மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் நடக்கும் இந்த அற்புதமான நிகழ்வைக் காண உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் மதுரைக்கு வருகின்றனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய அங்கமான பத்தாம் நாள் நடைபெறும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம்.
இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா சென்ற ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே மாதம் 4ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி பட்டாபிஷேகம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. மே 1-ந் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திக்குவிஜயம் நடைபெறும். இந்த திருவிழாவில் உச்ச நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் வரும் மே 2-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தொடர்ந்து 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். மே 4-ந் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.
மீனாட்சி திருக்கல்யாண வரலாறு:
புராணத்தின் படி, மலயத்துவச பாண்டியன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழந்தை யாகத் தீயிலிருந்து தோன்றினாள். இக்குழந்தைக்குக் கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்ற அசரீரி கேட்டது. குழந்தைக்குத் “தடாதகை’ எனப் பெயரிடப்பட்டு வளர்ந்தாள்.மலயத்துவச பாண்டியன் மறைவுக்குப்பின் தடாதகை ஆட்சி பொறுப்பேற்று நான்கு திசைகளிலும் திக்விஐயம் செய்து வென்றாள். திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போரிட்டாள். பின் சிவபெருமானைக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. இருவருக்கும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகணங்களும் உடன் வந்தனர். சிவபெருமான் சுந்தரேஸ்வரராக வந்து திருமங்கல நாணை தடாதகை பிராட்டியாருக்குச் சூட்டினார். தடாதகை பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார். மேற்கண்ட நிகழ்வுகள் தடாதகை பிராட்டியாரின் திருஅவதாரப் படலம், தடாதகையாயின் திருமணப் படலம் ஆகிய திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டிருக்கின்றன. திருக்கல்யாண திருவிழா புராணங்களிலிருந்து தொடங்கினாலும் வரலாறாகத் தொடர்ந்து வருகிறது.
மீனாட்சி கல்யாண வைபோகம்:
திருமண நாளன்று அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். வீதியுலா முடிந்ததும் இருவரும் திருக்கோயிலின் முத்துராமையர் மண்டபத்தில் எழுந்தருளி, கன்னி ஊஞ்சல் ஆடி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அங்கேதான் தேவாதி தேவர்கள் ஒன்று கூடி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தைப் பேசி முடிப்பதாக ஐதீகம். திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், அன்னை மீனாட்சியும் ஐயன் சுந்தரேஸ்வரர் புதுப் பட்டு உடுத்தி, அழகிய ஆபரணங்கள் பூண்டு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்துக்கு எழுந்தருளுவார்கள்.
விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கிய திருமண விழாவில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காப்புக் கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக் காட்டிய பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் இசைக்க, மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்க, மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நிறைவு பெறும். மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்கத் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், மீனாட்சி அம்மனை தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளுவர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணம் நடக்கும் வேளையில், பெண்கள், தாலிச்சரடு மாற்றிக் கொண்டு வேண்டிக்கொள்வார்கள். இந்த நாளில் புதுத் தாலிக் கயிறு மாற்றிக்கொண்டால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை. சுமங்கலிப் பெண்களுக்கு புதுத் தாலிக் கயிறுகளைக் கோயில் நிர்வாகமே வழங்குகிறது.
திருக்கல்யாணம் முடிந்தபின் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள்.
இத்திருக்கல்யாணத்தைத் தரிசிப்பவர்களுக்கு நிறைவான வாழ்க்கையும், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நல்ல வரனும் அமையும் என்பது ஐதீகம்.
“தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!”
Leave a comment
Upload