
இவ்வளவு அற்புதமான ஒரு கலைஞன் தேனியிலும் ,கம்பத்திலும் மைக் பிடித்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்! ‘சலங்கை ஒலி’, ‘மகாநதி’ போன்ற கிளாஸிக் சினிமாக்களை தர அவரிடம் இன்னமும் எக்கச்சக்க திறமை கொட்டிக் கிடக்கிறதே என்று என் மனது அடித்துக் கொள்கிறது. ஆனால், ஒரு கலைஞன் மக்களது அவதிகள் தெரிந்தும், கண்டு கொள்ளாமல் வேறு ஒரு பாதுகாப்பான தளத்தில் இயங்க போய்விடுவது ஒரு வித சுயநலமாகி விடாதா என நீங்கள் கேட்டால் என்னிடம் பதில் இல்லை. என் ஆதங்கம் எனக்கு!

20201127205000982.jpeg

அரியகுடி ராமானுஜ அய்யங்கார்

கம்பீரம், அதிகாரம், வீரம் போன்றவற்றுக்கு பெயர் பெற்ற ராகம்! அடாணாவை ‘காமா சோமா’ வித்வான்கள் பாடினாற் கூட ‘பலே’ சொல்ல வைக்கும். அந்த ராகத்தின் இயல்பான அழகு அப்படி! கிராமங்களில் தெருக்கூத்து நாடகங்களில் அறிமுகமாகும் ஒல்லியான பெரிய மீசை நடிகர் இந்த ராகத்தில் தான் பாதி ராத்திரியில் பாடிக்கொண்டு துள்ளி வருவார். அரை தூக்கத்திலிருக்கும் பெரிசுகள் சட்டென்று விழித்துக் கொள்ளும். நல்ல சாரீர வசதி இருந்தால் மேல் பஞ்சத்திற்கும் மேலேப் போய் மிரட்டலாம். அவ்வளவு ‘ஸ்கோப்’ இந்த ராகத்திற்கு உண்டு. சங்கராபரணத்தின் ஜன்யம் இது. ‘அனுபவ குணாம்புதி’ என்று தியாகய்யரின் கீர்த்தனையை அரியகுடி ராமானுஜ அய்யங்கார் பாடணும். கேட்கணும். ‘ ராஜகுல கலா ஷாப்தி ராஜா’ என்ற சரண வரியில் திடீரென்று ஊசி வெடி சரம் போல படபடவென்று ஸ்வரம் போடுவது அபாரமாகயிருக்கும். ‘நீ இரங்காயெனில் புகல் ஏது’ என்றொரு பாபநாசம் சிவன் பாடலை காலஞ்சென்ற என்.சி. வசந்த கோகிலம் பாடுவார். உடம்பு உறைந்து போவது போல இருக்கும். என்ன ஒரு குரல்.. என்ன ஒரு மேல் ஸ்தாயி..

20201127205104726.jpeg

பாம்பே சகோதரிகள்

‘தாயிரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ...’ என்ற சிவனின் அற்புத வரிகளை கோகிலம் குரலில் கேட்டால் அப்புறம் ஸ்ருதி போன கோலிவுட் குரல்களை கேட்கும் எண்ணமே வராது. ஸ்ரீ ரங்கம் கோபாலரத்தினம் என்ற பழைய பாடகியும் இப்பாடலை உருகி பாடுவதை கேட்டிருக்கிறேன். சுதா ரகுநாதனுக்கும் இது அதிக சீட்டு வரும் பாட்டு! ‘கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே’ என்று கோபாலகிருஷ்ண பாரதியின் கற்கண்டு பாடல் இதே ராகத்தில் அமைந்தது. பாம்பே சகோதரிகள் சி. சரோஜா, சி. லலிதாவும் அமர்க்களமாக பாடுவார்கள். சட்டென்று எம்.எஸ்-ஸும், ராதா விஸ்வநாதனும் இணைந்து பாடுவதாக தோன்றும்! சீர்காழி கோவிந்தராஜன் கூட இப்பாடலை அடிக்கடி பாடுவதுண்டு!

டி.எம்.எஸ்

கோடம்பாக்கம் வந்தால், பளிச்சென்று என் நினைவுக்கு வருவது, இசை அறிந்த உங்கள் பலருக்கு நினைவுக்கு வரும் அதே தான்... ‘யார் தருவார் இந்த அரியாசனம்’! ‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் கே.வி. மகாதேவனின் இசையில் இடம் பெற்ற இப்பாடல் அந்த மேதையின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக சொல்லலாம்! ‘மாணிக்க வீணையே...’ என்று விருத்தம் போல சில வரிகளைப் பாடி, ‘யார் தருவார்’ என்று டி.எம்.எஸ். கணீரென ஆரம்பிக்கும்போது, அடாணாவை அதைவிட கம்பீரமாக தமிழ் சினிமாவில் யாரும் பாடியதாக நினைவில்லை. ‘பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன், உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்’ என்று கண்ணதாசன் தன் பங்கிற்கு ஜமாய்த்திருப்பார். பாடலின் இறுதியில் கேதார கௌளையில் முடித்திருப்பார் மகாதேவன். அக்கால சங்கீதப் பிதாமகர்கள் எது செய்தாலும் அது அழகாகத்தான் இருக்கும். நடிகர் திலகம் சிவாஜி, அந்தப் பாடலின் உணர்வை உள்வாங்கிக் கொண்டு வாயசைத்திருக்கும் விதம், முகபாவம் அவரால் மட்டுமே சாத்தியம்.

20201127205338461.jpeg

எம்.எஸ்.வி

1959-ல் வெளிவந்த ‘தங்கப் பதுமை’யில் ‘வருகிறாள் உம்மை தேடி’ என்றொரு பாடலை எம்.எல். வசந்தகுமாரியும், சூலமங்கலம் சகோதரிகளும் பாடியிருப்பார்கள். விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் துளிகூட ராகத்திலிருந்து விலகாமல் ‘அக்மார்க்’ அடாணாவை தந்திருப்பார்கள். இந்த நடன பாட்டின் இறுதியில் போட்டி ஸ்வரங்களும் உண்டு. காதிற்கு அவ்வளவு சுகமாக இருக்கும். டி.ஆர். ராஜகுமாரியும், எம்.என். ராஜமும் வெளுத்திருப்பார்கள். இன்றைக்கு இப்படியொரு பாடல் காட்சியை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை! இளையராஜாவால் முடியும் என்றாலும், ஜீன்ஸ் பையன்களும், தலைவிரி பெண்களும், ‘தீப் பிடிக்க தீப் பிடிக்க முத்தம் கொடுடா’வில் மூழ்கிக் கிடக்கும்போது இதெல்லாம் ‘அலர்ஜி’யாகிவிடாதா'..?

அடாணா அடுத்த வாரமும்...

- இன்னும் பெருகும்