
‘சுமார் நான்காயிரம் வருடத்திற்கு முன்பு வரை தாய் வழி சமூக வாழ்க்கை முறை தான் தொடர்ந்திருக்கிறது. அப்படி வாழ்ந்த மக்களிடம் சாதிகள் இல்லை. மதங்கள் இல்லை. பேதங்கள் இல்லை. வன்முறை இல்லை. குடும்ப அமைப்பு இல்லை. அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. விவசாயம் இல்லை. மிதமிஞ்சிய சேமிப்பு இல்லை. பணம் இல்லை. பேராசைகள் இல்லை. உடமை மனநிலை இல்லை. பொய் இல்லை. போட்டி இல்லை. பொறாமை இல்லை. இயற்கையை கொண்டாடி இயற்கையாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் அனைத்திலும் சமவுரிமை கொண்டிருந்திருக்கிறார்கள். ஒன்றாகவே வேட்டைக்கு சென்றிருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் பகிர்ந்தும், சேர்ந்துமே செய்திருக்கிறார்கள்.’
ஆண் ஒரு போதும் பெண்ணின் அடிமையாக இருக்க முடியாது. பெண் என்பவள் அவள் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், ஆணின் அடிமை என்கிற பார்வை, தமிழ் திரைக்கதைகளில் காலங்காலமாக கையாளப்பட்டு வந்திருக்கிற விசயம் தான். குடும்ப அமைப்பில் அதிகமான உழைப்பை தருகிறது பெண் தான் என்றாலும், அதிகார பகிர்வு என்று வருகிற போது, அங்கே ஆணுக்கு தான் முதலிடம். ஆணுக்கு சற்று தாழ்வான இடத்தில் தான் பெண் எப்போதும் வைக்கப்படுகிறாள்.
குடும்பத்தில் மட்டுமல்ல... எல்லா துறைகளிலும் ஆண், பெண் என்று வருகிற போது ஆண்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது எழுதப்படாத விதி. விவசாய கூலிகளிலிருந்து, கட்டிட வேலை செய்கிற சித்தாள் வேலைகளிலிருந்து அத்தனைவிதமான ஊழியத்திலும், ஆண்களுக்கு ஒரு கூலி. பெண்களுக்கு அதை விட கம்மியான கூலி. ஆனால், வேலை இருவருக்கும் ஒன்று தான். அதை எதிர்த்து தைரியமாக பெண்கள் போராட வேண்டியிருக்கிறது. (சில பெண்கள் போராடி அதை சாத்தியப்படுத்தியும் காட்டி இருக்கிறார்கள்.)
காவல்துறையில் கூட உயரதிகாரியாக வருவதற்கு ஒரு பெண்ணும், ஆணும் சமஅளவு தகுதிகளோடு இருக்கிறபட்சம் அங்கே ஆணுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. எத்தனை பெண் கமிஷ்னர்களை இந்த சமுதாயம் வழங்கி இருக்கிறது. அவர்களும் அதே ஐ.பி.எஸ் படித்தவர்கள் தான். ஆண், பெண் என்கிற பேதமற்று அத்தனை சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தங்களை நிரூபித்தவர்கள் தான். இருந்தாலும், இது ஆண்களின் உலகமாக, ஆண்களுக்கான உலகமாகவே இன்னும் இயங்குகிறதை பார்த்து பறவைகளும், விலங்குகளும் மிகுந்த குழப்பத்திற்கு ஆட்பட்டிருக்கின்றன. அவை மனதிற்குள் பகடி செய்து நகைத்துக் கொள்கின்றன.
கதைக்கு வருவோம். மன்னன் திரைப்படத்தை முதலில் பார்க்கலாம். பிரமாதமாக படித்து, சொந்தமாக ஒரு கம்பெனியை வெற்றிகரமாக நிர்வகித்து கொண்டு இருப்பார், நாயகி விஜயசாந்தி. அவருக்கு சென்னையில் சாதனையாளர் விருதெல்லாம் வழங்கப்படுகிறது. அப்படியான விஜயசாந்தியிடம் ஒரு கடைநிலை ஊழியரான ரஜினிகாந்த் கெத்து காண்பிக்கிறார். ஒழுங்காக வேலையும் செய்வதில்லை. வேலையில் சேர்ந்ததும் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார். அவரின் பங்களிப்பால் அந்த தொழிற்சாலை எந்தவித முன்னேற்றத்தையும் அடைந்து விடவில்லை.

அவர் தன் சகவேலையாளும், நண்பருமான கவுண்டமணியோடு சேர்ந்து திருட்டுத்தனமாய் வேலை நேரத்தில் திரையரங்கில் போய், அடாவடி செய்து, அவர்களை ஏமாற்றி, சின்னத்தம்பி படத்தின் நூறாவது நாள் விழாவில் முதல் டிக்கெட் வாங்கி அதற்காக திரையரங்கம் தருகிற பரிசை பெற்று கொள்கிற மனிதர் தான் அவர். அந்தத் தொழிற்சாலையை நிர்வகிக்கும் முதலாளிக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார். பெண் ஒரு நிறுவனத்தில் முதலாளியாக இருப்பதை ஒரு ஆண் நாயகனால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். அதற்கு அவரிடம் இருக்கிற ஒரே தகுதி, அவர் ஆண் என்கிற தகுதி மட்டும் தான்.
திருட்டுத்தனமாக வேலை நேரத்தில் திரைப்படத்திற்கு சென்று வந்தவரும், அந்த தொழிற்சாலையில் ஃபிட்டராக சேர்ந்திருக்கிறவருமான நாயகன் ரஜினிகாந்தின் அழிச்சாட்டியத்தை கண்டிக்கும் விதத்தில், தனியாக அழைத்து கன்னத்தில் ஒன்று கொடுக்கிறார். ஒரு பெண்ணின் கையால் ஒரு ஆண் அடி வாங்கலாமா? காலங்காலமாக பெண்கள் தானே ஆண்களிடம் அடி வாங்கிக் கொண்டும், மிதி வாங்கி கொண்டும் இருக்கிறார்கள்? அந்த மரபை எப்படி இந்த நாயகி மாற்ற பார்க்கலாம். விடக்கூடாது என்று அநாகரீகமாக அந்தப் பெண்ணை இரண்டு முறை அறைந்து விட்டு காலரை தூக்கி விட்டுக்கொண்டு செல்கிறார்.
அந்தத் தொழிற்சாலையில் ஒரு வேலையாளுக்கு விபத்து ஏற்பட்டு காலில் காயம் ஏற்படுகிறது. உடனே நாயகன் உதவி செய்ய நினைக்கிறார். அது நியாயமான விசயம் தான். அதற்கு என்ன செய்ய வேண்டும். ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்து வரவழைக்க வேண்டும். அவர் அதை செய்யாமல் நாயகியின் கார் சாவியை பலவந்தமாக அதன் டிரைவரிடமிருந்து பறித்து, கம்பெனி வேலையை அப்படியே போட்டு விட்டு, மருத்துவமனைக்கு சென்று விடுகிறார். இவர் புரிந்து வைத்திருக்கிற பொதுவுடமை சித்தாந்தம் ரொம்பவே மேலோட்டமானது என்பது இந்த கதாபாத்திரத்திற்கு தெரிவதில்லை. நல்லவேளை மார்க்ஸ் உயிரோடு இல்லை. அவர் மட்டும் இருந்திருந்தால் ரத்தகண்ணீர் விட்டிருப்பார்.
பிறகு வழக்கமான ஃபார்முலா திரைக்கதைகளின் நியதிப்படி நாயகியே நாயகனுக்கு மனைவி ஆகிறார். ஃபிட்டராக இருந்த நாயகன், வெளிநாட்டில் படித்து, பல காலம் தந்தைக்கு கீழே பயிற்சி எடுத்து அந்த தொழிற்சாலையை பிரபலமாக்கிய நாயகியை சமையல்கட்டில் உட்கார்ந்து தனக்கு சுவையாக சமைக்கிற வேலையை கொடுக்கிறார். அவர் அந்த தொழிற்சாலையின் எம்.டி ஆகிறார். எந்த அனுபவமும் இல்லாமல், அதற்கேற்ற படிப்பு எதுவும் இல்லாமல், சூமந்திரகாளி என்பதற்குள், நாயகன் அந்தத் தொழிற்சாலையில் முதலாளி ஆகி விடுகிறார். எல்லோரும் சுபீட்சமாகி விட்டதாக காட்டி படத்தை முடிக்கிறார்கள். அந்த நாயகி சிரித்தபடி நாயகனுக்கு வக்கனையாய் சோறு கட்டி கொடுத்து, டாடா காட்டுகிறார். எத்தனை பயங்கரமான தொழில் புரட்சி. அதனால் அவர் மன்னராட்சி முறைப்படி மன்னர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். மக்கள் எல்லாமே சுபீட்சமாகி விட்டதாக கனவு காண, வீட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள்.

சூரியகாந்தி என்றொரு படம் ஜெயலலிதா, முத்துராமன் நடித்து வெளிவந்த படம். இந்தப் படத்தில், ஒரு கருத்து முன் வைக்கப்படும். கணவனும், மனைவியும் வெவ்வேறு இடத்தில் வேலை செய்து, அந்த குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள். மனைவி வீட்டு வேலைகளையும் பார்த்து விட்டு, கணவனையும், கணவனின் அம்மா, அப்பாவையும் கவனித்து விட்டு, அலுவலகம் சென்று, அதில் கணவனை விடவும் அதிகமான சம்பள உயர்வும் பெற்று விடுவதை, அந்த கணவனால் ஜீரணிக்கவே முடியாது.
அதற்காக அவன் எசகுபிசகாக தப்பும் தவறுமான வழிகளில் எல்லாம் சென்று தன்னை வருத்தி கொள்கிறான். அப்போதும் அவளுக்கு அவனை விட கூடுதலான சம்பள உயர்வு மீண்டும் கிடைத்து விடுகிறது. அதை ஒரு ஆணாதிக்க ஆணால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
அதில் இடம்பெறும் ஒரு விழாவில் கண்ணதாசன் வந்து ஒரு பாட்டு பாடுவார்.
‘பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே
அது கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது’
என்கிற அந்தப் பாடலில் வண்டியோட பயன்படும் சக்கரமும், அச்சும் போல இணையர்கள் பேதமின்றி ஒத்திசைந்து சென்றாலே காதலறம் நல்லறமாகும் என்கிற கோணத்திலும் சில வரிகள் வரும்.
மனைவி ஒரு கட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து விடுவாள். கணவனின் தாழ்வு மனப்பான்மை அவனை மேலும்மேலும் கீழே நகர்த்திக் கொண்டு செல்கிறது. அப்போது, மனைவிக்கு கம்பெனியில் இருந்து தனி வீடு ஒதுக்குகிறார்கள். அதற்கு கணவன் வர மறுக்கிறான். அப்படி வருவதென்றால், அதற்கு தான் தனியாக வாடகை தந்து விட்டு தான் வருவேன் என்று அடம் பிடிக்கிறார். கணவனின் பணத்தில் மனைவி வாழலாம். மனைவியின் பணத்தில் கணவன் வாழ்வதென்பது இந்த சமுதாயத்தில் இழுக்காகவே பார்க்க படுகிறது.
இதற்கு பின்னால் உள்ள சூட்சுமம் தான் கவனிக்க வேண்டியது. கணவன் பணத்தில் தான் மனைவி வாழ வேண்டும். கணவனின் வீட்டில் தான் மனைவி வசிக்க வேண்டும். மனைவி உழைத்த பணத்தில் வாழ்வதோ, மனைவியின் வீட்டில் கணவன் வாழ்வதோ அவமானகரமான செயல் என்பதே இங்கே உள்ள ஆணாதிக்க சமுதாயம் கட்டமைத்திருக்கிற மனநிலை.
அதனாலேயே, மனைவியின் உழைப்பில் பெற்ற வசதியான குடியிருப்பில் தங்குவதற்கு நாயகனின் மனம் ஒப்புவதில்லை. அதையே திருப்பிப் போட்டு நினைத்து பாருங்கள். ஒவ்வொரு மனைவியும் தன்னுடைய வீட்டில் வாழாமல், தன்னுடைய கணவனின் வீட்டில் வாழ்வது, தங்களுக்கான அவமானம் என்று இந்த ஆணாதிக்க ஆண்களை போலவே நினைக்கலாம் அல்லவா? அதற்கு அவர்களுக்கு சரிசமமான உரிமை இருக்கிறதல்லவா? அப்படி அவர்கள் நினைக்காத போது, இந்த ஆணாதிக்க ஆண்கள் மட்டும் ஏன் அப்படி நினைக்க வேண்டும்?
உன் காசில் உயிர் வாழ வேண்டிய நிலை வந்தால் அன்றைக்கே தற்கொலை செய்து கொள்வேன் என்று வீராவேச வசனங்கள் எத்தனையோ படங்களில் நாயகன்கள் பேசி பேசி கேட்டு அலுத்திருக்கிறோம். அது எத்தனை அகம்பாவமானது என்பதை கொஞ்சமே அந்த நாயகர்கள் யோசித்தால் இப்படி பேசுவதற்காக தான், அவர்கள் உண்மையில் தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற விசயம் அவர்கள் கன்னத்தில் திருப்பி அறையும்.
அது என்ன மனோதத்துவம்? ஆண் சம்பாத்தியத்தில் பெண் வாழ்வதற்கு யோசிப்பதில்லை. மாறாக, பெண் சம்பாத்தியத்தில் வாழ ஆண் ஏன் அப்படி யோசிக்க வேண்டும்?
உத்தியோகம் புருச லட்சணம். என் கடன் சமையல் செய்து, பிள்ளைகுட்டிகள் பெற்றுப்போடுவதே என்று மட்டுமே ஒவ்வொரு பெண்ணும் இருக்க வேண்டும் என்று ஆணாதிக்க ஆண்கள் நினைப்பதாலேயே இப்படியொரு பார்வை இங்கே ஆழமாய் பதிந்திருக்கிறது.

ஆணி வேர் என்று ஒரு படம். அதில் சரிதா சாதாரண பெண்ணாக இருக்கிற போது, அவரை காதலித்து சிவகுமார் திருமணம் செய்து கொள்வார். பிற்பாடு சரிதா முன்னேறி காட்ட வேண்டும் என்கிற அதீத வேட்கையோடு செயல்பட்டு, கலெக்டராகவே மாறி விடுவார். இதன் காரணமாக தாழ்வுமனப்பான்மை கொள்கிற நாயகன் படிப்படியாக நாயகியை விட்டு விலக ஆரம்பிக்கிறார். இறுதியில் நாயகி தன்னுடைய கலெக்டர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்த பிறகே அவரை மறுபடி நாயகன் ஏற்றுக் கொள்கிறார்.
ஏணிப்படிகள் படத்தில் நாயகன் ஒரு திரைப்பட போஸ்டர் ஒட்டுகிற வேலை செய்கிறவன். நாயகி அந்த திரையரங்கை கூட்டிப் பெருக்குகிற வேலை பார்க்கிறவள். எதிர்பாராத சூழ்நிலையில் அந்த நாயகி பிரபலமான நடிகை ஆகி விடுகிறாள். அது அந்த நாயகனுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறது. இறுதியில், தான் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தியை செய்திதாள்களில் வர வைத்து விட்டு, யாருக்கும் தெரியாத அந்தக் குக்கிராமத்தில் மீண்டும் திரையரங்கை கூட்டி பெருக்குகிற பெண்ணாக வந்து சேர்கிறாள். இப்போது அந்த நாயகன் அவளை ஏற்றுக் கொள்கிறான்.
அவள் அவன் வீட்டிற்குள் சென்று விடுகிறாள். சுலபத்தில் திரும்பி வர முடியாதவொரு இடம். குடும்ப குத்து விளக்காய் குத்து விளக்கு ஏற்றி வைக்க போய் விடுகிறாள். குத்து விளக்கு ஆண் ஏற்றினால் எறியாதா என்கிற கேள்வியை கேட்காமலே அந்த வீட்டின் சமையற்கட்டிற்குள் அவளை திருமணபந்தம் அழைத்துச் செல்கிறது.
எங்கெல்லாம் ஆணை பெண் முந்துகிறாளோ, அங்கேயெல்லாம் அதற்காக பெருமைப்பட வேண்டாமா? மாறாக இங்கே தாழ்வுமனப்பான்மை கொண்டு, மேலே ஏற நினைக்கிற தவளையை அதன் பின்னால் இருக்கிற தவளை பிடித்து பிடித்து இழுத்து விடுகிற வேலையே ஆணாதிக்க ஆண் மனநிலை செய்து கொண்டே இருக்கிறது.
எத்தனை காலத்துக்கு தான் ஒவ்வொரு வெற்றியாளனுக்கு பின்னாலும் ஒரு பெண் இருந்து கொண்டே இருப்பது? முன்னாலும் அவள் நிற்க வேண்டாமா? ஒவ்வொரு வெற்றியாளிக்கு பின்னாலும் ஒரு ஆண் எப்போது வந்து நிற்க போகிறான்?


Leave a comment
Upload