தொடர்கள்
கதை
இரட்டைக்கிளவி... – பா. அய்யாசாமி

20210817095912657.jpeg

சத்தி அண்ணா, நான் நாளைக்கு கிளம்பி இந்தியா வருகிறேன், உனக்கு ஏதாவது வேண்டுமா? அண்ணியிடமும் மற்றும் அருணிடம் கேட்டுச்சொல்... அப்பா, அம்மாவை கேட்டதாகச் சொல்லவும், பாக்கி விஷயங்களை நேரில் வந்து பேசிக்கலாம் என்று கூறி போனை வைத்தான் ஸ்ரீதர்.

கனடாவில் வேலைப் பார்க்கும் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி மணமாகி இரண்டு வருடத்திற்கு முன் சென்றவன், இப்போதான் இந்தியாவிற்கு வருகிறான்.

சத்தி என்கிற சத்யா, மனைவி உஷா இல்லத்தரசி தம்பதியரின் மகன் அருண். அப்பா மற்றும் அம்மாவுடன் ஒரே பிளாட்டில் வசிக்கும் சற்று மேல்நடுத்தர குடும்பம். ஸ்ரீதர் நன்றாக படித்ததாலும், காம்பஸில் செலக்ட் செய்யப்பட்டு ஐடியில் வேலை, மணம் முடித்து மனைவியையும் அழைத்துக்கொண்டு கனடாவில் செட்டிலானவன்.

என்னவாக இருக்கும், அவசரமாக வருகிறானே! என்ற ஆச்சரியம் அனைவருக்கும்.

ஏதாவது வேண்டுமா எனக் கேட்கிறான்! ஏதாவது வேணுமாப்பா, உங்களுக்கு அப்பாவிடம் என சத்தி கேட்க...

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், இங்கதான் எல்லாமே கிடைக்குதே என்றார். பக்கவாதம் வந்து தன் மீத வாழ்நாளை வீல் சேரில் முடக்கிய எழுபது வயது தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்.

தாத்தா, இரட்டைக் கிளவினா என்ன தாத்தா? கேட்டான் பேரன் அருண்.

இரட்டைக் கிளவி என்பது இரட்டைச்சொல் என்று பொருள்.

ஒரே சொல் இரு முறை வரும். அதனை பிரித்தால் பொருள் தராது. தனியாக இருந்தாலும் பொருள் கிடையாது. சேர்ந்து இருந்தால் மட்டுமே பொருளைத்தரும் என்றார் விபரமாக.

பொருள் என்றால்..?

மதிப்பு அல்லது பயன் அப்படி கூடச் சொல்லலாம் என்றார்.

ஓ சூப்பர் தாத்தா! எங்க மிஸ் கூட சொன்னாங்க! சடச்சட, பலபல அப்படின்னு. ஆனா நீ சொன்னதுதான் புரியுது என்றான் அருண்.

ஞாயிற்றுக்கிழமை காலை வீடு வந்த சேர்ந்த ஸ்ரீதர், சத்தி! நான் நாலேநாள் லீவில்தான் வந்தேன்... அம்மாவோட பாஸ்போர்ட் கொடு, டிக்கெட் போடனும் என்றான்.

எதுக்கு..? கேட்டான் சத்தி.

கனடாவிற்குதான்!

அதற்கு என்ன அவசியம் இப்போ?

அங்க அவள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்குமில்லே, அதனால்தான் என்றான்.

ஏன் அவங்க வீட்டிலே கூப்பிட வேண்டியதுதானே!

இல்லை, மாமாவுக்கு இன்னும் சர்வீஸ் இருக்கு அவரால இப்போ.
வரமுடியாது. அதான் அம்மாவை அங்கே அழைத்துக்கொண்டு போகிறேன் என்றான்.

இதை அம்மாவிடம் கேட்டியா? என்றான்.

இல்லை, ஏன் மறுப்பாங்களா என்றான்.

தெரியலை, கேட்டுத்தான் பார் என்றான்.

நீதான் கேளேன்! என்றான் சதீஷ்.

அம்மா! ஸ்ரீதர் உங்களை கனடாவிற்கு கூப்பிடுகிறான், நீங்க என்ன சொல்றீங்க?

ஏம்பா நாங்க இங்க இருக்கிறது உனக்கு ஏதாவது சங்கடமா இருக்கா? என்றாள் தாய்.

அய்யோ, அம்மா என்ன வார்த்தை சொல்லிட்டிங்க, நான் அப்படி நினைப்பேனா? என்று கண் கலங்கினான் சத்தி.

என்ன அத்தை இப்படி டக்குனு கேட்டுட்டிங்க? நாங்கள் உங்களை இப்படியெல்லாம் கேட்கும்படி வச்சிட்டோமே, மன்னிச்சிடுங்க அத்தை என்று புலம்பினாள் உஷா.

இல்லைமா... அழாதே, திடீர்னு வந்து கேட்ட உடனே எனக்கு பயமாக இருந்தது. அவர் இப்படி இருக்கையிலே எப்படி அழைத்துக்கொண்டு எங்கே நான் போகமுடியும் என்று வேதனை அடைந்தாள்.

அவரை யாரும்மா கூப்பிட்டா? உன்னைத்தான் கூப்பிட்டு போக வந்தேன். அப்பா இங்கே செளகரியமாகத்தான் இருக்கார், அண்ணாதான் நல்லா பார்த்துக்கிறாரே, பிறகு என்ன? என்றான் ஸ்ரீதர்.

நீங்கள் ஆறு மாதத்திற்கு அங்கே வந்தால், எனக்கும் அவளுக்கும் உதவியாக இருக்கும். அதானால்தான் நானே அழைத்துப்போக வந்தேன்.

ஸ்ரீதர், நீ என்ன இப்படி சுயநலமாக யோசிக்கிறே? நான் கல்யாணம் பண்ணி உங்கள் வீடு வந்தபோது, அம்மா, அப்பான்னா அவ்வளவு உசிரு உனக்கு, இப்ப எப்படி சுயநலமாகி சிந்திக்கிறாய். இவர்களைப் தனித்தனியா பிரிக்கலாமா? அது சரியா என்று யோசியுங்கள் என்றாள் அண்ணி.

சற்றே அமைதி நிலவியது.

சித்தப்பா! சித்தி ஏன் வரலை? கேட்டது அருண்

உடம்பு சரியில்லை!

அப்படின்னா! சித்தியை இங்கே அழைத்து வந்து இருக்கலாமே என்றான் அருண்.

நான் கனடாவிலேதானே இருக்கேன்.. சித்தியும் அங்கத்தானே இருக்கனும்.

ஓ! அப்படியா?

பிரித்தால் பொருளோ பயனோ தாராதது வெறும் இரட்டைக்கிளவி மட்டுமல்ல சித்தப்பா, இரண்டு கிழவர்களையும்தான்! என்றான் டைமிங்காக.. அருண்.

நன்றாகச் சொன்னாய் அருண் என்று அவனை அனைவரும் பாராட்டினார்கள்.

வயதான பின்பும்கூட அவர்களும் நம்மைப்போல சேர்ந்து தான் இருக்க வேண்டும். அவர்கள் பிரிந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கையே பொருளற்றதாகிவிடும். அதைதான் அருணும் சொல்கிறான், நாங்களும் விரும்புகிறோம். அம்மாவை உன்னோடு அனுப்ப முடியாது என்று தனது முடிவை உறுதியாகச் சொன்னான் சத்தி.