தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் - 112 பெரிய திருமொழி: இரண்டாம்பத்து -- நான்காம் திருமொழியில்  திருநீர்மலை ! ஆர்.ரங்கராஜ்

2023110906263865.jpgமணமகன் வடிவில் வந்த எம்பெருமானால் ஆட் கொள்ளப்பட்ட திருமங்கை ஆழ்வார் (பொது ஆண்டு ஏழாம் நூற்றாண்டில் பிறந்தவர் திருமால் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள் மீது பாசுரங்களை இசைத்தார். இவற்றுள் பெரிய திருமொழி அளவில் பெரியது. இதில் பதினொன்று பிரிவுகளும் (பத்து) 1084 பாடல்களும் உள்ளன. இவற்றில் அகப் பொருள் துறையில் தலைவன் தலைவி ஆகியோரின் தன்மைகள் புலப்படுமாறு பல பாடல்கள் காணப்படுகின்றன. திருத்தலங்களில் குடி கொண்டுள்ள பெருமாளைப் போற்றும் போது திருமாளின் திருவடிவழகு திருஅவதாரச் செயல்கள் ஆகியவற்றை அந்தந்தத் தலத்துடன் தொடர்பு படுத்திப் பாடல்களைப் படைத்துள்ளார்.

திருநீர்மலை:

திருமங்கையாழ்வார் இயற்றிய 19 பாசுரங்களில் திருநீர்மலை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பெரிய திருமொழி:
இரண்டாம்பத்து -- நான்காம் திருமொழி

திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் நான்காம் திருமொழியாக வரும் பத்துப் பாடல்கள் திருநீர்மலையின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. பெரிய பிராட்டியாருடன் காட்சியளிக்கும் பரமன் தீயவர்களை ஒடுக்கியபின் மனம் மகிழ்ந்து எழுந்தருளிய திருத்தலங்களுள் திருநீர்மலையும் ஒன்றாகும். அவனது திருவடிகளைத் தஞ்சமடைந்து உங்களது கோரிக்கைகளை வேண்டி கைகூடப் பெறுவீர்கள்" என்ற கருத்தைத் திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் தெரிவித்துள்ளார்.

"அன்றாயர் குலக்கொடியோ டணிமா
மலர்மங்கை யொடன் பளவி அவுணர்க்கு
என்றானு மிரக்கமில்லாதவனுக்கு
உறைய மிடமாவது இரும்பொழில் சூழ்
குடந்தை தடம் திகழ் கோவல் நகர்
நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தார்க்
கிடம் மாமலையாவது நீர்மலையே (1) 1078

20231109062809555.jpg
(கண்ணனாக அவதாரம் செய்த காலத்தில் ஆயர் குலத்திற்குக் கொடிபோலத் திகழும் நப்பின்னைப் பிராட்டி, அழகும் பெருமையும் உடைய தாமரை மவரில் உதித்த திருமகளின் அம்சமாகப் பிறந்த ருக்மணிப் பிராட்டி ஆகிய இருவரிடமும் ஒத்த அன்பு செலுத்தி இன்ப வாழ்வில் ஈடுபட்டவன்; எந்நாளும் அசுரர்களிடம் எள்ளளவும் இரக்கம் காட்டாதவன். அடர்த்தியான சோலைகளால் சூழப்பட்டு நீர்நிலைகள் மிகுந்து விளங்கும் திருநறையூரில் நின்ற வடிவத்திலும், திருவாலியில் அமர்ந்த நிலையிலும் திருக்குடந்தையில் சயனக் கோலத்திலும் தடாகங்கள் நிறைந்து விளங்கும் திருக்கோவலூரில் நடந்த நிலையிலும் காட்சியளிக்கும் பரந்தாமன் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள திருத்தலம் திருநீர்மலை என்ற குன்றாகும்.)

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ்