
மர்ம தபால்!
ஒரு காலத்தில் வெளியூர் ஆட்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி ‘தவில்கார குடும்பம்’ என்றாலே போதும்! அவர்களை அழைத்துக் கொண்டு போய் நேராக வீட்டு வாசலில் நிறுத்தி விடுவார்கள். அந்த அளவிற்கு பந்தநல்லூரில் அவர்கள் புகழ் பெற்றவர்கள். முதல் தலைமுறை மரகதம் பிள்ளை, அவர் மகன் ரத்னம் பிள்ளை. அவர் வாரிசு டி.ஆர். முத்தப்பன், அவரது பிள்ளை எம். சுபாஷ்... என்று அவர்களது தவில் வாத்தியம் நீள்கிறது. இவர்களைத் தவிர, ரத்னம் பிள்ளையின் தம்பி கோவிந்தராஜ பிள்ளை என்று ஆரம்பித்தால் இந்தக் கிளை பட்டியல் மேலும் விரிவடையும்.

இங்கே தவில் வித்வான் பந்தநல்லூர் எம். சுபாஷ், நூற்றாண்டு விழா காணும் செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம் மற்றும் ராஜண்ணா பற்றி பேசுகிறார். இவரது அப்பா முத்தப்பன் அந்தக் காலத்தில் பிரபல தவில் கலைஞர் என்றால், பெரியப்பா பந்தநல்லூர் டி.ஆர். தட்சிணாமூர்த்தி பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் போன்ற மேதைகளுக்கு இணையாக நாதஸ்வரத்தில் புகழ் பெற்றவர்! பந்தநல்லூர் எம். சுபாஷ், தற்போது தென் திருப்பதியிலுள்ள இசைப்பள்ளியில் தவில் கற்றுத் தருகிறார். சிங்கப்பூரிலுள்ள பெருமாள் கோயிலில் நான்காண்டுகள் தவில் வித்வானாக இருந்தவர். அமெரிக்கா, கானடாவில் இரண்டு வருடங்கள் வாசித்தவர். இலங்கை, மலேசியா என்று ஆசிய நாடுகளிலும் ஒரு ரவுண்ட் வந்தவர்! இனி சுபாஷ்...
“நான் பத்து வயசுலேர்ந்து தவில் வாசிக்கிறேன் என்றால்... சம்பந்தம் மாமாவிற்கு 15 வயசுலேர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். சம்பந்தம், ராஜண்ணா இருவருமே எனக்கு மாமா முறை! என்னை விட என் தந்தை முத்தப்பன் அவர்களுக்கு நிறைய வாசித்துள்ளார். ஒரு கச்சேரிக்கு என் அப்பா வரலைன்னாலும் சம்பந்தம் மாமா சங்கடப்படுவார். அந்த அளவிற்கு அப்பாவின் வாசிப்பை உணர்ந்தவர், ரசித்தவர்.
சம்பந்தம் ரொம்ப ரொம்பக் கண்டிப்பானவர். தொழிலில் நூறு சதவிகிதம் சரியா இருக்கணும் என நினைப்பார். வாசிக்கும்போது தவில் கிழியக் கூடாது. கிழிந்தாலும் சட்டுன்னு வேற தோலை மாற்றுவோம்! தவில் கிழிந்தால் அதை அபசகுனமா நினைப்பார். அதேபோல் கச்சேரியின் போது சுதாரிப்பா இருக்கணும். பாராக்கு பார்க்கறது, சிரிக்கிறது இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. ஒரு தடவை என் அப்பாவும், செட்டில் இன்னொருத்தரும் எதற்கோ சிரித்து விட்டார்கள். சட்டென்று கடுப்பான சம்பந்தம், ‘இரண்டு பேரும் ஓரமா போய் சிரிச்சிட்டு வாங்க’ என்று நாயனத்தை நிறுத்திவிட்டார். அவரை சமாதானம் செய்வதற்குள் பெரிய பாடாகிவிட்டதாம்.
கச்சேரியின் போது சொந்தக்காரர்களோ அல்லது வேற செட் நாயனகாரர்களோ வந்தால், அவர்களோடு பேசக்கூடாது! வாசிப்பில் சோடை இருக்கக் கூடாது. எவ்வளவு நேரம் வாசித்தாலும் விறுவிறுப்பு இருக்கணும்! இது போல பல கட்டுப்பாடுகள்! தவில் வாசிப்பிலும் சில முறைகளை எதிர்பார்ப்பார். தனித் தவிலாக வந்தாலும் இவர்களுக்கு கட்டுப்பட வேண்டும். அண்ணன் லேசா கண் ஜாடை காட்டி விட்டால் போதும், தம்பி ராஜண்ணா கற்பூரமாய் புரிந்து கொள்வார்!
இன்னொரு விஷயம், அவர்கள் ஒரு முறை வீட்டை விட்டு கச்சேரிக்கு கிளம்பிவிட்டால், நாலைந்து கச்சேரிகள் வரிசையா இருக்கும். திருப்பனந்தாள் மாரிமுத்து, என் தந்தை, நான் ஆகிய மூவரும் தான் தவில் வாசிக்க போவோம். கிளம்பறதுக்கு முன்பே ஆறு வேட்டி, ஆறு சட்டை, மேல் துண்டு என்று எடுத்து வர வேண்டிய எல்லாவற்றையும் போஸ்ட் கார்டில் எழுதி விடுவார். கழுத்தில் செயின் போட்டு வரச் சொல்லுவார். அதாவது ஒரு வித்வான் லட்சணமாகவும் கச்சேரிக்கு வருவது முக்கியம் என்பதை உறுதியாக நம்பியவர்!
ஒரு தடவை வெளியூர் கச்சேரிக்கு வழக்கம்போல் ரெடியாகும்படி சம்பந்தம் மாமாவிடமிருந்து கடிதம் வந்தது. அடுத்த நாளே கச்சேரி நின்று போச்சு என்று இன்னொரு தபால் வருகிறது. சரி, என நானும் அப்பாவும் இருந்து விட்டோம். ஒரு வாரம் கழித்து திடீரென்று சம்பந்தம் மாமா நேராக காரில் வீட்டிற்கு வருகிறார். ‘கச்சேரிக்கு கிளம்பாமல் என்ன செய்யறீங்க..’ என்று சத்தம் போடுகிறார். என் அப்பா முத்தப்பன் கச்சேரி கேன்சல் ஆன கடிதத்தை அவரிடம் காட்ட, இப்போது சம்பந்தத்திற்கு அதிர்ச்சி, குழப்பம்! அப்புறம்தான் அவரது மூத்த மகன் கோவிந்தசாமியே இப்படி ஒரு கடிதம் எழுதியது புரிகிறது. அதாவது சம்பந்தம் மாமாவின் மகன் கோவிந்தசாமிக்கு, சுப்பிரமணியம் என்ற தவில்காரரை இந்தக் கச்சேரிகளுக்கு அழைத்துப்போக விருப்பம் போல! அதனால் இப்படி குழப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு மகன், தந்தையிடம் மன்னிப்பு கேட்டது அடுத்த கதை.
இதெல்லாம் 45 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள். சம்பந்தமும், ராஜண்ணாவும் தொழிலையும், சக கலைஞர்களையும் அவ்வளவு நேசித்தவர்கள். யாருக்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்கள்” என்றார் பந்தநல்லூர் எம். சுபாஷ்!

Leave a comment
Upload