தொடர்கள்
சோகம்
சென்று வாருங்கள் விவேக்... - மரியா சிவானந்தம்

20210317095425779.jpg

இன்று காலை, கண்ணீரை சுமந்து விடிந்திருக்கிறது...

நம்முடன் வாழ்ந்து, நம்மைச் சிரிக்க வைத்த, சிந்திக்க வைத்த மக்கள் கலைஞன் விவேக் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை இன்று காலை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இன்னும் நம்மால் விவேக்கின் மறைவை நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை...

இந்த மண்ணை, மக்களை, சமுதாயத்தை நேசித்த ஒரு கலைஞர் விவேக். நகைச்சுவை வழியாக சமூக சீர்த்திருத்த கருத்துக்களைச் சொன்ன கலைவாணர், எம்.ஆர்.ராதா வரிசையில் இன்னும் ஒரு நகைச்சுவை நடிகராக, ரசிகர்களின் நெஞ்சில் அரியாசனம் போட்டு அமர்ந்தவர். இவர் இன்று இல்லை என்ற எண்ணமே நம் கண்களில் நீரை வரவழைக்கிறது.

பாலச்சந்தரின் அறிமுகம் விவேக். மனதில் உறுதி வேண்டும், முதல் படம். கதாநாயகி சுகாசினியின் தம்பிகளில் ஒருவராக நடித்து கவனம் பெற்றவர். தொடர்ந்து அவர் நடித்த படங்களும், தாங்கிய வேடங்களும் நம் மனத்திரையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்துப் போகின்றன. அசால்ட் ஆறுமுகம், கருத்து கந்தசாமி, எமோஷனல் ஏகாம்பரம், பன்ச் பாலா, தமிழ் கிறுக்கன் இவர்களை எல்லாம் நம்மால் மறக்க முடியுமா?

1987 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக்கின் கலைப் பயணம், இன்று வரை தொடரந்துக் கொண்டிருந்தது. தொண்ணுறுகளில் முழு வீச்சில் இருந்த இவரது கலைப்பணி, முப்பது ஆண்டுகளாக தொய்வின்றி இருந்தது. கதாநாயகனின் நண்பனாக வெளுத்து வாங்கிய விவேக், கதாநாயகனையே கருணை இன்றி கலாய்த்து விடுவார். இவர் ஏறத்தாழ எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் நண்பராக திரையில் வாழ்ந்தவர். சிவாஜி படத்தில் ரஜினியுடன் செய்யும் அலம்பல்கள் எங்கு நினைத்தாலும், என்று நினைத்தாலும் சிரிப்பு வரும்.

இவரது புகழை நிலை நாட்டிய படங்களின் பட்டியல் நீளம். புதுப்புது அர்த்தங்கள், காதல் மன்னன், பூமகள் ஊர்வலம், ஏழையின் சிரிப்பில், அலைபாயுதே, பிரியமானவளே, மின்னலே, உள்ளம் கொள்ளை போகுதே, லேசா லேசா, தூள், பேரழகன், ஆயுதம் செய்வோம், உத்தம புத்திரன், வேலைக்காரன் போன்ற படங்களில், இவர் கதாநாயகனையே விஞ்சும் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

எதை சொல்வது? எதை விடுவது?

மிடில் க்ளாஸ் மாதவன் ‘மணிமாறன்’, ஜமீன்தாராக வெட்டி பந்தா விடுவதிலாகட்டும், ஏழையின் சிரிப்பில் ‘கண்டக்டர் அரசு’வாக அதகளம் செய்வதிலாகட்டும், பெண்ணின் மனத்தைத் தொட்டு படத்தில் பின்பக்கம் புண்பட்ட கந்தசாமியாக சிரிக்க வைத்ததிலாகட்டும், எதிலும் குறை வைக்காத பாத்திரங்களால் நம் மனதில் நிறைந்தவர் விவேக். என் பெயர் பாலா, வெள்ளைப்பூக்களை என்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர்.. இரண்டுமே சிறப்பான வேடங்கள்.

நல்ல நடிகன், அதை விட நல்ல மனிதன், சமூக பொறுப்புள்ள கலைஞன். இயற்கை ஆர்வலர், நல்ல கவிஞர், இசையில் ஆர்வம் கொண்டவர் என்று பலமுகங்கள் கொண்டவர் விவேக். இவரது கவிதைகளை, பாலச்சந்தர் ‘வானமே எல்லை’ படத்தில் பயன்படுத்திக் கொண்டார். பத்மஸ்ரீ முதற்கொண்டு பல விருதுகள் இவர் மகுடத்தில் சிறகுகளாக அமைந்தன. அப்துல் கலாமின் கனவை நனவாக்க ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் தொண்டைத் துவக்கி வைத்து, தமிழகமெங்கும் அதற்கென பயணித்தவர். அப்பணி முடியும் முன்னர் மரித்தது பெரும் சோகம்.

ஊடகங்களில் நேர்க்காணலில் விவேக்கின் சிரித்த முகமும், கற்பனைத் திறன் கொண்ட பேச்சும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும். அவர் ஓர் பிறவிக் கலைஞர். சிரிக்க சிரிக்க பேசி, இன்று நம்மை அழ வைத்து செல்கிறார்.

தமிழ்த்திரை உலகம் ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டது. நாம் நல்ல நண்பரை இழந்து விட்டோம். இந்த மரணம் ஏற்படுத்தும் ரணத்தை எந்த களிம்பு கொண்டும் ஆற்ற முடியாது.

சென்று இளைப்பாறுங்கள் விவேக்... நீங்கள் விட்டுச் செல்லும் வெற்றிடம் நீண்ட காலத்துக்கு நிரப்பப்படாமலே இருக்கும் என்பதே நிதர்சனம்.

விகடகவி வாசகர்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்...