தொடர்கள்
ஆன்மீகம்
எறிபத்த நாயனார்!! - ஆரூர் சுந்தரசேகர்.

20210817062040143.jpeg

புகழ்பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் எறிபத்த நாயனார் என்பவர் ஒருவர். இவர் சிவபெருமானை வழிபட்டும் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்தும் வந்தார். மற்றும்
சிவனடியார்களுக்கோ, சிவ வழிபாட்டுக்கோ இடையூறு ஏற்படும் போதெல்லாம் அடியார்களிடம் கொண்ட அன்பினால் எல்லா இடையூறுகளையும் நீக்குவார். இதைதவிர சிவனடியார்களுக்கு துன்பம் ஏதும் நேர்ந்தால், அத்துன்பம் நிகழ காரணமானவர்களை தன் கையில் வைத்திருக்கும் மழு (கோடாரி) வினால் தண்டித்து சிவனடியார்களின் துன்பத்தைப் போக்குவார். இதற்காகவே அவர் எப்பொழுதும் மழுப்படையைக் கையில் வைத்திருந்தார்.

சிவனடியார்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால் கையிலுள்ள
மழுவினை எறிந்து பாதுகாத்ததால் இவரை எறிபத்தர் என்று கூறியழைத்தனர். ஆதலால் இவரின் இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை.

“இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்” என்று திருத்தொண்டத்தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமையாக கூறியுள்ளார்.

கருவூரில் அவதரித்த எறிபத்தர் நாயனார்:

எறிபத்தர் நாயனார் சோழர்களின் முக்கிய பகுதியாக விளங்கிய கொங்கு நாட்டின் தலை நகரமாகிய கருவூரில் (கரூர்) அவதரித்தார். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானை வழிபட்டு அங்குள்ள சிவனடியார்களுக்கு திருத்தொண்டு செய்வதை முக்கிய பணியாக மேற்கொண்டிருந்தார். இவர் சிவனடியார்களுக்குத் துன்பம் வராமல் பாதுகாத்தும், அவர்களுக்குத் துன்பம் செய்தவர்களைத் தன் கையிலுள்ள மழுப்படையால் தண்டித்தும் தொண்டு செய்து வந்தார். அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் தினந்தோறும் நந்தவனத்திற்குச் சென்று - மலர் கொய்து மாலை கட்டி ஆனிலைப் பெருமானுக்குச் சாத்திவந்தார்.

20210817062252395.jpeg

பட்டத்து யானையை வீழ்த்திய எறிபத்தர்:

ஒருநாள் சிவகாமியாண்டார் மலர் பறித்துக் கூடையில் நிரப்பி
பூக்கூடையைத் தண்டில் மேல் வைத்து உயரத் தாங்கிக் கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து வந்தார். அப்போது புகழ்ச்சோழ மன்னனது பட்டவர்த்தனம் என்னும் யானை அவ்வழியே வந்தது. சிவகாமியாண்டாருடைய பூக்கூடையைப் பறித்துக் கீழே சிதறிவிட்டுச் சென்றது . யானை பாகர்கள் அதைத் தடுக்காமல் யானையை வேகமாக நடத்திச் சென்றனர் .

சிவகாமியாண்டார் ஒன்றும் செய்ய இயலாதவராய்ப் பெருமானை நினைத்துச் “சிவதா - சிவதா” என்று முறையிட்டார் . எறிபத்தர் இதைக் கேள்வியுற்று ஓடிவந்து அடியார்க்கு நேரிட்ட துன்பங்களைக் கேட்டார் . அதிவேகமாக ஓடி யானையின் துதிக்கையை மழுவினால் வெட்டினார் . யானை அலறிக்கொண்டு கீழே விழுந்து மாய்ந்தது . பாகர்களையும் மழுவால் தாக்கிக் கொன்றார் .

சிவபெருமான் பார்வதி சமேதராக காட்சி:

யானையும், யானைபாகன் இறந்ததையும், புகழ்ச்சோழர் கேள்வியுற்று மிகுந்த கோபங்கொண்டார். உடனே குதிரையில் ஏறிச் சேனைகளுடன் புறப்பட்டு யானை இறந்த இடத்திற்கு வந்தார். அங்கு மழுவுடன் நின்றுகொண்டிருந்த எறி பத்தரைக் கண்டார். யானை செய்த தீங்கையும் பாகர்கள் அதைத் தடுக்காமல் இருந்த பிழையையும் தெரிவித்துத் தாம் அவர்களைக் கொன்ற காரணத்தையும் எறிபத்தர் விளக்கினார். புகழ்ச்சோழர் இதைக் கேட்டு, எறிபத்த நாயனாரின் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்றும், பட்டத்து யானையால்தான் தவறு நிகழ்ந்துள்ளது என்றும் அறிந்து, மிகவும் மனம் வருந்தினார்.
அடியார்க்குத் தீங்கு செய்த யானையையும் பாகர்களை கொன்றது போதாது. என்னையும் கொல்லவேண்டும் என்று சொல்லித் தம் உடைவாளை எடுத்து எறிபத்தரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்குவதற்குச் சிறிது தயங்கி, வாங்காவிடில் தாமே மாய்த்துக் கொள்வார் என்று அஞ்சி வாளை வாங்கினார். பிறகு எறிபத்தர் புகழ்ச்சோழருடைய அடியார் பக்தியை வியந்து அந்த வாளால் தாமே மாய்த்துக் கொள்ள முயன்றார். அப்போது புகழ்ச் சோழர் அவரைத் தடுத்து நின்றார். அப்போது சிவபெருமான் பார்வதி சமேதராக தோன்றி அனைவருக்கும் காட்சியளித்து, “இறைவனுக்கு பூக்களால் செய்யப்படும் பூஜையின் அருமை குறித்தும், உங்கள் இருவருடைய பக்தியை உலகுக்கு உணர்த்தவே இவ்வாறு சோதித்தோம்” என்றார். மேலும் சிவபெருமான் அருளால், உயிரிழந்த யானை மற்றும் அதன் பாகர்கள் உயிர்பெற்றெழுந்தார்கள். மகா அஷ்டமி நாளில் நடந்த இந்த வரலாறு தான் பூக்குடலை விழாவாக கரூரில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.

20210817062410657.jpeg

பூக்குடலை விழா:

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வளர்பிறை மகா அஷ்டமியன்று, அனைத்து பக்தர்களும் பூக்குடலை ஏந்தி, ஆலயத்திலிருந்து மேளதாளத்துடன் கரூர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, பூக்குடலை விழா நடத்தி வழிபட்டு வருகிறார்கள். அன்றைய தினம் கோயிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழர், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

குருபூஜை நாள்:

எறிபத்த நாயனார் நெடுங்காலம் வாழ்ந்து சிவனடியார்களுக்கு துன்பங்கள் நேராதவாறு கவனித்து, திருத்தொண்டுகள் பல
செய்து மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் சிவபதம் பெற்றார். இவரது குருபூஜை நாள் அன்று கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள எரிபத்த நாயனார் தனி சந்நிதியில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இவரது குருபூஜை தினத்தன்று எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

“திருச்சிற்றம்பலம்”

அடுத்த பதிவில் ஏயர்கோன் கலிக்காம நாயனார்…