தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு

20211019221445597.jpeg

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வகுப்பு நடத்திய ஆசிரியரே, ஒரு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய... அதைத் தொடர்ந்து... அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். கோவையில், விமானப்படை அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை காரணமாக சக விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். பிறகு, அவர் விமானப்படை விசாரணை மையம், அவரை விசாரித்து தண்டனை தரும் என்று சிறையிலிருந்து அவரை விடுவிக்க செய்தது விமானப்படை.

பொதுவாக இதுபோன்ற பாலியல் சீண்டல்களை மூடி மறைக்கவே நிர்வாகம் விரும்புகிறது. இது தண்டனைக்குரிய குற்றம் என்ற பார்வை நிர்வாகத்திற்கு இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர், விமானப்படை பயிற்சி நிலையத்தின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை இப்படித்தான் இருந்தது. இந்தச் சம்பவங்கள் வெட்ட வெளிச்சமான பிறகுகூட, பூசி மெழுகும் வேலையில்தான் நிர்வாகம் ஈடுபட்டது. இது பாலியல் குற்றத்தை விட கொடுமையானது.

ஆடைக்கு மேல் தொட்டால் அது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்று கூறி, மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் அமர்வு தந்த தீர்ப்பை, இந்த வாரம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றமாகாது என்று தீர்ப்பு வழங்கியது ஒரு பெண் நீதிபதி என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்தப் பெண் நீதிபதிக்கு எப்படி இப்படி ஒரு தீர்ப்பு வழங்க முடிந்தது என்பது தெரியவில்லை.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அட்டார்னி ஜெனரல் முறையீடு செய்து, இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தரும்போது... உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன், சட்டத்தில் உள்ள ஓட்டைகளிலிருந்து தப்பிக்க கூடாது என்பதுதான் சட்டத்தின் நோக்கம். ஆடைக்கு மேலோ அல்லது உடலினை உராசியோ, எப்படி இருந்தாலும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் என்ற நோக்கில் தொட்டாலே, அது குற்றம் தான் என்று சொல்லி குற்றவாளிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை தந்தது. நீதிபதிகள் தீர்ப்பு, பாதிக்கப்பட்டவருக்கு நம்பிக்கை ஏற்படும்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு நல்ல உதாரணம்.