தொடர்கள்
கதை
பீஷ்ம யோகம் -எஸ். ஸ்ரீதுரை

20240109181323472.jpeg

“என்னங்க, மாத்திரை சாப்பிடணும். கொஞ்சம் கோவாபரேட் பண்ணுங்க”நம்ம சந்துரு வரப்போற
ஃப்ளைட் மீனம்பாக்கம் வந்துடுச்சாம்….”
பார்வதியின் குரல் கேட்டு ஆயாசத்துடன் எனது கண்களைத் திறந்தவன் அதே ஆயாசத்தின் வசப்பட்டு அவற்றைத் திரும்பவும் மூடிக்கொண்டேன்.
கைகால்கள் விழுந்து நானும் படுக்கையில் விழுந்த நாளில் தொடங்கிய ஆயாசம் இனித் தீருவது எப்பொழுதோ….யாருக்குத் தெரியும்….?
நாள்கணக்கிலிருந்து வாரக்கணக்காகி, தற்பொழுது மாதக்கணக்காகப் பரிணமித்துக்கொண்டிருக்கும் எனது நோயாளிப்பட்டம் தீருவது எப்பொழுது. கட்டையோடுதான் போகுமோ….?
விடியற்காலையில் படுக்கையிலிருந்து எழுந்த கணத்தில் சட்டென்று உடம்பைக் குறுக்குவாட்டில் வெட்டினாப்போன்றதொரு உணர்ச்சியில் “ஊ……..ழ்” என்று வித்தியாசமாகக் கத்தியபடிக்கட்டில் விளிம்பில் இடித்துக்கொண்டு எனது கனத்த சரீரத்துடன் மீனாட்சிசுந்தரமாகிய நான்
தரையில் சரிந்து இத்துடன் மூன்று மாதங்கள்.
சத்தம் கேட்டு மிரண்டு எழுந்த பார்வதி, “என்னாச்சுங்க ?” என்று பதறியபடியே இரண்டுமுறை என்னை உலுக்கி விட்டு யார் யருக்கோ போன் செய்து, ஸ்டிரெச்சரில் என்னைக் கிடத்தி
ஆம்புலன்ஸுக்குள் ஏற்றி, ஆம்புலஸில் சென்றுகொடிருக்கும் பொழுதே எங்கள் ஒரே மகன் சந்துருவுக்கும் வீடியோ காலில் தகவல் சொல்லி….
அன்றைய பொழுது களேபரமாக விடிந்தது.
வலது புறம் முற்றாகச் செயலிழந்து போன என்னை வாரிப்போட்டுக்கொண்டு விரைந்தஆம்புலன்ஸில் என் கூடவே வந்த மனைவி எனது கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டபொழுது பதிலுக்கு அவளது கையைப் பற்றிக்கொள்ள முயன்று
தோற்றுக்கொண்டிருந்தேன்.
சந்துரு மட்டும் இப்பொழுது எங்களுடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அங்கே டாலர்களில் கிடைக்கின்ற சம்பாத்தியம் இந்த ஊரில் ரூபாய்களில் கிடைக்காமல்
போய்விடுமா என்ன?
“அப்பா, அமெரிக்கா போவது என்னுடைய கனவு. தயவு செஞ்சு தடுக்காதீங்க!”
“தயவு செஞ்சு” என்பதையே ஒரு கட்டளையைப் போன்று உச்சரிப்பதற்கு எங்கள் மகன் சந்துரு
எப்பொழுது கற்றறுக் கொண்டான்.

வசதியான ஹாஸ்பிடல்தான். மெத்துமெத்தென்ற படுக்கை, பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால்
கூட ஒரு துளி அழுக்கைக் கண்ணால் பார்க்க முடியாத தூய்மை, நுனிநாக்கில் தளும்பும் இங்கிலீஷுடன் பெரும்பாலும் ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடி அணிந்து சிரித்துப் பேசும் ஆண் பெண் டாக்டர்கள், வெள்ளுடைத் தேவதைகளாய் வலம் வரும் நர்ஸுகள், மதராஸ் பாஷை பேசாத வார்டு பாய்கள், கைநீட்டி இனாம் கேட்காத தூய்மைப் பணியாளர்கள், இத்தனைக்கும்
விலையாய் லட்சங்களில் பில் போடக் கூடிய கார்ப்பொரேட் நிர்வாகம் என்று அனைத்துவிதமான சாமுத்திரிகா லட்சணங்களுடனும் கூடிய ஐந்து நட்சத்திர மருத்துவமனையில்தான் என்னைச்
சேர்த்திருக்கிறார்கள் என்பது புரிந்து போயிற்று.
அமெரிக்காவில் இருந்து எங்கள் ஒரே மகன் சந்துரு அனுப்பும் டாலரெல்லாம் இங்கே சில்லறையைப் போன்று செலவழிவதை உணர முடிந்தது.
டாலர்கள் ரூபாய்களாக மாற்றம் பெறுகிறது.
ஆனால், வீடியோ அழைப்பில் வரும் சந்துரு நேரில் நாங்கள் தொட்டுணரும் சந்துருவாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ஹூம்….ஒரே மகன் அமெரிக்கா செல்லும்பொழுது வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு
இப்பொழுது புலம்பி என்ன பிரயோஜனம்.
ஒரு நோயாளி இப்படி ஓயாமல் பேசலாமா….
நான் எங்கே பேசுகிறேன். நான் நினைக்கிறேன். அதை என் மனசு எதிரொலிக்கிறது.
படுத்த படுக்கை நோயாளியாக இருப்பது ரொம்பக் கஷ்டம்….அதுவும் ஓர் எழுத்தாளனுக்கு.
அதுவும் தன் மகனின் அருகாமை கிடைக்காத எழுத்தாளனுக்கு.
அரசுத்துறை அலுவலகம் ஒன்றில் நான் பணிபுரிந்த காலங்களில் யூனியன் கூட்டங்களில் தவறாமல் ஆஜராவது வழக்கம்.
வேலையில் சேரும் முன்பே நான் எழுதிய நாலைந்து சிறுகதைகள், இருபதுக்கும் மேற்பட்ட
குறுங்கவிதைகள் பத்திரிகைகளில் வந்திருந்ததை மெதுவாகப் பரவவிட்டேன்.

“அப்படியா?” என்று கேட்டுப் பலரும் புருவம் விரிப்பதைப் பார்ப்பதில் எனக்குள்ளே ஒரு
கடுகத்தனை சந்தோஷம். மலையத்தனை பெருமிதம்.
எழுத்தாளன் என்ற கௌரவத்தில் தொழிற்சங்கத்தின் ஆண்டறிக்கைகளையும், ஆர்ப்பாட்ட
கோஷங்களையும் வடிவமைக்கும் பொறுப்பு என்னைச் சேர்ந்ததாக இருந்தது.
அறிக்கையானாலும், ஆர்ப்பாட்டமானாலும் ஒரு கவித்துவமான வரியைத் தவறாமல் நான்
நுழைத்துவிடுவது வழக்கம்.
“இலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை….”
கடன் வாங்கிய வரிதான். இருந்தாலும் நானே எழுதியதுபோன்று தொழிற்சங்கத் தோழர்கள்
என்னைப் பாராட்டினார்கள்.
ஓய்வை விரும்பும் இலைகள்….ஓய்வெடுக்க விடாமல் அலைக்கழிக்கும் காற்று.
தற்பொழுது என்னுடைய நிலைமையும் அதே. நான், பார்வதி எங்கள் இருவருடைய நிலைமை
என்று கூடச் சொல்லலாம்.
இலைதான் நான் அல்லது நாங்கள் இருவரும்.
இந்த நேரத்தில் எங்கள் கூட இருக்காமல் எங்கோ கண்டம் விட்டுக் கண்டம் தாவி அமெரிக்காவில்
இருக்கின்ற எங்கள் ஒரே மகன் சந்துருதான் அந்தக் காற்று.
கண்களைத்தான் என்னால் மூட முடிகிறதே தவிர, பரபரத்துக்கொண்டே இருக்கும் எனது
எண்ணங்களின் வாடிவாசலை ஒரு பொழுதும் மூடிவைக்க முடிகிறதில்லை. கணகளைத் திறந்து
கொண்டாலோ இன்னும் ராக்கெட் வேகத்தில் பாயும் எண்ணங்கள்.
வாயு வேகம்…. மனோ வேகம்….
எல்லாம் இந்த எழுத்தாள மனசு படுத்தும் பாடு.
அப்பாக்கள் பாசமுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், எழுத்தாள அப்பாக்கள் அப்படி இருக்கக்கூடாது.
அதெப்படி, பாசம் நேசம் என்று எதுவுமில்லாவிட்டால் அப்புறம் என்ன எழுத்தாளன்
என்கிறீர்களா….அதுவும் சரிதான்.
எப்பொழுதாவது டாக்டர்களின் பரிந்துரையில் டிரிப்ஸ் ஏற்றிக்கொள்ளும் அந்த ஒரு மணிஒன்றரை மணி நேரத்தில் கூட இடைவிடாது அலைபாயும் என் மனசு, இப்படி நாள் கணக்கில்
படுக்கையில் விழுந்தால் சும்மா இருக்குமா என்ன.
“சந்துரு….நீ எப்ப வரப்போறே சந்துரு….?”

தனியார் மருத்துவமனை ராணுவத் துல்லியத்துடன் இயங்கியது. காசுக்கேற்ற கவனிப்பு.
சிலபல ஊசிகளை எனது புஜத்திலும் பிருஷ்டத்திலும் செலுத்தி உட்பாய்ச்சப்பட்ட மருந்துகள்
பயனளிக்கவில்லை.
“ஸிவியர் ப்ரெயின் ஹெமொரேஜ்” என்று அதிராத குரலில் தங்களுக்குள் பேசிக்கொண்டு “லெட்
அஸ் ஸீ” என்றபடி அடுத்த நோயாளியைப் பார்க்கச் செல்லும் மருத்துவக் குழுவினரைப்
பார்த்தபடி இரண்டு நாட்கள் கடந்தன.
ஏசி இருக்கிறதுதான். கூடவே இதமான மின்விசிறிக்காற்றும் இலவச இணைப்பாக. பல்துலக்க
வைத்து, டெட்டால் கலந்த இதமான வெந்நீரில் முக்கியெடுத்த டவலால் எனது தேகத்தைச்
சுத்தப்படுத்தி, சாய்வாக அமரவைத்து எனக்கு உணவூட்டி, ஜூஸ் கொடுத்து ஒரு குழந்தையப்
போலக் கையாண்ட ஆஸ்பத்திரிப் பணியாளர்களை எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
அவ்வப்பொழுது பிரசன்னமாகி என்னருகில் அமர்ந்து எனது தலையை ஒரு கையால்
கோதிக்கொடுத்தபடியே தனக்கு வருகின்ற செல்போன் அழைப்புகளுக்குத் தனக்கே
கேட்காததொரு மெல்லிய குரலில் பதிலளிக்கின்ற என் மனைவியைப் பற்றி திடீரென்று கவலை
கிளம்பியது.
சுவையும் மணமுமாகச் சமைப்பவள். சட்டென்று வெடித்துச் சட்டென்று அடங்கி “ஸாரி டியர்!”
என்று மன்னிப்புக் கேட்கும் எனது முன்கோப – பின் தாப சுபாவத்தை மிகவும் எளிதாகக்
கையாளும் சாமர்த்தியசாலி.
மதியவேளைச் சாப்பாடு முடிந்த அரைமணி நேரத்தில் டிகிரிகாப்பி சாப்பிடும் எனது
வித்தியாசமான ரசனையை கேலி செய்யாமல் நிறைவேற்றுபவள்.
திடீரென்று நான் என் பார்வதியை விட்டுவிட்டு ஒரேயடியாகச் சென்றுவிடுவேனா? அப்படி நான்
சென்றுவிட்டால் அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா? ஒருவேளை “நீ அமெரிக்காவுக்கே
வந்துடும்மா” என்று சந்துரு கூறிவிட்டால் அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியுமா? இல்லை
“இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்று கூறிவிடுவாளா? அப்படி இங்கேயே தனியாக
இருப்பதென்றால் அவளுக்குச் சரிப்படுமா? இல்லை வசதியான ஒரு ஹோமுக்குச் சென்று விடுவதைப் பற்றி யோசிப்பாளா….?
கூகுளில் தேடினாலும் விடை தெரியாத ஏராளமான கேள்விகள்.
சொல்ல மறந்துவிட்டேனே. சந்துருவுக்கும் அம்மாவின் சமையலென்றால் உயிர். அவனுக்குப்
பிடிக்குமென்று வட இந்தியச் சமையலெல்லாம் கூட வீடியோவைப் பார்த்துக் கற்றுக்கொண்டு
அசத்தினாள்.

நான் கூடப் பரவாயில்லை. என் பார்வதியால் தன் ஒரே சந்துருவை விட்டு எப்படி இருக்க
முடிகிறது. சந்துருவும் கூடத்தான் தன் அம்மாவை விட்டு எப்படி இவ்வளவு தூரத்தில் இருக்க
முடிகிறது.
டாலர் கனவென்பது இவ்வளவு கல்லுளிமங்கத் தனமானதா?
அம்மா அப்பா பாசத்தைக் கூட அழித்து விடுமா?
எல்லாம் சரி.
ஒரு வேளை நான் இந்த பீஷ்மரைப் போன்று இப்படியே மாதக்கணக்கில் படுக்கையில் கிடந்து
உயிரை விடும்படி நேர்ந்தால், அதற்குள்ளாவது சந்துரு ஒரு முறை என்னைப் பார்ப்பதற்கு
வருவானா?

என்றைக்கு நான் டிஸ்சார்ஜ் ஆவேன் என்ற மூன்று நாள் வயதான ஆதாரக் கேள்விக்கு
ஒருவழியாக மூன்றாம் நாள் மாலையில் விடை கிடைத்தது.
“உங்க ஹஸ்பெண்டுடைய மூளை ரத்தக்கசிவை கண்ட்ரோல் பண்ணியிருக்கோம் மேடம்.
பழையபடி அவர் நார்மலாகி வருவதற்கு மூன்று மாசம் வரை பிடிக்கலாம். நாங்க ப்ரிஸ்கிரைப்
பண்ற மருந்துகளை விடாமல் கொடுத்துட்டு வாங்க. அவருக்காக இங்க ஆஸ்பிட்டல்ல இருக்கிற
மாதிரியே ஒரு கட்டிலும் பெட்டும் ஸ்பெஷலா வாங்கிடுங்க மேடம். அதுலதான் ஸாரைப் படுக்க
வைக்கணும். பெட்டர், ஒரு நர்ஸ் அண்டு அட்டெண்டன்ட் போட்டு அவங்களை கவனிச்சுக்குங்க.
ஒரு மாசம் கழிச்சு அவருக்கு லேசா பிஸியொதெரபி ஆரம்பிக்கலாம். எங்க பிஸியோதெரபிஸ்டே
ஹோம் விஸிட்டும் செய்வாங்க. டபுள் சார்ஜ் ஆகும். தட்ஸ் ஆல். டோன்ட் வொர்ரி. வீ ஆர் ஆல்
ஹியர்.” என்று என் மனைவியிடம் டிஸ்சார்ஜ் ரிப்போர்ட்டைக் கொடுத்த சீஃப் டாக்டர் அடுத்த
நிமிடம் ஒரு பற்றில்லாத முனிவரைப் போலத் தன் ஜூனியர்கள் புடைசூழ அடுத்த வார்டை
நோக்கி அடியெடுத்து வைத்தார்.
இன்பத்தேனின் பாய்ச்சல். இப்போதைக்கு ஆஸ்பத்திரி வாசத்திலிருந்து எனக்கு விடுதலை.
மற்ற கேள்விகளை அப்படியே சுமந்து கொண்டு மீண்டுமொரு ஆம்புலன்ஸில் ஆரோகணித்து
எங்கள் வீடு வந்து சேர்ந்தேன். வீடு இன்னொரு வார்டானது.
அம்புப் படுக்கையிலிருந்த பீஷ்மர், “அர்ஜுனா, எனக்குத் தாகமாக இருக்கிறது, கொஞ்சம்
தண்ணீருக்கு ஏற்பாடு செய்யேன்!” என்று கேட்டுக் கொண்டதைப் போன்று உடம்பை அசைக்க,
எழுந்து உட்கார, திரும்பவும் படுக்க, தண்ணீர் குடிக்க, பல் துலக்க, சாப்பிட….என்று நான் எதைக்
கேட்டாலும் அதற்கு உதவி செய்ய இரண்டு ஷிஃப்ட்டுகளில் நர்ஸ், அட்டெண்டன்ட் என்று
இரண்டிரண்டு பேர் வந்து சென்றனர்.
ஆஸ்பத்திரியின் ஏற்பாடு. சந்துருவின் செலவு.

எனக்கும் பென்ஷன் வருகிறதுதான். ஆனால், சந்துரு எங்களை ஒரு பைசா செலவு செய்ய
விடுவதில்லை. மைக்ரோசாஃப்டில் வேலை. டாலர்களில் புரளும் வாழ்க்கை.
இந்த முறை சந்துரு வரும்பொழுது கேட்கவேண்டும் –
“ஏய் சந்துரு….நீ ஒருவழியா எங்களுடனே வந்து தங்கிவிடேன். உன்தகுதிக்கும் அனுபவத்துக்கும்
இங்கே ஒரு நல்ல வேலை கிடைக்காதா என்ன? உனக்கு நல்லதாக ஒரு பெண்ணைப் பார்த்துக்
கல்யாணம் செய்து வைக்கவும் வசதி…..”
என்னால் எப்படிக் கேட்க முடியும்.
வலது கை வலது கால் விழுந்ததோடு எனது உதடுகளும் கோணிக்கொண்டதில் பேச்சு சரிவர
வருவதில்லை.
“பாழ்வழி” என்றால் பார்வதி என்று தன்ணை அழைப்பதாக என் மனைவி புரிந்து கொள்வதற்கே
கொஞ்சநாட்கள் ஆயிற்று.
நான் பேச நினைப்பதையெல்லாம் என் மனைவியும் நினைத்து அதையே அவள் எங்கள் மகனிடம்
பேசவும் வேண்டும்.
“சந்துரு, நீ இனிமேல் எங்களுடனேயே இருந்துவிடேன்….”

@@@@ @@@@ @@@@ @@@@
பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது பேசினால் அது என் காதுக்குக் கேட்கிறது.
உள்ளூர் எக்ஸிபிஷனில் நாக கன்னியைப் பார்ப்பது போன்று வாரவிடுமுறை நாட்களில்
என்னைப் பார்க்க வருகின்ற உறவினர்களும் நண்பர்களும் என்னை நலம் விசாரித்துக் கேட்கும்
கேள்விகள் அனைத்தும் எனக்குப் புரிகிறது. அதற்கான எதிர்வினையாக நான் என்ன பேச
வேண்டும் என்பதையும் என்னால் திட்டமிட முடிகிறது.
ஆனால், அதை எடுத்துக் கூறுவதற்குதான் எனக்கு முடிவதில்லை.
பேசும் வார்த்தைகளில் முக்காலே மூணு வீசம் “ழழ” வாகவே இன்னும் எத்தனை காலம்தான்
இருக்கப்போகிறது. இதற்கு நான் ஊமையாகவே இருந்து விடலாமே….
இல்லையில்லை.
நான் ஊமையாகிவிடக் கூடாது.
முன்பை விடவும் நான் நிறைய பேசவேண்டும். தெளிவாகவும் பேச வேண்டும்.
எங்கள் ஒரே மகன் சந்துரு என்னைப் பார்க்க வரும்பொழுது, “அப்பாவுக்கு இப்போ
பரவாயில்லைடா சந்துரு” என்று சொல்லுவதோடு, அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு அருகிலுள்ள நாகெஸ்வரராவ் பார்க்குக்குச் சென்று நிதானமாக நடைபயின்றுவிட்டு வீடு திரும்ப
வேண்டும்.
மாலை நேரத்தில் நானும் பார்வதியுமாகச் சந்துருவுடன் பார்த்தசாரதி கோயிலுக்கும்
கற்பகாம்பாள் கோயிலுக்கும் போய்விட்டுப் பின்னர் நேராக மெரீனாவுக்குச் சென்று அலைகள்
வந்து தொட வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டு அவனுடைய கைகளைப் பிடித்துக்
கொண்டு, “நீ இப்படியே எங்களோடு இருந்து விடேன் சந்துரு!” என்று கேட்க வேண்டும்.
“சரி” என்று அவன் சொல்வதைக் கொண்டாடுவதற்காக ஏதாவதொரு டாப் கிளாஸ் ஓட்டலுக்குச்
சென்று அவனுக்குப் பிடித்த ஐட்டங்களாகக் கேட்டுச் சாப்பிட்டுவிட்டு அதே மகிழ்ச்சியுடன் வீடு
திரும்பவேண்டும்.
தோள்பட்டை உலுக்கப்படுவதை உணர்ந்து கண்விழிக்கிறேன்.
எதிரில் என் பார்வதி நிற்கிறாள்.
“என்ன?” என்று கண்களால் கேட்கிறேன்.
நிறைகுடத்தின் கண்களில் நீர்தளும்பி நிற்கிறது.
ஒரு கையில் அந்த வேளைக்கான மாத்திரையும், மறு கையில் தண்ணீரும்.
சயந்திர ஷிஃப்டு நர்ஸ் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. அதுதான் பார்வதியே தருகிறாள்.
மாத்திரை நேரம்தான். அதற்குக் கண்ணீர் தளும்புவானேன்…..? எழுத்தாள மூளை யோசிக்காமல்
என்ன செய்யும்?
“வேறு என்ன சமாச்சாரம்….?”
மீண்டும் எனது கண்களால் கேட்கிறேன்.
“நம்ம சந்துருவுக்கு இப்போதைக்கு லீவு கிடைக்காதாம். எவ்வளவு பணம் வேணும்னாலும்
அனுப்பறேன். அடுத்த ஜனவரிக்கு வர்றேன்னு சொன்னாங்க…..”
தளும்பிய நீர் வழியத் தொடங்குகிறது.
“பழவாழ்ழ பாழ்வழி….”
பெருமூச்சுடன் எனது இமைகளை மூடிக் கொள்கிறேன்.
இமைகளின் அடியில் கண்ணீரின் சூட்டை உணர்கிறேன்.
“சந்துரு….மை டியர் சந்துரு….”