தொடர்கள்
தமிழ்
எமதினிய தமிழ்ச் சொற்களை இழக்காமல், மீட்டெடுப்போம்... - 15 - இரா.சு.இராசன்

கேள்விக்கென்ன பதில்?

20210817100252260.jpeg

‘கேள்வி’ நல்ல தமிழ்ச் சொல் தான். நமக்குரியது தான். யாருக்கும் ஐயம் வேண்டாம்.

‘பதில்’ இந்தியிடம் இரவல் பெற்ற ஒரு சொல்.

நம்மிடம் ‘விடை’ என்ற தமிழ்ச் சொல்லிருப்பதனால் இதைத் திருப்பிக் கொடுத்திடலாம். தயக்கமின்றி.

இந்தியில் கூட கேள்விக்கு விடை என்ற பொருளில் ‘பதில்’ பயன்படுத்தப் படவில்லை. அதற்கு ‘உத்தர்’ என்றொரு சொல் வைத்திருக்கிறார்கள்.

‘பதில்’ என்ற சொல்லை, Instead of' என்ற பொருளில் பண்டமாற்றுப்போல், ‘இதற்கு பதில் அது’ என்று தான் இந்தி பயன் படுத்துகிறது.

தமிழுக்குள் ‘பதில்’ வந்து ‘விடை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கிணையான இடம் பெற்றுக் கொண்டது. வினாவுக்கு விடையாகக் கேள்விக்கு பதில் வந்து நின்று கொண்டது விடையில் எட்டு வகை.

அந்த இலக்கணம் இங்குவேண்டாம். பதிலைத் தவிர்ப்போம். கேட்டால் விடையிறுப்போம்.

குழந்தைகளின் சுறுசுறுப்பும் ஆர்வத்தால் அவர்கள் செய்யும் சிறு பிழையும் ‘சேட்டை’ எனத் தமிழில் வழங்குகிறோம்.

சேட்டை எப்படி உருவாகி வந்தது என்று சிறிது உற்று நோக்கினால், சேட்டையை விலக்கி விடவே தோன்றும்.

ஜேஷ்டை என்றாள் மூத்தவளைக் குறிக்கும். இலக்குமிக்கு மூத்தவள் மூதேவி. இலக்குமி என்ற சீதேவி எல்லா நலத்துக்கும் தூய்மைக்கும் அழகு நற்குணங்கள் என்று

Embody ment of all Virtues என்று நம்பப்படுகிறது. எதிர்மறையாக ஜேஷ்டை என்ற சேட்டை Embodyment of all Vices. தூய்மையின்மை அழகின்மை, ஒழுங்கின்மை, பிறருக்கு தொல்லை கொடுத்தல் போன்ற தீயவைகளோடு இணைத்துக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் மூத்தவனை (அண்ணனை) ஜேஷ்டன் என்று அழைத்தாலும், பேச்சு வழக்கில் சேட்டன் என்றே வழங்கப்படுகிறது. அது மேலும் தேய்ந்து ஏட்டன் என்றாகி விட்டது. இசைக் கலைஞர் யேசுதாஸ் அவர்களை உறவு முறை கூறி ‘தாசேட்டன்’ என்று அன்பாக அழைக்கின்றார்.

அது போல் ஜேஷ்டை தமிழாகி, சேட்டை என வடிவு கொண்டு குழந்தைகளை வைவதற்கு வாகாக வந்துளது.

குழைந்தைகள் உற்சாகமாய் ஆர்வமாய் சுறு சுறுப்பாய் இருப்பதே இயல்பு. அதுவே மகிழ்வு. பெரியவர்களுக்கு சிறு தொல்லையாய் இருந்தாலும் சேட்டை என்று சொல்லாமல் சிறு குறும்பு எனலாமோ?