தொடர்கள்
அனுபவம்
நடந்தது - ஜாசன்

20240109171052813.jpg

மின்சார ரயிலில் என் எதிரே உட்கார்ந்து இருந்த மூன்று பேர் உரக்க ஏதோ பேசிக் கொண்டிருந்ததால் என்னால் ரயிலில் தூங்க முடியவில்லை.

சரி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்போம் என்று அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தேன். அப்போது நடுவில் இருந்த ஒருவர் இடது பக்கம் இருந்தவரை பார்த்து ' நான் அனுபவப்பட்டவன் நான் சொல்வதைக் கேள் ' என்று சொல்ல அவருக்கு வலது பக்கம் இருந்தவர் 'சார் உங்கள் அனுபவம் என்பது உங்களுக்கான படிப்பினை அது அவருக்கு எந்த அளவும் உதவாது அவரைப் பொருத்தவரை உங்கள் அனுபவம் ஏட்டு சுரைக்காய் அது கறிக்கு உதவாது என்பார்கள் அது போல் தான் உங்கள் அனுபவம். எல்லாமே அவரவர் அனுபவித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் ' என்று சொன்னதும் அட்வைஸ் செய்தவர் சைலன்ட் மோடுக்கு போய் விட்டார்.

கூடுவாஞ்சேரி இப்போது பங்கு ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணம் இருபது ரூபாய் என்று உயர்த்தி விட்டார்கள். முதலில் பத்து ரூபாய் இருந்தது. இப்போது அது இரு மடங்காக உயர்ந்து விட்டது. இது பற்றி பங்கு ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன் ஏன் இந்த திடீர் கட்டண உயர்வு என்றேன்.

சார் இப்போது அரசாங்கம் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று அறிவித்ததால் இப்போது பெண்கள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்வது கிட்டத்தட்ட இல்லை என்ற ஆகிவிட்டது.

குறைந்தபட்சம் எட்டு பேர் போனால் தான் எங்களுக்கு கட்டுப்படி ஆகும். ஆனால் மூன்று பேர் நான்கு பேர் தான் ஏறுகிறார்கள் அதனால்தான் இந்த கட்டண உயர்வு நாங்களும் சாப்பிடணும் இல்ல சார் என்றார்.

அரசாங்கம் ஏதோ மக்களுக்கு நல்லது செய்வதாக ஒரு திட்டத்தை அறிவித்தால் அந்த திட்டமே இன்னொருவருக்கு பாதகமாக அமையும் என்பதற்கு இதைவிட ஒரு நல்ல உதாரணம் தேவை இல்லை.

அதே சமயம் எனக்கு 20 ரூபாய் கட்டுப்படி ஆகாது. இப்போது நான் நடக்க ஆரம்பித்து விட்டேன். நீங்களும் வாக்கிங் போனது போல் ஆகிவிட்டது என்று அதற்கு என் மனைவியும் சான்றிதழ் தந்து விட்டாள். என்னைப்போல் எத்தனை கணவன்மார்கள் இப்போது நடக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற விவரம் என்னிடம் தற்சமயம் இல்லை .

டைம் பாஸுக்காக வாசலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் இரண்டு ஸ்கூட்டர்களில் இறங்கி என்னிடம் வந்து ' சுந்தரவதனம் சார் வீடு என்று என்னிடம் விசாரித்தார்கள். நான் அவர்களிடம் முதல் மாடி தான் என்று சொன்னதும் அவர்கள் மாடிக்குப் போக முயற்சி செய்தபோது நான் சார் இப்போது தான் வெளியே போனார் பார்த்தேன் என்றேன். உடனே அவர்கள் அவரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்ட போது 'டேய் பத்து நிமிஷம் காத்திருங்கப்பா டெம்போ ட்ராவலர் எடுத்து வர வந்திருக்கிறேன் ' என்று செல்பேசியில் அவர் பேசியது எனக்கும் கேட்டது. அவர்களைப் பார்த்தால் படித்த இளைஞர்கள் போல் தெரிந்தார்கள். எனக்கும் நேரம் போக வேண்டும் என்று பேச்சு கொடுத்தேன். அதன் மூலம் நாம் தெரிந்து கொண்டது ஒருவர் சட்டக் கல்லூரி மாணவர் இன்னொருவர் பொறியல் பட்டம் படிக்கும் மாணவர். அவர்கள் அவர் வீடு காலி செய்வதற்கு சாமான்களை ஏற்றி இறக்குவதற்காக வந்திருப்பதாகவும் இதை அவர்கள் பகுதி நேர வேலையாக செய்வதாகவும். இவர்களைப் போல் பத்து பதினைந்து கல்லூரி மாணவர்கள் சேர்ந்து ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்திருப்பதாகவும் ஏசி மெக்கானிக், பிரிட்ஜ் பழுது பார்ப்பது, பாத்ரூம் கிளீன் செய்வது இதேபோல் வீடு காலி செய்பவர்களுக்கு ஏற்றி இறக்குவது, கல்யாண வீடுகளில் வேலை இப்படி எங்கள் படிப்பு போக மீதி நேரத்தில் பணம் சம்பாதித்து எங்கள் படிப்பு செலவை பார்த்துக்கொண்டு எங்கள் பெற்றோர்களின் சுமையை நாங்கள் குறைக்கிறோம் என்று அவர்கள் சொன்னதும் அவர்கள் மீது எனக்கு மரியாதை அதிகரித்தது. வாருங்கள் நிக்கிறீர்களே, உட்காருங்கள் வாசலில் சேர் கொண்டு வந்து அவர்களுக்கு போட்டேன். சிறிது நேரத்தில் சுந்தரவதனம் வந்தார். சுந்திரவதனம் ஒரு சீனியர் சிட்டிசன் பால், பேப்பர் போடுபவர் எல்லோரையும் ஒருமையில் அழைப்பது தான் வழக்கம். இவர்கள் படித்த இளைஞர்கள் என்று அவருக்கு தெரியவில்லையோ என்னவோ அவர்களையும் வாடா போடா என்று தான் சொல்லி வேலை வாங்கினார். ஆனால் அவர்கள் அதை பெரிது படுத்தாமல் பொறுமையாக அவர் சொன்ன எல்லா வேலையும் செய்து வேனில் எல்லா பொருட்களையும் அழகாக கச்சிதமாக ஏற்றி வைத்தார்கள். ஆனால் அதை ஒரு பொறுப்போடும் ரசனையோடும் அவர்கள் செய்ததை நான் கவனித்தேன்.

அப்போது சுந்தரவதனத்தின் பெண் ஸ்கூட்டரில் வந்து இறங்கினார். இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு வந்து விட்டீர்களா பேங்க் வரை போய்ட்டு வந்தேன் என்று சொல்லி கீழே வந்த சுந்தர வதனத்திடம் அப்பா இது வந்து சுரேஷ் இவன் என் கூட படிக்கிறான் அது ஜெயக்குமார் சட்டக் கல்லூரியில் படிக்கிறான் என்று சொல்ல சுந்தரவதனம் ஒரு மாதிரி ஆகி ஏம்பா நீங்க எல்லோரும் படிக்கிற குழந்தைகளா உங்கள போய் வாடா போடா என்று மரியாதை இல்லாமல் பேசி விட்டேன், சாரி என்று சொல்லிவிட்டு தன் மகளிடமும் நீ ஏதோ உனக்கு தெரிந்தவரை அழைத்து வருகிறாய் என்று நினைத்தேன். இப்படி பெரிய படிப்பு படிப்பவர்கள் என்று சொல்ல மாட்டாயா என்று கோபித்துக் கொண்டார். அப்போதும் அந்த மாணவர்கள் அங்கிள் நாங்க சின்ன பசங்க எங்களை வாடா போடா என்று கூப்பிடுவது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்க ஃபீல் பண்ணாதீங்க என்று என்று சொல்ல சுந்தரவதனம் அவர்கள் இருவரையும் கட்டி அணைத்துக் கொண்டார் அப்போது அவர் கண்ணில் கண்ணீர் வந்ததை பார்த்தேன்.