
காங்கிரஸ், கூட்டணி கட்சிகளுடன் அல்லது தோழமைக் கட்சிகளுடன் பாராளுமன்ற தேர்தல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி செயலில் இறங்கி இருக்கிறது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் மாநில முதல்வர்களை மாற்றுவது அடிக்கடி நடக்கும். பெரும்பாலும் இந்த பொறுப்பை மூப்பனாரை நம்பிதான் ஒப்படைப்பார்கள். அவர் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு சென்று எல்லா கோஷ்டியிடமும் பேசி, சுமுகமாக ராஜினாமா, புது முதல்வர் தேர்வு என்று திட்டமிட்டு முடிப்பார். இப்போது காங்கிரஸ் கட்சியில் அதற்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
இப்போது முதல்வர்களை மாற்றும் வேலையை பாரதிய ஜனதா தொடங்கிவிட்டது. எனவே பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, உத்தரகாண்ட், கர்நாடக முதல்வரை மாற்றிவிட்டது. உத்தரகாண்ட் முதல்வர் இரண்டு முறை மாற்றப்பட்டார். அடுத்த அதிரடியாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை ராஜினாமா செய்ய வைத்தது . குஜராத் பாரதிய ஜனதாவின் அதிகார மைய்யமான மோடி, அமித்ஷா மாநிலம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
2022-ல் பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுவதும் ஒரு காரணம்.
பாரதிய ஜனதாவின் குஜராத் மாநில பார்வையாளர்கள், முதல்வர் விஜய் ரூபானி பிரபலமாகவில்லை, அவர் பேச்சு மக்களை கவரவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சி, குஜராத் பக்கம் தனது பார்வையைத் திரும்பியிருக்கிறது போன்ற விஷயங்களை, மோடி மற்றும் அமித்ஷாவின் பார்வைக்கு எடுத்துச் சென்றார்கள். அதனை தொடர்ந்து தான், விஜய் ரூபானியின் ராஜினாமா கடிதம்.
புதிய முதல்வரை நியமித்து, குழப்பங்களை எல்லாம் 15 மாதங்களில் சரி செய்துவிடலாம் என்று நம்புகிறார் அமித்ஷா. விஜய் ரூபானி ராஜினாமா அதிரடி என்றால்... அதற்குப் பிறகு நடந்தது, மெகா அதிரடி என்று சொல்லலாம்.
அடுத்த முதல்வர் யார் என்ற பட்டியலில்... துணை முதல்வர் நித்தின் படேல், லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுஃல் படேல், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் குஜராத் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ராஜினாமா செய்த முதல்வர் விஜய் ரூபானி பூபேந்திர படேல் பெயரை முன் மொழிகிறார். அதன் பிறகு, அவரை ஏகமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள். பூபேந்திர படேல் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர், முதல்முறையாக சட்டசபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எந்தப் பதவியிலும் இல்லாதவர். இவரின் சட்டமன்றத் தொகுதி கட்லோடிய, அமித்ஷா வெற்றி பெற்ற காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் அடக்கம்.
இவர் அமித்ஷா தேர்வு. பூபேந்திர படேல் தலைமையில், அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலை பாரதிய ஜனதா சந்திக்கும். பூபேந்திர பட்டேல், முன்னாள் குஜராத் முதல்வரும் தற்போது உத்தரப்பிரதேச ஆளுநராகவும் இருக்கும் ஆனந்திபென்னின் ஆதரவாளர். பூபேந்திர படேல் தற்சமயம் வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதி, ஏற்கனவே ஆனந்திபென் 2012இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. அமித்ஷா, அடுத்த முதல்வர் பற்றி உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவருடைய தேர்வுதான் பூபேந்திர பட்டேல்.
பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டதும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விஜய் ரூபானி, நிருபர்களிடம்... பூபேந்திர படேல் தலைமையில் அடுத்தாண்டு, சட்டமன்ற தேர்தலை நாங்கள் சந்திப்போம், ஆட்சியைப் பிடிப்போம். அவர் மிகவும் திறமைசாலி, நல்லவர் என்றெல்லாம் நிருபர்களிடம் அவரை புகழ்ந்து தள்ளினார். பாரதிய ஜனதாவுக்கு, குஜராத் சட்டமன்றத் தேர்தல் வெற்றி முக்கியம். காரணம்... கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக, அங்கு பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது பாரதிய ஜனதாவிற்கு.
குஜராத்தில் முதல்வர் எப்படி அதிரடியாக மாற்றி நியமிக்கப்பட்டாரோ, அதே அதிரடி மாற்றம் அமைச்சரவையிலும் நடந்தது. ராஜினாமா செய்த முதல்வர் விஜய் ரூபானி அமைச்சரவையில் இருந்தவர்கள் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை. 24 பேர் கொண்ட அமைச்சரவையில், 21 பேர் முதல்முறையாக அமைச்சராகி இருக்கிறார்கள். இவர்கள் தவிர... ராஜினாமா செய்த சபாநாயகர், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சி, குஜராத் முதல்வர் ராஜினாமா, புதுவை முதல்வர் தேர்வு பற்றி கருத்து சொல்லும்போது... சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பதினைந்து மாதங்கள் இருக்கிற நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் விஜய் ரூபானி ராஜினாமா செய்து இருப்பதற்கான காரணம்... இவரை வைத்துக்கொண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்ற உண்மையை பாரதிய ஜனதா ஒப்புக் கொண்டிருப்பது என்பதுதான். குஜராத் மாநிலத்தில், கொரோனா தொற்று காலத்தில் மோடியின் தவறான நிர்வாகத்தை மறைக்க விஜய் ரூபானியை பலிகடா ஆக்கிவிட்டார். இந்த அரசாங்கம் மோசமான தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதுதான்... குஜராத் மாடலா என்று கிண்டல் அடிக்கிறது காங்கிரஸ் கட்சி. கூடவே... ஏற்கனவே ஆனந்திபென் குஜராத் முதல்வராக இருந்தபோது, அவரும் முழு ஐந்து வருடம் முதல்வராக இல்லை. அவரையும் ராஜினாமா செய்ய வைத்தார்கள். இப்போது விஜய் ரூபானிக்கும் இதே நிலைதான். இது குஜராத்தில் பாரதிய ஜனதா அரசின் நிர்வாக தோல்வியை அக்கட்சி ஒப்புக் கொண்டிருக்கிறது என்றுதான் கருதவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கிறது.
இதேபோல் ஆம் ஆத்மி கட்சியும், 27 வருடமாக பாரதிய ஜனதா குஜராத்தில் ஆட்சி செய்கிறது. ஆனால், முதல்வரை மாற்றித்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்ற நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. இது மோடி, அமித்ஷா இருவருக்கும் பின்னடைவு என்று சொல்லியிருக்கிறது.
பாரதி ஜனதா இதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல், அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் என்பதும் மட்டும் உண்மை.

Leave a comment
Upload