பரமேஸ்வரன் ஸ்ரீமஹாசாஸ்தாவிற்கு திவ்யாஸ்திரங்கள் கொடுத்தருளியது
அதர்ம சக்திகளுக்கும், பாபிகளுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தவல்ல திருச்சாட்டையினையும், கால பயங்கரத்தை உண்டாக்கத்தக்க செண்டாயுதத்தையும் உற்பத்தி செய்து அவற்றை ஸ்ரீமஹா சாஸ்தாவிடம் அளித்து, “என் உயிர் போன்றவனே! இந்த திவ்ய ஆயுதங்களைக் கொண்டு ஈரேழு உலகங்களிலும் அதர்ம சக்திகளும் பாப மூலங்களும் தலை தூக்கா வண்ணம் அவற்றை அழித்து யாவரையும் பாதுகாத்து வருவாயாக”, என ஆசி கூறி அருளினார்.
பரமேஸ்வரன் ஸ்ரீமஹாசாஸ்தாவிற்கு திவ்ய வாகனம் அருளியது
பரமேஸ்வரனார் தன் அருகில் நின்றிருந்த நாலு வேதங்களையும் அழைத்து, “உலகம் போற்றும் பெருமை மிகுந்த வேதங்களே! நீங்கள் நால்வரும் திவ்ய மங்களமான கஜேந்திரனாக மாறி எனது குமாரனும் வேத நாயகனுமாகிய பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா அமர்ந்தருளும் வாகனமாக மாறி பெரு மகிழ்வு அடையுங்கள்,” என்று கூறி அருள் பாலித்தார். உடனே சதுர் வேதங்களும் தாங்கள் பரம்பொருளாகிய பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவிற்கு வாகனமாகப் போவதை எண்ணி மகிழ்ந்து பிரகாசிக்கும்படியான நான்கு தந்தங்களை உடைய அழகிய கஜேந்திரனாக நிற்க, ஸ்ர்வேஸ்வரனாகிய பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா அந்த கஜேந்திரன் மீது ஆரோகணித்து அருளினார். உடன் பார்வதி, பரமேஸ்வரர், மஹாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு ஆகிய நால்வரும் தங்களின் பிரிய குமாரரின் மீது மங்கள அக்ஷதை தூவி வாழ்த்தி அருளினர். அக்காட்சியைக் கண்ட பிரம்மாதி தேவர்களும் மற்றவர்களும் புளகாங்கிதம் அடைந்தவர்களாய் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவை வணங்கி நமஸ்கரித்தனர்.
யோகிகளும், சித்தர்களும், முனிவர்களும் வேதங்களில் உள்ள மங்களகரமான சூக்தங்களை ‘ஜயவிஜயீபவ’ என்னும் மங்கள முழக்கத்துடன் ஜபம் செய்தனர். அச்சமயம் சங்கு, கொம்பு, காஹளம், பேரீ, முரவம், துர்யம், துந்துபி, டிண்டிமம், வீணை போன்ற பத்னெட்டு வகை இசைக்கருவிகள் முழங்கின. பகவானும் வந்தவர் எல்லோருக்கும் அருள்பாலித்து அனுக்கிரஹம் செய்தார். பின்னர் சித்தர், நாகர், ஆகாசகர், கந்தர்வர், போகபூமியர், கிம்புருஷர், விஞ்சையர், பிசாசர், தாரகர், சுரர், அசுரர், பூதம், முனி, தேவர், கருடர், ராக்ஷசர், சாரணர், யக்ஷர் எனும் பதினெட்டு கணங்களும் போற்றிப் பணிந்திட, பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா தனது உலகான தேஜோவதியில் கொலுவிருந்து அகிலாண்ட நாயகனாக, சர்வேஸ்வரனாக, புவனேஸ்வரனாக தனது பரிபாலனத்தை நடத்தி வரலானார்.
ஸ்ரீமஹாசாஸ்தாவின் அருளாட்சி அண்டம் எங்கும் வ்யாபித்தது.
ஸ்ரீஜாப்யேஸ்வர மஹாத்மியம் என்ற காடந்தேத்தி ஸ்ரீமஹாசாஸ்தா புராணம் அத்தியாயம் 52ல் ஸ்ரீஆதிநாதன் தோன்றிய வரலாறு என்ற தலைப்பில் மஹ பிரளயங்கள் பதினெட்டைக்காணும் நீண்ட ஆயுளை பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவிடமிருந்து வரமாகப் பெற்ற சத்யபூர்ண மஹரிஷி, ஒரு சமயம் நிகழ்ந்த மஹாபிரளயத்தின் போது நீரினால் மூழ்கடிக்கப்பட்ட பூமியினை தரிசித்தபடி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது ஓரிடத்தில் பூமி நீரினால் மூழ்கடிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு பெரும் ஆச்சர்யம் கொண்டவராய் அவ்விடம் நோக்கிச் சென்றார். பிரளய காலத்திலும் அழியாமல் நின்ற அந்தஸ்தம் ஜாப்யேஸ்வரம் என்று அழைக்கப்படும் முக்தி ஸ்தலமாகும்.
என்றும் நிலைத்திருக்கும் பரம்பொருளாகிய பகவான் அந்த ஸ்தலத்தில் சுயம்பு மூர்த்தியாய்த் தோன்றப் போவதை அறிந்த நான்கு வேதங்களும் அந்த ஸ்தலத்தில் பிரம்மாண்டமானதொரு வில்வ மரமாக தோன்றின. அதன் பின் வேதநாயகராகிய பகவானும் அந்த மரத்தடியில் சுயம்பு மூர்த்தியாய் தோன்றியருளினார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
நான்கு வேதங்களும் பரமேஸ்வரனுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க விரும்பி சிவபெருமானை வேண்டின என்றும், அவரது அருளால் நான்கு வேதங்களும் திருநெல்வேலி ஸ்தலத்தில் மூங்கில் மரங்களாக வளர, இறைவன் லிங்க வடிவாக அதனடியில் அமர்ந்ததாகவும், திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது. நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி சன்னிதிக்குப் பின்புறம் இன்றும் மூங்கில் ஸ்தல விருட்சமாக நிற்பதைக் காணலாம்.
கல்லிடைக்குறிச்சி ஆதிவராஹப் பெருமாள் ஆலயத்திலிருந்து அருளாட்சி புரியும் ஆதிவராஹர் மீது இயற்றப்பட்டுள்ள ஆத்வராஹர் வருக்க கோவை என்ற நூலின் 92ஆம் பாடலில் ஆதிவராஹர் மலையமதில் யாகத்தில் பிரியார் பொன்னின் என்று வருகிறது. ஸ்ரீஆதிவராஹப் பெருமான் யாகத்தின் திருவுருவமாக உள்ளார். நான்கு வேதங்களும் ஸ்ரீஆதிவராஹரின் நான்கு சரணகமலங்கள் என்றும் யக்ஞ பாத்திரங்கள் யாவும் வராஹ மூர்த்தியின் மற்ற அவயவங்களாக இருப்பதாகவும், பாகவதம் என்ற நூல் விபரமாக வர்ணிப்பதாக கல்லிடைக்குறிச்சி கலைக் கோவில்கள் என்ற நூல் கூறுகிறது.
தாமிரபரணி நதி பொதிகை மலையிலிருந்து சமவெளியில் கால் எடுத்து வைக்குமிடத்தில் பகவான் பரமேஸ்வரனின் பாவநாஸர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலமே பாபநாசம் ஆகும். இங்கு ரிக், யஜூர், சாம வேதங்கள் மூன்றும் களா மரங்களாகவும், அதர்வண வேதம் ஆகாய வடிவமாகவும் நின்று இங்குள்ள இறைவனை வழிபடுவதால் அவரது திருநாமம் பழமறை நாயகர் என்றும், முக்காளலிங்கர் என்றும் அறியப்படுவதாக விக்கிரமசிங்கபுர உலா என்ற நூல் கூறுகிறது. பாவநாசர் கோயிலின் ஸ்தல விருக்ஷம் களா மரம் என்பது குறிப்பிடத்தக்கது.
பகவான் பரமேஸ்வரன் கையில் மான் ஏந்தியிருப்பதைப் பார்த்திருக்கலாம். அதனால் அவருக்கு மானேந்தியப்பர் என்று ஒரு நாமம் உண்டு. மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. பரமேஸ்வரன் வேதப் பொருளாக இருப்பவரென்பதை உணர்த்தவே அவர் கையில் மான் ஏந்தியிருப்பார். மானேந்தியப்பர் ஆலயம் ஒன்று கரந்தையர் பதியில் உள்ளது இங்கு குறப்பிடத்தக்கது.
பரமேஸ்வரன் வேதப் பொருளாக இருப்பவரென்றால் ஸ்ரீமஹாசாஸ்தா வேதங்கள நான்கையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளவராக இருக்கிறார். இதை உணர்த்தும் வகையில் ஒரு தர்ம சாஸ்தா ஸ்தலம் உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகில் தஞ்சாக்கூர் என்ற ஸ்தலத்தில் ப்ரம்ம சாஸ்தா ஆலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள ப்ரம்ம சாஸ்தா விக்ரகம் சற்று வித்தியாசமாக இருக்கிறார். தலையில் கரண்ட மகுடமும் மார்பில் வீர சங்கிலியையும் அணிந்துள்ளார். நான்கு திருக்கரங்கள் கொண்டு சதுபுஜ சாஸ்தாவாக அருள் பாலிக்கிறார்.
வலது முன் கரத்தில் பதாக ஹஸ்தமும் இடது முன் கரத்தில் ஹடிஹஸ்தமும் காட்டி அருளுகிறார். கட்டை விரல் மடக்கியவாறு ஹஸ்தம் அமைந்துள்ளது சிறப்பு மிக்கது. வேதங்கள் நான்கையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பதை மற்ற நான்கு விரல்கள் மூலம் உணர்த்துவதாகச் சொல்லப்படுகிறது.
பகவானின் பொன்னம்பல ஆலயத்தில் நான்கு வேதங்களிம், ஆறு சாஸ்த்திரங்களும் மூர்த்தி உருவெடுத்துக்கொண்டு பகவானுக்கு சேவை செய்து வருவதாக ஸ்ரீபூதனாத உபாக்கியானம் கூறுகிறது.
இந்த நான்கு வேதங்களும் தேஜோவதியில் ஸ்ரீமஹாசாஸ்தாவின் யானை வாகனமாகவும், ஜாப்யேஸ்வரத்தில் வில்வ மரமாகவும், திருநெல்வேலி ஸ்தலத்தில் சிவனுக்கு நிழல் தரும் மூங்கில் மரங்களாகவும், கல்லிடைக்குறிச்சி ஸ்ரீஆதிவராஹரின் நான்கு சரணகமலங்களாகவும், பொதிகை மலை அடிவாரத்திலுள்ள பாவநாஸர் கோவிலில் களா மரங்களகவும், ஆகாய வடிவமாகவும், பகவான் பரமேஸ்வரன் கரத்தில் மானாகவும், ஸ்ரீமஹாசாஸ்தாவின் நான்கு விரல்களிலும் பொன்னம்பலத்தில் மனித உருக்கொண்டும் ஸ்துதிகானங்கள் பாடி தாரக மூர்த்தியான இறைவனை வழிபடுவது குறிப்பிடத்தக்கது.
Leave a comment
Upload