தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20201129181325580.jpeg
வருக 2021

புத்தாண்டு பிறக்கும்போது 2020 நிகழ்வுகள் நமக்கு நினைவுக்கு வந்து போகும். மார்ச் மாதம் முதல் நாம் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு அனுபவம் பாடம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... பெரிய அம்மை காலரா போன்ற நோய்கள் இந்தியாவில் அறிமுகமாகி அப்போது அல்லது பரவியபோது ஏற்பட்ட பர பரப்பை விட, கொரோனா அச்சுறுத்தல் நம்மை ரொம்பவும் பாதித்தது. போக்குவரத்து அதிகாரி ஒருவர் ஊரடங்கு காலத்தில் பொது ஜனம் ஒருவர் காலில் விழுந்து கதறினார்.. “ஐயா தேவையில்லாமல் வெளியே வராதீர்கள், இந்த நோய் பற்றி நமக்கு எதுவுமே இன்னும் தெரியவில்லை மருந்தும் இல்லை” என்று அழுதார்.

வீட்டுக்குள் வருவதற்கு முன் கை, கால் கழுவி வா என்று பாட்டி தாத்தா சொன்னதை நம்மில் எத்தனை பேர் கேட்டோம் என்று தெரியாது. ஆனால், அரசு சொன்னபோது எல்லோரும் கேட்டோம். என் மனைவி வாசலில் ஒரு பக்கெட் வைத்து மஞ்சள், கல் உப்பு போட்ட நீரை வைத்து கால், கை கழுவ கட்டாயப்படுத்தினாள். வாங்கிய காய்கறிகள் கூட வாசலில், மஞ்சள் உப்பு நீரில் குளித்துவிட்டு தான் உள்ளே நுழைந்தது. கொரோனா பயம் நம்மை இந்த அளவுக்கு ஆட்டிப்படைத்தது. முகக் கவசம், வேட்டி, சட்டை, புடவை மாதிரி கட்டாயமானது. அடிக்கடி பையைத் தூக்கிக்கொண்டு வெளியே போனவர்கள், வாசல் படி தாண்ட யோசித்தார்கள்.

மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் மறந்துபோய், ஆசிரியர், வீட்டு பெட்ரூம், சமையலறை என்று எல்லா இடத்திலும் செல்பேசியில் வந்து பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். பள்ளி மாணவர்களை விட தாய்மார்கள் பாடத்தில் அதிக கவனம் செலுத்தி கவனித்து வருகிறார்கள். இன்றுவரை பள்ளிக்கூட திறப்பு பற்றி அரசாங்கத்தால் உத்தரவாதமாக எதுவும் சொல்ல முடியவில்லை. காலாண்டு தேர்வு நடந்ததா, இல்லையா என்று தெரியவில்லை. அரையாண்டு தேர்வுக்கும் அதே கதிதான். ஆன்லைன் தேர்வு என்பதை மாணவர்கள் எவ்வளவு சிரத்தையுடன் எழுதினார்கள் என்று சொல்ல முடியவில்லை. காலாண்டு தேர்வு விடுமுறை... அரையாண்டு தேர்வு விடுமுறை, சந்தோஷத்தை மாணவர்கள் தொலைத்து விட்டார்கள். மாணவர்களுக்கு எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமை தான். ஆசைப்படுவது, விரும்புவது எல்லாம் ஒரு நாள் அலுக்க கூடியதுதான் என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது உண்மைதான் என்பதை என் தெருவில் இருந்த மாணவர்கள் எனக்கு போதித்தார்கள். இரவு 11 மணி வரை கிரிக்கெட், கால்பந்து என்று ஏதாவது விளையாடிக் கொண்டே இருப்பார்கள். இப்போது களைத்துப்போய், ஓரமாக உட்கார்ந்து கொண்டு யூடியூப் பார்க்கிறார்கள். அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்ற அக்கறை இப்போது பெற்றோர்களுக்கு அவசியமாகிறது. என் பேரன் கூட கூகுளில் சர்ச் செய்து, எதோ பார்த்துக்கொண்டிருந்தான். நானும், என்னதான் பார்க்கிறான் என்று பார்த்தேன். உடனே, டைனோசர், கரடி, நிலா பற்றி அவன் தேடி படித்ததை எனக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்தான். அவன் ஆர்வம் குறையக் கூடாது என்று நான் எப்போதும் அக்கறையுடன் கேட்பேன்.

பொருளாதாரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. என் அண்ணன் வீட்டில் குடியிருந்தவர் நான்கு மாத வாடகை பாக்கி. என் அண்ணனுடன் அதைக் கேட்க நானும் போயிருந்தேன். அப்போது வீட்டு வாசலில், ஏதோ ஒரு வங்கியின் கலெக்ஷன் ஏஜென்ட், ஒரு மாத பாக்கியாவது கட்டினால்தான், நான் இங்கிருந்து போவேன் என்று அடமாக நின்று கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து என் அண்ணன் வாடகை கேட்டபோது... வாடகைக்கு இருந்தவர், “அரசாங்கம் வாடகை கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கே... பேப்பர் படிக்கலையா” என்றார்.

உடனே என் அண்ணன், “அப்ப சரி... நீங்க காலி பண்ணுங்க.. நான் இங்கு குடி வரலாம்னு இருக்கேன்” என்று சொன்னபோது... “சார்... சார், சார் நாலு மாசமா கம்பெனி சம்பளம் தரலை சார்” என்று சட்டம் பேசியவர், கெஞ்ச ஆரம்பித்தார். அதற்குள் அவர் மனைவி, வங்கி கலெக்ஷன் ஏஜென்ட்டிடம் ஒரு மாத தவணை தொகையை தர... அவர், “அடுத்து வாரம் வருவேன்” என்று சொன்னபோது... அவர் மனைவி... “அடுத்த வாரம் எல்லாம் வந்தா தர முடியாது, சம்பளம் வந்தாதான். நீங்க கோர்ட்ல கேஸ் போடுங்க... நான் ஜட்ஜ்கிட்ட பேசறேன்” என்றார். நான் என் அண்ணனை, வா போகலாம் என்று இழுத்து வந்தேன். அரசு அலுவலகத்தில் ஓசைப்படாமல் சம்பளக் குறைப்பு, அள்ளிக்கொடுத்த கம்பெனிகள் கிள்ளி கொடுத்தது. சில கம்பெனி முதலாளிகள் ஈவு இரக்கமின்றி சம்பளமே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வைத்திருந்த சேமநல நிதி கரைந்து போனது. என்னிடம் ஒருத்தர் சொன்னார்... உங்களிடம் ஆயிரம் ரூபாய் இருந்தால், அது இன்று பத்தாயிரம் ரூபாய்க்கு சமம். அது உண்மைதான். சினிமா, பீச், ஹோட்டல், பஸ், ரயில் கிடையாது என்றாலும்... எல்லா வர்க்கமும் யோசித்து செலவு செய்வது இன்று வரை தொடர்கிறது. அது ஒரு பழக்கவழக்கமாகவே கிட்டத்தட்ட ஆகிவிட்டது.

ஆங்கிலப் புத்தாண்டு என்பது ஆங்கிலேயர்கள் நமக்கு அறிமுகப்படுத்திய பல பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று. தமிழக அரசு.. தமிழ் ஆண்டு - ஆங்கில ஆண்டு இரண்டையும் கலந்துதான் அரசாணையை பிறப்பிக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் இப்போதும் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார்கள். எனக்கு நிறைய டைரி மற்றும் காலண்டர்கள் வரும். டைரியை நண்பர்கள், உறவினர்கள் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். கேலண்டர் வேண்டாம் - பால்காரர், மளிகைகாரர், கவுன்சிலர் கொடுத்தார் என்று நிராகரிப்பார்கள்.

புத்தாண்டு அன்று எல்லா இந்துக் கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கும். ஆனால், தமிழ் பற்று ஆன்மீக ஆர்வலர்கள், கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவது சரியல்ல என்று தற்சமயம் ஆட்சேபனை செய்து வருகிறார்கள். எனக்கென்னவோ இந்த வாதம் சரி என்று தான் படுகிறது.

எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. என் அம்மா டைரியை விரும்பி வாங்கிக்கொண்டு, அதில் ஸ்ரீராமஜெயம் எழுதுவாள். டைரி எழுதுவார்கள், முழு 365 நாளும் டைரி எழுதுவதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் டைரி எழுதுவது நல்ல பழக்கம். நம்மை எது சரி, எது தவறு என்று எடைபோட இந்த பழக்கம் நமக்கு உதவும். என் மனைவி டைரி எழுதுவாள், அதில் பெரும்பாலும் நான் கடன் வாங்கிய விவரங்கள் தான் இருக்கும்.