தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20230027165424355.jpg

1.வரவேற்போம்

சமீபத்தில் மகாராஷ்டிரா கோவா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழியில் மொழி பெயர்க்கப் பட வேண்டும். அதற்காக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என்று யோசனையை சொன்னார். ஒரு பக்கம் மத்திய அரசு கொலிஜியம் விஷயத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிராந்திய மொழியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்று சொன்ன கருத்தை பிரதமர் வரவேற்றார். தமிழக முதல்வர் பல முக்கிய தலைவர்கள் இதை வரவேற்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அதே சமயம் இது சம்பிரதாய மேடைப் பேச்சு அல்ல என்பதை நிரூபிப்பது போல் உடனடி நடவடிக்கையாக முதல் கட்டமாக இந்தி குஜராத்தி தமிழ் ஒடிசா ஆகிய மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையில் வல்லுநர் குழுவும் அமைத்து விட்டார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

நமது இந்திய சட்டங்கள் ஆங்கில மொழியிலேயே பெரும்பாலும் இருப்பதாலும் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதாலும் சாமானியர்களுக்கு அது எளிதில் புரிந்து விட்டது என்று சொல்ல முடியாது. இதே போல் சட்டங்கள் சாமானியனுக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கிறது என்பது மாநில மொழியில் இருந்தால்தான் அவருக்குத் தெரிய வாய்ப்பு . இப்போது மாநில மொழிகளில் நீதிமன்ற தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்தால் அவற்றை மக்கள் புரிந்து கொள்வார்கள். உச்ச நீதிமன்றத்தின் இந்த மாநில மொழி அக்கறையை நாம் வரவேற்போம்.

2.கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம் என்பது அரசியல் கட்சிகளின் கண்ணோட்டத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு எதிர்க்கட்சியாக இருக்கும் போது அதற்கு நேர் எதிரான ஒரு நிலைப்பாடு என்பதாகத்தான் இருக்கும். உதாரணமாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி பிரதமர் நரேந்திர மோடி குறித்து வெளியிட்ட ஆவணப்படத்தை சமூக ஊடங்களில் நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த ஆவணப்படத்தில் கூறிய விஷயத்தில் முக்கியமானது குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருக்கிறது என்பதுதான். குஜராத் கலவரம் மோடி தொடர்பு பிரச்சாரம் ஒரு புதிய விஷயமே அல்ல. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது அவருக்கு எதிராக குஜராத் கலவரத்தை மையமாக வைத்து தான் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தது. ஆனால், அந்த பிரச்சாரம் எடுபடாமல் தொடர்ந்து இரண்டு முறை மோடி பிரதமர் ஆனார். இப்போது கூட பாரதிய ஜனதா கட்சி மோடி தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட இந்தக் குற்றச்சாட்டு பொய்யானவை என்று நீதிமன்றங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டன.

இப்போ ஒரு பிபிசி நிறுவனம் என்ன சொல்கிறது என்பதை விட அதை ஏன் இந்த நேரத்தில் சொல்கிறது என்பதுதான் முக்கியம் மோடி பிரதமர் ஆகவும் உலகத் தலைவராகவும் உயர்ந்துவிட்டார் இதை யாரும் மறுக்க முடியாது. இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் இவை எல்லாவற்றிலுமே மோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார். இங்கே ஒரு அரசியல் ஸ்த்திரத்தன்மை உருவாகிக் கொடுக்கக் கூடாது என்று யாரோ எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் இந்த ஆவணப்படம் அதை எதிர்க்கட்சிகளும் தங்களது மோடி எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் மோடி எதிர்ப்பு மாநிலங்களில் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டு மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் பார்க்கிறது. குஜராத் கலவரம் என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் அதை ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஏன் வெளியிட வேண்டும் என்று இதுவரை யாரும் கேட்கவில்லை. உதாரணத்துக்கு உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணம் சீனா தான். சீனாவில் பல லட்சம் மக்கள் கொரோனாவில் பலியானார்கள். இந்த உண்மையை சீனா மூடி மறைக்கிறது என்று இந்தியாவில் யாராவது ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டால் இந்திய எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ?