தொடர்கள்
ஆன்மீகம்
புனிதமான புரட்டாசி மாதம்…!! - ஆரூர் சுந்தரசேகர்.

Holy Puratasi month…!!

பன்னிரு தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்குத் தனிப்பெருமை உண்டு. தெய்வங்களின் வழிபாடும், முன்னோர்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக விளங்குகிறது.


இந்த ஆண்டு புரட்டாசி மாதமானது செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, அக்டோபர் 17 ம் தேதி வரை உள்ளது. இந்த ஆண்டு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு புரட்டாசி துவக்க நாளிலேயே வந்தது வழிபாட்டிற்குரிய புனித நாளாக அமைந்துள்ளது.
புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம், இதனை மக்கள் ஏற்றுப் பெருமாளைப் போற்றி வழிபடுகின்றனர். புரட்டாசி மாதத்தில் தான் அம்பிகையை வழிபாடு செய்யக்கூடிய நவராத்திரி, பித்ருக்களை வணங்கக்கூடிய மஹாளய அமாவாசை, சிவனுக்கு உகந்த மகா சனி பிரதோஷம், கதலீ கௌரி விரதம், உமா மகேஸ்வர விரதம், மஹா பரணி , கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, 'அஜா ஏகாதசி' ன்று அழைக்கப்படும் சர்வ ஏகாதசி எனப் பலவிதமான விசேஷ தினங்கள் வருகிறது.
புரட்டாசி மாதம் என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு வீற்றிருக்கும், வெங்கடாஜலபதியும் நம் நினைவுக்கு வருவார். இந்த மாதத்தில்தான் வெங்கடஜலபதி பூமிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. திருமலையில் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானின் பிரம்மோற்ஸவம், கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறும்.

 Holy Puratasi month…!!


நவகிரகங்களில் சனி பகவானும், புத்தி காரகனான புதன் பகவானும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிக விஷேசமாகப் பார்க்கப்படுகின்றது. புரட்டாசி மாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் கூறுகிறது. இதனால் இந்த மாதத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்வதால் எமபயம் நீங்கி, நல் வாழ்க்கையைப் பெறலாம்.
இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். இந்த மாதத்தில் அசைவம் உண்பதையும் தவிர்க்கின்றனர்.

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு:
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது தெய்வத்தை நினைப்பதும் மற்றும் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி , நல்வழி பாதையில் அழைத்துச் செல்வதற்கான பாதையாகவும் அமைகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சிலர் சனிக்கிழமை தோறும் மாவிளக்கு செய்து அதில் நெய் விட்டு பெருமாளுக்குத் தீபம் ஏற்றுவார்கள். இதனால் சனி பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் விலகிச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குலதெய்வத்தின் அருளும் நமக்கு முழுவதுமாக கிடைக்கும்.

புரட்டாசி மாதம் அசைவம் தவிர்க்கக் காரணம்:
புரட்டாசி மாதம் அசைவத்தைத் தவிர்த்து, சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொண்டு, விரதம் இருக்கக் கூடிய ஒரு அருமையான மாதமாகத் திகழ்கின்றது. மற்றும் சைவ உணவை உண்பவர்களும் இந்த மாதத்தில் பூண்டு, வெங்காயம் தவிர்த்து சாத்வீகமான முறையில் உணவைச் சமைப்பார்கள்.
நம் முன்னோர்கள் இயற்கைக்கு உட்பட்டு, காலநிலைக்குத் தகுந்தவாறு, நம் வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் வகுத்துள்ளனர். இந்த விஷயங்கள் கடவுளை வைத்து, அவர் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையை கடைப்பிடிக்கச் செய்தார்கள்.
புரட்டாசி மாதம் பகலில் சூடாகவும், இரவில் மழை பொழியும் இப்படிச் சூடும், குளிர்ச்சியும் மாறி மாறி இருப்பதால், உடலில் உஷ்ணம் அதிகரித்து விடும். இதனால் ஏற்படும் தேவை இல்லாத உடல் உபாதைகளைத் தவிர்க்கவே புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட வேண்டாம் என நம் முன்னோர்கள் விஞ்ஞானப் பூர்வமாகவும் இந்த பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆகையால் இம்மாதத்தில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டும்.

   Holy Puratasi month…!!

திருப்பதியில் மண் சட்டியில் தான் நைவேத்யம்:
திருமலையில் பீமன் என்கிற குயவன் வாழ்ந்து வந்தார். அவர் பெருமாளின் தீவிர பக்தர். அவர் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். ஆனால் பரம ஏழையான பீமன் விரதத்தை மேற்கொள்ளக் கோயிலுக்குச் செல்லக்கூடிய வசதியில்லாமல் இருந்தார். அப்படியே கோயிலுக்குச் சென்றாலும் பூஜை செய்யத் தெரியாது. அப்படி ஒரு கோயிலுக்குச் செல்லும் போது, சுவாமியைப் பார்த்து, ‘நீயே எல்லாம்’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்துவிடுவார். இந்நிலையில், கோயிலுக்குப் போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையைச் செய்தார். அதைப் பூஜிக்கப் பூக்கள் வாங்கக் கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களைச் செய்து வந்தார். அப்படிச் செய்த பூக்களைக் கோர்த்து, மண் பூ மாலையாகச் செய்து பெருமாளுக்கு அணிவித்தார். இதற்கிடையே அந்த நாட்டை ஆண்டு வந்த அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தர். அவர் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருமலையில் வீற்றிருக்கும் வெங்டசலாபதிக்கு தங்கப் பூமாலையை அணிவிப்பது வழக்கம். அப்படி அவர் ஒரு வாரத்தில் மாலையை அணிவித்து விட்டு மறுவாரம் வந்து பார்க்கும் போது தங்கப் பூமாலைக்குப் பதிலாகக் களிமண்ணால் செய்யப்பட்ட பூமாலை பெருமாளின் கழுத்தில் இருந்தது. இதைக் கண்ட தொண்டைமான் அதிர்ச்சியடைந்து அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களைச் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார்.
ஒருநாள், அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவன் பீமனின் பக்தியால், அவனின் களிமண் மாலையைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியைச் செய்யுமாறு அரசனுக்கு ஆணையிட்டு மறைந்தார். திருமாலின் ஆணைப்படி அரசன் தொண்டைமான் குயவன் பீமனைக் கௌரவித்து அனைத்து உதவிகளையும் செய்தார்.
பெருமாள் மீது குயவன் பீமன் வைத்திருந்த பக்தியைக் கௌரவிக்கும் விதமாக இப்போதும் திருப்பதியில் மண் சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.

   Holy Puratasi month…!!

புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்:

புரட்டாசி அமாவாசை:
புரட்டாசி மாத அமாவாசை புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த அமாவாசையை மஹாளய அமாவாசை என்று குறிப்பிடுவர். புரட்டாசி அமாவாசைக்கு பதினைந்து நாட்கள் முன்பு வருவது மஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்குத் திதி கொடுப்பது சிறப்பாகும்.
மறைந்த நம் முன்னோர்கள் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மஹாளயபக்ஷம் ஆகும்.(பட்சம் என்றால், பதினைந்து நாட்கள் என்பது பொருள்) இந்த நாட்களில் விரதமிருந்து தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுவதால், பித்ருகடன், பித்ரு தோஷம் நீங்குவதோடு, வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்க முன்னோர்கள் ஆசீர்வதிப்பார்கள்.

கேதார கௌரி விரதம்:
சக்தி ரூபமான பார்வதிதேவி சிவனை நினைத்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாகச் சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். இதனை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களால் அழைக்கப்படுவதுண்டு.

புரட்டாசி நவராத்திரி:
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்து. இதனை துர்கா நவராத்திரி என்றும் அழைக்கின்றனர். புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரியைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்த நவராத்திரி மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது

புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள்

சித்தி விநாயகர் விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய ஸித்தி உண்டாகும்.

துர்வாஷ்டமி விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் விரதம் இருந்து வழிபட குடும்பம் செழித்தோங்கும்.

மகாலட்சுமி விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளைத் தொடர்ந்து பதினாறு நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

அமுக்தாபரண விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில் உமா-மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இந்த விரதத்தின்போது பன்னிரண்டு முடிச்சுகள் கொண்ட சரடை (கயிறை) வலது கையில் கட்டிக் கொண்டு விரதமிருந்தால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

   Holy Puratasi month…!!

சஷ்டி - லலிதா விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பரமேஸ்வரி சர்வ மங்களங்களையும் அருள்வார்.

கபிலா சஷ்டி விரதம்:
புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனைப் பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து இந்த விரதத்தை மேற்கொள்வதின் மூலம் சகல ஸித்திகளும் கிடைக்கும்.

அனந்த விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் அனைத்தும் கிடைக்கும்.

   Holy Puratasi month…!!

புனிதமான புரட்டாசி மாதத்தில் தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்..!!