தொடர்கள்
வலையங்கம்
எல்லோரும் எம்.ஜி.ஆர் அல்ல

20240109170417433.jpg

தமிழ்நாட்டில் இன்னொரு கழகம் வர இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தி தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சி பெயரை அறிவித்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தல்தான் என் இலக்கு என்று குறிப்பிட்டவர் பாராளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் கட்சி ஆரம்பிக்க வேண்டிய காரணம் என்ன என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனது முதல், எல்லா நடிகர்களுக்கும் முதல்வர் ஆசை வந்துவிட்டது. சினிமாவில் எம்ஜிஆர் விட பிரபலம் சிவாஜி. அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து அவர் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. டி.ராஜேந்தர், எம்ஜிஆரின் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ், விஜயகாந்த், சரத்குமார் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் எல்லோரும் அரசியல் கட்சி தொடங்கும் போது விஜய் உள்பட சொன்ன காரணம் மக்கள் சேவை செய்ய என்பது. மக்கள் சேவையை ராமகிருஷ்ண மடம் மகேசன் சேவையாக செய்து வருகிறது. ஆனால், அது என்றுமே விளம்பர வெளிச்சம் தேடியதில்லை. இதுதான் உண்மையான மக்கள் சேவை. மக்கள் சேவை செய்ய அரசியல் கட்சி தேவை இல்லை. அதற்கு எத்தனையோ வழிவகைகள் இருக்கிறது. ஆட்சி அதிகார ஆசை என்பதை மக்கள் சேவை என்று மறைத்து பேசி வருகிறார்கள் இவர்கள். இதுதான் உண்மை.

அதே சமயம் எம்ஜிஆர் ஏற்கனவே ஒரு அரசியல் கட்சியில் இருந்தார். மக்களின் மனதை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடந்து கொண்டவர் எம்ஜிஆர். ஒரு முறை விழுப்புரம் ரயில்வே கேட் மூடி இருந்ததால் பேரறிஞர் அண்ணாவின் கார் நின்றது. காரில் இருந்து இறங்கி வெளியே நின்றார் அண்ணா. காரில் கட்டி இருந்த திமுக கொடியை பார்த்துவிட்டு அங்கிருந்து ஒரு விவசாயி அண்ணாவைப் பார்த்து நீங்கள் எம்ஜிஆர் கட்சியா என்று கேட்டார். திமுக கட்சியை தொடங்கியவர் தலைவர் எல்லாமே அண்ணா தான். ஆனால் அது அந்த விவசாயிக்கு தெரியவில்லை. திமுக என்றால் அவர் எம்ஜிஆர் கட்சி என்று நினைத்திருக்கிறார். அண்ணா நிதானமாக அவரிடம் ஆமாம் நான் எம்ஜிஆர் கட்சி தான் என்று சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்ல இதை பெருமையாக தனது சம நீதி இதழில் கட்டுரையாக எழுதினார் அண்ணா. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது நான் மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், அதை செயல்படுத்தினார்.

தமிழ்நாட்டில் இப்போதும் காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி மட்டுமே பேசும் பொருள். கட்சி தொடங்கியிருக்கும் ஜோசப் விஜய் இதை தெரிந்து கொள்வது நல்லது.