தொடர்கள்
கவர் ஸ்டோரி
மோதல் 3. ரவி. vs. ஸ்டாலின்

ஆளுநர் ரவி vs முதல்வர் ஸ்டாலின்

20230822171058577.jpg

தமிழகத்தில் ஆளுநர் முதல்வர் உறவு சுமூகமில்லை. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முதல்வர் பரிந்துரை செய்த போது அந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்து அவர் மீது குற்ற வழக்கு இருப்பதால் அவரை அமைச்சராக அங்கீகரிக்க முடியாது என்று மறுத்தார் ஆளுநர் ரவி. அதன் பிறகு தமிழக அரசு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முதல்வர் ஆணை மூலம் அறிவித்தது. தமிழ்நாடு தேர்வாணைய குழு தலைவர் கோப்பு கூட ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி ஆளுநர் திருப்பி அனுப்பினார். இது தவிர சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் கையெழுத்துக்காக காத்திருக்கும் மசோதாக்கள் எக்கச்சக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி தருவது துணைவேந்தர் நியமனம் போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் காலதாமதம் செய்கிறார் என்று வெளிப்படையாக புகார் சொல்லத் தொடங்கினார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அதன் பிறகு சில பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி வழங்கினார் ஆளுநர் ரவி. இதேபோல் சென்னை பல்கலைகழக துணைவேந்தர் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழகம் மானிய குழு பிரதிநிதி ஒருவரை சேர்த்து தேடுதல் குழுவை அறிவித்தார் ஆளுநர். பல்கலைக்கழகம் மானிய குழு உறுப்பினர் தேடுதல் குழுவில் சேர்த்தது நடைமுறையில் இல்லாதது இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அறிவித்தார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி. தற்சமயம் சென்னை பல்கலைக்கழக தேடுதல் குழு பட்டியலை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது. அதில் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி பெயர் இல்லை. ஏற்கனவே உயர் கல்வித் துறை அமைச்சரும் ஆளுநரும் போட்டி போட்டுக் கொண்டு துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்கள். ஆளுநர் கூட்டம் கூட்டத்தில் வேந்தர் என்ற முறையில் நீங்கள் எல்லோரும் என் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிறார் ஆளுநர். உயர்கல்வித்துறை அமைச்சரோ உங்களுக்கு சம்பளம் தருவது உட்பட பல்கலைக்கழகங்களுக்கு நிதி தருவது தமிழக அரசுதான் எனவே எங்கள் உத்தரவுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்கள் என்கிறார் யார் பேச்சை கேட்பது என்று தெரியாமல் சில துணைவேந்தர்கள் பேய்முழி முழிக்கிறார்கள் .சில விவரமான துணைவேந்தர்கள் ஆளுநர் சொல்படி நடக்கிறார்கள். தமிழக அரசு உயர்கல்வியில் சில புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்திய போது அவையெல்லாம் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைக்கு எதிரானது அவற்றைப் பின்பற்ற வேண்டாம் என்று துணைவேந்தர்களுக்கு உத்தரவே போட்டார் ஆளுநர். அதன் பிறகு அந்த ஆணையை திரும்பப்பெற்றது தமிழக அரசு இப்படி உயர்கல்வியில் எக்கச்சக்க குழப்பம் மொத்தத்தில் மாணவர்களுடைய கல்வியில் அரசியல் செய்கிறது ஆளுநரும் தமிழக அரசும்.

தஞ்சை மாவட்டம், ஒழுகச்சேரி பகுதியில், தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீக்லி ஹாட் டாபிக் கிரியேட்டர் கவர்னர் ரவி பங்கேற்றார்.

அவர் பேசியது :-

தாழ்த்தப்பட்டோர் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது தமிழ்நாட்டில் தான் நடக்கிறது.

அத்துடன் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலப்பது, தீண்டாமை கொடுமைகள், சாதிய பாகுபாடுகள் ஆகியவை தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோயில்கள் என்பது நம் கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. கோயில் என்பது வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், அது நம் கலாச்சாரம், வாழ்க்கையுடன் பிண்ணிப் பிணைந்தது.

இந்த பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்ட பெருமை மிகு நாடு இது. தர்மத்தின் அடிப்படையில் அறம் சார்ந்து இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. தர்மத்தின் அடிப்படையில் கலாச்சாரம், அதை சார்ந்த சம்பிரதாயங்கள் ஆயிரம் இருந்தாலும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை பாரதம் ஒன்றுபட்ட குடும்பமாகத் திகழ்கிறது. பாரதத்தின் வலிமை பாரத தர்மத்திலிருந்து உருவானது. இந்து தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் கிடையாது. வெவ்வேறு மதம், இனமாக இருந்தாலும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள். இதன் அடிப்படையில் பாரதம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கில்ஜி, துக்ளக், கால்டுவெல், ஜி.யு. போப் உள்ளிட்டோர் வந்து நம்முடைய தர்மத்தை சீரழிக்க நினைத்தாலும், யாராலும் வெற்றி பெற முடியவில்லை. பாரதிய தர்மம் நம்முடைய இதயத்தில் ஒன்றி இருப்பதே அதற்கு காரணம்.

ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் நம்முடைய ஆன்மிகம், மொழி, பண்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றனர். அதனால்தான் அரசியலில் விடுதலை பெற்றிருந்தாலும், நம் கலாச்சாரம், பண்பாட்டை எப்போது மீட்டுருவாக்கம் செய்கிறோமோ அன்றுதான் உண்மையான விடுதலை என மகாத்மா காந்தி கூறினார்.

சுதந்திரத்துக்கு பிறகு சாலை, மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் முனைப்பு காட்டினோம். ஆனால், கலாசார மறுமலர்ச்சிக்கு எந்தவித முன்னெடுப்பும் செய்யப்படவில்லை. இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. மிக விரைவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி விடுவோம்.

ஆளுநர் ரவியின் இந்த கருத்தை கண்டித்து முரசொலியில் சனாதன ரவி என்று தலையங்கம் எழுதியது திமுக.

ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி வைகோ ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்து இருக்கிறார். இந்த கையெழுத்து இயக்கத்தை ஜூன் 20- ஆம் தேதி மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன.