தொடர்கள்
கதை
ஐய்யி லவ்வு யூ-ஜி. ஏ .பிரபா

20240109182442785.jpg

ஐய்யி லவ்வு யூ
“என்னப்பா சொல்றீங்க?”
அதிர்ச்சியுடன் கேட்டான் மாதவன். பாமாவும் நம்ப முடியாமல் பார்த்தாள்.
“இங்க உங்களுக்கு என்ன கஷ்டம் மாமா?”
“நல்லாத்தானே பாத்துக்கறோம்?”
“நான் இல்லைன்னு சொன்னேனா?”
“பின்ன ஏன்?”
முகம் முழுக்க வேதனை படர கேட்ட குடும்பத்தைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.
ஒவ்வொரு வீட்டில் வந்த மருமகள் மாமனார், மாமியாரை ஹோமுக்குத் துரத்தி விடுகையில் இங்கு
தங்களுக்கு தங்கத் தாம்பாலம்தான்.
ஆனால் தனியாகப் போவது என்று முடிவு செய்து விட்டார் அப்பா.
“நாங்க வேற வீடு பார்த்து போயிக்கறோம்டா”
காலையில் சொன்னதும் திக்பிரமை பிடித்து நின்று விட்டான் மாதவன். பாமா கண்ணில் கதகதவென்று கண்ணீர். அம்மா கூடப் புரியாமல் பார்த்தாள். இப்ப என்ன அவசியம் என்று புரியவில்லை.
“எங்களுக்குத் தனிமை வேண்டும்”
“இங்க தனி ரூம்தானேப்பா?”
“அந்தத் தனிமை இல்லை.”
“பின்ன?”
அப்பா சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
“சொல்லுப்பா. இங்க என்ன கஷ்டம் உனக்கு? பாமா ஏதானும் சொன்னாளா?”
“சும்மா இருடா. அவ தங்கம்.”
“பின்ன ஏன் இங்கிருந்து கிளம்பறே?”
“காதலிக்க”
“யாரை?”
“இந்த வயசுக்கு நான் யாரைக் காதலிக்க முடியும்? உங்கம்மாவைத்தான்.”
“இங்கேயே காதலியேன்.”
“முடியாதே”
“விளக்கமா சொல்லேன்.”- எரிச்சலானான் மாதவன். பெரிய பேத்தி, பேரன் அருகில் வந்து
கேள்வியுடன் நின்றார்கள்.
“மாது நானும் அம்மாவும் எழுபது வயசைத் தாண்டியாச்சு. ஆனா இது வரைக்கும் குடும்பம்னு அதைப் பத்திதான் யோசிச்சுகிட்டு இருந்தோமே தவிர எங்களைப் பத்தி யோசிக்கவே இல்லை. எனக்கு என்ன பிடிக்கும்னு அம்மாவுக்குத் தெரியும். ஆனா அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாது.
அவளுக்கும் ஆசைகள் இருக்கும். அதை நான் நிறைவேத்தனும். அதுதான் இந்தக் குடும்பத்துக்காக மெழுகா தன்னை உருக்கிண்ட அவளுக்கு நான் காட்டற கைம்மாறு. அவளை நான் நேசிக்கனும்டா”
அம்மா கண் அகல பார்த்தாள்.
“லவ்வா தாத்தா?”

“உங்க லவ்வு இல்லைடா இது. எனக்கு நீ, உனக்கு நான்னு வாழ்ந்த எங்களை நாங்க
வழியனுப்பறோம். அவளா? நானா யார் முதல்லன்னு தெரியாது. உடல் இணைந்த வயசு போயிருச்சி.
இனி மனசால பேசிக்கணும். கையைப் பிடிச்சிண்டு வாசல்ல உக்காந்துண்டு இருக்கணும். அவளை என்
மடியில படுக்க வச்சு தலை கோதி விடணும். என்றைக்கோ நடந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை
நினைவு கூறணும். ஏன்னா வாழ்க்கை நினைவுகளின் தொகுப்புதானே.”
“- - - - - - - - - - “
“இனி ஒவ்வொரு நாளும் எங்களுக்கு போனஸ் நாள். இருக்கற வரைக்கும் நாங்க
காதலிக்கணும். சின்னச் சின்னதா அதைப் பகிர்ந்துக்கணும். இங்க நீங்க எல்லாம் இருக்கறதால எங்களுக்கு சங்கடமா இருக்கும்ல? இளமையில் பகிர முடியாத காதல்.”
“ஆனால் முழுமை பெற்ற காதல் அப்பா.”- மாதவன்.
“மாமா, நம்ம தெரு முனையிலேயே வீடு பாக்கறோம். நீங்க எதுவும் செய்ய வேண்டாம். நான் எல்லாம் செஞ்சு கொடுத்துடறேன். நீங்க ரெண்டு பெரும் அமைதியா முன் வாசல்ல அமர்ந்து, கண்ணால்
காதல் கவிதை பேசுங்க.”- பாமா.
“டிக்கெட் ரிசர்வ் செஞ்சு தரேன். எங்கேயானும் போயிட்டு வாங்க.”
“எஸ். ஹனிமூன்.”- பேத்தி குதித்தாள்.
அம்மா முகம் முழுக்கப் பூரிப்புடன் பார்த்தாள்.
“பாட்டி உன் கண்ல காதல் பொங்குது.”- பேரன் பேத்தி கை தட்டினார்கள்.
“எங்க? தாத்தாவைப் பார்த்து லவ் யூ சொல்லு.”
“போடா எனக்குச் சொல்லத் தெரியாது.”- அம்மா வெட்கப்பட்டாள்
“நான் சொல்லித் தரேன்”- பேத்தி ஓடிப்போய் வாசல் செடியிலிருந்து ஒரு பூப் பறித்துக் கொண்டு வந்தாள். பாட்டி நாணத்துடன் பேத்தி சொல்லித் தந்ததைக் கூறினாள்.
“ஐய்யி லவ்வு யூ”- திக்கித் திக்கிச் சொல்ல, அப்பா மண்டியிட்டு ரோஜாவை வாங்கிக் கொண்டு
ஒரு பறக்கும் முத்தம் தர, வீடு கை கொட்டி கும்மாளமிட்டது.
அம்மா முகத்தை மூடி அழகாய் வெட்கப்பட்டாள்.