தொடர்கள்
Daily Articles
சேனல் டாக்! - 07 - மெகா மாலினி

20201130055000718.jpg

விஜய் டிவி இப்போது பெரிய சந்தோஷத்தில் இருக்கிறது. காரணம், பிக் பாஸ் ஸீஸன் 4ன் இமாலய வெற்றி. டிஆர்பி அளவிலும் சரி..ஆளுக்கு ஆள் பல யூடியூப் சேனல்களில் அது பற்றி பேசுவதிலும் சரி..இந்த அளவு மைலேஜை வேறெந்த ஸீஸனிலும் விஜய் டிவி பெறவில்லை. குடோஸ் டு பிக் பாஸ் டீம். குறிப்பாக நிகழ்ச்சியை படு அமர்க்களமாக நடத்தி வரும் கமல்ஹாஸனுக்கு விகடகவியின் பெரிய பாராட்டு! வாரந்தோறும் வசீகரமான தோற்றத்தில் வந்து..ஒவ்வொரு வாரமும் நல்ல புத்தகங்களையும் நேயர்களுக்கு இந்நிகழ்ச்சி வாயிலாக அவர் அறிமுகப்படுத்துவது வெகு சிறப்பு! போட்டியாளர்களிடம் பாரபட்சமற்ற தன்மையும், தீர்மானமான நடுநிலை தராசுப் பார்வையும், கச்சிதமான சொற்களால் போட்டியாளர்களை தட்டிக் கொடுப்பதும், தவறுகளை சுட்டிக் காட்டுவதும் கமலுக்கு மட்டுமே உரித்தவை.

20201130055033391.jpg

ஆரம்ப வாரங்களில் சூடு பிடிக்காமல் சப்பென்றிருந்த பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போது டிவி தொகுப்பாளினி அர்ச்சனா காலடி எடுத்து வைத்தாரோ அப்போதிருந்தே சூடு தெரிய ஆரம்பித்து விட்டது. இவரையடுத்து பாடகி சுசித்ரா வீட்டிற்குள் சென்றார். இதன் பிறகு சண்டை சர்ச்சைகளை சற்று வெளி ப்படையாகவே போடத் தொடங்கினர் வீட்டு உறுப்பினர்கள். இதில் கோஷ்டிகள் வேறு உருவாகத் தொடங்க..கோஷ்டி பூசல்களால் சுவாரஸ்யம் கூடத் தொடங்கியது. வந்த வேகத்திலேயே...வெகு சீக்கிரமே வெளியேற்றப்பட்டார் சுசித்ரா.

அர்ச்சனா, அனிதா, சம்யுக்தா போன்ற பிக் பாஸ் பெண்கள் தங்களின் உச்சகட்ட குரலில் எதிராளிகளை மிரட்டியது கண்டு தமிழகமே மிரண்டதும் நடந்தது. இந்த மூவருமே நல்ல ஆட்டக்காரர்களாக இருந்த போதிலும் தங்களின் ஓவரான வாய்ப்பேச்சாலேயே வீழ்ந்த வீராங்கனைகள்!

20201130055114966.jpg

இதில் மாடல் மற்றும் நடிகையான சம்யுக்தா அதிகம் அறியப்படாதவர். அழகாக இருந்தவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் அழகாக இல்லை என்பது வருத்தமே! திமிர் அவரது நடையில் மட்டும் தெரிந்திருந்தால் பாதகமில்லை. அவர் வாயிலிருந்து வந்த பேச்சுக்களிலும் வெளிப்பட்டதுதான் அநியாயம்! ரசிகர்கள் இவரை நடுவிலேயே ஓட்டு போடாமல் விரட்டியது சந்தோஷம்!

20201130055154186.jpg

20201130055227200.jpg

20201130055418684.jpg

ரியோ, ஸோம், பாலாஜி போன்ற ஆண்கள் சூழலுக்கு ஏற்ப தந்திரமாகவும், குரூப்புகளோடு இணைந்தும், தனிப்பட்டும் வித விதமாக ஆடினாலும் ஆரம்பம் முதல் தனித்தும், நேர்மையாகவும் ஒன்றே போல விளையாடுகிறார் நடிகர் ஆரி. தான் தவறு செய்தாலும் அது குறித்து வருந்துகிறார்...நிஜமான உணர்வோடு உடனுக்குடன் மன்னிப்பும் கேட்கிறார். இவருக்கு இணையான புத்திசாலித்தனத்தோடு விளையாடும் பெண் என்றால் அது ரம்யா பாண்டியன் மட்டும் தான்!

2020113005545343.jpg

ஆஜித், கேப்ரியல்லா, ஷிவானி போன்றோர் கடைசி 3 வாரங்கள் வரை பிழைத்திருப்பது அதிசயமோ அதிசயம்! மூவருமே பெரிய அளவில் வீட்டில் எந்த ஒரு பங்கினையும் அளிக்கவில்லை. அடுத்தவர் நிழலில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள், இந்த ஒப்புக்கு சப்பாணிகள். இந்த வாரக்கடைசியில் இவர்களில் ஒருவரோ, இருவரோ வெளியேறுவது உறுதி!

20201130055520863.jpg

இந்த வாரத்தின் ஹைலைட் என்னவோ ஷிவானியின் அம்மா உள்ளே வந்து மகளுக்கு விட்ட டோஸ்தான். “எதுக்கு வந்த இங்க? விளையாடவா இல்லேன்னா அவன்(பாலாஜி) பின்னாடி சுத்தி எங்க மானம் மரியதையெல்லாம் காத்துல பறக்க விடவா? உனக்குன்னு ஒரு கருத்து இல்லையா? எங்கே வெளிப்படுத்தின? எதுக்கு இன்ஃபுளுயன்ஸ் ஆகுறே?” என காட்டமாகக் கேட்டு மகளை அழ வைத்து எச்சரித்து விட்டுப் போயிருக்கிறார். ஆக...அம்மாவின் நிஜ உணர்ச்சி வெடிப்பால் ஷிவானி இன்னொரு வாரம் தப்பிக்கலாம். சென்ற ஸீஸனில் இதே போல ஒரு கலாட்டா கவின் -லாஸ்லியா விஷயத்தில் நடந்தது. அதிலாவது கவின் மீது தவறு இருந்தது. ஆனால் பாலாஜி தனக்கு ஷிவானி மீது காதல் இல்லை என தெளிவாகச் சொல்கிறார். இருப்பினும் தன்னால் ஷிவானிக்கு பெயர் வெளியே கெட்டு விட்டதோ என மருகி அவர் அழ...இதுவே அவர் தொடர்ந்து இறுதி வரை பயணிப்பார் என்பதற்கு சாட்சி!

20201130055555975.jpg

ஆரம்பத்தில் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தி சீக்கிரத்திலேயே வெளியேறியது நேயர்கள் எதிர்பாராத விஷயமாக இருந்தாலும் சேனல் வட்டாரத்தில் இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். காரணம் அவரது வயது. இந்த கேம் ஷோவில் வயதில் மூத்தவர்களை முதல் கட்டத்திலேயே தூக்குவதுதான் ரெகுலராக நடக்கிறது. இந்த முறை முதல் ஆளாக வெளியேறிய நடிகை ரேகாவுக்கும் அந்த வகையில் தான் எக்ஸிட் நடந்தது. ஆனால் சுரேஷ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நன்றாகவே பங்களிப்பு செய்து வந்ததால் சில காலம் தப்பித்தார். அவர் நன்றாக சமைக்கக் கூடியவர் என்பதும் அவர் நீடித்ததற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது. இருப்பினும் அவரது எக்ஸிட்டிற்கு அவரது உடல்நலக்குறைவு ஒரு காரணமாகவும் அந்த வாரம் கிசுகிசுக்கப்பட்டது.

வெளியே வந்த பிறகு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சுரேஷ் உள்ளே இருக்கும் உறுப்பினர்கள் பற்றி ‘ஐயோ அது ஒரு ராட்சஸி..இது பிசாசு.. அது ஒரு பேய்” என்றெல்லாம் பகிரங்கமாக கமெண்ட் அடித்தார். இது முதலிரண்டு பேட்டிகளில் மட்டும் தான். அதன் பிறகு விஜய் டிவியிலிருந்து சேதி போக.. மனிதர் உஷாராகி விட்டார். அதற்கடுத்த பேட்டிகளில் எல்லாம் வீட்டு உறுப்பினர்கள் பற்றிய கேள்விக்கு சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசத் தொடங்கி விட்டார். அது சரி! மொத்த பிக் பாஸும் முடிந்தால்தானே எல்லோருக்கும் பேமண்ட் செட்டில் ஆகும்! அது வரை கப்சிப் கபர்தார் நல்ல விஷயம்தான்!

20201130055630497.jpg

அது அமைதியோ, அழகோ, ஆர்பாட்டமோ, ஆட்டம் பாட்டமோ, ஆரவாரமோ..எதுவானாலும் ஒரு லெவல் அதிகப்படியாக செய்தது நடிகை சனம் தான். இவரிடம் தெளிவான போக்கும், ரசிக்கக் கூடிய குழந்தைத்தனமும் இருந்தாலும் ஒரு பிடிவாதப் போக்கும், வம்புச்சண்டைகளில் தன்னை நிறுவும் போக்கும் இருந்தது மற்றவர்களை இரிடேட் செய்தது. எந்த நேரம் இவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குழப்பமாகவே இருந்தது.

20201130055730593.jpg

செய்தி வாசிப்பாளர் அனிதாவும் இதே டைப்தான் என்றாலும் அனிதாவிடம் இருந்த இயல்பான அறிவும், அருவி போன்ற தமிழ்ப் பேச்சும் அனிதாவை கூடுதல் காலத்திற்கு காப்பாற்றியது. அனிதாவின் ஆகப் பெரிய மைனஸ் பாயிண்ட் அவரது அசாத்திய கோபம்தான். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறிய ஒரு பெண், இன்னும் சற்று இனியவளாகவும் இருக்கலாம் என்பதே இவருக்கு பிக் பாஸ் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்! (பாவம்..இவர் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட இரண்டாம் நாளே இவரது எழுத்தாள தந்தை ஆர்.சி. சம்பத் நெஞ்சு வலியால் உயிரிழந்திருக்கிறார். இந்த சோகத்திலிருந்து அனிதாவும் அவரது குடும்பமும் விரைவில் மீண்டு வர நம் பிரார்த்தனைகள்!)

மீண்டும் பிக் பாஸுக்கு வருவோம்!..இந்த வீட்டில் பாடகர் வேல்முருகன், ஜித்தன் ரமேஷ் போன்ற உறுப்பினர்களும் இருந்தார்களே என்றால்...அவர்கள் சும்மா வந்து போனார்கள். எங்கோ, எப்போதோ சில சமயம் வாய் திறந்தார்கள். அவ்வளவே!

20201130055823753.jpg

காமெடி நிஷாவிடம் நிறையவே எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். அவ்வப்போது சில சுவாரஸ்ய மேடைப் பேச்சுக்களால் அசத்தினாலும், அவர் சக போட்டியாளர் அர்ச்சனாவையே ஏதோ கோவிலின் மூலவர் சன்னதி போல் நினைத்து சுற்றிச் சுற்றி வந்தார். ரியோ அவருக்கு உற்சவர் சன்னதி! மற்றபடி ஸோம், ரமேஷ் போன்றோர் குட்டிக் குட்டி கடவுளர்.

20201130055901895.jpg

இந்த முறை பிக் பாஸில் ‘தி மோஸ்ட் டாமினேட்டிங்’ அண்ட் ‘பாஸி’ என பெயர் பெற்றது தொகுப்பாளினி அர்ச்சனா தான். மிக மிக திறமைசாலியான இவர் இப்படிப்பட்ட குயுக்தியான குணாதிசயம் கொண்டவரா என ஆச்சர்யப்பட வைத்து விட்டார். வீட்டுக்குள் தனக்கென்று ஒரு படை சேர்ப்பதிலாகட்டும்..அன்பு என்பதையே ஆயுதமாக்கி தன்னை எதிர்ப்பவர்களையும் தன் பக்கம் வளைத்து அழ வைப்பதாகட்டும்..தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் மாத்திரம் தனி கரிசனம் காட்டுவதிலாகட்டும்...எல்லாவற்றிலும் அவருக்கு நிகர் அவரே. தொகுப்பாளினியாக படு திறமை காட்டியவரின் இந்த நிஜ முகம் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளக்கியுள்ளது. இதற்கு சமூக ஊடகம் பூராவிலும் அவர் மீது எழுந்துள்ள விமர்சனங்களே சாட்சி!

20201130060129336.jpg

சரி..இன்னும் 3 வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது...இதில் எல்லோரும் எதிர்பார்ப்பது போல நடிகர் ஆரிதான் ஜெயிப்பாரா..அல்லது இன்று ரசிகர்களின் கணிப்பில் இரண்டாமிடத்தில் இருக்கும் ரம்யா ஜெயிப்பாரா?..மற்றபடி ரியோவுக்கும் பாலாஜிக்கும் கூட ஒரு சான்ஸ் உண்டா என்று கேட்டால்..இவர்கள் நான்கு பேருமே இறுதிக்கட்டம் வரை செல்லப் போவது உறுதி! இவர்கள் தவிர, ஸோம் எனும் சோமசுந்தரத்திடம் குறை எதுவும் இல்லாவிட்டாலும் மற்ற நால்வர் அளவிற்கு இவரிடம் தனித் திறமைகள் இல்லாததும், கடைசி வரை அவர் ரியோ துணைவராகவே காட்சியளிப்பதும் இவருக்குள்ள மைனஸ்!

20201130060209936.jpg

ரம்யா பாண்டியன் ஒரு கடினமான போடியாளர்தான். ஆனால் இவர் சமீப காலமாக ஆரி பற்றி அடிக்கும் தடாலடி காமெண்ட்டுகள் அவர் மீது சிறு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இதனை இவர் வீட்டிலிருந்து வரப் போகும் நபர் சுட்டிக் காட்டும் போது ரம்யா உஷாராகி விடுவார் என்றே தோன்றுகிறது. முடிந்த வரையிலும் குரூப் சேராமல் தனித்து விளையாடுவதில் இவர் கில்லாடி.

20201130060553727.jpg

ரியோவைப் பொறுத்தவரையில் பெரிய குறைகள் எதுவும் இல்லைதான். குரூப்பில் இருந்த போதும் கொஞ்சம் நடுநிலையாளராக இருக்கவே முயற்சித்திருக்கிறார். ஆனால் சட்டென கோபம் கொள்வது, மனதளவில் கொஞ்சம் பலமற்ற மனிதராக இருப்பது, தனித்து விளையாடாமல் இருந்தது போன்றவை இவரது வீக் பாயிண்ண்டுகள். எனவே இறுதி வரை சென்றாலும் பலமான ஆரியை இவரால் வீழ்த்த முடியுமா என்பது சந்தேகம்தான்!

2020113006062986.jpg

பாலாஜி ஒரு கடுமையான போட்டியாளர் தான். ஆரம்ப காலங்கலில் பிக் போஸ் வீட்டில் பலரிடமும் கடுமை காட்டிய போட்டியாளரும் இவரே. இவரின் முரட்டுத்தனம் இபோது மாறி விட்டாலும் ரசிகர்கள் அந்த பழசை மறந்து இவரை வெற்றியாளர் ஆக்குவார்களா என்பது சந்தேகமே!

ஆக...உண்மையிலேயே இந்த போட்டியில் ஆரி தான் வெற்றியாளராக வரக் கூடிய முழு தகுதி பெற்றிருப்பவர். இவருக்கான வெற்றி முழக்கம் தமிழர்கள் அங்கம் வகிக்கும் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும் ஓங்கி ஒலிக்கிறது!

இருப்பினும் வெல்லப்போவது ஆரியாக தான் இருக்கும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம்...சென்ற முறை இப்படித்தான் வெல்லக் கூடிய கேண்டிடேட் ஆன இலங்கை தர்ஷனை திடீரென இறுதிக் கட்டத்தில் தூக்கியடித்தார்கள். இது சேனல் செய்ததா அல்லது நிஜமாலுமே மக்கள் ஓட்டில்தான் அவருக்கு பின்னடைவா என திட்டவட்டமாக யாராலுமே சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் அப்போது பிக் பாஸ் வீட்டினுள் இருந்த போது அவருக்கும் சக பிக்பாஸ்வாசி நடிகை ஷெரீனுக்கும் காதல் என வெளியே புயல் கிளப்பிக் கொண்டிருந்த அவரது அன்றைய காதலியும் நடிகையுமான சனம் ஒரு காரணம் என்றும் அவரது தோல்விக்கு ரீஸன் சொல்லப்பட்டது.

20201130060706567.jpg

இது போன்ற எந்த மைனஸ் பாயிண்ட்டும் இல்லாத ஒருவராக.. வெளி வாழ்விலும் ஒரு நேர்மையான மனிதாரகவும், கிசுகிசுக்களில் சிக்காதவராகவும் இருப்பது ஆரியின் பிளஸ் பாயிண்ட். எனவே இவர் இந்த முறை நிச்சயமாக வெல்வார் என டிவி நேயர்கள் மட்டுமின்றி சேனல் வட்டாரங்களும் ஒருவித தீர்மானத்துடனே எதிர்பார்க்கின்றனர்.

இரண்டாவது இடத்திற்கு ரியோ அல்லது ரம்யா பாண்டியன் வரலாம். யார் வந்தாலும் விஜய் டிவிக்கு குஷியே! காரணம், இருவருமே அந்த சேனலின் பிரத்யேக தயாரிப்புக்கள்!

இந்த வார கிசு கிசு:

20201130060828289.jpg

ஆளும் அதிமுக கட்சி தனது தேர்தல் விளம்பரங்களை எல்லா சேனல்களிலும் வெளியுடத் துவங்கி விட்டது. அவர்களது ஆட்சி சாதனைகளை பட்டியலிடும் விளம்பரம் சன் டிவியிலும் வருகிறது. இது குறித்து மாறன் சகோதரர்கள் மீது ஏக அப்செட்டில் இருக்கிறாராம் திமுக தலைவர் ஸ்டாலின்!